சமீபத்தில் பி.எஸ்.எஸ்.நடத்தும் பயிற்சிகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் பற்றிய விவாதம் நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாத அக்கு ஹீலரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். முதலில் அதைப் படித்து விடலாம்.
பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பா?
பாரத் சேவக் சமாஜ் என்று அழைக்கப்படும் பி.எஸ்.எஸ் அரசு அமைப்பா? தனியார் அமைப்பா? என்ற குழப்பம் பலருக்கு இன்னும் நீடிக்கிறது. பி.எஸ்.எஸ் பற்றிய சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் அக்கு ஹீலர் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது.
பி.எஸ்.எஸ். அரசு அமைப்பா? இல்லயா? என்பதை மூன்று விஷயங்கள் மூலம் நாமே தெரிந்து கொள்ளலாம்.
v ஒரு அரசு அமைப்பின் இயக்குநர் அல்லது தலைவர் அரசால் நியமிக்கப் பட்டவராகவும், அரசு ஊதியம் பெறுபவராகவும், கெஜெட்டட் ரேங்க் அதிகாரியாகவும் இருப்பார். பி.எஸ்.எஸ்.சின் தலைவரோ, செயலாளரோ இப்படிப்பட்டவர் இல்லை.
v அரசு ஏற்படுத்தும் ஒரு அமைப்பு மாநில , மத்திய அரசுகளின் பதிவு பெற வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை ஏற்படுத்திய அமைப்பு NCVT. ஐ.டி.ஐ.மூலமாக தொழிற்கல்வி வழங்கும் அமைப்பு. இதை அறக்கட்டளையாகவோ, சங்கமாகவோ பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அரசாணை மூலம் நிறுவப் பட்ட அரசின் அமைப்புகள் இப்படி பதிவு பெற வேண்டிய அவசியமில்லை. தனியார் அமைப்புகள் மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும். பி.எஸ்.எஸ் கேரள அரசின் சங்கப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள ஒரு என்.ஜி.ஓ. ஆகும்.
v அரசின் கீழ் வரும் அமைப்பு என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரி அந்த அமைப்பில் பணிபுரிவார். உதாரணமாக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பல்கலைக் கழகத்தில் தகவல் அதிகாரி இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். பி.எஸ்.எஸ்.ஸில் இப்படி ஒரு துறையோ, அதிகாரியோ இல்லை.
...மேற்கண்டவற்றின் மூலம் பி.எஸ்.எஸ் ஒரு தனியார் அமைப்புதான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு சங்கம் அல்லது அறக்கட்டளை பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கக் கூடாதா? என்று தோன்றலாம். அப்படி வழங்கும் உரிமை இருக்கிறது என்றால் நம் ஊரில் செயல்படும் நடிகர்களுக்களுக்கான ரசிகர் மன்றங்கள், வியாபாரிகளின் சங்கங்கள் அனைத்தும் பதிவு பெற்ற சங்கங்கள் தான். இவைகளும் சான்றிதழ் வழங்க முடியுமா?
மற்ற சங்கங்களுக்கும் , பி.எஸ்.எஸ்.சிற்கும் இரண்டு வேறுபாடுகள். இந்த அமைப்பைத் துவக்கியது முன்னாள் பிரதமர் என்பதும், அரசிடமிருந்து நிதி பெற்றிருக்கிறது என்பதும் தான். அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான சங்கங்கள் நிதி பெற்று வருகின்றன. அவை எதுவும் தான் ஒரு அரசு அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டதில்லை.
பி.எஸ்.எஸ்.பயிற்சிகளின் குழப்பங்கள்:
v எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களைக்க் கொண்டு இயங்கும் பி.எஸ்.எஸ், அங்கீகாரம் வழங்கும் போது எந்த ஒரு கல்வி விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. பி.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சிகளுக்கான பாடத்திட்டம் மையப்படுத்தப்பட வில்லை.ஒவ்வொரு பயிற்சி மையமும் ஒவ்வொரு பாடத்தை வைத்துக் கொள்கிறார்கள்.
v பி.எஸ்.எஸ் துவங்கி இந்த அறுபது ஆண்டுகளில் 8000 பயிற்சி மையங்களில் படித்த எந்த ஒரு மாணவரும் பெயில் ஆனதில்லை. (கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் சாதனை). பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி அடைவதில்லை. அவர்களுக்கான மறு தேர்வு, மறு கூட்டல், மறு திருத்தல், விடைத்தாள் நகல் பெறுதல் போன்ற கல்வி உரிமைகள் இல்லாத ஒரே நிறுவனம் உலகிலேயே இது மட்டும்தான்.
v 2011 ஆம் ஆண்டு உயர் நீதி மன்றமும், 2012 ஆம் ஆண்டு இந்திய நர்சிங் கவுன்சிலும் நர்சிங் பயிற்சிகளை பி.எஸ்.எஸ் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்ட பின்பும் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
v அரசு நேரடியாக மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வரும் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் போன்றவற்றில் முறையான அரசு, கவுன்சில்களின் அனுமதியின்றி டிப்ளமோ பயிற்சிகளை நடத்தி வருகிறது.
v அக்குபங்சர் பயிற்சிகளில் பட்டங்கள் போன்று தோற்றமளிக்கும் எம்.டி, பி.எட். போன்ற சான்றிதழ்களையும் வழங்குவருகிறது.
v சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பி.எஸ்.எஸ்.வழங்கும் சான்றிதழ்களில் மத்திய அரசின் ராஜ முத்திரை இடம்பெற்று வந்தது. பின்பு அரசுச் சின்னம் நீக்கப் பட்டது.
பி.எஸ்.எஸ்.வழங்கும் மாற்று மருத்துவச் சான்றிதழ்களை வைத்து மருத்துவத் தொழில் செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் தகவல் அலுவலர் “பி.எஸ்.எஸ்.சான்றிதழ்களை வைத்து மருத்துவம் செய்ய முடியாது” என்று பதிலளித்துள்ளார்.
. . . .இது போன்ற கல்வி மோசடியில் ஈடுபட்ட மேகாலயா அரசின் சி.எம்.ஜெ. பல்கலைக்கழகம் கடந்த மாதம் கலைக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு நிறுவனத்திற்கே இந்த நிலை என்றால் ஒரு தனியார் சங்கம் என்ன ஆகும்?
(2007 இல் கம்பம் அகாடமியும் பி.எஸ்.எஸ். ஒரு அரசு நிறுவனம் என்று நம்பி அங்கு இணைப்பு பெற்று பயிற்சி நடத்திவந்தது. பின்பு பி.எஸ்.எஸ்.பற்றிய விபரங்கள் தெரிந்த பிறகு கம்பம் அகாடமி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது. பி.எஸ்.எஸ்.சோடு இருந்த வருடங்களில் பயின்ற மாணவர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு பல்கலைக்கழகப் பயிற்சிகளை எந்த வித பயிற்சிக் கட்டணமும் இல்லாமல் வழங்கியுள்ளது. ஏராளமான ஆவணங்களோடு பி.எஸ்.எஸ். பற்றிய புகாரை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்துள்ளோம்.)
------------------------------------------------------------------------------------ அக்கு ஹீலர் – ஆகஸ்ட் 2013------------
இதன் தொடர்ச்சியாக அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் சார்பாக இந்திய அரசின் திட்டக்கமிஷனிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை அனுப்பியிருந்தோம். ஏன் கேள்விகளை திட்டக்கமிஷனிற்கு அனுப்ப வேண்டும்? பி.எஸ்.எஸ்.தனது இணைய தளம். லெட்டர் பேடு, சான்றிதழ்கள் அனைத்திலும் திட்டக்கமிஷனால் (Planning commision) துவங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கான பாராளுமன்ற ஆணையோ சட்டமோ பாராளுமன்றத்தில் இல்லை.
இது பி.எஸ்.எஸ்.சான்றுதழின் அடிப்பகுதிக் குறிப்பு:
பி.எஸ்.எஸ்.பற்றிய கட்டுரை வெளியிட்ட ஜூனியர் விகடனுக்கு பி.எஸ்.எஸ்.சின் செயலாளர் மாய்ஸன் ஒரு மறுப்பை எழுதியிருந்தார். அதில் பி.எஸ்.எஸ்.என்பது திட்டக்கமிஷனால் பாராளுமன்றத்தில் துவக்கப்பட்ட அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஜூனியர் விகடனில் வந்த மறுப்பு:
சரி, இது குறித்து திட்டக் கமிஷனிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.
அதன் படி மூன்று கேள்விகளை அனுப்பினோம்.
1. பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பா?
2. பி.எஸ்.எஸ். திட்டக்கமிஷனால் நிதி பெறும் அமைப்பா?
3. பி.எஸ்.எஸ்.தனியார் அமைப்பா?
இதற்கு பதிலளித்த திட்டக்கமிஷன் அதிகாரி “பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பு இல்லை. அது எந்த ஒரு நிதியையும் திட்டக் கமிஷனிடம் இருந்து பெறும் அமைப்பும் இல்லை. அது ஒரு தனியார் அமைப்பு” என்று பதிலளித்துள்ளார்.
பி.எஸ்.எஸ்.குறித்த விரிவான விசாரணையை காவல்துறை துவங்கியுள்ளதாக கடைசித் தகவல்.