”ராணி” வார இதழில் 23.3.2011 அன்று வெளியான நேர்காணலின் முழுமையான வெளியீடு
மருத்துவர்.அ.உமர் பாரூக்,M.Acu, D.Ed (Acu)
உணவு – நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது. ஆரோக்கியம் – நம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உணவுகளை நாம் சரியாகப் புரிந்து பயன்படுத்தத் துவங்குவோமானால் ஆரோக்கியக்கேடும், பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்படாத ஒரு வாழ்க்கைமுறையை கண்டடையலாம்.
இன்றைய வியாபார உலகத்தில் நம் தலையில் கட்டப்படுகிற ஒவ்வொரு பொருளும் ஆரோக்கியத்தின் பலனைச்சொல்லியே விற்கப்படுகிறது. ”நீண்ட காலம் வாழ இந்த டானிக்கைப் பயன்படுத்துங்கள்” என்ற பழைய கால விளம்பரங்கள் எல்லாம் அழிந்து புதிய உத்திகள் இப்போது படையெடுக்கத் துவங்கியுள்ளன. குட்டையாக உள்ள குழந்தை உயரமாக வளரவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற நினைவாற்றலை பெருக்கிக்கொள்ளவும், இதய நோய் வந்துவிடாமல் இருக்கவுமான விளம்பரங்கள் நம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நம் மீது பீதி விதைகளைத் தூவிய வண்ணம் இருக்கின்றன.
உண்மையில் நாம் பொறுமையாக யோசித்துப்பார்த்தால் இந்த வகை விளம்பரங்களின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளலாம். குட்டையாக உள்ளவரை உயரமாக வளர வைக்கும் சத்துணவை ஏன் இந்தியக் குழந்தைகளிடம் மட்டும் பரிந்துரைக்கிறார்கள்? பெரியவர்களிடமோ அல்லது சராசரி உயரம் குறைவான சீன, ஜப்பான் நாட்டு குழந்தைகளிடமோ இந்த சத்துணவை பரீட்சித்துப் பார்க்க வேண்டியது தானே? இன்னொரு விளம்பரம் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டில் கால்சியம் இருப்பதாகச் சொல்லி விற்கிறது. கால்சியம் என்ற சத்துப்பொருளை ஆங்கில மருத்துவ அடிப்படையில் பார்த்தால் கூட அக்குறிப்பிட்ட சத்தை சாப்பிடுவதால் அது உடலில் சேருமா அல்லது துப்புவதால் உடலில் சேருமா? ஆரோக்கியம் பற்றி வெளியிடப்படும் விளம்பரங்களில் அடிப்படை அறிவிற்கும், அறிவியலுக்கும் பொருத்தமற்ற பொய்கள் மறுபடி, மறுபடி சொல்லப்படுகின்றன. இவ்வகயான பொய்கள் அனைத்தும் நம் தினசரி உணவுகளில் தான் தங்கள் வியாபாரத்தை அரங்கேற்றுகின்றன.
இப்படி போலியான அறிவிப்புகளோடு நம் தலையில் கட்டப்படும் பொருட்களை வாங்கி ஏமாறுவது நம் உணவு பற்றிய அறியாமையால் தான். ஒவ்வொருவரும் தன் உடலுக்கு எவ்வகையான உணவு ஏற்றது என்பதைப் புரிந்து கொள்வோமானால் ஆரோக்கியமும், பொருளாதாரமும் நம் கையிலேயே இருக்கும்.
முதலில், உணவை - யாருக்காக, அல்லது எதற்காக நாம் எடுத்துக் கொள்கிறோம்? நம் உடலிற்காக. அப்படியானால், உடலின் தேவையறிந்து உணவு தருவது நல்லதா? அல்லது நம் இஷ்டத்திற்கு நாம் தேர்வு செய்யும் நேரத்தில் உணவு தருவது நல்லதா? உணவுத் தேவை ஏற்படும் போது உடல் கேட்குமா? அல்லது கேட்காதா? உடல் தன்னுடைய உணவுத் தேவையை பசியுணர்வு மூலமும், தண்ணீர் தேவையை தாகம் மூலமும் நமக்கு அறிவிக்கிறது. இது தான் உணவிற்கான நேரம். நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் தான் உணவு சாப்பிட முடியும் என்றால் அந்நேரத்தை உடல் அங்கீகரிக்க வேண்டுமே? நாம் பசியற்றுச் சாப்பிடும் உணவு உடலின் உண்மையான தேவையைத் தீர்க்காது. மாறாக, கழிவுகளாக மாறி உடலிற்கு தொந்தரவுகளையே தரும். ஆக, உணவு முறை என்பது உணவுகளின் வகைகளால் ஆனது இல்லை. உடலின் தேவையின் அடிப்படையிலானது.
உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் தேவையான அளவிற்கு உணவை எடுத்துக் கொள்வோமானால் உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்திக்கொள்ளும். இதைத்தான் நம்மவர்கள் ”பசித்துப்புசி” என்றும், “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றும் உடல் தேவையை வலியுறுத்தினார்கள். உணவு முறையின் அடிப்படை அம்சமே உடலின் தேவையறிந்து கொடுப்பதுதான். பசியற்று இருக்கும் போது சாப்பிடாமல் இருப்பதும், பசியோடு இருக்கும் போது தேவையான அளவு சாப்பிடுவதும் நோய்கள் உருவாகாமல் தடுக்கும் உபாயங்கள். சித்தர் பாடல்களில் “ உற்ற சுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே” என்று வந்த நோய்களில் இருந்து விடுபடவும் பசி வரும் வரை காத்திருத்தலையே சிகிச்சையாகக் கூறுகிறார்கள்.
சரி. பசித்துச் சாப்பிட வேண்டும். எதைச் சாப்பிட வேண்டும்?
நாம் உணவு வகைகளை சத்துக்களின் அடிப்படையில் பிரித்து மிகப் பெரிய பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறோம். அதில் எதைச் சாப்பிடுவது என்பதுதான் நம் குழப்பமே.
இயல்பாக நம் உடல் இயங்குவதற்கு 100 கிராம் குளுக்கோசும், 50 கிராம் புரோட்டீனும், 20 கிராம் வைட்டமின்களும், 10 கால்சியம் போன்ற இன்னபிற சத்துக்களும் தேவை என்று (சும்மா ஒரு கணக்கிற்கு) வைத்துக்கொள்வோம். இன்றைய நவீன உணவியல் கூறுகிறது இந்தச் சத்துக்கள் அடங்கிய கலவையான சமச்சீர் உணவைச் சாப்பிடுவதே ஆரோக்கியம் என்று. இது சரியானதாக இருக்கிறதா? நாம் உடலை ஒரு உயிரற்ற இயந்திரமாகவே பார்த்துப் பழகியிருக்கிறோம். மோட்டார் பைக்கிற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 60 கிலோமீட்டர் ஓடும் என்பது போல, நம் உடலில் இந்தச் சத்துக்களைப் போட்டால் ஆரோக்கியம் என்று புரிந்து வைத்திருக்கிறோம். அப்படியானால் நம் உடலிற்கு இந்த குறிப்பிட்ட சத்துக்களை அளிப்பதற்காகவே தினசரி உணவை உண்கிறோம். அதற்குப் பதிலாக குளுக்கோசும், கால்சியமும், புரோட்டீனும், பிற சத்துக்களும் அடங்கிய மாத்திரைகளையோ அல்லது செயற்கைத் தயாரிப்புக்களையோ உணவிற்குப் பதிலாக எடுத்துக்கொண்டால் போதுமல்லவா?
இவ்வாறு உணவிற்குப் பதிலாக செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட / பிரித்தெடுக்கப்பட்ட சத்துக்களை நாம் சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படுவோமே தவிர ஆரோக்கியமாக இருக்கமுடியாது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இதே சத்துக்களை உணவு மூலம் எடுத்துக்கொள்ளலாம் என்று உடலை இயந்திரமாக யோசிக்கும் அதே தன்மையில் பட்டியலை வைத்திருக்கிறோம்.
அப்படியானால், தேவைக்குத் தகுந்த சத்தான உணவுகளை எப்படித் தேர்வு செய்வது? இதைப்புரிந்து கொள்ள கால்சியத்தை எடுத்துக் கொள்வோம். நம் உடலில் கால்சியம் உள்ள பகுதிகள் எவை? பற்கள், எலும்புகள் இன்னும் பல. இந்த எலும்புகள் நமக்கு முதன்முதலில் எவ்வாறு தோன்றின? தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபோது ஸ்கேன் மூலமாக எலும்பு வளர்வதைக் கண்டுபிடித்து கிலோக் கணக்கில் கால்சியம் கொடுத்தோமா? தசை வளர்வதற்கு புரோட்டீனும், உடல் சக்திக்கு குளுக்கோசும் அளந்து அளந்து கொடுத்துக் கொண்டிருந்தோமா? அப்படி நாம் கொடுத்துத்தான் சிசுவை வளர்க்க வேண்டும் என்று இருந்தால் கால்சியத்தை கண்டுபிடிக்காத நூறு வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் எல்லாம் எலும்புகள் இல்லாமலா பிறந்தன?
உடல் தன்னுடைய தேவைகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. அப்படி உருவாக்கிக் கொள்வதற்காக உணவு அவசியம். உணவில் இருக்கும் சத்துக்களை நாமே தீர்மானித்துக் கொண்டு உடலுக்குத் தரவேண்டிய அவசியமில்லை. உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் உணவை உண்டு வந்தால் – உடல் அதன் தேவைகளை தானே உருவாக்கிக் கொள்ளும். உதாரணமாக நாம் கால்சியம் சத்துத் தேவைக்காக என்ன வகையான உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறோம்? பால் , முட்டை போன்றவற்றைத்தான் நாம் கால்சியத்திற்காக உண்டுவருகிறோம். பாலில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்தப் பாலை நமக்குத் தந்த மாட்டிற்கு யார் கால்சியம் தந்தது? தினசரி மாட்டின் உணவுகளில் கால்சியம் சத்துள்ள உணவை கொடுத்துத்தான் நாம் கால்சியம் உள்ள பாலைப் பெறுகிறோமா? மாடு அதிகமாக உண்ணும் புல்லில் மெக்னீசியம் தான் இருக்கிறது. மெக்னீசியத்தை மாட்டின் உடல் தன் தேவைக்கு கால்சியமாக மாற்றிக்கொள்கிறது. அதே போல முட்டையில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் முட்டையிடும் கோழிக்கு நாம் கால்சியம் தந்தோமா? இல்லை. தன்னுடைய அன்றாட உணவுகளில் இருந்து கால்சியத்தை உற்பத்தி செய்துகொள்கிறது கோழியின் உடல். தாவரங்கள் தங்களுடைய தேவைகளுக்காக சூரிய ஒளியில் இருந்து ஸ்டார்ச்சை தயாரித்துக் கொள்ளும் என்பதை பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். அப்படியானால், கால்சியத்தை தானே தயாரித்துக் கொள்ளும் மாட்டின், கோழியின் உடல் அறிவை விடவும், ஸ்டார்ச்சை தானே தயாரித்துக் கொள்ளும் தாவரத்தின் அறிவை விடவும் மனித உடல் அறிவு குறைவானதா? 1959 ஆம் ஆண்டு இவற்றை ஆய்வு செய்த உயிரியல் விஞ்ஞானி டாக்டர். லூயி கேர்வரான் மனித உடலுக்கு தனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதை தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்.
உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் வேதியியலை விட, உடல் தேவைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் உயிர் வேதியியல் இயற்கையானது. உடலின் தேவை கருதி, தேவையான அளவிற்கு நமக்குப் பிடித்த உணவுகளை உண்டு வந்தால் போதும். உடல் தனக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ளும். ஒவ்வொருவரும் அவரவருடைய உடலின் தேவையைப் பின்பற்ற வேண்டுமே தவிர பொதுவான உணவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவது ஆரோக்கியத்தப் பெற வழிவகுக்காது.