(ஏப்ரல் மாத “இளைஞர் முழக்கம்” இதழில் வெளிவந்தது) - ஹீலர்.அ.உமர் பாரூக் -
அதென்ன தொடு சிகிச்சை? தொடுவது என்பது எப்படி சிகிச்சையாகும்? தொடு சிகிச்சை என்ற சொல்லைக் கேட்டவுடன் நமக்குத் தோன்றுகிற இந்தக் கேள்விகள் நியாயமானவை. நாம் அறிந்து வந்திருக்கிற மருத்துவ அறிவிற்குச் சற்றும் பொருந்தாத புதிய விஷயம் இப்படியான கேள்விகளை ஏற்படுத்தத்தான் செய்யும்.தொடு சிகிச்சை என்பது புதிய மருத்துவ முறை அல்ல. அக்குபங்சர் என்ற மருத்துவத்தின் சிகிச்சை முறைதான் தொடுதல். அக்குபங்சர் என்றாலே உடல் முழுவதும் ஊசிகளைச் சொருகி, மின் தூண்டல் கருவிகளை இணைக்கும் ஒரு காட்சிதான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அக்குபங்சர் மருத்துவத்தின் அடிப்படையான முறை விரல் மூலம் அக்குபங்சர் புள்ளியைத் தொட்டு தூண்டுவதுதான்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு முக்கியமான உள்ளுறுப்பிற்கும் தனித்தனியான சக்தி ஓட்டப்பாதைகள் அமைந்துள்ளன. இப்பாதைகளில்தான் அக்குபங்சர் புள்ளிகள் அமைந்துள்ளன. இப்புள்ளிகள் தோல் மூலம் சுவாசித்து உள்ளுறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன. இப்படி தோலில் அமைந்துள்ள புள்ளிகளின் மூலம் சுவாசம் முழுமையாக நடைபெறும் போது உடலில் தொந்தரவுகள் தோன்றுவதில்லை. நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்களால் உள்ளுறுப்புக்களில் கழிவுகள் தேங்குகின்றன. அவ்வாறு கழிவுகள் தேங்கிய உறுப்புக்களால் தோலின் மூலம் முழுமையாக சுவாசிக்க முடிவதில்லை. எந்த உறுப்பு பலவீனம் அடைந்துள்ளதோ அது சார்ந்த சக்தி ஓட்டப்பாதையும், புள்ளியும் இயங்குவதில் குறைபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் நாம் உடலில் தொந்தரவுகளை உணர்கிறோம்.
பாதிப்படைந்த, இயக்கம் குறைந்த புள்ளியை நோயறிதல் முறைகள் மூலம் கண்டறிந்து, அதனை ஊசியாலோ அல்லது விரலால் தொட்டோ தூண்டுவதுதான் அக்குபங்சர் மருத்துவ முறையாகும். இம்முறை சீனாவில் தோன்றிய பழமையான மருத்துவமுறையாகும். அக்குபங்சரின் மூல நூல் இன்றிலிருந்து சுமார்.4600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1950 களில் சீனா - மக்கள் சீனாவாக மாற்றப்பட்ட பிறகு அங்கு அமைந்த சோஷலிச ஆட்சி இம்மருத்துவமுறையை பரவலாக்கியது. சீனா, கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே பரவியிருந்த அக்குபங்சர் சிகிச்சை முறை 1960 களுக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் மூலம் உலகெங்கும் பரவத்துவங்கியது.
1970 களில் அமெரிக்க அதிபர் நிக்ஸன் மேற்கொண்ட சீனப்பயணம் அக்குபங்சர் வரலாற்றில் திருப்பு முனையானது. நிக்ஸனுடன் சென்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ரஸ்டன் தீவிர குடல்வால் அழற்சி நோயால் அவதிப்பட்டார். அவருக்கு சீன முறைப்படி அக்குபங்சர் மருத்துவம் அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் நாடு திரும்பிய பின்பும் அந்த தொந்தரவு மறுபடி வரவில்லை. பலவிதமான மருந்துகள் உட்கொண்டும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டும் தீராத தன்னுடைய நோய் ஒரு ஊசி தூண்டலில் குணமடைந்தததைக் கண்ட ரஸ்டன் அக்குபங்சர் பற்றிய கட்டுரையை நியூயார்க் டைம்ஸில் எழுதினார். இப்படி உலகம் முழுக்க அக்குபங்சர் மருத்துவம் பரவத்துவங்கியது.
பிற நாடுகளுக்கு மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் பரவிய போது புதிய குழப்பங்களும், மாற்றங்களும் அதனைப் பின்தொடர்ந்தன. புள்ளியைத் தூண்டும் முறையில் மின்சாதனங்கள், துணை உணவுகள், மூலிகை மருத்துவம் என்று பிற மருத்துவங்களின் முறைகள் அக்குபங்சருக்குள் கலந்தன. அக்குபங்சர் என்றால் பல ஊசிகளைச் சொருகி, வலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ முறையாக இன்று உலக மக்களால் அறியப்படுகிறது.
உண்மையில் அக்குபங்சர் எந்த ஒரு நோயையுமே குணப்படுத்துவதில்லை. அக்குபங்சர் புள்ளியைத்தூண்டும் போது உடல் தனக்குத் தேவையான சக்தியைப்பெறுகிறது. பின்பு தன்னைத்தானே அது குணப்படுத்திக் கொள்கிறது. உடலே குணப்படுத்திக் கொள்ளும் என்பதால் எவ்வகையான நோய்களை குணப்படுத்தும் என்ற கேள்வியே எழாது. ஏனென்றால் நம் பழக்கவழக்கங்களால் உடலின் மாறுபாட்டால் நோய்கள் உருவாகின்றன. எதிர்ப்பு சக்தி உயர்ந்து பலம் பெற்று அந்நோய்க்கான காரணங்களை உடலே வெளியேற்றுகிறது. உடலால் ஏற்பட்ட நோய்கள் உடலாலேயே சரி செய்யப்படுகின்றன. எனவே எல்லா விதமான நோய்களையும் உடலால் தீர்த்துக் கொள்ள முடியும்.
உலகின் பல நாடுகளில் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. யுனிசெஃப் இன் உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் 2010 இல் அக்குபங்சர் இணைக்கப்பட்டது. இந்தியாவிலும் பல பல்கலைக்கழகங்கள் அக்குபங்சரை கற்பித்து வருகின்றன.
நோயால் பாதிக்கப்பட்ட நபர் அக்குபங்சர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைவதை பயன்பாட்டு நிரூபண ஆய்வுகள் மெய்ப்பித்து வருகின்றன. விஞ்ஞானப்பூர்வ ஆய்வு முறைகளாக நம்பப்பட்டு வரும் ஆங்கில மருத்துவ ஆய்வுமுறைகளால் அக்குபங்சரின் உடலியல் மாற்றங்களைத் தொடர முடியவில்லை. மாற்று மருத்துவங்களை சரியாகப் புரிந்து கொள்ள கருவிகளின் அடிப்படையிலான ஆய்வுகள் பயன்தராது.
உதாரணமாக இன்று உலகம் முழுவதும் அறிவியல் பூர்வமான முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோமியோபதி முறையைப் பார்க்கலாம். ஹோமியோவை அதன் தோற்ற காலத்தில் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஹோமியோவில் மருந்தாகக் கொடுக்கப்படும் சர்க்கரை உருண்டைகளில் மருந்துத்தன்மை இல்லை என்று ஆய்வுக்கூடங்கள் சொல்லிவிட்டன. ஆனால் நடைமுறையில் ”மருந்துத்தன்மையே இல்லாத” அந்த மருந்து நோயாளிக்குக் கொடுக்கப்படும் போது உடலில் ஏற்படும் இயங்கியல் விளைவுகள் அற்புதமானவை. வெளிப்படையானவை. இன்றுவரை ஹோமியோ மருந்துகளில் மின்னணு நுண்ணோக்கியைக் கொண்டு பார்த்தாலும் அதன் மருந்துத்தன்மையைப் பார்க்க முடியாது. நுண்ணோக்கிகளையும், வேதியியல் மாற்றங்களை அறியும் கருவிகளை மட்டும் கொண்டு ஒரு மருத்துவத்தின் பலனை எடை போட முடியாது என்பதை பல மாற்றுமருத்துவங்கள் நிரூபித்துள்ளன.
நோயாளிக்கு சிகிச்சையாக மருந்துகளைக் கொடுக்கும் போதே, அதன் விளைவுகளைக் கண்டுபிடிக்க முடியாத ஆய்வுகள் அக்குபங்சரின் சக்தி அடிப்படையிலான சிகிச்சை முறையை எக்காலத்திலும் கண்டறிய முடியாது. ஆனால் நடைமுறையில் பயன்பாட்டு நிரூபணங்கள் மூலம் உலக சுகாதார நிறுவனம் அக்குபங்சரை ஒரு மருத்துவமுறையாக அங்கீகரித்துள்ளது. தமிழகத்திலும் பல பல்கலைக்கழகங்கள் அக்குபங்சர் மருத்துவத்தைக் கற்பித்து வருகின்றன.
நம்முடைய தொந்தரவுகளுக்காக எந்த மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம் என்பதைவிட நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்கவழக்கங்களை எந்த அளவிற்கு சரியாக்கிக் கொள்கிறோம் என்பதுதான் ஆரோக்கியத்திற்கான நிரந்தரத் தீர்வாகும். பசி இருக்கும்போது உணவு எடுத்துக் கொள்வதும், இரவுகளில் தாமதமின்றித் தூங்குவதும் தான் நோயிலிருந்து விடுபடுதலுக்கான அடிப்படை அம்சங்கள். இவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் ஏற்கனவே ஏற்பட்டுள்ள தொந்தரவுகளில் இருந்தும் விடுபடலாம். புதிய தொந்தரவுகள் ஏற்படா வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் செய்யலாம்.