வியாழன், 21 பிப்ரவரி, 2019

அக்குபங்சர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமா. . ? இல்லையா. .? - தமிழக அரசின் ஆர்.டி.ஐ. குளறுபடிகள்


அக்கு ஹீலர்..உமர் பாரூக் 

            அக்குபங்சர் மருத்துவம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மருத்துவம்என்ற செய்தி வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பர பரப்பாக வந்து கொண்டிருக்கிறது. இதே செய்தி விகடன்.காமிலும் விரிவாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

            சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் முகமது கிசார் தமிழக அரசிடம் கேட்டுப் பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல்களிலிருந்து இந்த குழப்பம் தொடங்குகிறது. ஆர்.டி..யில் அவர் என்ன கேட்டார், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை என்னதான் பதில் அனுப்பியது? . . என்ற கேள்விகளுக்கெல்லாம் முன்பு அக்குபங்சர் எனும் மருத்துவத்தின் சட்ட ரீதியான நிலை என்று புரிந்து கொள்வோம்.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 192 நாடுகளில் 178 நாடுகளும், உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 129 நாடுகளில் 80 சதமான நாடுகளும் இப்போது அக்குபங்சரை அங்கீகரித்துள்ளன. ஒரு மருத்துவ முறை உலகெங்கும் இப்போது மிக வேகமாகப் பரவி வளர்ந்துள்ளதெனில் அது அக்குபங்சரே ஆகும்என உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவங்களுக்கான வியூகம் (2014-2023) எனும் அறிக்கை கூறுகிறது.

அக்குபங்சர் மருத்துவம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். 2003 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இதற்கான அரசாணையை (R.14015/25/96 -U&H (R) Dt.25.11.2003) வெளியிட்டது. இதே விஷயத்தை உறுதி செய்து மறுபடியும் 2010 இல் ஒரு அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. (V.25011/276/2009 - HR Dt.05.05.2010).

மத்திய அரசு அக்குபங்சரை ஒரு சிகிச்சை முறையாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஆகஸ்ட் 7 – 2018 இல் அக்குபங்சர் அங்கீகாரம் என்ற தலைப்பில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டுள்ளது. (Unstared Question No.2338 / Rajya Sabha). பல நோய்களுக்கு அக்குபங்சர் பயன்படுகிறது, உலக சுகாதார நிறுவனமும் அங்கீகாரித்திருக்கிறது. நம்முடைய அரசின் முடிவு என்ன? என்றும், அக்குபங்சர் சிகிச்சையை அரசு ஊக்குவித்தால் பொதுமக்களுக்கு பயன்படும் என்றும் ராஜ்ய சபாவில் டாக்டர் விகாஸ் கேள்வி எழுப்பினார். சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பாக பதிலளித்த அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்அக்குபங்சர் 2003 இலேயே அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைஎன்றும்முறையாகப் பயிற்சி பெற்றவரோ அல்லது ஏற்கனவே பதிவு பெற்ற மருத்துவரோ அக்குபங்சரை பிராக்டிஸ் செய்யலாம்என்றும் அரசாணை விவரங்களை உறுதி செய்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையிடம் அக்குபங்சர் அங்கீகாரம் பற்றிய கேள்வி அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பால் எழுப்பப்பட்டது. (No.V.25011/11/2011 HR 12.01.2011). இதற்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அப்போதைய செயலாளர் முகமது சலீம் பதிலளித்துள்ளார். “ ஏற்கனவே 2003 மற்றும் 2010 மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஆணைகளின் படி அக்குபங்சர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுஎன்று விளக்கியுள்ளார்.

இது தவிர, பல்வேறு வழக்குகளில் அக்குபங்சர் முறை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை என்பதை உறுதி செய்து பல வழக்குகளில் உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. மிகச் சமீபத்தில் கேரள உயர்நீதி மன்றம் ஜனவரி 3 – 2017 அன்று அளித்த தீர்ப்பும் (Crl.MC No.1349 of 2016), சென்னை உயர்நீதி மன்றம் நவம்பர் 11 – 2017 அன்று அளித்த அக்குபங்சர் மருத்துவர்களை பிராக்டிஸ் செய்ய அனுமதிக்கும் இடைக்கால ஆணையும் மிக முக்கியமானவை.

ஆக, உலக சுகாதார நிறுவனம் துவங்கி, இந்திய நாடாளுமன்றம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், நீதி மன்றங்கள். . என அக்குபங்சர் அங்கீகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகமான அக்குபங்சரிஸ்டுகள் இருக்கும் மாநிலமும், அதிகமான அக்குபங்சர் சிகிச்சை பெறும் நோயாளிகளும் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் 1970 களில் இருந்தே அக்குபங்சர் மருத்துவம் காலூன்றத்துவங்கியதும், 2002 ஆம் ஆண்டே தமிழக அரசின் ஆளுநர் உரையில் அக்குபங்சர் மருத்துவத்தை முன்னேற்றும் அடிப்படையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதும் அடிப்படையான செய்திகளாகும்.

2010 இல் செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 110 விதியின் கீழ் அக்குபங்சர் உள்ளிட்ட இயற்கை மருத்துவங்களுக்கான வாழ்வியல் மருத்துவமனைகளைத் துவங்கும் திட்டத்தை அறிவித்தார். தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் அக்குபங்சர் சிகிச்சை முறையை பயிற்றுவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவை முதன்மையானவை. இப்பல்கலைக்கழகங்கள் அனைத்துமே தமிழக அரசால் நிறுவப்பட்டவை. யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்பட்டவை. யு.ஜி.சி.யின் புதிய விதிகள் அமுலுக்கு வந்த பின்பும் அங்கீகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் தனித்துவமான பல்கலைக்கழகங்கள். இவை நடத்தும் ஒவ்வொரு பயிற்சிக்கும் யு,ஜி.சி. மற்றும் டி..பி. அங்கீகாரம் பெற்ற விவரங்கள் யு.ஜி.சி.யின் இணைய தளத்திலேயே ஆவணங்களாக கிடைக்கின்றன.

இந்த பின்புலத்தில் தான் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஆர்.டி..யில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முற்றிலும் பொருந்தாத பதில்களை அளித்துள்ளது. ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையை எப்படி அங்கீகாரமில்லாதது என்று கூற முடியும். .? 

ஒவ்வொரு துறைக்கும் விதம் விதமான பணிகள் இருக்கின்றன. அதனைப் புரிந்து கொண்டு சரியான துறையில் விவரம் கேட்டுப் பெற்றால்தான் மிகச் சரியான பதில்களைப் பெற முடியும். உதாரணமாக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் மூன்று பிரிவுகளைப் புரிந்து கொள்ளலாம். ஒன்று ஆங்கில மருத்துவத்தை நிர்வகிக்கும் பிரிவு. இதில்தான் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா வரும். இன்னொன்றுஆயுஷ். ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகியவற்றை முறைப்படுத்தும் பிரிவு. இன்னொன்று ரிசர்ச் டெஸ்க் எனப்படும் பொதுப்பிரிவு. ஆங்கில மருத்துவம் பற்றிய கேள்விகளை மெடிக்கல் கவுன்சிலுக்கும், அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவங்கள் பற்றிய கேள்விகளை ஆயுஷ் துறைக்கும் அனுப்ப வேண்டும். இது இரண்டிலும் வராத அக்குபங்சர் பற்றிய கேள்விகளை நேரடியாக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கோ அல்லது அதன் ரிசர்ச் டெஸ்குக்கோ அனுப்பினால்தான் முழு விவரம் பெற முடியும்.

அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2016 ஆகஸ்டில் ஆயுஷ் துறையில் செண்ட்ரல் கவுன்சில் ஃபார் இந்தியன் மெடிசின் அமைப்புக்கும், மெடிக்கல் கவுன்சிலுக்கு தனித்தனியாக கேள்விகள் அனுப்பப்பட்டன. அக்குபங்சர் மருத்துவத்தை உங்கள் அமைப்பு கட்டுப்படுத்துமா என்பது கேள்வி. இரு அமைப்புகளும் தத்தம் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவத்தை மட்டுமே தங்கள் அமைப்பு கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் கூறியுள்ளது. 

தமிழக அரசில் இப்போது பர பரப்பைக் கிளப்பிய ஆர்.டி. எந்தத் துறையிட கேட்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். தமிழ்நாடு போர்டு ஆஃப் இந்தியன் மெடிசின் அமைப்பிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வேலை ஆயுஷ் பிரிவிலுள்ள ஐந்து மருத்துவங்களை முறைப்படுத்துவதுதான். இந்த அமைப்பில் அக்குபங்சர் பற்றிய விவரங்களோ, வழிகாட்டுதல்களோ இருக்காது.எனவே, தவறான பதிலளிக்கும் வாய்ப்பு அதிகம்.

இந்தத் துறை அலுவலர்கள் கூடுதல் கவனத்தோடு பதிலளித்திருந்தால் தங்கள் துறையில் இவ்விவரங்கள் இல்லை எனக் கூறியிருக்கலாம். அப்படி இல்லாமல் பல்கலைக்கழக அங்கீகாரம் குறித்தும், அக்குபங்சர் அங்கீகாரம் குறித்தும் குழப்பத்தை ஏற்படுத்திய பதில்களைக் கூறியிருப்பது சிக்கலானது.

தமிழக உயர்நீதி மன்றத்தில் அக்குபங்சர் அங்கீகாரம் குறித்த வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் ஆர்.டி.. பதில்கள் பதிலளித்தவர்களுக்குத்தான் சிக்கல்களை ஏற்படுத்துமே யன்றி, இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கோ, உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் அக்குபங்சருக்கோ எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாது.

#