ஞாயிறு, 22 டிசம்பர், 2019

தொல்லியல் என்றால் என்ன?

 அ. உமர் பாரூக்

கீழடி அகழாய்வு தமிழ் மக்களின் வரலாற்று ஆர்வத்தையும், தொல்லியல் குறித்த தேடலையும் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை நடந்து முடிந்த அகழ்வாராய்ச்சிகளில் கீழடி அளவிற்கு மக்கள் வருகை எந்த ஆய்விலும் இருந்ததில்லை என்பதன் மூலம் ஆர்வத்தை அறியலாம்

தொல்லியல் என்பது எதற்கு பயன்படுகிறது?  தொல்லியல் கண்டுபிடிப்புகள் அகழ்வாராய்ச்சிகளோடு முடிந்து விடுகிறதா . .? அதன் வெவ்வேறு விதமான ஆய்வுகள் எவை? போன்ற தொல்லியல் குறித்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண்போம்.   

நமக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வரலாற்றையும் சான்றுகளின் வழியாக அறிந்து கொள்வதுதான் தொல்லியலின் அடிப்படை நோக்கமாகும். மனிதர்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றினாலும் வேட்டைச் சமூகமாக, நிரந்தர இருப்பிடம் அமைத்துக் கொள்ளாமல் அலைந்து திரிந்த காலத்தில் தொடங்கி, நதிக்கரைகளில் ஊர்களை உருவாக்கிக் கொண்ட காலம், சிறிய குழுக்களாக வாழ்ந்ததில் இருந்து சிற்றரசுகள் உருவான காலம், பேரரசுகளின் கீழ் மக்கள் வாழ்ந்த காலம் . . . என்று மனிதர்கள் விட்டுச் சென்ற சுவடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, வரலாற்றை முழுமையடைச் செய்வதுதான் தொல்லியல் ஆய்வுகளின் சிறப்பான பணியாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக சங்க காலத்தைப்  பற்றிய மக்கள் வாழ்வினை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அவை இலக்கியங்கள் என்பதால் முழுமையான வரலாற்றுச் சான்றுகளாக அவை ஏற்கப்படுவதில்லை. சான்றுகளின் ஒரு பகுதியாக வேண்டுமானால் இலக்கியங்களைக் கருத முடியுமே தவிர, பொருள் சார்ந்த ஆதாரங்களைக் கொண்டுதான் வரலாற்றை உறுதி செய்து கொள்ள முடியும்.

இலக்கியங்களை அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு, ஆய்வுகள் மூலம் கிடைக்கின்ற பொருட்களின் வழியாக பழம் பெரும் வரலாற்றை நம்மால் மீட்க முடிகிறது என்பது தான் தொல்லியல் ஆய்வுகளின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

தொல்லியல் ஆய்வுகளை நாம் புரிந்து கொள்வதற்காக சில பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ளலாம். இதன் ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் முழுமையான புரிதலுக்கு பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொரு ஆய்வுப் பிரிவையும் சில வரிகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முயல்வோம்.

தொல்லியலின் பிரிவுகள்

1.      அகழ்வாராய்ச்சிகள்

மண்ணில் புதைந்து போயிருக்கும் பழங்கால மக்களின் எச்சங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் நிலத்தை அகழ்ந்து செய்யும் ஆய்வுகளுக்கு அகழ்வாராய்ச்சிகள் என்று பெயர்.

ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து, அப்பகுதியை படிப்படியாகத் தோண்டி, அங்கு கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து விவரங்களைக் கண்டுபிடிப்பது அகழ்வாராய்ச்சியின் வழிமுறையாகும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கரிம பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக அகழ்வாராய்ச்சிகள் வாழ்விடப் பகுதி, ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி என இரு வகை இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. வாழ்விடப் பகுதிகளில் மண் பானை ஓடுகள், பழங்கால முத்திரைகள், எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் பாண்டங்கள், மக்கள் பயன்படுத்திட அணி கலன்கள், பொழுது போக்கு பொருட்கள் . . என பலவகையான பொருட்கள் கிடைக்கின்றன. ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி ஆய்வுகள் மூலம் முதுமக்கள் தாழிகள், எலும்புத்துண்டுகள், பானை ஓடுகள், வழிபாட்டுப் பொருட்கள் போன்ற பொருட்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் அகழாய்வுகளுக்கான உதாரணங்களாக சமீபத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்ட மதுரை கீழடியைக் குறிப்பிடலாம். இன்னும் கரூர், பூம்புகார், அழகன்குளம், மாங்குளம், மாங்குடி, கொடுமணல், கொற்கை, வசவசமுத்திரம் போன்ற சங்ககால ஊர்களிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

 

2.      நீரியல் அகழாய்வு

இது கடல்சார்ந்த ஆய்வு முறையாகும். இதனை அகழ்வாய்வாகவும், நீரியல் ஆய்வாகவும் கூறுவார்கள். நிலத்தில் செய்யப்படும் ஆய்வுகளைப் போலவே, கடலில் செய்யப்படும் ஆய்வுகளும் மிக முக்கியமானவை. தமிழகத்தில் பூம்புகார் ஆய்வு கடலியல் ஆராய்ச்சியின் மிக முக்கியமான உதாரணமாகும்.

கடலில் மூழ்கிய ஊர்கள், மக்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் போது நிலத்தில் செய்யப்படும் அகழ்வாராய்ச்சிகளைப் போல பண்டைய மக்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய உதவுகிறது.

           


3.      கல்வெட்டுகள்

முற்கால மக்கள் பல வகையான செய்திகளை கற்களில் பொறித்து வைத்திருந்தார்கள். உருவம் வரைவதில் துவங்கி, பல்வேறு செய்திகளை எழுத்துகளில் செதுக்கி வைத்திருப்பவை கல்வெட்டுகளாகும். மிகப் பழைய கல்வெட்டுகளில் தமிழின் ஆதி எழுத்து வடிவமான தமிழ் பிராமி என அழைக்கப்படும் தமிழி வடிவத்திலும், தொடர்ந்து வட்டெழுத்து வடிவத்திலும் எழுத்துகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. வடமொழியின் கலப்புக்குப் பிறகு, கிரந்த எழுத்துகளும் அப்போது இருந்த எழுத்து வடிவங்களோடு இணைத்துக் கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் தமிழி, வட்டெழுத்து, கிரந்த எழுத்து, நவீன தமிழ் எழுத்து போன்ற பல வடிவங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் ஒரு பகுதியில் தமிழி பயன்பாட்டில் இருந்த போதே, இன்னொரு பகுதியில் வட்டெழுத்துகள் இருந்திருக்கின்றன. அதே போல, ஒரு பகுதியில் வட்டெழுத்து புழக்கத்தில் இருந்த போதே இன்னொரு பகுதியில் தற்கால தமிழ் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆக, அந்தந்த பகுதியின் தனித்தனியான வளர்ச்சிப் போக்கில் எழுத்துகள் மாறி வந்திருக்கின்றன.



கல்வெட்டுகளின் வகைகள்

போரில் இறந்த வீரர்களின் நினைவாக வைக்கப்படும் கல்வெட்டு வீரக்கல் அல்லது நடுகல் என அழைக்கப்படுகிறது. கணவன் இறந்த பின் தீயில் தள்ளி விடப்பட்டு உயிர் நீக்கும் பெண்ணின் நினைவாக வைக்கப்படும் கல்வெட்டு சதிக்கல் எனவும், அரசர் அல்லது பிறரின் கொடைகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் கொடைக் கல்வெட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பிற்காலத்தில் இஸ்லாமியரின் நினைவிடங்களில் வைக்கப்பட்ட கல்வெட்டுகள் மீசான் கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இப்படி கல்வெட்டுகள் உருவாக்கப்படும் காரணங்களை வைத்து, ஆய்வு வசதிக்காக பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளப்படுகின்றன.

4.      சிற்பங்கள்

முன்னோர்களின் வாழ்வியலை அறியும் ஆய்வுகளில் சிற்பங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. சிற்பங்கள் பொதுவாக வழிபாட்டுத்தலங்களிலிருந்து அதிகளவில் பெறப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வழிபாட்டு முறை, கடவுள்களின் உருவங்கள், வீரர்களின் உருவங்கள் என பல்வேறு தரவுகளை சிற்பங்கள் நமக்குத் தருகின்றன.

சிற்பங்களில் கற்சிற்பங்கள், மண்ணில் செய்யப்பட்ட சுதை சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச்சிற்பங்கள். தந்தச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் என பல வகையான சிற்பங்கள் காணப்படுகின்றன.  தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப்பழமையான சிற்பங்களில் சமணச் சிற்பங்கள் மிக முக்கியமானவை.

 


5.      செப்பேடுகள்

செம்புத் தகடுகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் செப்பேடுகள் என அழைக்கப்படுகின்றன.

முற்காலத்தில் அரசர்கள், ஜமீன்தார்கள் தங்கள் முத்திரையுடன் எழுதிக் கொடுத்த ஆவணங்களில் செப்பேடுகள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. கோவில்களுக்கான கொடைகள், தனி மனிதர்களிடம் அரசர்கள் அல்லது தலைவர்கள், ஜமீன்தார்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், நிலம், வீடு போன்ற சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் என பலவகையான குறிப்புகள் செப்பேடுகளில் இருந்து கிடைத்துள்ளன.

மிகச் சமீபத்தில் ஆய்வாளர் செந்தீ நடராசன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட நாட்டரசன்கோட்டை செப்பேடு ஒரு குடும்பம் எழுதிக் கொடுத்த அடிமை சாசனமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


6.      ஓவியங்கள்

பழங்கால மக்கள் அவரவர் வாழ்ந்த பகுதிகளில் பலவகையான ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். தொன்மையான பாறைகளிலும், குகைகளிலும் கிடைக்கின்ற ஓவியங்களை பாறை ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். இவை மிகவும் பழமையானவைகளாக இருக்கின்றன. குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டவைகளாகவும், பிற்காலத்தில் மலைகளில் அமைந்துள்ள வழிபாட்டுத் தளங்களிலும் பாறை ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன.



தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களிலேயே அமைந்துள்ளன. சில இடங்களில் கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாறை ஓவியங்களில் மாடுகள், மான்கள், குதிரைகள், குரங்குகள், யானைகள், சண்டைக் காட்சிகள், வேட்டைக் காட்சிகள், சடங்குகளின் நிகழ்காட்சிகள், மற்றும் சமூக நிகழ்வுகள் வரையப்பட்டுள்ளன. அதே போல அதிகமான குறியீடுகளும், அடையாளங்களும் பாறை ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன. சில ஓவியங்களில் விலங்குகளின் உள்ளுறுப்புகளை எக்ஸ்ரே எடுத்தது போல வரைந்து வைத்துள்ளனர். அக்கால மக்களின் விலங்கியல் சார்ந்த அறிவின் வெளிப்பாடாக இவ்வகை ஓவியங்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் இவ்வகை எக்ஸ்ரே ஓவியங்கள் ஆலம்பாடி, செத்தவரை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

ஓவியங்களில் சுவர் ஓவியங்கள் இன்னொரு வகையாகும். இவை மிகவும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டவைகள். தமிழகத்தில் சங்ககாலத்திலேயே ஓவியக்கலை முழு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்ததை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள ஓவியங்களில் பல்லவர் கால ஓவியங்களே (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு) பழமையானவை. சோழர், பாண்டியர், நாயக்கர் மராத்தியர், கால ஓவியங்களும்,  சேதுபதி மன்னர்கள், பிற்கால ஜமீன் ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன. சித்திர மண்டபங்கள், எழுத்து மண்டபங்கள், சித்திர மாடங்கள், சித்திரச் சாலைகள் என்ற பெயர்களில் அக்கால மக்கள் ஏராளமான ஓவியங்களை வரைந்து பராமரித்து வந்துள்ளனர்.

 


7.      காசுகள்

சங்ககாலத்தில் இருந்தே தமிழ் மக்கள் பல்வேறு வகையான காசுகளைத் தயாரித்து பயன்படுத்தி இருக்கிறார்கள். காசு, பொன், கழஞ்சு, காணம் போன்ற பல பெயர்களில் காசுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன. காசுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள், ஓவியங்கள் போன்றவற்றையும், அவற்றிலுள்ள எழுத்துகளைக் கொண்டும் பல்வேறு விவரங்களைப் பெற முடிகின்றன.

சங்ககால மன்னர்களின் காசுகளில் துவங்கி, ஆங்கிலேயர் வெளியிட்ட காசுகள் வரைக்கும் ஆய்வுகளின் மூலம் கிடைத்துள்ளன. மக்களின் சேமித்து வைத்த காசுகள் அகழ்வாராய்ச்சிகள் மூலமும், பழைய கோவில்களில் புதுப்பிப்பு பணிகளிலும், நிலத்தில் கிடைக்கும் புதையல்கள் மூலமும் பெரும்பாலும் காசுகள் கிடைத்து வருகின்றன. உலகம் எங்கும் தன்னார்வமாக பழைய நாணயங்களைச் சேகரிக்கும் நபர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.



சங்ககால காசுகள் சமமற்ற சதுர வடிவமாகவும், பின்னர் பயன்பாட்டில் இருந்தவை வட்ட வடிவ காசுகளாகவும் இருக்கின்றன. அளவில், எடையில், தயாரிப்பில் தனித்தன்மையுடன் அந்தந்த பகுதியின் சூழலுக்கேற்ப காசுகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

8.      ஓலைச்சுவடிகள்

ஓலைச் சுவடிகள் அதிகபட்சம் 300 ஆண்டுகளே ஆயுள் கொண்டவை என்பதால் மிகப் பழைய ஓலைச்சுவடிகள் ஆய்வுகளில் கிடைப்பதில்லை. பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் புழக்கத்தில் இருந்தாலும் ஆய்வுகளில் கிடைத்திருப்பவை சமீப காலத்திய சுவடிகள் தான்.



சாதாரண வீட்டுக்கணக்கில் இருந்து, சொத்து ஆவணங்கள், இலக்கியங்கள், மருத்துவம், மாந்திரீகம் என பல்வேறு வகையான செய்திகள் ஓலைச் சுவடிகளில் இருந்து கிடைக்கின்றன. நவீன கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ரசாயனப் பராமரிப்பில் உள்ள ஓலைச் சுவடிகளே நீண்ட காலம் இருக்கின்றன. மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் சிதிலமடைந்து விடுகின்றன. தமிழகத்தில் ஓலைச் சுவடிகளை கணினி மயமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

9.      வரலாற்றுச் சின்னங்கள்

தொல்லியல் பிரிவுகளில் இதுவரை நாம் பார்த்த எட்டு வகைகள் தவிர உள்ள பிற கண்டுபிடிப்புகளை வரலாற்றுச் சின்னங்கள் என பொதுவாகப் பிரிக்கலாம். அரண்மனைகள், கோட்டைகள், நினைவிடங்கள், கல்லறைகள், ஈமச்சின்னங்கள், கோயில்கள், பிற தொன்மையான கட்டுமானங்கள் போன்றவை வரலாற்றுச் சின்னங்களாகும்.

             மேற்கண்ட பலவகையான தொல்லியல் ஆய்வுகள் மூலம் மனித குல வரலாற்றை ஆதாரப் பூர்வமாக அறிந்து கொள்ள முடிகிறது. தொல்லியல் ஆய்வுகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் குறுகிய காலத்தோடு முடிந்து விடாமல் தொடர்வது அவசியம். கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்களை பாதுகாக்க துணை நிற்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தின் மிகப் பழமையான கல்வெட்டுகளும், சிற்பங்களும் சிதைந்து போயிருக்கின்றன. அதே போல, வரலாற்று ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கு தொல்லியல் ஆய்வாளர்களின் பணி மட்டும் போதாது. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் துணையோடுதான் புதிய ஆதாரங்களைத் தேட முடியும்.

கீழடி உருவாக்கிய வரலாற்று ஆர்வம் வெறுமனே இணைய வழி பெருமிதங்களோடு முடிந்து விடாமல் தமிழக வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்குப் பயன்பட வேண்டும். ஏனெனில் தொல்லியல் ஆய்வுகள் என்பவை அருங்காட்சியகத்தோடு முடிந்து விடும் விஷயம் அல்ல. . அது வாழ்ந்து மறைந்த மனிதர்களின் பண்பாட்டு அடையாளங்களாகும்.   

#

வண்ணக்கதிர் - தீக்கதிர்