திங்கள், 24 ஆகஸ்ட், 2020

பேரழிவை வரவேற்கும் மத்திய அரசின் திட்டம் - சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு யாருக்காக?

 

# இந்தோனேசிய அரசு நாட்டின் தலைநகரை ஜெகர்த்தாவில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றுவதற்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? வடக்கு ஜெகர்த்தா நகரம் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூழ்கி வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டதால் தான். சர்வதேச சுற்றுச் சுழல் விஞ்ஞானிகளின் கருத்துப் படி 2050 ஆம் ஆண்டுக்குள் ஜெகர்த்தா நகரத்தின் பெரும்பகுதி கடலில் மூழ்கிவிடும்.

                  . . .இதே போல உலகம் முழுவதும் இருக்கும் அரசுகள் சுற்றுச் சூழல் மாற்றத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வழி கிடைக்காதவர்கள் கவலையோடு அது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

                  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அச்சம் கொள்ளும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்து விட்டது?

                  சுற்றுச் சூழல் எனும் சொல் பயன்பாடே 1970 களுக்குப் பிறகுதான் துவங்கியது. ’மனிதர்களுக்காகவே இந்த உலகம் படைக்கப்பட்டதுஎன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே எல்லா மனிதர்களும் தன் தேவைக்காக இயற்கை வளங்களை அழிக்கத் துவங்கினோம். தொழிற்புரட்சிக்குப் பிறகு - தேவைகளைக் கடந்து லாபத்திற்காகவும், முதலாளித்துவத்தின் உச்சகட்டமாக லாப வெறிக்காகவும் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டன. இயற்கை வளங்களை இரண்டாகப் புரிந்து கொள்ளலாம். ஒன்றுபுதுப்பித்துக் கொள்ளப்படும் வளங்கள் இரண்டுபுதுப்பிக்கவே முடியாத வளங்கள். முதல் வகை அள்ள அள்ளக் குறையாத இயற்கையிலிருந்து பெறப்படும் சக்திகளைக் குறிப்பிடுகிறது. சூரிய ஒளி மின்சாரம், நீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புனல் மின்சாரம், நிலத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவு உற்பத்தி இப்படியான தேவைக்கான நடவடிக்கைகளுக்கு இயற்கை வளங்களைப் பயன்படுத்தலாம். அதிலும், அவை அனைத்தும் பாதிக்கப்படாத விதத்தில். இரண்டாவது வகைபுதுப்பிக்கவே முடியாதவை. புவி வெப்பத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள், நிலத்தடி நீரை அதீதமாக உறிஞ்சுதல், நிலக்கரி எடுத்தல், பெட்ரோல்டீசல்ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை அகழ்ந்தெடுத்தல், மலைகளை உடைப்பது, ஆற்று மணலின் மிகை பயன்பாடு. . இவையெல்லாம் புதுப்பிக்கவே முடியாதவை. மலைகளை இயற்கை மறுபடியும் உருவாக்காது. ஆற்று மணல் உருவாக லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

                  புதுப்பிக்கவே முடியாத இயற்கை வளங்களை நாம் மிகையாகப் பயன்படுத்தும் போது, ஒரு கட்டத்தில் அவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விடும். வளங்களற்ற வாழ்வின் இறுதிக்காலம் துவங்கி விடும். அப்படியான ஒரு நிலையை நாம் எட்டிவிட்டதாக உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். உலக பெருமுதலாளிகள்வளர்ச்சிஎன்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் லாபத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்கு இது தடையாக இருக்கிறது. எனவே, இது பேசுபொருளாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

                  சுற்றுச் சூழலின் நிலை குறித்து அச்சப்படும் அளவுக்கு என்னதான் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்?

                  2019 ஆம் ஆண்டு உலக விஞ்ஞானிகள் 11,259 பேர் இணைந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பருவநிலை மாற்ற மாநாட்டிற்குப் பிறகு 40 ஆண்டுகாலத்தில் நடத்தப்பட்ட 7000 ஆய்வுகள் மூலமாக இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. 2019 செப்டம்பர் 25 பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் சுருக்கத்தை சுற்றுச் சூழல் ஆய்வாளர் அஜாய் ராஜா, அக்கு ஹீலர் டார்வின் ராஜ் ஆகியோர் தமிழில் வெளியிட்டுள்ளனர். ”நாம் சுய பேரழிவின் விளிம்பில் உள்ளோம். . மாறுவதற்கு சக்தியற்று நிற்கிறோம். .” என்ற மேற்கோளோடு ஆய்வு முடிவுகள் நம்மை அச்சுறுத்துகின்றன. அவற்றை இந்தியப் பார்வையோடு புரிந்து கொள்ளலாம்.

                  # இந்த நாற்பது ஆண்டுகளில் புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலகத்தின் எந்த நாடும், எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் என்ற சொற்களில் சிக்கிப் போய் இயற்கை வளங்களை இழந்து நிற்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்ட பூமியை, கடந்த இரு நூற்றாண்டுகளில் அழித்து முடிக்கப் போகிறோம். சுற்றுச்சூழலை மோசமாக பாதிப்பிற்குள்ளாக்கிய நாடுகளின் சர்வதேசப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

                  # தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு மிகை நுகர்வுகளால் உருவாக்கப்படும் கரியமில வாயுவை உறிஞ்சுவதில் கடல் முக்கியப் பங்காற்றுகிறது. இதனுடன், அதிகரிக்கும் பூமியின் வெப்ப நிலையில் 90 சதவீதத்தையும் கடலே உள்வாங்குகிறது. இதனால் கடலின் உயிர் வளி (ஆக்சிஜன்)யில் மாற்றம் ஏற்பட்டு அது குறைந்து போயிருக்கிறது. வெப்பமும், அமிலத்தன்மையும் கடலில் அதிகரித்துள்ளது. நிலத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கான அரணாக இருந்த கடல் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. புவி வெப்பத்தையும், கரிய மில வாயு வெளிப்பாட்டையும் உடனடியாகக் குறைக்காவிட்டால் பேரழிவு துவங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

                  # கடல் வாழ் உயிரினங்கள் அதன் இயல்பான வாழ்விடங்களை விட்டு, குளிர்ச்சியான இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது இன்னும் அதிகரித்தால் கடல் உணவுகள் அருகி விடுவது மட்டுமல்லாமல், கடலின் உயிரியல் சூழல் முற்றிலும் சமநிலை இழந்து விடும். கடலின் மாற்றங்கள் நிலத்தின் மீது ஏற்படும் மாற்றங்களுக்கான பெரும் காரணிகளாக இருக்கின்றன. கடலின் உருவாகும் வெப்ப அலைகள் 1980 களுக்குப் பிறகு இரட்டிப்பாகி உள்ளன. மேலும் அவை 20 முதல் 50 மடங்குகள் வரை அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

                  # 1970 களுக்குப் பிறகு கடலின் மேற்பரப்பு 0.5% முதல் 3.3% வரை ஆக்சிஜனை இழந்துள்ளது. தொடரும் கடலின் உயிர்ச்சூழல் மாறுபாடுகளாலும், அண்டார்டிக், ஆர்டிக், கிரீன்லாந்து பகுதிகளில் பனிப்பாளங்கள் உருவதாலும் கடல் மட்டம் அதி வேகமாக உயரும் ஆபத்து இருக்கிறது. கடல் சார்ந்த அழிவுகளாக சுனாமிகள், சூறாவளிகள், வெள்ளப் பெருக்குகள் மிக அதிகமாக நிகழும் சாத்தியங்கள் இருக்கின்றன.

                  # நிலம் சார்ந்த சுற்றுச் சூழல் அழிப்பு மற்றும் காற்று மாசு அதிகரிப்பினாலும் தனித்தனியாக பாதிப்புகள் தொடர்கின்றன. காற்று மாசின் அளவு தொடர்ந்து 430 பிபிஎம் அளவு நீடித்தால் பாலூட்டிகளின் இனப்பெருக்கத் தன்மை அழிந்து விடும். நுரையீரல்களால் சுவாசிக்க முடியாமல் அவை செயலிழந்து போகும் ஆபத்தும் உண்டு. சுவாசிக்கக் காற்றில்லாத உலகத்தில் எந்த உயிரினங்களால் வாழ்ந்து விட முடியும்? சென்னையில் காற்று மாசின் அளவு 400 பிபிஎம் என்பதையும், டெல்லியின் காற்று மாசு அளவு கடந்த வருடத்தில் 500 பிபிஎம் அளவும் இருந்ததை இந்த ஆய்வோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

                  # நிலம், நீர், காற்று ஆகிய மூன்றில் ஏற்படும் பெருமாற்றங்கள் பேரழிவாக உருமாறும். நிலத்தடி நீர் குறைந்து போவதால் ஏற்படும் வறட்சி ஒருபுறமும், சுவாசிக்க முடியாத காற்று இன்னொரு புறமும், கடல் சூழல் மாறுபாட்டால் பருவகால மாறுபாடும் பாதிப்புகளும் என்று அபாயம் சூழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்.

                  # உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அடிப்படையில் இந்தியாவின் 124 பெருநகரங்களில் 116 நகரங்கள் மனிதர்கள் வாழத்தகுதியற்ற நிலையில் உள்ளதாகக் கூறுகிறது. 2017 ஆம் ஆண்டு இந்திய அரசின் அறிக்கையின் படி, அந்த ஆண்டு மட்டும் காற்று மாசினால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 12,40,000. இதனை நமது உச்ச நீதிமன்றமும் தன் கண்டனத்தின் மூலம் உறுதி செய்துள்ளது.

                  #  கடல் நீர்மட்ட உயர்வினால் 2050 ஆண்டிற்குள் 30 கோடி மக்கள் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்று ஐ.நா.சபையின் தலைவர் 2019 செப்டம்பர் பாங்காங் கூட்ட உரையில் குறிப்பிட்டார். “இது பூமிக்கான மிகப் பெரும் அச்சுறுத்தல்என்று எச்சரிக்கிறது ஐ.நா.

                  # மாலத்தீவும், அந்தமான் பகுதிகளும், உலகின் பல கடலோர நகரங்களும் கடலில் மூழ்கும் ஆபத்தினை விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. 2030 ஆம் ஆண்டில் இருந்தே சூறாவளி, பெருவெள்ளம், சுனாமி, பருவம் தவறிய மழை, வறட்சி, காட்டுத்தீ, நிலச்சரிவு, பெருந்தொற்று நோய்கள் போன்றவை அடிக்கடி நிகழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

                  . . இப்படி நீளமாகவும், ஆழமாகவும் உலக சூழலியல் விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அறிக்கை உலக நாடுகளை உலுக்கியிருக்கிறது. இந்த அறிக்கை வருவதற்கும் முன்பாகவே 2018 இல் மறைந்த, இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் இந்த பூமி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்என்று எச்சரித்தார்.

                  இப்படி உலகமே சூழலியல் குறித்து கவலையோடு இருக்கும் சர்வதேச சூழலில் இரு நாடுகளின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை. ஒன்றுஅமெரிக்க அரசு உலக சுற்றுச் சூழல் பாதுக்காப்புக்கான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. எப்போதுமே உலக அமைதிக்கு நேரெதிராக சிந்திக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ட்ரெம்பின் காலத்தில் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்தியாவின் நடவடிக்கையும் அமெரிக்காவப் பின் தொடரும் தன்மையில் அமைந்துள்ளதுதான் அதிர்ச்சியானது.

                  ஐக்கிய நாடுகள் சபை 1972 இல் ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில்தான் முதல் சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்தியது. சர்வதேச அளவில் பல நாடுகளின் பிரதிநிதிகள் அதில் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் நேரடியாகப் பங்கேற்ற தலைவர்கள் இருவர்தான். ஒருவர் மாநாடு நடந்த ஸ்வீடனின் அதிபர். இன்னொருவர் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி. சுற்றுச் சூழல் குறித்த முடிவுகளில் உலகமே இந்தியாவைக் கவனிக்கிறது. இந்தப் பின்னணியில் நமது மத்திய அரசின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு திருத்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியதைப் போலவே, நமது மத்திய அரசு சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப் போகச் செய்து, இன்னும் அதிகமான சூழல் அழிப்பை முன்மொழிகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இத்திருத்தத்தை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது.

                  சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு திருத்தம் குறித்த பல கட்டுரைகளும், விமர்சனங்களும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அதில் குறிப்பிடப்படும் இரண்டு முக்கியமான திருத்தங்களைப் புரிந்து கொண்டால் போதுமானது. சூழல் பேரழிவை எதிர்கொள்ளும் நிலையில் அது எவ்வளவு ஆபத்தானது? என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

                  ஒரு புதிய ரசாயனத் தொழிற்சாலையோ, நிறுவனமோ துவக்கப்படும் போது, அங்கிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு, அதன் தன்மை, சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அங்கு வாழும் மக்களின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைக் கையாளவதற்கான மேலாண்மைத் திட்டம், பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் . . இவை அனைத்தையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு. இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு நிபுணர் குழு ஆய்வு செய்து அனுமதி வழங்கவோ, மறுக்கவோ செய்யும். இது தவிர, தொழிற்சாலைகளின் தன்மை அடிப்படையில் ஏ, பி என்ற இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ரசாயனத் தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்கள், பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி போன்ற சூழலுக்கு அதிகம் கேடுவிளைவிக்கும் திட்டங்கள், ஆனால் முக்கியமானவைகளை ஏ என்ற பிரிவில் பிரித்திருந்தார்கள். அதே போல, சிமெண்ட் , சர்க்கரை ஆலைகள், மின் உற்பத்தி போன்ற நிறுவனங்களை பி என்ற பிரிவிலும் வகை பிரித்திருந்தார்கள்.

                  , பி என்ற எந்த பிரிவாக இருந்தாலும் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கையை சமர்ப்பிப்பதும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதும் அவசியம். ஏ வகை திட்டங்களுக்கு மத்திய அரசும், பி வகை திட்டங்களுக்கு மாநில அரசும் ஆய்வு செய்து அனுமதி வழங்கும். இதுதான் இப்போது நடைமுறையில் இருக்கும் 2006 சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு குறித்த விதிமுறைகள். இவற்றை இப்போதுள்ள மத்திய அரசு கலைத்துப் போடுவதுதான் 2020 திருத்தம். இந்திய விதிமுறைகள் ஓரளவு கடுமையானவைகளாக இருக்கும் போதே சுற்றுச் சூழல் பாதிப்பின் நிலை என்ன? என்பதும், நிறுவனங்களின் விதிமீறல்களும், பொதுமக்கள் கருத்துக் கேட்பின் முழுமையற்ற தன்மையும் நமக்குத் தெரியும். கூடங்குளம் கூடுதல் அணு உலை நிர்மானிப்பையும், மீத்தேன் சிக்கல்களையும் இந்தப் பின்னணியில்தான் நாம் எதிர்கொள்கிறோம்.

                  புதிய திருத்தங்கள் என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறது?

                  இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த திட்ட வகைகளை மூன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. , பி1, பி2 என்ற பிரிவுகள். ஏ வகை நிறுவனங்களுக்கு வழக்கம் போல மத்திய நிபுணர் குழு அனுமதி வழங்கும். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் அவசியம். பி1 திட்டங்களுக்கும் இதே விதிகள்தான், மாநில நிபுணர் குழு அனுமதி வழங்கும். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பி2 வகை திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை. பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதும் அவசியமில்லை. அரசி அவசியம் என்று கருதும் திட்டங்களை பி2 வரையறைக்குள் நகர்த்தி, அவை எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் எந்தத் தடையும் இல்லாமல் அங்கீகரிப்பதற்கான ஏற்பாட்டினை இந்தத் திருத்தம் மேற்கொள்கிறது. பி2 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் சிலவற்றை அறிந்து கொண்டால் இத்திருத்தத்தின் நோக்கம் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.

                  நூறு கி.மீ. வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள், கனிம சுரங்கப் பணிகள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்து கட்டுமானத் திட்டங்கள், அமிலத்தொழிற்சாலைகள், நீருக்கடியிலும் பூமிக்கடியிலும் சேகரிக்கப்படும் எரிவாயு, நிலக்கரி, எண்ணெய் திட்டங்கள் இவற்றுக்கெல்லாம் சூழல் தாக்க மதிப்பீடும் அவசியமில்லை. பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டியதும் இல்லை. ஆபத்தான திட்ட வகையில் இருந்த பூச்சிக் கொல்லி ரசாயனத் தொழிற்சாலைகள் பல பிரிவுகள் இந்த திருத்தத்தின் மூலம் பி2 வகைக்கு வந்து சேர்ந்து விடுகிறது.தமிழ்நாட்டினை வைத்து யோசித்தால், ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எடுப்பதற்காக தோண்டப்படும் ஆயிரக்கணக்கான ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் சுற்றுச் சூழல் தாக்கத்தை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. பொதுமக்கள் கருத்தினை கேட்கவே வேண்டியதில்லை. மக்கள் எதிர்ப்புள்ள, சூழலுக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிரான திட்டங்களை புதிய திருத்தத்தின் வழியாக சட்ட ரீதியாகவே நிறைவேற்றிக் கொள்வார்கள்.  

                  சூழல் தாக்க மதிப்பீடு திருத்தத்தின் இன்னொரு மிக முக்கியமான பிரச்சினை இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளுக்கான கால நீட்டிப்பு. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிப்படி, ஒவ்வொரு தொழிற்சாலையும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சூழலியல் இணக்க அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு வருடத்திற்கு ஒருமுறையாக மாற்றப்படுகிறது. எவ்வளவு பெரிய சூழல் சீர்கேட்டினை ஒரு நிறுவனம் உருவாக்கினால் கூட, அது அரசின் குறைந்தபட்ச கவனத்துக்கு வருவதற்கு ஒரு வருடம் ஆகிவிடும். அதே போல, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் அதிகப்படியாக நீட்டிக்கப்படுவதையும் திருத்தம் முன்மொழிகிறது. உதாரணமாக, சுரங்கப்பணிகளுக்கான கட்டுமானங்களுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்கு 30 வருடம் இருக்கிறது. இதனை 50 வருடங்களாக நீட்டிக்கிறார்கள். அணு உலைத் திட்டங்களுக்கான கால அளவு 5 வருடத்திலிருந்து 15 வருடங்களாக நீட்டிக்கப்படுகிறது.

                  வரையறை மாற்றமும், கால நீட்டிப்பும் சுற்றுச் சூழல் தாக்கத்தை மேலும் சீரழிக்கும். மக்கள் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் புதிய திட்டங்கள் பல ம்திப்பிடப்படாமலும், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படாமலும் திணிக்கப்படும். இவை தவிர, புதிய திருத்தத்தில், சூழலியல் தாக்க மதிப்பீட்டு விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களும், புகார் அளிக்கும் விதிமுறைகளை தளர்த்தும் விதிகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய இயற்கை வளங்களை பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தவித இடையூறுமில்லாமல் வாரி வழங்குவதற்கான முன்வைப்புகளையே சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு திருத்தம் முழுமையாகக் கொண்டுள்ளது.

                  தேச நலன் விரும்பிகளின், இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, கொரோனா பொதுமுடக்க காலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வருமானால், உலகப் பேரழிவின் காலத்தை இந்தியா அதிவேகமாக வரவழைக்கும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும், மதிப்பீடு திருத்தம் குறித்த எதிர்ப்புணர்வையும் பொதுமக்களின் பேசு பொருளாக மாற்ற வேண்டிய அவசியத்தை இந்த அபாய அறிவிப்பு நமக்கு உணர்த்த வேண்டும். முன் எப்போதையும் விட வேகமாகவும், ஆழமாகவும் நாம் பணிபுரிய வேண்டிய அவசர காலத்தில் வாழ்கிறோம் என்பதை கூடுதலாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

#