சனி, 31 ஆகஸ்ட், 2019

சீசன் கிருமிகள் - நிரந்தரத் தீர்வு என்ன. . ?

- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் –

 டெங்கு மரணங்கள், கொசு ஒழிப்பு என்று நாம் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தக் கட்டுரை அபஸ்வரமாகக் கூட இருக்கலாம். ம்னிதர்கள் இறந்து கொண்டிருக்கிற அவசரத்தில் நிரந்தரத் தீர்வு பற்றி யோசிக்க முடியாது, இப்போதைய அவசரத் தேவை குறித்துப் பேசுவதுதான் சரியானது என்று நாம் நினைத்துக் கொண்டாலும் கூட, பிரச்சினை குறைந்து போன சூழலில் தீர்வு குறித்து யோசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. எனவே, நம் பீதியையும், பரபரப்பையும் ஒரு புறம் இதுக்கி வைத்து விட்டு, கிருமிகளிடம் இருந்து நாம் விடுதலை பெற நிரந்தரத் தீர்வு என்ன என்பதை இப்போது பேசியே ஆக வேண்டும்.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு கிருமி அதிவேகமாக பீதியைக் கிளப்பி, பாதிப்புகளும் மரணங்களையும் பட்டியலிட்டு விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. காய்ச்சல்களை மட்டும் எடுத்துக் கொண்டால் சமீபத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா, என அவ்வப்போது கிருமிகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. பிக் பாஸ் சீசன் இரண்டை எதிர்பார்த்து தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கையில் டெங்கு சீசன் 2 வந்து விட்டது.

நிரந்தரத் தீர்வுக்கு கூட அப்புறம் வரலாம். அவசரத் தீர்வு என்றால் என்ன? இப்போது டெங்கு பாதிப்பில் அவசரமாக என்ன தேவை? அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது குணப்படுத்தக் கூடிய ஒரு மருந்து. ஆங்கில மருத்துவத்தில் இப்படி ஒரு மருந்தை உடனே கண்டுபிடித்து விட முடியுமா? அதற்கான ஆய்வுக் கூட நடைமுறைகளில் அது சாத்தியமில்லை. ஒரு மருந்தை ஒரு மூலிகையில் இருந்தோ, அல்லது வேறொரு பொருளில் இருந்தோ பிரித்து எடுத்துவிட்டாலும் அதன் ஆய்வுக் கூட பரிசோதனைகள் முடிந்து, பயன்பாட்டுப் பரிசோதனைகள் முடிவதற்கு குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் ஆகும். விலங்கு வழி பரிசோதனை, மனித வழிப் பரிசோதனைகள் என அனைத்தையும் அறிவியல் பூர்வமாக முடித்து, மருந்தை சந்தையில் வெளியிட உண்மையில் 16 ஆண்டுகள் ஆகும். இதைத்தான் நாம் உடனடித் தீர்வு என நம்பிக் கொண்டிருக்கிறோம். இதோ, டெங்குவுக்கு மருந்தைக் கண்டுபிடித்து நம் வீட்டிற்கு வந்து தந்து விடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.

சரி, புதிய மருந்தைக் கண்டுபிடிப்பது உடனடியாக சாத்தியமில்லை. ஆனால், வேறு வழிகளில் இந்த நோயை சமாளிக்க முடியாதா. . ? அதைத்தான் பரபரப்பான எல்லா காலங்களிலும் செய்து கொண்டிருக்கிறோம். காய்ச்சலுக்கு காய்ச்சலை தணிக்கும் மருந்து, வலி இருந்தால் பெயின் கில்லர் மருந்துகள், வீக்கம் இருந்தால் வீக்கத்தை கரைக்கும் மருந்துகள், கூடுதலாக கொஞ்சம் விட்டமின்கள், ஆண்டி பயாட்டிக்குகள். அப்பாடா. . .இப்போதைக்கு பிரச்சினை தீர்ந்தது என்று மருத்துவர்களும், கிருமிகளைக் கட்டுப் படுத்தி விட்டோம் என்று அரசாங்கமும் மார்தட்டிக் கொள்கிறார்கள். கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு கிருமி. அப்புறம் அதனை தற்காலிகமாக சமாளிக்கும் முயற்சிகள். இப்படித்தான் நம் மருத்துவ வரலாறு தொடர்கிறது.

உண்மையில், நிதானமாக யோசித்து நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். நோயை மருத்துவர்களும், அரசாங்கமும், பொதுமக்களும் இணைந்து ஓட ஓட விரட்டினோமா.  .? அரசுகள் அறிக்கை விடுவதைப் போல வெற்றிகரமாக கட்டுப் படுத்தி விட்டோமா? ஒவ்வொரு பிரச்சினையிலிருந்தும் தப்பி ஓடுகிறோம் என்பதைப் புரிந்து கொண்டால்தான் நிரந்தரத் தீர்வின் தேவையை புரிந்து கொள்ள முடியும்.

  டெங்குவுக்கு காரணமாக கண்ணுக்குத் தெரியாத ஆர்போ வைரசை நம்மால் கொன்று அழித்து விட முடியுமா? என்பதை சில சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். கண்களால் பார்க்க முடிகிற கொசுவையே எடுத்துக் கொள்ளலாம்.

கொசுக்களில் 3000 இனங்கள் இருக்கின்றன. அதில் சில இனங்களால் தான் மனிதர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பொதுவாக இரவில் வரும் கொசுக்கள் க்யூலக்ஸ் இனத்தைச் சார்ந்தவை. காலையில் வருபவை ஏடிஸ். இதே போல நாம் கண்டுபிடித்தது வரை இன்னும் 2998 இனங்கள் இருக்கின்றன.

கொசுவை ஒழிக்க வேண்டும், அவற்றால்தான் பிரச்சினைகள் வருகின்றன என்று உலக நாடுகள் அறிந்து கொண்ட காலம் 1790 கள். இப்போது வரை உலகம் முழுவதும் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் 127 வருடங்களாக கொசு ஒழிப்புத் திட்டங்களும், கொசுவை ஒழிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, இந்த ஆண்டு கொசுக்களால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காகவும், தடுப்புக்காகவும், கொசுவை ஒழிக்கவும் நாம் ஒதுக்கிய நிதி சு,மார் 6,000 கோடி. டெங்கு பரபரப்பில் தமிழகம் ஒதுக்கிய நிதி கூடுதலாக 17 கோடி. இதே கணக்கை 200 நாடுகள் 127 ஆண்டுகளாக செலவு செய்த நிதிக்கு பொருத்திப் பாருங்கள்.

இவ்வளவு நாடுகளில், எவ்வளவு பெரிய தொகை கொசுவை ஒழிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது? சரி செலவு ஒருபக்கம் இருக்கட்டும், கொசு ஒழிந்திருக்கிறதா. . .?

ஒரு பெண் கொசு அதிகபட்சம் ஒரு மாதம் தான் வாழும். ஆண் கொசுவின் ஆயுள் ஒரு வாரம். இந்த காலத்திற்குள் இனச்சேர்க்கை நடைபெற்று அடுத்த தலைமுறையை உருவாக்கி விடுகிறது. ஒரு கொசு ஒரு நேரத்தில் நூறு முட்டைகள் இடுகின்றன. அறிவியலாளர்கள் கணக்குப் படி, ஆறு தலைமுறையில் ஒரு கொசு 3,100 கோடி கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. கொசுப் பெருக்கம் ஒருபுறம் இருக்கட்டும். அதனை அழிக்கும் முயற்சிகள் என்ன ஆனது?

வீட்டுச் சுவர்களில் டி.டி.டி. மருந்து தெளிப்பதில் துவங்கி, சாக்கடைகளில் டெல்ட்டாமெத்தரின் அடிப்பது, கிரிசால் புகையை பரப்புவது, கொசுவத்தியின் மூலம் பைரித்திரம் பரப்புவது. . . .எல்லா முயற்சிகளின் விளைவு என்ன தெரியுமா. . ? நாம் பயன்படுத்தும் விஷங்களை செரித்து, உயிர் வாழும் அளவுக்கு கொசுக்களின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து விட்டது.

வெறும் 3000 இனங்கள் உள்ள கொசுக்களை நம்மால் 127 வருட முயற்சியில் ஒழிக்க முடியவில்லை என்பதே நிஜம். அது சாத்தியமில்லாத கனவு. கொசுவை விட்டு விட்டு, கிருமிகளுக்கு வருவோம். கிருமிகளின் இனங்கள் எத்தனை தெரியுமா. .? 15 இலட்சம். இதிலும் ஐந்து சதவீத இனங்கள் மட்டுமே நமது தொந்தரவுகளுக்கு காரணம் என்று அறியலாளர்கள் சொல்கிறார்கள். உலகில் உயிர்வாழும் கிருமிகளின் எண்ணிக்கையை கணிக்க வேண்டுமானால் ஒரு தாளில் 50 என்று எழுதி, அதன்பின்பு 30 ஜீரோக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் உலகில் உயிர் வாழும் கிருமிகளின் தோராய எண்ணிக்கை.

கண்ணுக்குத் தெரியும், 3000 இனங்களைக் கொண்ட கொசுக்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத, சரியாகச் சொன்னால் – மின்னணு நுண்ணோக்கிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத வைரஸ்களை நம்மால் அழித்து விட முடியுமா? அதுவும் இனிமேல் தான் மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டுமாம்.

அப்படியானால், என்னதான் செய்வது? நமது வழி முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த கிருமிப் பிரச்சினைகளுக்கு எளிமையன நிரந்தரத் திர்வு இருக்கிறது. ஆனால், இதனை பிரச்சினை வரும் போது பின்பற்றாமல் எல்லா காலத்திலும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் எந்த வகை கிருமிக்கும் பயப்படாமல் நம்மால் வாழ முடியும்.

அது என்ன எளிமையான தீர்வு?

ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறோம். ஏடிஸ் கொசு எல்லாரையும் கடிக்கிறது. ஆனால், இருவருக்கோ, மூவருக்கோதான் காய்ச்சல் வருகிறது. தண்ணீரில் பரவும் என்று நம்பப் படுகிற சில கிருமிகள் நம் வீட்டுத் தண்ணீரில் கலந்து விடுகின்றன. பத்து பேரும் அதே தண்ணீரைப் பருகுகிறோம். ஆனால், பாதிக்கப்படுவது இருவரோ, மூவரோதான். கிருமிகளுக்கும், நோய் வந்தவர்களுக்குமான பகைதான் என்ன? அல்லது நோய் பாதிக்காதவர்களுக்கும், கிருமிகளுக்குமான உறவுதான் என்ன? நமது மருத்துவ விஞ்ஞானிகள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி, பல வருடங்கள் ஆகிவிட்டன. நமக்கே கூட இதற்கான பதில் தெரியும்.

நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் இப்போது இருக்கும் கிருமி மட்டுமல்ல, இனி வரப்போகும் கிருமிகள் கூட நம்மை பாதிக்காது. அவற்றால் நம்மை தாக்க முடியாது. ஏனெனில், நம் எதிர்ப்பு சக்தியின் மிக முக்கியமான வேலைகளில் ஒன்று – ரெசிஸ்டன்ஸ் எனப்படும் அந்நியப் பொருட்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பது.

இவ்வளவு அருமையான உள்நாட்டுப் பாதுகாப்பை வைத்துக் கொண்டு, போர் மூண்ட பிறகு வெளி நாட்டுப் படைகளை உதவிக்கு அழைக்க வேண்டிய அவசியமே இல்லை.

அப்படியானால், நம் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ள எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்? எந்த மருந்துகளினாலும் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை வழங்கி விட முடியாது. என்ன செய்தால் எதிர்ப்பு சக்தி வலுவாகுமோ, அதுதான் அனைத்து கிருமி பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வு.

நம்முடைய வாழ்க்கை முறை ஒழுங்குதான் வலுவான எதிர்ப்பு சக்தியை வழங்கும். வாழ்க்கை முறை ஒழுங்கு என்பது பசிக்கும் போது சாப்பிடுவது, அளவோடு சாப்பிடுவது, நிதானமாக சாப்பிடுவது. அதே போல, முன்னிரவில் தூங்கச் செல்வது, முழுமையான தூக்கத்தை உடலிற்கு கொடுப்பது. ஆரோக்கிய வாழ்வியலின் அடிப்படையே இந்த இரண்டுதான்.

நம் உடலுற்குத் தேவையான சத்துகளை, எதிர்ப்பு சக்தியை பசித்துச் சாப்பிடுவதன் மூலம் பெற முடியும். முறையான தூக்கத்தை உடலிற்கு கொடுப்பதன் மூலம், கல்லீரலின் பணிகளை செழுமைப் படுத்தலாம். ரசாயனத்தை உடல் வெளியேற்ற உதவி செய்யலாம். உடலின் ஹார்மோன் சுழற்சியை ஒழுங்கு செய்ய உதவலாம்.

பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள் புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல்.

நோய் வந்த சூழலில் எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை. ஆனால், வருமுன் காப்பதே எல்லா மனிதர்களின் அவசியக் கடமை.   #