வியாழன், 29 நவம்பர், 2012

நோய்களின் உளவியல்

- ஹீலர்.அ.உமர் பாரூக் -

”விஞ்ஞானம் என்பது விஞ்ஞானி எதைச் செய்கிறாரோ அதையே உண்மை என்கிறது”

– கலீல் ஜிப்ரான்

Placebo

உளவியல் என்பது மனிதர்களுக்குத்தானே இருக்கும்? நோய்களுக்குமா உளவியல் இருக்கிறது.? என்ற உங்கள் கேள்விக்கு இக்கட்டுரையின் மூலம் விடைதேட முயல்வோம். நாம் உளவியல் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒரு அமெரிக்கச் சம்பவத்தைப் பார்த்து விடலாம்.

அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவருடைய மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக்கட்டத்தை எட்டி விட்டதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறின. சிகிச்சையளிக்க முடியாத நிலைக்கு புற்றுநோய் போய்விட்டதாகக் கூறிய அவருடைய டாக்டர்.மெடர் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் லாண்டி இறந்துபோய் விடுவார் என்றும் கூறினார். அதே போல இரண்டு வாரங்களில் சாம் லாண்டி மரணமடைந்தார்.

புற்றுநோய் முற்றிப்போய் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நோயாளி மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது? இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விஷயம்தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விஷயமே இருக்கிறது. அப்படி மரணமடைந்த சாம் லாண்டியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு மறுபடியும் அனுப்பப்பட்டது. அவருடைய உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்த தடயங்களோ, புற்றுநோய்க் கூறுகளோ சிறிதளவும் இல்லை என்பது மரணத்திற்குப் பின்னால் வந்த மருத்துவப் பரிசோதனையின் முடிவு. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்?

அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர்.டாக்டர்.புரூஸ் லிப்டன் கூறுவதை கேளுங்கள். “புற்றுநோயே இல்லாத ஒரு நோயாளியை, அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சில தினங்களில் இறந்துபோவார் என்றும் நம்ப வைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கித் தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்”

அப்புறம் என்ன? ஆரோக்கியமாக உள்ள நபரைச் சாகடிக்க விஷமா தேவைப் படுகிறது? ஒரு சிறிய பயமுறுத்தல் போதாதா? மனதில் பயத்தை விதைக்கும் ஒரு பொய் மறுபடி மறுபடி சொல்லப்பட்டால் அந்த பயமே உடல் முழுவதும் வியாபித்து, உயிரணுக்களைக் கொல்லுகிறது என்பது இன்றைய மரபணு அறிவியலின் தொடர்ச்சியாக டாக்டர்.புரூஸ் லிப்டனின் கண்டுபிடிப்புகளில் ஒன்று.

வெறுமனே ஒன்றிரண்டு மரணங்களையும், அதன் பரிசோதனை முடிவுகளையும் மட்டும் கொண்டு இந்த முடிவு எட்டப்படவில்லை. பல்வேறு வகையான பயன்பாட்டுச் சோதனைகளின் அடிப்படையில்தான் மரபணு அறிவியல் பயம் பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறது.

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வருடத்தின் நான்காவது மாதம் மிகவும் மோசமானது, அது தீய சக்தியுடையது என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் பயத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் வாழும் சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களின் மரணம் வருடத்தின் நான்காம் மாதமான ஏப்ரல் மாதத்தில் அதிகம் நிகழ்வது கண்டறியப்பட்டது. இது ஒரு வருடத்தில் இருக்கும் பிற மாதங்களில் நிகழும் மரணங்களை விட மிக அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில், சொந்த சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு நம்பிக்கை வேறு நாட்டில், வேறு சூழலில் வாழும் போதும் எவ்வளவு ஆழமான விளைவைத் தருகிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்தன.

மனிதனை வெறும் உடலாக, ஒரு பொருளாகப் பார்க்க முடியாது. அவன் உடலும், அதனோடு பின்னிப்பிணைந்த மனமும் கொண்டவன். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் குணமாதல் என்பது வெறும் உடலோடு தொடர்புடைய மாற்றம் மட்டுமல்ல. மாறாக அது மனதோடு இணைந்த மாபெரும் விளைவாகும். நோய் என்பதை உடல் சார்ந்த காரணங்களைக் கொண்டு விளக்கிவிட முடியும். ஆனால் அது முழுமையான காரணமாகவோ அல்லது உண்மையான காரணமாகவோ இருக்காது.

இன்றைய ஆங்கில மருத்துவத்தின் ஒரு பிரிவாக உளவியல்துறை இயங்கி வருகிறது. என்றாலும் பல்வேறு ஆய்வு முடிவுகளில் அது ஆங்கில மருத்துவத்தில் இருந்து வேறுபடுகிறது. ஆங்கில மருத்துவம் என்றாலே விதம் விதமான நோயறிதல் கருவிகளும், இயந்திரங்களும், ரசாயனங்களும் இணைந்த ஒரு பிம்பம் நம் மனதில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உண்மையில் இப்படியான வேதியியல் மாற்றங்களையும், உடற்கூறு மாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இன்றைய நோயறிதல் முறைகள் செயல்படுகின்றன.

உளவியல் மருத்துவம் இன்றைக்கு உலகமெங்கும் வேரூன்றியுள்ள நோய்களுக்கான அடிப்படைக் காரணம் என்று எதைக் குறிப்பிடுகிறது தெரியுமா நண்பர்களே? Psycho Psomatic Disorder. அதாவது மனதில் ஏற்படும் ஆழமான விளைவுதான் உடலில் நோய்களாகப் பிரதிபலிக்கின்றன என்று கூறுகிறது.

நம்முடைய உடல் மூன்று விதமான அடுக்குகளில் இயங்குகிறது. ஒன்று – வெளிப்படையான உடலியல் மாறுபாடுகள் (Physical Changes). இரண்டு – வேதியியல் மாறுபாடுகள் (Chemical Changes). மூன்று – மனநிலை அல்லது சக்தி மாறுபாடுகள்(Psychological or Energy Changes). உடலியல் மாறுபாடுகள்தான் நம்மை தொந்தரவு செய்யும் நோய்கள் என்று விளக்க வேண்டிய அவசியமில்லை. உடலில் ஏற்படும் விதம் விதமான தொந்தரவுகளைத்தான் நாம் நோய் என்று அழைக்கிறோம். இந்த உடலியல் ரீதியான விளைவுகளுக்கான அடிப்படை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் தான்.

இதைப் புரிந்து கொள்வதற்கு நம் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு உதாரணத்தையே நாம் நினைவு கூறலாம். ஒரு நாய் நம்மை துரத்துகிறது. இப்போது நாம் தப்பித்து ஓடுவதற்கோ அல்லது அதனை எதிர் கொள்வதற்கோ உடல் ரீதியான ஒரு பலம் நமக்குத் தேவைப்படுகிறது. அந்த பலத்தை உடல் நமக்கு வழங்குகிறது. இதுதான் உடலியல் மாற்றம். இந்த உடலியல் மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று ஆய்வு செய்தோமானால் அது வேதியியல் மாற்றங்களால் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும். உடலிற்கு தேவைப்பட்ட பலத்தை வழங்குவதற்காக இந்த உடல் தனக்குள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. நாய் துரத்தும் போது ஏற்படும் ரத்த அழுத்தம், ஓடுவதற்கான சக்தி இவைகள் உடலியல் விளைவுகள். இதற்கு அடிப்படையாக அமைவது அட்ரினல் என்ற வேதியியல் பொருளின் சுரப்புதான். இந்த ஹார்மோன் சுரப்பு ஏற்பட்ட பிறகுதான் ரத்தத்தின் அழுத்தமும், வேகமும் அதிகரித்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது. (நல்ல வேளை அப்படி ஓடும் போது யாராவது ஒரு மருத்துவர் ரத்த அழுத்த மானியை நம் கைகளில் கட்டியிருந்தால் நம்மை பி.பி. பேஷண்ட் ஆக்கியிருப்பார்). இப்படி உடல் தனக்குத் தேவையான போதெல்லாம் சுய வேதியியல் மாற்றங்களால் நிலைமையைச் சமாளிக்கிறது.

இப்படி உடலியல் மாற்றங்களுக்கான காரணமாக வேதியியல் மாற்றங்கள் விளங்குகின்றன. இந்த வேதியியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? அதுதான் மூன்றாவது அடுக்காக இயங்கும் மனநிலை மாற்றம். அந்தக் குறிப்பிட்ட சூழலில் நாம் உணரும் பயமும், எச்சரிக்கை உணர்வும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மனநிலை மாற்றமே வேதியியல் மாற்றங்களின் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. பின்பு அது உடலியல் மாற்றமாக வெளிப்படுகிறது. இதுதான் மனித உடலியக்கத்தின் மூன்றடுக்கு இயக்கம்.

இதை நாம் கவனத்தில் கொள்ளாமல் உடல் ரீதியான மாற்றங்களுக்கான முழுமுதல் காரணமாக வேதியியல் மாற்றங்களை மட்டுமே நாம் நம்புகிறோம். துரதிஷ்டவசமாக நம் வேதியியல் விஞ்ஞானிகளும் நம்புகிறார்கள். எனவே இந்த உடலியல் மாற்றங்களைக் களைய, அதன் அடிப்படையான வேதியியல் மாற்றங்களைச் சமன் படுத்த மூட்டை மூட்டையாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சந்தைப் படுத்தப்படுகின்றன.

இந்த மூன்றடுக்கு இயக்கத்தில் மனநிலை மாற்றங்களை துவக்ககால விஞ்ஞானம் கணக்கில் கொள்ளவில்லை. ஏனெனில் உடல் மாற்றங்களையும், வேதியியல் மாற்றங்களையும் அளவிடமுடியும். QUANTIFICATION செய்ய முடியும். அவற்றை அறிவியல் ரீதியாக நிரூபிக்க அளவுகள் உள்ளன. அதற்கான கருவிகள் இப்போது வந்துவிட்டன. ஆனால் மனநிலை மாற்றங்களை யூனிட்களில் அளவிட முடியாது. ஒருவருக்கு பயம் ஏற்பட்டால் அதன் மனரீதியான பாதிப்பு எத்தனை யூனிட்டுகள் என்று சொல்ல முடியுமா? இதே போல மகிழ்ச்சிக்கு, கோபத்திற்கு என்று யூனிட் அளவுகளை நிர்ணயிக்க முடியாது. இவ்வாறு அளவிட முடியாத, அறிவியல் கருவிகளால் QUANTIFICATION செய்ய முடியாத மனநிலை மாற்றங்கள் மருத்துவத்தில் இருந்து அகற்றப்பட்டன.

உலகின் எல்லா மருத்துவங்களுமே உடல், மனம் சார்ந்ததாகத்தான் ஒரு காலத்தில் இயங்கின. உடலும், மனதும் பிரிக்க முடியாதவை என்ற ஒருங்கிணைந்த (Holistic) கோட்பாடுகளைத்தான் மரபுவழி மருத்துவங்கள் முன்வைக்கின்றன. ஆங்கில மருத்துவமும், உடலை தனித்துவப்படுத்தும் விஞ்ஞானமும் தான் பிற்கால மருத்துவத்தை இரு கூறுகளாகப் பிரித்துப் போட்டன.

1742 இல் கணித மேதை ரேனே தெகர்த்தே உடல் பற்றிய ஒரு கருத்தை முன்வைத்தார். அவர் முதன் முதலாக கணித சூத்திரங்களின் வழியாக மனித உடலை, மனத்திலிருந்து பிரித்து விளக்கினார். உடலில் தோன்றும் அனைத்து மாற்றங்களுக்கும் உடலே காரணம் என்ற மருத்துவ உலகின் பிற்கால நிலைப்பாட்டிற்கு மேற்கண்ட முன்வைப்பு ஒரு அடிப்படையாக இருந்தது. தன்னுடைய விருப்பத்தை முடிவுகளாக்கி, அதற்கான தரவுகளைத் தேடும் குறுக்கல்வாத (Reductionism) பார்வை மருத்துவ விஞ்ஞானிகளிடையே முளை விட்டதால் முழு முற்றாக மனித மனம் உடலிலிருந்து பிரித்து வைக்கப்பட்டது. இன்றும் உடலியல் விளைவுகளுக்கான காரணத்தை உடல் ரீதியாகவும், வேதியியல் மாற்றங்களில் மட்டுமே தேடும் மருத்துவ விஞ்ஞானம் தன் பயணத்தை வேகமாகத் தொடர்கிறது.

மருத்துவப் பேராசிரியர் டாக்டர்.ஹெக்டே கூறுகிறார் “இப்படியான போக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறையை நோயாளிகளின் படுக்கையிலிருந்து பிரித்தெடுத்து, உயர் தொழில்நுட்ப தளத்திற்கு கடத்திச் சென்றுள்ளது.”

அடிப்படையில் உளவியல் என்ற சொல்லே அதன் நோக்கத்தை தெளிவு படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் சைக்காலஜி என்று அழைக்கப்படும் உளவியல் Psychee என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. Psychee என்பது கிரேக்கக் கதைகளில் சொல்லப்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தின் பெயர். Psychee என்ற பெண்ணை அப்ரோடைட் என்பவனின் மகன் காதலித்தான். அப்ரோடைட்டிற்கு Psychee யைப் பிடிக்கவில்லை. இவர்களின் திருமணத்தைத் தடுக்க விரும்பும் அப்ரோடைட் Psychee க்கு மூன்று மனத்தடைகளை ஏற்படுத்துகிறான். Psychee தன் கடவுளின் துணை கொண்டு அந்த மனத்தடைகளைத் தகர்த்ததாக அந்தக் கதை முடிகிறது. Psychee என்ற சொல் மனத்தடைகளைத் தகர்ப்பது என்ற பொருளைத்தான் குறிக்கிறது. அதிலிருந்து உருவான Psychology நோய்களை ஏற்படுத்தும் மனத்தடைகளை ஆய்வு செய்வதற்குப் பதிலாக உடலியல் மாற்றங்களுக்கு வேதியியல் மருந்துகளைப் பரிந்துரைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.

இன்றைய உளவியல் எப்போதாவதுதான் மனநிலை மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்யும். அதுவும் மேலே நாம் பார்த்த மூன்றடுக்கு அடிப்படையில் அல்ல. மனநிலை மாற்றங்களுக்கும் வேதியியல் மாற்றங்களே அடிப்படைக் காரணம் என்ற தலைகீழ்ப் பார்வையுடன்.

இன்றைய நோய்களுக்கான அடிப்படைக் காரணத்தை மனநிலை மாற்றங்களின் வழியாக அறிவியல் தேடத்துவங்கினால் புதிய திசைவழிகளை அடையமுடியும். நோய்களின் வரலாற்றை அடிப்படையில் இருந்து திருத்தி எழுதவும் முடியும். இன்றைய மருத்துவ விஞ்ஞானம் மனநிலை மாற்றங்களை ஓரளவு உணர்ந்திருக்கிறது. ஆனால் அவைகளை உடலியல் மாற்றங்களோடு இணைத்து சிந்திப்பதில்லை.

மருத்துவ விஞ்ஞானத்தில் இரண்டு மனநிலை விளைவுகள் விவாதிக்கப்படுகின்றன. ஒன்று- பிளாசிபோ எஃபெக்ட். நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை பிளாசிபோ என்ற வார்த்தையால் குறிக்கின்றனர். இன்னொரு விளைவு – நோசிபோ எஃபெக்ட். பயத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை இச்சொல் குறிக்கிறது.

நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு நோயாளிக்கு ஏற்படும் நல்ல விளைவுகளை பிளாசிபோ அதாவது ”ஒன்றுமில்லாதது” என்ற வார்த்தையால் குறிக்கிறார்கள். இந்த வார்த்தைப் பிரயோகமே விஞ்ஞானிகளின் முன்முடிவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாத ஒன்று எப்படி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? (கணிதத்தில் ஜீரோ என்பது மதிப்பில்லாத அதே நேரம் மிக மதிப்புடைய ஒன்று. அது போல ஒன்றுமேயில்லாத ஆனால் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் விளைவை ப்ளாசிபோ என்று அழைக்கிறார்கள் போல). நாம் நோய்களின் அடிப்படை உளவியலான “பயமுறுத்தல்” என்னும் நோசிபோ விளைவைப்பற்றியே பேசுவதால் ப்ளாசிபோவை இன்னொரு முறை பார்க்கலாம்.

பயத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலை நாம் உருவாக்கி அதன் மூலம் ஏற்படும் மனநிலை, உடல்நிலை விளைவுகளை நோசிபோ விளைவு என்று அழைக்கிறார்கள். அதாவது அழிக்கும் விளைவு. இந்த நோசிபோ விளைவு இக்காலத்தில் எவ்வளவு நோய்களில் முக்கிய பங்காற்றுகிறது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் இன்றைய மருத்துவ, வணிக உலகை திரும்பிப் பாருங்கள். உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு வேதியியல் மாற்றங்கள் காரணமாகின்றன. உடல், வேதியியல் மாற்றங்களை அளவீட்டு முறையில் கண்டுபிடித்து வேதியியல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியானால், வேதியியல் மாற்றங்களுக்கும் காரணமான மனநிலை மாற்றங்கள் எந்த அளவிற்கு ஆய்வுகளில் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளன? மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தி, வேதியியல் மாற்றங்களை ஏற்படச்செய்து உடலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது ஆய்வு செய்யப்படவில்லை. ஏனென்றால் இப்படியான ஆய்வு முடிவுகள் எந்த ஒரு பொருளையும் விற்பதற்குப் பயன்படாது. மாறாக, அவற்றைக் குறைப்பதற்கோ அல்லது கைவிடுவதற்கோதான் பயன்படும்.

இன்றைய மருத்துவ ஆய்வுகளை உலகில் அதிகமாக மேற்கொள்வது அரசாங்கங்கள் இல்லை. மருந்துக் கம்பெனிகள்தான். விஞ்ஞானிகளை கூட்டம் கூட்டமாக வைத்து மருந்து உற்பத்தியை பெருக்குவதற்கு ஆய்வு செய்வார்களா அல்லது சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வார்களா? இப்படி நோய்களுக்கான உண்மையான காரணங்களைத் தேடும் கடமை எதுவும் கம்பெனிகளுக்கு இருக்கிறதா என்ன? மிகச் சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது “ அமெரிக்காவில் உள்ள ஒரே ஒரு மருந்துக்கம்பெனியின் வருட வருமானம் அமெரிக்க அரசின் வருட வருமானத்தை விடவும் அதிகம்” என்று. எப்படியான ஆய்வுகளைச் செய்தால் இப்படி அரசுகளோடு போட்டி போட முடியும்?

நம்மைச் சுற்றி இயங்கும் பெரும்பாலான விஷயங்கள் நம்மை நோசிபோ விளைவில் தள்ளி, பயமுறுத்தி பணம் பறிப்பவைகளாகவே இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் உழைத்துச்சேர்த்த பணம் போனாலும் பரவாயில்லை. மறுபடியும் எழ முடியாத அளவிற்கு உடல்நலம் பாதாளத்தில் தள்ளப்படுகிறது. சோப்பு. சீப்பு விளம்பரம் முதல் மருத்துவ ஆலோசனைகள், முழு ஆரோக்கிய உடல் பரிசோதனைகள், செய்திகள் என அனைத்துமே திட்டமிட்டு செய்யப்படுகின்றன. முந்தைய மருத்துவங்களில் உடல்நலத்திற்கான உளவியல்தான் இருந்தது. இன்றோ நோய்களைப் பெருக்குவதற்கான உளவியல் கூறுகள் நம்மை நோக்கி பயன்படுத்தப்படுகிறது.

நம்முடைய உடல்நலத்தை வெளியே பரப்பப்படும் செய்திகளின் மூலம் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்த சந்தேகமே நம்மை நாம் பயந்த நோயை நோக்கித் தள்ளும் வேலையைத் திறம்படச் செய்கிறது. ஒவ்வொரு உடல்நலம் குறித்த விஷயத்தையும் உளவியல் விளைவுகளின் அடிப்படையில் பிரித்துணர முயற்சிப்போம். இந்தச் செய்தி நம்மை பயமுறுத்துகிறதா? அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா? என்பதை கூர்மையாகக் கவனிக்க வேண்டிய தேவை இன்று தோன்றியிருக்கிறது. அவ்வாறு நாம் பயப்படுவதால் யாருக்கு நன்மை என்ற பொருளாதார அடிப்படையிலான கேள்வியும் உங்களை நோயிலிருந்து காப்பாற்றும்.

எதிர்காலத்தில் அறிவியல், உளவியல், மருத்துவம் என அனைத்தையும் கடந்து பொருளாதாரப் புரிதல் நம்மைக் காக்கும் ஆயுதமாக மாறக்கூடும். #

நன்றி : “நற்றிணை” இலக்கிய இதழ்