புதன், 15 ஜூன், 2011

மருந்துகளிலிருந்து விடுதலை

மருத்துவர்.அ.உமர் பாரூக்

(ஜூலை மாத இறுதியில் நடைபெற உள்ள தஞ்சை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாட்டில் வெளியிடப்படவுள்ள மலருக்கான கட்டுரை)

மருந்தில்லா மக்கள் இயக்கம் – பெயரைக் கேட்கவே புதுமையாக இருக்கிறது. மருந்தில்லாத, மருந்துகளைப் பயன்படுத்தாத மக்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிறார்களா? அவர்களெல்லாம் நோய் வந்தால் என்ன செய்வார்கள்? உயிர்காக்கும் என்று நம்பப்படுகிற மருந்துகளை ஏன் புறக்கணிக்கிறார்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மத்தியில் தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் மருந்தில்லா மக்கள் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

1890 களில் இங்கிலாந்தில் ஒரு மக்கள் அமைப்பு உதயமானது. அதன் பெயர் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் ( Anti Vaccination League) இது எதற்காக தோன்றியது என்பதை அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டோம் என்றுதான். அப்படியானால் அவர்கள் எல்லாம் எதாவது தீவிர மதநம்பிக்கையாளர்களோ? என்று கேட்க நினைப்போம். 1880 களில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் காரணமாக ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தனர். இத்தடுப்பூசி மரணங்கள் குறித்து விசாரிக்க ராயல் கமிஷன் ( நம்மூர் கமிஷன் மாதிரி இல்லை) நிறுவப்பட்டது. விரிவான விசாரணைக்குப் பின்பு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடும், தடுப்பூசியின் மீதான தடையும் அங்கு கொண்டுவரப்பட்டது.

தடுப்பூசி வழக்குகளை விசாரிப்பதற்கான தனி நீதி மன்றமும் ( Vaccination Court) ஏற்படுத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் துவக்கியதுதான் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம். இது இப்போது 112 நாடுகளில் அமைந்துள்ளது. தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் விரிவடைந்துள்ளது. நம் நாட்டில் எந்தவிதமான மருந்துகள் பற்றியும் விழிப்புணர்வின்றி இருக்கிறோம். ரசாயன மருந்துகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த அமைக்கப்பட்ட இயக்கம் தான் மருந்தில்லா மக்கள் இயக்கம்.

தமிழகத்தின் பசுமைப்புரட்சிக்குப் பின்னால் விவசாயம் குறித்து நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாம் வேளாண்மையில் பயன்படுத்திய ரசாயன உரங்கள் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களை இழந்தது மட்டுமல்லாமல், நம்முடைய வளமிக்க மண் தன் சுயத்தை இழந்து ரசாயன உரங்களால் சாகத்துவங்கியுள்ளது. பசுமைப்புரட்சிக்கு 40 ஆண்டுகள் கழித்து ரசாயன உரங்கள் நம் மண்ணிற்கு செய்த தீமையை உணர்ந்துள்ளோம். உலகம் முழுவதுமே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கேரளா, தமிழகத்தில் எண்டோசல்பான் தடை கோரிய இடதுசாரிகளின் போராட்டங்களும் இக்காலத்தில் குறிப்பிடத்தக்கது. ரசாயன விழிப்புணர்வின் ஒரு மைல் கல்.

எந்த ரசாயனங்களைப் போட்டால் நிலம் கெட்டு அதன் சத்துக்கள் நாசமடைந்ததோ அதே ரசாயனங்களை மருந்து என்ற பெயரில் நம் வயிற்றில் போடுவது குறித்து இப்போதும் நாம் பிரக்ஞையற்று இருக்கிறோம். தினசரி தொலைக்காட்சியிலும், பிற ஊடகங்களிலும் நம் உயிர் வாழ்தல் பற்றிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி சில சத்துக்களை, சில மருந்துகளை நமக்கு பரிந்துரைக்கின்றன மருந்து நிறுவனங்கள். நாமும் எவ்விதமான கேள்வி கணக்குமின்றி வாங்கி, வாங்கி ரசாயனங்களை நாமும் சாப்பிட்டு நம் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றோம்.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் சத்துக்களின் பெயராலேயே நம் தலையில் கட்டப்படுகின்றன. குறைந்த பட்சம் சத்துக்கள் குறித்த அறிவியல் புரிதல் இருந்தாலே அவற்றைத் தவிர்த்துவிட முடியும்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய இயக்கத்திற்காக அன்றாடம் சில சத்துக்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன என்று நவீன விஞ்ஞானம் ஒரு பட்டியலை நம்மிடம் நீட்டுகிறது. அந்தப் பட்டியல் என்ன கூறுகிறது?

கால்சியம் 200 மி.கி.

குரோமியம் 120 மி.கி.

மாங்கனிஸ் 2 மி.கி.

போலிக் அமிலம் 400 மி.கி.

அயர்ன் 7 மி.கி

பாஸ்பரஸ் 45 மி.கி

ஜிங்க் 70 மி.கி.

விட்டமின்களில் 2 மி.கி. முதல் தனித்தனியான அளவுகளில். இன்னும் பல சத்துக்கள் நம் உணவில் அல்லது மருந்துகளில் தினசரி இருந்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சரி. இச்சத்துக்களை தனித்தனியாக தயார் செய்து ஒரு பொடியை வைத்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படி தயார் செய்த அந்த ரசாயனப் பொடியை மாத்திரம் தினசரி விஞ்ஞானப் பூர்வமாக உண்டு வந்தால் போதுமல்லவா? உணவு தனியாக தேவைப்படாது தானே? நாம் சாப்பிடுகிற உணவு செரித்து கடைசியில் இவ்வகை சத்துக்களாக மாற்றப்படுவதாக நம் விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் இந்த சத்துக்களை மட்டும் உண்டு உணவில்லாமல் நம்மால் உயிர்வாழ முடியாது என்பதை நாம் அறிவோம்.

உணவிலிருந்து உடலே தயாரித்து நமக்கு அளிக்கும் இயற்கையான சத்துக்களுக்கும், வேதி வினைகள் மூலமாக ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் செயற்கை ரசாயனச் சத்துக்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. இவ்விதமான ரசாயனங்கள் நம் உடலிற்கு தேவையற்றது; ஊறு விளைவிப்பது.

அதிலும் இந்த ரசாயனச் சத்துக்களை சந்தையில் கூவி விற்கும் மருந்து நிறுவனங்கள் ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. அதாவது நம் உடலில் சத்துக்கள் குறையுமாம்; ஆனால் கூடாதாம். உதாரணமாக கால்சியம் இருக்கிறது என்றால் கால்சியம் குறைவு பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். கால்சியம் கூடிவிட்டது என்று எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “மிகினும் குறையினும் நோய்” என்கிறது வள்ளுவம். ஒரு பொருள் குறையும் என்றால் அதிகமாகவும் செய்யும் தானே? ஆனால் கால்சியம் மட்டும் ஏன் அதிகமாவதில்லை? அதெல்லாம் ஒன்றுமில்லை. குறைவு என்று நிறுவனம் சொன்னால் மருந்து விற்பனையாகும். கூடுதல் என்று சொன்னால் என்ன லாபம்?

சமீபத்தில் வெளியான அமெரிக்க புள்ளி விபரம் கூறுகிறது. தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால் இறந்தவர்கள் பத்து ஆண்டுகளில் பத்து லட்சத்து ஒன்பதாயிரம் பேர். இது யாரோ வெளியிட்ட விபரம் அல்ல. அமெரிக்க முதுநிலை ஆங்கில மருத்துவர்கள் ஐந்து பேர் இணைந்து செய்த ஆய்வில் வெளியான அறிக்கை.

நம் உடல்நலத்திற்காக என்று சொல்லி யாரோ விற்கும் ரசாயனங்களை நம்புவதை விட நம் உடலை நம்புவது நம் தலைமுறைகளைக் காப்பாற்றும். உடலின் இயற்கையான தேவைகளை உணர்ந்து பசி, தூக்கம், தாகம், ஓய்வு போன்றவற்றை தேவைக்கேற்ப உடலிற்கு அளித்து வந்தோமானால் ரசாயன மருந்துகளின் தேவையின்றி முழுமையான உடல்நலம் பெற முடியும்.