ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ரசாயனப்போர்

மனிதத்தை விழுங்கிச்செரிக்கும் மருத்துவ வியாபாரம்                    - மருத்துவர்.அ.உமர் பாரூக்

 

         ஆங்கில மருத்துவத்தின் தடுப்பூசித் திட்டங்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் புதுவிசையின் கடந்த  இதழ்களில் நாம் விவாதித்து வருகிறோம். எந்த ஒரு விஷயமானாலும் விவாதத்திற்கும், கலந்துரையாடலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்குமானால் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்டதாகவும், மக்களையே ஏமாற்றும் விதமாகவும் மாறக்கூடும். இவ்வாறான திறந்த கலந்துரையாடல்கள் நம்மை பயமுறுத்தக்கூடிய ரகசியங்களைக் கூட எளிமையானதாக மாற்றும் சக்தி படைத்தவை. ஆங்கில மருத்துவம்  சரியாகச் சொன்னால் மருத்துவம் என்பதே மக்களிடமிருந்து அந்நியப்பட்ட அல்லது மக்களையே பயமுறுத்தும் தவிர்க்கவே இயலாத சக்தியாக மாறிவருகிறது. தெருமுனை டீக்கடையின் விவாதப் பொருளாக மருத்துவம் மாறுவதே அதன் அத்தனை புதிர்களையும் கட்டுடைக்கும் ஆயுதம்.

மருத்துவர்.லட்சுமி சிவசங்கரன் தன் கட்டுரையில் (புதுவிசை:29) ஒரு சிறந்த விவாதத்திற்கான திறப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இன்றைய இந்திய கல்விமுறை எப்படி மெக்காலேயினால் அறிமுகப்படுத்தப்பட்ட போது, சில பக்க விளைவுகள் ஏற்பட்டனவோ அதே போன்றதுதான் ஆங்கில மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய மருத்துவமுறைகள் தானாகவே அழிந்து போயின என்பதும், பாரம்பரிய மருத்துவமுறைகள் காணாமல் போனதற்கு எந்த விதத்திலும் ஆங்கில மருத்துவம் காரணமில்லை என்பதுமான  கருத்தை கட்டுரை தன் முற்பகுதியில் கொண்டுள்ளது.

மெக்காலே மருத்துவம்

1830களில் இந்தியாவை எந்தவித முன் திட்டமும் இன்றி நான்காண்டுகள் சுற்றிப் பார்த்த மெக்காலே 1835 பிப்ரவரி 2ம் தேதி பிரிட்டன் பாராளுமன்ற அறிக்கையில் “இந்தியாவில் நான் மேற்கொண்ட மிக நீண்டபயணத்தில் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இதுவரை சந்தித்ததில்லை. நற்பண்புகளும், தனித்தன்மையுமுள்ள மக்களால் இந்நாடு வளம் பெற்றுள்ளது. இத்தேசத்தின் முதுகெலும்பான கலாச்சாரமேன்மையை உடைத்தெறியாமல் இம்மக்களை வெற்றி கொள்வது பற்றி என்னால் சிந்திக்கவே முடியவில்லை. இவர்களின் பழமையான மரபுவழிக்கல்விமுறை, பண்பாடு போன்றவற்றை மாற்றிவிட்டோம் என்றால், இந்தியர்களுக்கு தங்களைவிட வெளிநாட்டு மற்றும் ஆங்கிலக் கலாச்சாரம் உயர்ந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். மக்கள் சுயசிந்தனையையும், சொந்த கலாச்சாரத்தையும் இழந்துவிட்டார்களென்றால் இந்தநாட்டை வெற்றி கொள்வது மிகவும் சுலபமானது” என்று கூறியிருப்பதும் எதேச்சையானதுதானா? ஒவ்வொரு இந்தியனும் தன்னுடையதை விட அனைத்தும் மேலானது என்ற எண்ணம் ஏற்படுமாறு ஒரு தாழ்வுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் மெக்காலே பாடத்திட்டம். இது முன்கூட்டியே திட்டமிடப்படாத, தன் ஆதிக்கத்தை பரவலாக்கும் ஆங்கில அரசின் சதி இல்லை என்ற பழைய பொய்  மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. 

எப்படி மெக்காலே திட்டம் நம்முடைய சிந்தனையின் அடிமட்டத்தை சிறுகச் சிறுகச் சிதைத்ததோ அதுபோலவே நம்முடைய மருத்துவ அறிவையெல்லாம் ஒற்றைத்தன்மைக்குத் தள்ளியிருக்கிறது ஆங்கில மருத்துவம். நமது மரபு சார்ந்த அனைத்துமே போற்றுதலுக்குரியவை என்பதோ, நம்முடைய மரபுவழி மருத்துவங்கள் கூறுவது அனைத்தும் அப்படியே ஏற்கத்தகுந்தவை என்பதோ என்னுடைய வாதமல்ல. பன்முகத்தன்மை வாய்ந்த பல மருத்துவங்களின் அறிவுச்சொத்தை இன்றைய கருவிகளின் கற்பனை அடிப்படையிலான முடிவுகளின் வழியாக கேள்விக்குள்ளாக்குவது கேலிக்கூத்தானது. 

ஆங்கில மருத்துவம் புதிய மருத்துவமாக அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக மரபுவழி மருத்துவங்கள் அனைத்தும் வெறும் மூடநம்பிக்கை என்பது போன்ற கருத்து பரப்பப்பட்டு அவை வெளியேற் றப்பட்டன. இந்திய மருத்துவக்கல்லூரிகளில் அது எந்தவிதமான மருத்துவத்தை கற்பிக்கும் கல்லூரியாக இருந்தாலும் சரி அவற்றில் ஆங்கில மருத்துவப்பாடம் இல்லாத பாடத்திட்டம் ஏதாவது உண்டா? சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா என எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் அதன் பாடத்திட்டத்தில் ஆங்கில மருத்துவம் பெருமளவு கலக்கப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் இப்போதுவரை திட்டமிட்டு திணிக்கப்படுகிற இந்தக் கல்விக் குழப்பம் யாருக்கும் தெரியாமல் தானாக நடைபெற்ற ஒன்றா?

சிலமாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போலிமருத்துவர்கள் (யார் போலி மருத்துவர் என்பது குறித்து சட்டரீதியாகவும், தத்துவ அடிப்படையிலும் மிகப்பெரிய ஆய்வே நடத்தலாம்) கைது நடவடிக்கையில் பல பட்டம் பெற்ற சித்தமருத்துவர்களும் குற்றம் சுமத்தப்பட்டனர். சித்த மருத்துவர்கள் சங்கத்தில் இருந்து அரசின் மேல் வழக்கு தொடரப்பட்டது. சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் ஆங்கில மருத்துவம் இடம் பெற்றிருப்பதால் நாங்கள் ஆங்கில மருத்துவத்தைப் பயன்படுத்த உரிமை உண்டு என்பது அவர்களின் வாதம். வழக்கின் முடிவு பட்டம் பெற்ற எந்த பாரம்பரிய மருத்துவருக்கும் ஆங்கில மருத்துவத்தைப் பயன்படுத்தும் உரிமை உண்டு என்பதாக இருந்தது. தொடர்ந்து வெளிவந்த அரசாணையும் அதனையே உறுதி செய்தது. இப்போது இந்திய மருத்துவக்கழகம் (ஆங்கில மருத்துவக் கழகம்தான்) கூறுகிறது: ஆங்கில மருத்துவப்பாடங்களை பிற மருத்துவ முறைகளின் பாடத்திட்டத்திலிருந்து எடுத்துவிடலாம். ஆங்கில மருத்துவ உரிமை எங்களுக்கு மட்டும்தான். 

இப்போது பிற மாற்று மருத்துவப் பாடங்களில் இருந்து ஆங்கில மருத்துவத்தை நீக்கிவிடுவது சுலபமானதுதான். ஆனால் ஏற்கனவே சித்த மருத்துவர் என்ற பெயரில் ஆங்கில மருத்துவப் பாடத்திட்டத்தால் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை என்ன செய்வது? இப்படியான சித்த மருத்துவக் கல்லூரிகளில் பயின்றும் தனித்த சித்த மருத்துவமுறையை பின்பற்றும் மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றால் அது அந்த மருத்துவர்களின் தேடுதலே காரணமாகும். முழுமை யான சித்த மருத்துவமும் போதிக்கப்படாமல் ஆங்கில மருத்துவமும் கற்பிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட இந்த மருத்துவர்கள் முழுமையான மரபுவழி மருத்துவர்களாகவும் இல்லாமல், முழுமையான ஆங்கில மருத்துவர்களாகவும் இல்லாமல் உருவாக்கப்பட்டதற்கு யாரும் காரணம் இல்லை; அது தானாகவே எவ்வித திட்டமும் இல்லாமல் நடந்தது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. 

அடிப்படை உண்மையும், வியாபாரத் தந்திரமும்:

என்னுடைய கட்டுரைகளில் நான் இரண்டு விதமான கருத்துக்களை முன்வைத்தேன். ஒன்று,  மருத்துவத்தின் வணிகப்போக்கு. இரண்டு,  தத்துவரீதியான அடிப்படைக் குழப்பங்கள். ஆங்கில மருத்துவத்தின் வணிகப்போக்கு என்ற கருத்தை மரு. லட்சுமி சிவசங்கரன் முழுமையாக ஏற்கிறார். சிப்ரோபிளாக்ஸின் என்ற 4 ரூபாய் மருந்தை அரசின் தவறான கொள்கையால் எப்படி வணிக நிறுவனங்கள் 400 ரூபாய்க்கு விற்றனர் என்பதையும் அவர் விவரித்து ஆங்கில மருத்துவத்தின் வணிகப்போக்கையும், லாபவெறியையும் விளக்கியுள்ளார்.(இந்த வாக்குமூலத்திற்காக மருத்துவக் கழகத்தின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க அவர் தயாராக வேண்டியதிருக்கும். என்றாலும் வெளிப்படையாக உண்மை பேசும் மருத்துவர்களும் இன்னும் இருக்கிறார்கள் ). 

மருத்துவர்.லட்சுமி சிவசங்கரன் தன்னுடைய கட்டுரையில் திறந்த மனதோடு வெளிப்படுத்தியுள்ள  உண்மைகள்:

# காச நோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்கு காரணம் கிருமிகளை விட  சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தான் முக்கியம்.

# சில காலகட்டங்களில் (சூழல் மாறுபாடுகளில்) சிலவகையான கிருமிகளால் சில உயிர்க்கொல்லி நோய்கள் வருவதும் அது அந்த சீசன் முடிந்தவுடன் போய்விடுவதும் உண்மைதான்.

# மூன்றாம் உலக நாடுகளின் புதிய முதலாளித்துவ தேசியத்தலைமைக்கு இப்படிப்பட்ட தடுப்பூசித்திட்டங்களும், கிருமிகளின் தோற்றம் பற்றிய லூயி பாஸ்டரின் கருத்துக்களும் தேவைப்பட்டன.

# தடுப்பூசியால், டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்கவிளைவுகள் வரும் என்பது உண்மை.

# பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கே உலக சுகாதார நிறுவனம் மூலம் உலகெங்கிலும் நடைமுறைத்தப்படுகிறது. ஆண்டிற்கு சுமார் 2500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு அரசால் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டதிற்கும் அது செலவிடும் தொகையோ சுமார் 500 கோடி மட்டுமே. இதிலிருந்து இந்த திட்டத்தின் மோசடி புரியும்.

# போலியோவை இந்தியா மாதிரி நாடுகளில் முற்றிலும் ஒழித்துவிட முடியுமா என்பதிலேயே அறிவியல்பூர்வமாக பல கருத்துக்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த போலியோ சொட்டு மருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.

# பன்னாட்டுக் கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும், மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தச் செய்கிறது. 

# எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக்கும் முதலாளித்துவம் ஆங்கில மருத்துவத்தையும், தடுப்பூசிகளையும், திட்டங்களையும் தன் லாபவெறிக்கு பயன்படுத்துகிறது.

# பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில் தான் உள்ளது. 

மருத்துவம் சார்ந்த வியாபாரம் பெருகுவதற்கு மூலகாரணமே அந்த மருத்துவத்தின் அடிப்படை தெளிவின்மைதான். தடுப்பூசி பற்றிய தெளிவான , குழப்பமற்ற கருத்தை ஆங்கிலமருத்துவம் உலகிற்குக் கூறியிருக்குமேயானால், கிருமி தத்துவம் பற்றிய தன் முழுமையான உண்மைகளை வெளிப் படுத்தியிருக்குமேயானால் வணிகவெறி பிடித்த பன்னாட்டுநிறுவனங்கள் மருந்துத் தொழிலில் மனித உயிர்களைப் பணயம் வைத்து சூதாடும் வாய்ப்பு அவற்றிற்கு கிடைத்திருக்காது. மருத்துவம் சார்ந்த உண்மைகளை மக்களிடம் மறைக்கும் ஆதிக்க மனப்பான்மைதான் ஆங்கில மருத்துவத்தின் வணிகமயமாக்கலுக்கும் அடிப்படைக் காரணமாகும். 

பன்றிகளால் வந்த லாபம்

உதாரணத்திற்கு இன்று பரவும் அல்லது பரப்பப்படும் பன்றிக்காய்ச்சலையே பார்க்கலாம். இந்த பன்றிக்காய்ச்சல் 1918களில் இருந்தே ஆய்வுகளில் அடிபடும் ஒன்று தான். 1977ல் இக்காய்ச்சலுக்குக் காரணம் ஒரு வைரஸ்தான் என்று ஆங்கில மருத்துவம் முடிவுசெய்தது. பின்பு அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் (சி.டி.சி) இதுகுறித்த ஆய்வுகளை வேகப்படுத்தி யது. 2005ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 12 பேர் தான் என்று கூறுகிறது அதன் அறிக்கை. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்புக்குழு அமைக்கப் பட்டது. அக்குழுவின் உறுப்பினர் டாக்டர். அஸ்ட்ரோ ஆட்ரியன் கிப்ஸ் இந்த பன்றிக்காய்ச்சல் கிருமி மரபணு மாற்ற விளைவுகளால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்கிறார். 1977லிருந்து இன்றுவரை தொடரும் ஆய்வுகள் தெளிவாக எதனையும் அறி விக்காததன் விளைவே பன்றிக் காய்ச்சல் பெயரால் செய்யப் படும் வியாபாரம். 

சென்ற ஆண்டு பன்றிக் காய்ச்சல் பரவுவதாக பீதி பரவியபோது பல மருந்துக் கம்பெனிகள் களத்தில் குதித்தன. ஒரு துண்டுத்துணியை (மாஸ்க்) சந்தையில் அறிமுகம் செய்தன. இந்த மாஸ்க்கை பயன்படுத்தினால் காற்றில் பரவும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவாது என்று கூறி மருத்துவர்கள் முதல் மாணவர்கள்வரை அனைவருக்கும் விற்கப்பட்டது. ஒரு சில நாட்களில் இந்த மாஸ்க் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பலமடங்கு எகிறியதும் நினைவிருக்கலாம்.

இந்த பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் என்று நம்பப்படும் கிருமி - வைரஸ் வகை சார்ந்தது என்பதும், இது கிருமி வகைகளிலேயே மிகவும் நுண்ணியது என்பதும் எல்லா மருத்துவர்களுக்கும் தெரியும். சாதாரண துணியால் ஆன ஒரு முகமூடி இந்த நுண்ணிய வைரஸிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பது உண்மையானால் உலகிலுள்ள எல்லா கிருமிகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தி படைத்ததாக துணி மாறிவிடும். ஆனால் உண்மை நேர்மாறானது. சாதாரணத்துணியில் உள்ள நெய்யப்பட்ட நூலின் இடைவெளியில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளே போய், வெளியே வரும் என்பது எல்லா நுண்ணுயிரியல் மாணவர்களுக்கும் தெரியும். நம்முடைய பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரியல் மாணவர்களும் பொதுமக்களோடு சேர்ந்து பீதியடைந்தனர். (சரி அதைக்கூட விட்டுவிடலாம். அவர் களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது அப்படி.!) இதே முகமூடியை எல்லா மருத்துவர்களும் அணிந்துகொண்டு விளம்பரங்களுக்கு போஸ் கொடுத்ததை எப்படி நாம் புரிந்து கொள்வது? 

பன்றிக்காய்ச்சலுக்காக இன்று கொடுக்கப்படும் மருந்து  டாமிஃப்ளூ. இம்மருந்து தான் ஏற்கனவே பரவியதாகக் கூறப்பட்ட சிக்கன்குனியாவிற்கும் கொடுக்கப்பட்டது. (சிக்கன்குனியாவிற்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் பலருக்கு ஒருவருடமாகியும் மூட்டுக்களில் வலியும், வீக்கமும் தொடர்வது வேறு கதை) பலநாடுகளில் இதே மருந்து ஏற்கனவே கொடுக்கப்பட்டு காய்ச்சலோடு இருக்கும் வெளிப்புற அறிகுறிகளை மட்டுமே இம்மருந்து நீக்குகிறதே தவிர நோய்த்தாக்கத்தை நீக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்போது தடுப்பு மருந்து வேறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவச் சட்டத்தின்படி ஒரு மருந்தை நம்நாட்டில் அறிமுகப் படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆய்வுகள், பரி சோதனைக்குப் பிறகே அதைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மருந்தைப் பயன்படுத்துவது என்பது அதன் சாதக, பாதகங்களைப் பொறுத்து தனிமனித அனுமதி யின் பேரில் மட்டும் தான் நடைபெற வேண்டும். இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தும் மேற்கண்ட எந்த ஒரு சட்ட நடைமுறைகளும் இன்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. தடுப்பூசிகளால் அந்த நோயிலிருந்து தப்பித்துவிடலாம் என்பது தவறான கருத்து என்று கூறும் ஆங்கில மருத்துவர்.புகழேந்தி இன்னும் ஒரு புள்ளிவிபரத்தையும் சுட்டிக்காட்டுகிறார்:  தமிழ்நாட்டில் மட்டும்தான் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடுகிறோம். மகராஷ்டிராவில் சுகாதார அலுவலர்களே இந்தத் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ள மறுத்து 27 சதவீதத்தை திருப்பி அனுப்பிவிட்டனர்.  

இதில் மிகப்பெரிய நகைச்சுவையே நம் அரசுகளின் அறிவிப்புதான். தமிழ் நாளிதழ்களில் பன்றிக்காய்ச்சல் பீதி தலைவிரித்தாடிய போது ஒரு அறிவிப்பு இவ்வாறு கூறியது  தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை உறுதி செய்யும் பரிசோதனைக்கூடங்கள் குறைந்தளவே உள்ளதாலும்  அவ்வாறு பரிசோதித்தால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க கீழ்க்கண்ட அறிகுறிகளைக் கொண்ட நோயாளிக்கு பன்றிக்காய்ச்சல் மருந்தை கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இன்னும் தொடர்ந்து, காய்ச்சலுடன் சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளியை பன்றிக்காய்ச்சல் நோயாளியாகவே கருதி சிகிச்சை அளிக்கலாம் என்றும் காய்ச்சல் உள்ள நோயாளி குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பிற அறிகுறிகள் தென்படாவிட்டாலும் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சையே அளிக்கலாம் என்றும் அந்த சுகாதாரத்துறை அறிவிப்பு கூறுகிறது. பன்றிக்காய்ச்சல் பற்றிய உலக தடுப்பு மருந்துகள் கண்காணிப்புக்குழுவின் அறிக்கை ( வெய்ன் மேட்சன் ரிப்போர்ட்) இன்னும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. பன்றிக்காய்ச்சல் வைரஸ் பற்றிய உண்மைகளை உலக சுகாதார நிறுவனம் அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியிடவில்லை என்று கூறுகிறது அவ்வறிக்கை. தனியார் தடுப்பூசிகள், பெரிய நிறுவனங்களின் சிறப்புச் சிகிச்சை என்று பற்றிப்பரவிய வணிக வெறி இவ்வளவு தூரம் பெருக மருத்துவம் பற்றிய அறியாமைதானே காரணம்? ஆக, வணிக ரீதியான லாபவெறி இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு அதுசார்ந்த மருத்துவத்தின் அடிப்படைக் குழப்பங்களும் காரணமாக அமைகின்றன. 

பக்கவிளைவும் பக்கா வியாபாரமும்

தடுப்பு மருந்துகளில் எவ்வளவு பக்க விளைவுகள் ( டி.பி.டி தடுப்பூசியின் பக்க விளைவுகளில் ஒன்று  சிட்ஸ். அதாவது தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்து போவது) இருந்தாலும் அதைப்பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளின்றி ஒரு ஜனநாயக அரசு ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கத்தான் வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. மக்கள்நலனில்  கொஞ்சமாவது அக்கறையுள்ள ஒரு அரசின் ( ஓட்டுப் போடவாவது ஆள் வேண்டுமல்லவா?) நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். அதற்கு முன்னால் நாம் அவசியம் அறிந்துகொண்டே ஆக வேண்டிய இன்னொரு விஷயம் உள்ளது. அதுதான் பக்கவிளைவு. 

இந்த பக்கவிளைவு என்ற சொல் எவ்வளவு பாதுகாப்பானது? மருத்துவரீதியாக ஏற்படும் அவ்வளவு தவறுகளுக்கும் இந்த ஒற்றைச்சொல் பதிலாக, கேடயமாக நின்று மருத்துவ உலகத்தை பாதுகாக்கிறது. பக்கவிளைவுகள் என்றால் என்ன? இது ஏன் ஒவ்வொரு மருந்தோடும் இலவச இணைப்பாகக் கிடைக்கிறது? பிற மருந்துகளில் ஏற்படும் பக்கவிளைவுகளைவிட தடுப்பூசியில் ஏன் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன?

ஒவ்வொரு தடுப்பூசியிலும் குறிப்பிட்ட நோயை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிற கிருமிகள் அல்லது அவற்றை உருவாக்கும் கூறுகள் அடங்கியுள்ளன. தடுப்பூசி மூலம் உள்ளேவரும் கிருமிகளைக் கண்ட உடல், அதற்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பு சக்தியை பிரயோகித்து அவை உடலுக்கு ஊறு விளைவிக்காதவாறு முடக்குகிறது. இப்படி ஒருமுறை செயற்கையாக உடலில் ஏற்றப்பட்ட கிருமிகளை அடையாளம் காணும் உடல் இனி எப்போதும் அதேமாதிரியான கிருமிகளைக் கண்டால் உடனே எதிர்க்கும் என்ற நம்பிக்கைதான் தடுப்பு மருந்துகளின் தத்துவம். முதன்முதலாக உடலில் கிருமிகள் ஏற்றப்பட்டபோது உடல் என்ன செய்ததோ அதே  எதிர்ப்பு வேலையைத்தான் இயற்கையாக கிருமிகள் உடலில் நுழைய முயலும்போதும் உடல் செய்யும். இதற்காக உடலிற்கு இப்படியான தடுப்பூசிப் பயிற்சிகள் அவசியமில்லை. இவ்வாறு அடிக்கடி கிருமிகளை எதிர்க்கும் செயற்கைப் பயிற்சிகளை  நாம் உடலுக்கு வழங்கி அதன் சக்தியை வீணடித்தால், ஒரு வேளை உண்மையிலேயே கிருமிகளை எதிர்க்கவேண்டிய இயற்கையான சூழலில் உடலால்  அதன் சக்திக்குறைவால் எதிர்க்க இயலாமல் போகவும்கூடும். இப்படி தடுப்பூசிகள் மூலம் கிருமிகள் உடலில் ஏற்றப்படும்போதோ அல்லது பின்னால் உடலில் ஏற்படும் சக்தி இழப்பால் ஏற்படும் மாற்றங்களையோதான் ஆங்கில மருத்துவர்கள் பக்கவிளைவுகள் என்று அழைத்து மகிழ்கின்றனர்.

இவ்வாறான பக்கவிளைவுகள் இந்த கிருமிகளால் மட்டும் தோன்றுவதில்லை. இக்கிருமிகளைப் பராமரிக்க, மருந்துகள் கெடாமல் பாதுகாக்க என்று ஏகப்பட்ட ரசாயனங்கள் இத்தடுப்பு மருந்துகளில் கலக்கப்படுகின்றன. ரசாயனங்களின் பாதிப்பு மற்றும் இந்த ரசாயனங்களுக்கு இடையில் ஏற்படும் வேதி மாற்றங்களின் விளைவுகள் ஆகியவையும் உடலைப் பாதிக்கின்றன. இவையும் பக்கவிளைவுகள் என்றே அழைக்கப்படுகின்றன. 

உலகம் முழுதும் தயாரிக்கப்படும் 74 வகையான தடுப்பூசி மருந்துகளிலும் கொடூரமான நஞ்சுகள் கலக்கப்படுகின்றன (காண்க: அட்டவணை). இந்த ரசாயன நஞ்சுகளைத்தான் நாமும், நம் குழந்தைகளும் நேரடியாக ரத்தத்தில் ஏற்றிக் கொள்கிறோம்.   

இவ்வகை ரசாயனங்களோடு பாதிக்கப்பட்ட மனித, மிருக செல்களும் தேவைக்கேற்ப சேர்க்கப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்பட்ட சிசுவின் திசுக்கள், பன்றி, ஆடு, குதிரைகளின் ரத்தம், முயலின் மூளைத்திசு, நாயின் சிறுநீரகப்பகுதிகள் பசுவின் இதயத்திசுக்கள் (எல்லாமே அசைவம் தானா?) போன்றவை தடுப்பு மருந்துகளில் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றன. 

தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் இந்தியாவில் ஏன் அடிக்கடி ஏற்படுவதில்லை? அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் மட்டும் அதன் பாதிப்புக்கள் ஏன் கூடுதலாக வெளிப்படுகின்றன? இந்தியா போன்ற வளரும் (?) நாடுகளில் முறையான உணவுப்பழக்கம், இயற்கை சார்ந்த வாழ்வியல் நடைமுறைகள் மாறத் துவங்கி சில பத்து வருடங்கள்தான் ஆகின்றன. ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் சில நூறாண்டுகளாகவே இயற்கை சார்ந்த வாழ்வியல் ஒழிக்கப்பட்டு முற்றிலும் நவீனத்துவம் துவங்கிவிட்டது. உடலின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற உணவுகள், ரசாயனக் கலப் பற்ற பொருட்களின் பயன்பாடு போன்றவை இங்கு நீடித்த ஆரோக்கியத்தை வழங்கிவந்தன. அவற்றின் தொடர்ச்சியாக இன்றும் அடிப்படை ஆரோக்கியம் என்பது குறைந்து கொண்டுள்ளதே தவிர, மேலை நாடுகளைப்போல முற்றிலும் அழிந்துவிடவில்லை. மருந்துகளின், ரசாயனங்களின் விளைவுகளை உடல் தன்னுடைய ஆரோக்கியம் நீடிக்கிறவரை தானே சரிசெய்துகொள்ள முயற்சிக்கிறது. அடிப்படை ஆரோக்கியம் எப்போது பெருமளவில் பாதிக்கப்படுகிறதோ அப்போது ஒட்டுமொத்த ரசாயனங்களின் விளைவுகளும் வெளிப்படத் துவங்குகிறது. அப்படியான பக்கவிளைவுகளையும் காட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

சரி, பக்கவிளைவுகள் என்பவை அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது ஏற்படுவதுதானே என்று லேசாக நினைத்துவிட வேண்டாம். அமெரிக்காவில் 2003 டிசம்பரில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை ஆங்கில மருத்துவத்தின் இறப்புக்கள் குறித்து விரிவான பட்டியலை சமர்ப்பித்திருக்கிறது. அதுவும் யாரோ சிலர் நடத்திய சாதாரண ஆய்வுகள் அல்ல: நீண்டகால ஆங்கில மருத்துவ அனுபவமுள்ள ஐந்து ஆய்வு மருத்துவர்கள் குழுவினரின் பத்தாண்டு காலத்திற்கான அறிக்கை.

டாக்டர்.கேரி நல், டாக்டர். கரோலின் டீன், டாக்டர்.மார்டின் பெல்ட்மென், டாக்டர். டெபோரா ரசியோ, டாக்டர். டோரொதி ஸ்மித்  ஆகியோரைக் கொண்ட அக்குழு பத்தாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட இறப்புகளைப் பட்டியலிடுகிறது.

மருந்துகளின் பக்கவிளைவுகளால் ஏற்பட்ட மரணங்கள்: 10,06,000 பேர்

மருத்துவத்தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள்:  9,98,000  பேர்

மருத்துவமனை படுக்கையில் ஏற்பட்ட புண்களால் மரணம்:  10,15,000 பேர்

மருத்துவமனையில் இருந்த நிலையில் ஒவ்வாமையால் மரணம்:  8,80,000 பேர்

தவறான சிகிச்சையால் மரணம்:  3,71,360 பேர்

தவறான அறுவை சிகிச்சையால் மரணம்:  3,20,000 பேர்

தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால் மரணம்:  10,09,000 பேர்

வெளிநோயாளிகளில் பக்கவிளைவு களால்  மரணம் :  10,99,000 பேர்

ஆக மொத்தம் 67 லட்சத்து 6 ஆயிரத்து 360 பேர் என்பது மருத்துவத்தில் நாம் எளிமையாகச் சொல்லும் பக்கவிளைவுகளால் கடந்த பத்தாண்டுகளில் மரண மடைந்தவர்களின் எண்ணிக்கை. மருத்து வத்தால் மரணம் என்ற அந்த அறிக்கை தன் இறுதிப்பகுதியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டிருக்கிறது. 

“ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரினாலும் ஏற்பட்ட மரணங்களைவிட இந்த மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம்.”

தனியார் அரசாங்கம்

மக்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறையுள்ள அரசு கொசு ஒழிப்பு, சுகாதார மேம்பாடு, காப்பீட்டுத்திட்டங்கள் (உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நம்ம எல்.ஐ.சி.யும், தமிழகத்தில் அதிகமான அறுவை சிகிச்சை வசதிகளைக் கொண்ட அரசு மருத்துவமனைகளும் ஒருபுறம் இருக்க தனியார் மருத்துவமனைகளும், தனியார் காப்பீட்டு நிறுவனமும் ஒரு அரசு திட்டத்தில் ஏன் வந்தது என்பது இப்போதுவரை புரியவேயில்லை) போன்ற அவசரகதி அசைவுகளை மட்டும் செய்வதன் மூலம் மக்கள் ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் உலக அரசுகளின் அனுபவம். போலியோ சொட்டு மருந்து போடாத நூற்றுக்கணக்கான நாடுகளும், சத்து மாத்திரைகள் பயன்படுத்தாத கோடிக்கணக்கான மக்களும் இந்த 21ம் நூற்றாண்டிலும் உயிர் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஒரு நோய் பரவுகிறதோ இல்லையோ அது பற்றிய உண்மைக்கு மாறான பீதிதான் வேகமாக பரப்பப்படுகிறது. எவ்வளவு பெரிய கொள்ளைநோயாக இருந்தாலும் அது தாக்குகிற மக்கள் யார் என்பதையும், அவர்கள் எந்தவிதத்தில் ஆரோக்கியமான பிறரிடமிருந்து வேறுபடுகிறார்கள் என்பதையும் ஆய்வுகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ, அல்லது ஒரு கிராமத்தில் சிலருக்கோ ஒரு நோய் ஏற்படுகிறது. நம்முடைய ஆய்வுகள் அனைத்தும் நோய்த்தாக்கம் பெற்ற நபர்களிடத்தில் மட்டுமே மையம் கொள்கின்றன. ஆனால் நோய் பாதிப்பற்று ஆரோக்கியமாக இருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பிறரிடம் என்ன இருக்கிறது என்பதும் நோய்த்தடுப்பில் மிக முக்கியக் காரணிகள். ஒரு நோய் அல்லது கிருமி ஏன் எல்லோரையும் ஒரேமாதிரி தாக்குவதில்லை? அதற்கும்  நோய்த்தாக்கப்பட்டவர்களுக்கும் என்ன தனிப்பட்ட விரோதமா? இந்தக் கேள்விக்கு ஆங்கில மருத்துவம் மிகத்தெளிவாக விடையளிக்கிறது.  எதிர்ப்புச்சக்தி நல்லநிலையில் உள்ள நபர்களை கிருமிகளோ, நோயோ தாக்குவ தில்லை. (உலகையே அச்சுறுத்துவதாகக் கூறப்படும் எய்ட்ஸ் வைரஸ் (ஹெச்.ஐ.வி) கூட குறிப்பிட்ட சிலநபர்களை மட்டும் தான் தாக்குகிறது.) ஒவ்வொரு மனிதரையும் இப்படி நல்ல எதிர்ப்புச்சக்தியோடு, ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்வது முடிகிற காரியமா? என்ற சந்தேகம் நமக்கு வரலாம். ஆரோக்கியமாக வாழ்வது என்பது அவ்வளவு கஷ்டமான விஷயமில்லை. அதன் அடிப்படை அம்சம் தேவைக்கேற்ற உணவுதான். 

உலக அரசாங்கங்களுடைய நல்வாழ்வுத் திட்டங்கள் எல்லாவற்றையும்விட முதல்கட்டமாக அனைவருக்கும் தேவைக்கேற்ற உணவு என்பதுதான் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இன்று உலகிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நோய் எது தெரியுமா? நாம் நினைக்கிற மாதிரி எய்ட்ஸோ, சார்ஸோ, கேன்சரோ இல்லை. உலக சுகாதார அறிக்கை கூறுகிறது ரத்தசோகை நோய்தான் என்று. இந்த ரத்தசோகையை நீக்குவது மருந்துகளால் இயலாத காரியம். மருந்துக் கம்பெனிகளுக்கு லாபம் தராத வேலை. தேவைக்கேற்ற உணவு ஆரோக்கியமான உடலையும், எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் எதிர்ப்புச்சக்தியையும் வழங்கும். இது ஒன்றுதான் அத்தனை வகை நோய்களையும் எதிர்க்கும் அருமருந்து.

உணவில் துவங்கி உயிர்ச்சூழலிற்கான இயற்கைவழி பாதுகாப்பை எந்த அரசாங்கம் வழங்க முன்வருகிறதோ அதுதான் உலகின் முன்மாதிரி அரசாங்கமாக இருக்கமுடியும்.  

ரசாயன நஞ்சுகள் பாதிப்படையும் பகுதிகள் 

அம்மோனியம் சல்பேட் - வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன்  - கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ்   டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர்  -  திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு 

எம்.எஸ்.ஜி  -  பிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம்  -  அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா 

ஃபார்மால்டிஹைட்  -  மூளை மற்றும் குடல் புற்றுநோய் 

பாலிசோர்பேட் 60  -  நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட்  -  சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு 

ஜெலடின்  -  ஒவ்வாமை

ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி  -   ஒவ்வாமை

பாதரசம்  - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்

நியோமைசின் சல்பேட்  - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

பினால் (கார்பாலிக் அமிலம்)/ 

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால்  - செல்களை பாதிக்கும் விஷம்

குளுதரால்டிஹைட்  -  பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்

போரக்ஸ்  -  எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்