சனி, 31 ஆகஸ்ட், 2019

நஞ்சின்றி அமையாது உணவு

 அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -

இன்றைய நவீன உலகில் நாம் பயன்படுத்தும் பலவகையான உணவுகளும் ரசாயனத்தன்மையுடையதாக உள்ளன. ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருக்கும் உணவுகள் செயற்கையான கலப்படம் மூலமாக நச்சுத்தன்மை அடைகின்றன. இயற்கையான காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் அதிக விளைச்சலுக்காக நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகள், ரசாயன உரங்களால் வளரும் போதே ரசாயனத்தன்மையுடன் வளர்கின்றன.

கொள்ளை லாபம் விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பேஸ்ட் முதல் குழந்தைகள் உணவு வரை ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்கின்றன. உண்ணும் உணவுகளில் நாமே கலந்து கொண்ட ரசாயனங்களின் தீங்குகள் போதாதென்று, காற்றை மாசு படுத்தும் – நீரை மாசு படுத்தும் , நிலத்தை மாசுபடுத்தும் வகை வகையான வேலைகளையும் நாம் செய்து வருகிறோம்.

உலகையே அச்சுறித்துபவைகளாக புதிதாக பல நோய்கள் முளைத்து வந்துள்ளன. சின்ன அளவில் இருந்த சாதாரண நோய்களையும் நாம் ரசாயனங்கள் போட்டு, ஆட்கொல்லி நோய்களாக வளர்த்துக் கொண்டிருக்கிறோம். மருந்தே உணவு என்று சொன்ன நம் முன்னோர்களுக்கு பதிலாக, இன்று நஞ்சே உணவு என்று நாம் சொல்லுமளவிற்கு ரசாயனக் கலப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது.

# உடலிற்கு குளிர்ச்சி தரும் என்று நம்பி நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் பெட்ரோலியம் பொருட்களின் கழிவு இரசாயனமான லிக்யூட் பாரபின் என்ற அமெரிக்க மண்ணெண்ணெய் கலந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. இது தேங்காய் எண்ணெயில் மட்டுமல்ல எல்லா டப்பாவில் அடைத்து விற்கப்படும் எல்லா வகை எண்ணெய்களிலும் கலக்கப்படுவது அம்பலமாகி வருகிறது. வணிக நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்கு முன்னுரிமை கொடுத்து, உணவின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.

# நாம் தினமும் பல் துலக்கப் பயன்படுத்தும் வித விதமான பேஸ்ட்டுகளில் சிகரெட்டில் இருக்கும் ரசாயனமான நிகோடின் இருப்பதை டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்சஸ் அன்ட் ரிசர்ச் (DIPSAR) என்ற நிறுவனம் 2011 இல் வெளியிட்டுள்ளது. ஒரு முறை பல் விளக்கினால் மூன்று சிகரெட் குடிப்பதற்குச் சமம் என்ற அளவில் சில முன்னணி நிறுவனங்களின் பேஸ்ட்டுகளில் நிகோடின் அளவு உள்ளது. இந்தியாவில் விற்கப்படும் எல்லா பேஸ்ட்டுகளிலும் இந்த கலப்படம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

# பேக்கரிகளிலும், நம் வீடுகளிலும் முக்கிய உணவாகப் பயன்படும் மைதா மாவில் இன்சுலின் உற்பத்தியைத் தடுக்கும், கணைய செல்களை அழிக்கும் அலோக்ஸான் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவது வெளிப்பட்டிருக்கிறது. பென்ஸாயில் பெராக்சைடு மற்றும் அலோக்ஸான் போன்ற ரசாயனங்கள் மைதா தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் சீனா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மைதா தடை செய்யப்பட்டிருக்கிறது. மைதா மாவு அமெரிக்காவில் பேஸ்ட்ரி பவுடர் என்றே அழைக்கப்படுகிறது.

…. இப்படி பல உணவுப் பொருட்களில் ரசாயனக் கலப்பு அதிலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கலப்பு அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் உதாரணங்கள் தான். இந்தப் பட்டியலை நாம் நீட்டித்தால் எந்த உணவையுமே சாப்பிட முடியாத அளவிற்கு பயந்து போவோம்.

நம் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களுக்கு கட்டுப்பாடு ஏதாவது உண்டா? அப்படி அனுமதி பெற்று கலக்கப்படும் ரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டவைதானா? ப்ரிசெர்வேடிவ் என்னும் இருப்பு ரசாயாங்கள், நியூட்ரிலைசர் என்னும் சமன் படுத்திகள், செயற்கை மணம் ஊட்டும் ரசாயனங்கள், செயற்கைச் சுவை கூட்டும் ரசாயாங்கள், நிறம் மாற்றிகள் . . இப்படி எண்ணற்ற ரசாயனங்கள் நம் உணவுத் தயாரிப்பில் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ரசாயனங்கள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

ரசாயன நூடுல்ஸ் முதல் பிளாஸ்டிக் அரிசி வரை உணவுக் கலப்படங்கள் இப்போது நுட்பமானவைகளாக மாறியுள்ளன.

நம்மைச் சுற்றி ரசாயனப் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் போது நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்?

ஒவ்வொரு உணவாக ஆய்வு செய்து, அதிலிருக்கும் ரசாயன நஞ்சுகளை அறிந்து கொண்டு நாம் என்னதான் செய்வது? சமைக்காத இயற்கை உணவிற்கு சென்று விடுவதா? அல்லது எல்லா ரசாயன உணவுகளையும் போனால் போகட்டும் என்று சாப்பிட்டுக் கொள்வதா? இவற்றுக்கான எளிய தீர்வுகள் இரண்டு வழிகளில் இருக்கின்றன.

ஒன்று – ரசாயனக் கல்ப்புள்ள உணவு என்று நாம் அறிந்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, அவற்றுக்கு பதில் மாற்று உணவுகளைப் பயன்படுத்துவது. உதாரணமாக தேங்காய் எண்ணெயில் லிக்யூட் பாரஃபின் கலப்பை அறிந்தால் – செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது. பேஸ்ட்டுகளில் நிகோடின் கலந்திருப்பதால் உள்ளூரில் தயாரிக்கப்படும் பற்பொடியைப் பயன்படுத்துவது. பிராய்லர் கோழிக்குப் பதில் பெருமளவில் நாட்டுக் கோழியைப் பயன்படுத்துவது மாதிரியான நாம் முன்வைத்த மாற்று உணவுகளைப் பயன்படுத்தி நச்சு உணவுகளில் இருந்து தப்பலாம்.

கொடுரமான நச்சு உணவுகளுக்குப் பதிலாக மாற்று உணவுகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தினாலும், நாம் அறியாத பிற உணவுகளின் ரசாயனக் கலப்பை எப்படிக் கண்டுபிடிப்பது? அவற்றை எப்படித் தவிர்ப்பது?

எல்லா உணவுகளையும் ஆய்வு செய்வதும், அவற்றிலிருந்து முழுமையாக தப்புவதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் ரசாயன உணவுகளையும் வழக்கம் போல் சாப்பிட்டுக் கொள்ளலாமா? அப்படிச் சாப்பிட வேண்டியதில்லை.

இயற்கை நம் உடலிற்கு வழங்கியுள்ள ரசானயனங்களை அழிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி, நாம் அறியாத உணவுகளின் நச்சுக் கலப்பிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். நம் உடலிற்குள் வரும் ரசாயனங்களைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கும் வேலையை நம் கல்லீரல் செய்து வருவது உங்களுக்குத் தெரியுமா? நாம் குடிக்கும் தண்ணீர் வழியாக, சுவாசிக்கும் காற்று வழியாக. உண்ணும் உணவின் வழியாக நம் உடலிற்குள்ளே நுழையும் ரசாயனங்களை அழிக்கிற வேலையைச் செய்யும் உறுப்புதான் கல்லீரல்.

நம் உடலின் ராஜ உறுப்புகளின் ஒன்றான கல்லீரலை இப்போது இருப்பதை விட இன்னும் பலமடங்கு பலத்தோடு வைத்துக் கொண்டால் நஞ்சுகளில் இருந்து தப்ப முடியும்தானே? அப்படி கல்லீரலை பலமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் எதுவும் இருக்கிறதா என்ன?

நிச்சயமாக இருக்கிறது. அதைத்தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். இக்காலத்தில் நாம் அவசியமாக பின்பற்ற வேண்டியதும் அதைத்தான். ரசாயனங்களை அழிப்பதற்கான உடலியல் வழிகள் பல இருந்தலும் அவற்றில் முக்கியமானது ஒன்று உண்டு.

அதுதான்  – சரியான நேரத்தில் தூங்குவது.

சரியான நேரம் என்றால் ஏன்ன? இயற்கையின் இயக்கம் தூங்குவதற்கென்றே சில மணிநேரங்களை விதித்துள்ளது. அது எந்த நேரம்? தூங்குவதற்கும் கல்லீரலுக்கும் என்ன தொடர்பு? வாருங்கள் தூக்கம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தூக்கத்தின் அவசியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள இரண்டு, மூன்று நாட்கள் நாம் தூங்காமல் இருந்தால் போதும். தொடர்ந்து தூங்காமல் இருக்கும் போது உடல் மொத்தமும் சோர்வடைகிறது. யோசிக்கிற, பேசுகிற அனைத்து விஷயங்களிலும் மனம் நிலைகொள்ளாமல் தத்தளிக்கிறது. உடலை, மனத்தை புத்துணர்வளித்து புதுப்பிக்கும் வேலை தான் தூக்கத்தின் போது நடைபெறுகிறது. தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

எப்போது தூங்க வேண்டும்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் “இரவில்” என்றுதான் பதில் சொல்வார்கள். பகல் உழைப்பதற்கான, தேடுவதற்கான நேரமாகவும், இரவு தூங்குவதற்கான நேரமாகவும் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த நவீன காலத்தில் இரவு முழுக்க வேலை செய்யும் இரவு உழைப்பாளர்கள் பெருகியிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் முதலாளிகள் இரவுகளில் ஓய்வெடுப்பதற்காக, வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர மக்கள் தங்கள் இரவுகளை விலைபேசுகிறார்கள்.

இரவு 10 மணிக்கு படுத்து, காலை 5 மணி வரை உறங்குவதற்குப் பதிலாக, அதே ஏழு மணி நேரத்தை பகலில் தூங்கினால் என்ன ஏற்பட்டுவிடப்போகிறது? என்பது நம்மில் பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது. அப்படி ஒரு நாள் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு, மறுநாள் பகலில் தூங்கிப் பாருங்கள். இரவில் ஆறு மணிநேரம் தூங்குவதற்குப் பதிலாக பகலில் எட்டு மணி நேரம் கூட தூங்கிப் பாருங்கள். இரவு தூங்காத சோர்வு, பகல் தூக்கத்தால் நீக்கப்படுவதில்லை. ஒரு இரவுத் தூக்கத்திற்கு, பல நாள் பகல் தூக்கமும் ஈடாகாது. இரவில் தூங்க முடியாத சோர்வை நம் உடல் பல நாட்களுக்குப் பின்பும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். தொழிற்சாலையில், மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பகல் ஷிப்டிற்குக் கொடுக்கும் சம்பளத்தை விட, இரவு ஷிப்டிற்கு கொடுக்கப்படும் சம்பளம் அதிகம். ஏன் இவ்வாறு கூடுதலாகச் சம்பளம் தரப்படுகிறது? திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் கம்பெனிகளில் இரவு வேலைக்குப் போகும் தொழிலாளர்களுக்கு இரவு உணவும், அவர்கள் கேட்கிறபோதெல்லாம் தேநீரும், கூடுதல் சம்பளமும் வழங்கப்படுவது வழக்கம். பகலில் வேலை செய்யும் அதே மணிக்கணக்கு தான் இரவிலும். ஆனால் எதற்காக இவ்வளவு வசதிகள் வழங்கப்படுகின்றன?

ஏதோ ஒரு வகையில் நாம் உணர்ந்திருக்கிறோம்… இரவின் ஒரு மணி நேரமும், பகலின் ஒரு மணி நேரமும் சமமானதல்ல என்பதை. அப்படி என்னதான் இரவுத் தூக்கத்தில் இருக்கிறது?

மரபுவழி அறிவியலில் மொத்த உயிரினங்களையும் இரண்டாகப் பிரிக்கிறார்கள். ஒன்று – இரவில் தூங்குபவை. இரண்டு – இரவில்- தூங்காதவை. இதில் இரவில் தூங்க வேண்டிய உயிரினங்கள் தூங்காமல் இருந்தாலும் சரி, தூங்கக் கூடாத உயிரினங்கள் தூங்கினாலும் சரி – அது இயற்கை விதி மீறலாகும். அதனால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் கழிவுகள் தேங்கிவிடுகின்றன.

இரவில் தூங்காத உயிரினங்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். உதாரணம் நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகள். இவ்விலங்குகளின் கண்கள் ஒளியை எதிரொளிக்கும் தன்மை படைத்தவை. இரவில் இவ்வகை விலங்குகளின் கண்களில் ஒளி பட்டால், அவற்றை மறுபடியும் ஃரிப்லெக்ட் செய்யும். அவற்றின் கண்களீன் ஒளி மஞ்சள் நிறமுள்ளதாக ரேடியம் நிறம் போலக் காட்சியளிக்கும். நாம் வாகனங்களில் செல்லும் போது நாய், பூனைகளின் கண்களில் இந்த எதிரொளியைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

            இப்படி கண்களில் எதிரொளிக்கும் தன்மையுள்ளவை – இரவில் தூங்காத உயிரினங்கள் இவற்றின் கண்களில் டேப்டம் லூசிடம் (Laptum Lucidum) என்ற சிறப்புப் பொருள் உண்டு. இரவில் தூங்க வேண்டிய அவசியமுள்ள உயிரினங்கள் சாதாரணக்கண்களைக் கொண்டவை.

            இப்போது சொல்லுங்கள். மனிதர்களின் கண்களில் இவ்வகை எதிரொளி உண்டா? மனிதர்கள் இரவில் நடமாட வேண்டியவர்களா என்ன? நன் கண்களில் இயற்கையின் படைப்பில் டேப்டம் லுசிடம் சிறப்புப் பொருள் இல்லை. நாம் அவசியமாக இரவில் தூங்க வேண்டியவர்கள் என்பதி இயற்கை விதி.

சீன மரபு வழி மருத்துவமான அக்குபங்சர் கூறுகிறது – இரவு 11 மணியில் இருந்து, அதிகாலை 3 மணி வரைக்கும் உடலில் கல்லீரல் தொகுப்பு சிறப்பாக வேலை செய்யும் நேரம் என்று. அப்படியானால் அது பகலில் வேலை செய்வதில்லையா? உடலின் ஒவ்வொரு உறுப்பும் எப்போதும் வேலை செய்து கோண்டுதான் இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் சில உறுப்புகள் சிறப்பு வேலையைச் செய்யும். நம் உடலில் கல்லீரலின் பொதுவான வேலையாக நாம் அறிவது – அது செரிமான மண்டலத்தில் முக்கியமான பங்காற்றுகிறது என்பதைத்தான். கல்லீரலில் இருந்து சுரக்கப்படும் பித்த நீர் செரிமானத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. எஞ்சிய குளுக்கோசை, கிளைக்கோஜனாக மாற்றி சேமிக்கிறது. இப்படி கல்லீரல் செய்யும் வேலைகள் கணக்கில் அடங்காதவை. இவ்வளவு வேலைகளையும் கல்லீரல் எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, கல்லீரலின் மிக முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது. நம் ரத்தத்திலுள்ள நச்சுக்களை அகற்றும் பணிதான் அது. ஆங்கிலத்தில் DETOXIFICATION என்று அழைப்பார்கள்.

நம்முடைய கல்லீரல் மட்டும் முழுமையாக பழுதடைந்தால் ரத்தத்திலுள்ள ரசாயன நச்சுக்கள் ஓரிரு நாட்களில் நம்மைக் கொன்றுவிடும். அந்த அளவிற்கு இன்றைய நவீன வாழ்வில் நாம் பயன்படுத்தும் உணவுகள் இருக்கின்றன. நம் எதிர்ப்பு சக்தியின் அடிப்படை வேலைகளைச் செய்யக்கூடிய உறுப்பாக இருப்பது கல்லீரல்தான். நச்சுக்களை அகற்றும் இந்த வேலையை, பகலின் அன்றாட வேலைகளுக்கிடையில் செய்யாமல் இரவில் செய்கிறது கல்லீரல். இரவு 11 மணிக்குத் துவங்கி, அதிகாலை 3 மணி வரையில் நச்சுத்தன்மை அகற்றும் பணி நீடிக்கிறது. இந்த வேலையை பகலில் செய்ய முடியாது. ஏனென்றால், பகலில் நாம் உண்ணும் உணவுகளை சீரணிப்பது முதல் பலவகையான வேலைகள் இருந்து கொண்டேயிருக்கிறது. இரவின் குளிர்ச்சியும், சூழலும் கல்லீரலின் இந்த இயக்கத்திற்கு அவசியம்.

இரவின் கருமையில் என்ன சூழல் புதிதாகக் கிடைத்துவிடப் போகிறது? ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையில் வளர்வதற்கு இருளும், அதன் சக்தியும், சீதோஷ்ணமும் தேவைப்படுகிறது. செயற்கையாக இன்று டெஸ்ட் ட்யூப் பேபிகளை ஆய்வுக்கூடங்களில் கருக் கொள்ளச் செய்தாலும் கூட, அதை வளர்ப்பதற்காக உபகரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கரு வளர்வதற்குரிய விசேஷ சூழல் ஒரு தாயின் கர்ப்பப்பையில்தான் நிலவுகிறது. அதற்காகத்தான் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்படும் செயற்கை கருவூட்டலுக்குக் கூட உயிருள்ள ஒரு வாடகைத் தாயின் கர்பப்பை தேவையாக இருக்கிறது. கர்ப்பப் பையில் என்ன இருள் இருக்கிறதோ, என்ன வெப்பம் இருக்கிறதோ அவைகளை செயற்கையாக நம்மால் தயாரித்து விட முடியும்தான். ஆனால், அவற்றையெல்லாம் மீறிய கண்ணுக்குப் புலனாகாத ஆற்றல் அங்கு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. கர்ப்பப்பை இருட்டில் என்ன விதமான சூழல் நிலவுகிறதோ, அதே மாதிரியான சிறப்புத்தன்மை வாய்ந்தது தான் இரவின் சூழலும்.

இப்படி சிறப்புத் தன்மை வாய்ந்த இரவுச் சூழலில் நம் கல்லீரல் நச்சுக்களை அகற்றி செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. இதுதவிர, மரங்கள், செடிகள் வளர்வதையும், நம் குழந்தைகள் வளர்வதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உயிருள்ள ஒவ்வொரு அணுவும் பகலை விட, இரவுகளில் தான் வளர்ச்சி அடைகிறது. தன்னைத் தானே பராமரித்துக் கொள்கிறது. நீங்கள் டிஸ்கவரி, அனிமல் பிளாநெட் போன்ற தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். இரவு முழுவதும் செடிகளின் அருகில் வைக்கப்பட்ட கேமராவில் அச்செடி வளரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பகலில் நடக்கும் மாற்றங்களை விட, இரவுச் சூழலில் மிக அதிகமான மாற்றங்களை ஒவ்வொரு உயிரணுவும் சந்திக்கிறது. இச்சிறப்புத் தன்மை வாய்ந்த இரவுகளில் தூங்குகிறவர்களுக்குத் தான் மேற்கண்ட வளர்ச்சிக்கான மாற்றங்களும், நச்சுத்தன்மை அகற்றமும் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவுகளில் தூங்குவது என்பது அத்தியாவசியமான உடல் நடவடிக்கை. அதற்கு மாற்று கிடையாது.

தூங்குவதில் வேறென்ன விஷயங்கள் இருக்கின்றன? நாம் தூங்கி விழிக்கும் போதுதான் அத்தூக்கம் முழுமையானதாக இருந்ததா இல்லையா என்பதை நாம் உணரமுடியும். எழும் போது உடல் கனமாகவும், சோர்வுற்றும் இருந்தால் உடலின் இரவுப் பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பதைக் குறிக்கிறது. எழும் போது சுறு சுறுப்பாகவும், அன்றைய புதிய விடியலில் நாம் செய்யப் போகிற வேலைகள் பற்றிய சிந்தனைகளோடும் இருப்பது நல்ல தூக்கத்தின் விளைவு.

தூக்கம் பற்றி கடைசியாக ஒன்று. நம் உடலில் நுழையும் ரசாயனங்களை அழித்து உடலுக்கு வலிமை தரும் தூக்கம் இன்னொரு முக்கியமான வேலையையும் செய்கிறது. அதுதான் ஹார்மோன் பராமரிப்பு. இன்று தீர்க்க முடியாத நோய்கள் என்று ஆங்கில மருத்துவம் அறிவிக்கிற நோய்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பல நோய்கள் ஹார்மோன் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால்  வருபவை. இந்த ஹார்மோன் சுழற்சியின் பராமரிப்பை நம் தூக்கம்தான் துவங்கி வைக்கிறது.

இரவில் நாம் தூங்கும் போது, கண்களில் பெறப்படுகிற குளிர்ச்சியின் அடிப்படையிலும் –இரவின் குளிர்ச்சியின் பயனாலும் நம் மூளையின் அருகிலிருக்கும் பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது. இதிலிருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரந்து, உடலின் பல வேலைகளுக்குக் காரணமாக அமைக்கிறது. நம் உடலின் ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்குவதில்லை என்பதையும், ஒன்றை ஒன்று சாந்திருக்கின்றன என்பதையும் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். உதாரணமாக அட்ரினலின் ஹார்மோன் சுரந்தால் இன்சுலின் சுரக்காது. பிட்யூட்டரியின் டி.எஸ்.ஹெச். ஹார்மோன் சுராந்தால் தான் தைராக்சின் ஹார்மோன் சுரக்கும். இப்படி ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சிதான் ஹார்மோன்களின் இயக்கம். இந்த சுழற்சியில் இரவுத்தூக்கத்தின் பொது சுரக்க வேண்டிய மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால், படிபடியாக மற்ற ஹார்மோன்களின் சுரப்பிலும் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலும் தொடர்ந்து மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால் என்ன விளைவுகல் எல்லாம் ஏர்பட வாய்ப்பிருக்கிறது என்று யோசியுங்கள்.

அதெல்லாம் சரி. மெலட்டோனின் இரவில் தான் சுரக்குமா? 1950 களில் நவீன அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிகோரியன் உடல் கடிகாரத்தின் படியும், மரபுவழி அறிவியலின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான உடலியல் விதிகளின் படியும் இரவு 11 மணிக்கு, அதிலும் நாம் தூங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே பீனியலில் இருந்து மெலட்டோனின் சுரக்கும்.

இப்படி ஹார்மோன் சுழற்சியை ஒழுங்காக வைத்துக் கொள்ளவும், ரசாயன நஞ்சுகளில் இருந்து தப்புவதற்காகவும் நம்மிடம் உள்ள வலுவான ஆயுதம் தூக்கம் தான். தூக்கத்தை சரியாக வைத்துக் கொண்டால் கல்லீரலும், உடலும் வலிமையானதாக மாறும். மனதை விழிப்புணர்வோடு வைத்துக் கொண்டால் ரசாயன உணவுகளைத் தவிர்க்கவும் முடியும்.

                                                                                                                                    #