வெள்ளி, 3 ஜனவரி, 2020

மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர்

-.உமர் பாரூக்-

 

                  திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திருக்குறள் குறித்து துவங்கியிருக்கும் இன்றைய சர்ச்சை தமிழகத்திற்குப் புதிதல்ல. ஏற்கனவே ராஜ ராஜசோழன் தங்கள் சாதிதான் என்று தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதிகள் உரிமை கோருவதும், பாண்டியர்கள் தங்கள் சாதிதான் என்று உரிமை கோருவதும் ஆண்டு தோறும் நடக்கும் விவாதம்தான். புகழ்பெற்ற மனிதர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் சாதி, மத எல்லைகளுக்குள் நின்று பார்க்கும் மனோபாவம் இப்போது அதிகரித்திருக்கிறது.

                  திருக்குறள் எந்த மதத்தின் நூல் என்ற ஆய்வுகள் துவங்கி ஒரு நூற்றாண்டு ஆகிறது. பல தமிழறிஞர்கள் விதம் விதமான சான்றுகளோடும், வெவ்வேறு கருத்துகளோடும் விவாதத்தைக் கொண்டு சென்றுள்ளனர். பெரும்பாலான வரலாற்றறிஞர்களின் கருத்துதிருக்குறள் சமண மத நூல் என்பதே ஆகும்.

                  திருவள்ளுவரை சமண மதத்துக்குள் அடைப்பது சரியா. . ? என்று நமக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டாலும் கூட, அவர் நம்பிய, பின்பற்றிய கோட்பாடு எதுவாக இருக்கும்? என்பது தவிர்க்க முடியாத கேள்வி. அதற்கு வரலாறு நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பதில் சொல்லியே தீரும்.

 

வள்ளுவரின் ஓவியம் என்ன சொல்லுகிறது?

< 

                  திருவள்ளுவரின் முதல் படம் சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய அதிகாரி எல்லீசன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. நெருப்பில் எரிப்பதற்காக வந்து சேர்ந்த ஓலைச்சுவடிகளில் திருக்குறள் இருப்பதைப் பார்த்த அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் கோவை கந்தப்பன் அதனை எடுத்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹாரிங்டனிடம் கொடுக்கிறார். அவரிடமிருந்து தமிழில் ஆர்வமும், பற்றும் கொண்ட  எல்லீசனுக்கு வந்து சேர்ந்தது என்று குறிப்பிடுகிறார் புலவர் செந்தலை கவுதமன்,. எல்லீசன் திருக்குறளை வாசித்து. வியந்து பல இடங்களில் அது குறித்துப் பேசுகிறார். சென்னையில் அவரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்ட கிணறுகளின் அருகில் திருக்குறளை கல்வெட்டாகப் பதிந்து வைக்கிறார் எல்லீசன். திருக்குறள் கிணறுகள் இன்றும் கூட இராயப்பேட்டையில் இருப்பதாக தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.




                  1812 ஆம் ஆண்டு திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிடுகிறார் எல்லீசன். இதுதான் நமக்குக் கிடைக்கும் முதல் திருவள்ளுவர் உருவம். இது சென்னை அருங்காட்சியகத்தின் நாணயப் பிரிவில் பாதுகாக்கப்படுகிறது. நாணயத்தில் தாடியும்குடுமியும் இல்லாத திருவள்ளுவரின் தலைக்கு மேலாக சமண மத அடையாளமான குடை இருக்கிறது. சமணத் துறவிகள் தலைமுடியை மழித்துக் கொள்ளும் பழக்கமுடையவர்கள் என்பதும், அவர்களின் தலைக்கும் மேல் சிறு குடைகள் இருக்கும் என்பதும் சமணம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்கள் எல்லாருக்கு தெரிந்த செய்தி. தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எல்லீசன் வெளியிட்ட நாணயத்தை அடையாளம் கண்டு, உறுதி செய்துள்ளார்.

                  நாம் இப்போது வைத்திருக்கும் பிற்கால திருவள்ளுவரின் உருவம் ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்களால் 1959 இல் வரையப்பட்டு, 1963 இல் அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப் படுகிறது.

 

திருக்குறளின் கருதுகோள்

 

                    ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு அடிப்படை கருதுகோள் இருக்கும். அது பிற மதங்களில் இருந்து மாறுபட்டதாகவும், தனித்தன்மையுடையாதகவும் இருக்கும். அப்படி சமணக் கோட்பாட்டில் இருப்பது என்ன? என்பதையும், அதனை திருக்குறள் பிரதிபலிக்கிறதா? என்பதையும் பார்க்கலாம்.

                    உலகில் நூற்றுக் கணக்கான மதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் சின்னச் சின்ன குழுக்களாக இயற்கை வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய மதங்களாக உருவானவை சமணமும், பெளத்தமும் என்பதை வரலாறு தெளிவுறச் சொல்கிறது. இன்னும் சில ஆய்வாளர்கள் ஆசீவகச் சமயத்தையும் பெரிய மதமாகக் குறிப்பிடுகிறார்கள்.

                    இன்றைய இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள் முன்வைக்கும் ஏகக் கடவுள் கோட்பாடு சமணத்திலும், பெளத்தத்திலும், ஆசீவகத்திலும் இல்லை. இந்த உலகை ஒரு கடவுள் படைத்து, அதனை வழி நடத்துவதாகக் கூறுவதை சமணம் ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர்கள் அனைத்தும் இயற்கையில் இருந்து தோன்றுகின்றன என்பதுதான் சமணம் நம்பும் கோட்பாடு. ஏகக் கடவுளை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் மறுபிறவிக் கொள்கையை உடைய ஒரே மதம் உலகில் சமணம் மட்டும்தான். கூடுதலாக,புலால் உண்ணாமையை வலியுறுத்துகிறது.

                    இந்த அடிப்படையில் திருக்குறளை கவனித்தால் சமணத்தின் கூறுகளைத் தெளிவாகப் பிரித்தறிய முடியும். ஏகக் கடவுள் குறித்த எந்தக் கோட்பாட்டினையும் திருக்குறளில் காணமுடியாது. அதே நேரம், பிறவி சுழற்சியில் இருந்து விடுபடுவதே வீடுபேறு என்பதை திருக்குறள் வலியுறுத்துகிறது. வீடு பேறு அடைவதற்கு துறவிகளின், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை சமணம் ஏற்கிறது. பெளத்தம் உயிர் கொல்லாமையை  முன்வைத்தாலும் கூட, உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை ஏற்கிறது. ஆனால், சமணம் எந்த நிலையிலும் உயிர்க் கொல்லாமையை வலியுறுத்துகிறது. திருக்குறளின் புலால் உண்ணாமை அதிகாரம் மூலம் இதனை உணரமுடியும். தமிழகத்தில் தற்காலத்தில் வாழ்ந்து வரும் 85,000 தமிழ்ச் சமணர்களும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புலால் உண்ணாமை நெறியை இன்றும் பின்பற்றுவதைக் காணமுடியும்.

பொன்னூர் மலை வள்ளுவர் வழிபாடு

                    தமிழ்ச் சமணர்கள் தற்காலத்தில் அதிக அளவில் வாழும் பகுதிதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி. இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் பொன்னூர் மலையில் சமண வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அங்குதான் ஆச்சாரியர் குந்த குந்தரின் திருவடிகள் வழிபடப் படுகிறது. இதற்கும், திருவள்ளுவருக்கும் என்ன தொடர்பு. . ? திருவள்ளுவரின் பெயர் என்று சமணர்கள் குறிப்பிடுவதுதான் குந்த குந்தர். அவர் வாழ்ந்த பகுதி என்று பொன்னூர் மலை நம்பப் படுவதால் இங்கு திருவள்ளுவரின் பாதங்கள் அமைக்கப்பட்டு, வழிபடப் படுகிறது. தமிழ்ச் சமணர்கள் சத்தமில்லாமல் பல ஆண்டுகளாக வள்ளுவர் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.



        தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டுள்ளதிருக்குறள் (ஜைன உரைநூலினை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கே.எம். வெங்கட்ராமையா பதிப்பித்துள்ளார். அவர் அந்நூல் குறித்து குறிப்பிடும் போது திருக்குறள் சமணப் பெரியவர் ஸ்ரீ குந்த குந்தரால் எழுதப் பட்டு, அவருடைய மாணவர் திருவுள்ளம் நயினாரால் மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியதாகவும் கூறியுள்ளார். திருவள்ளுவரின் காலம் கி.மு.52 முதல் கி.பி.44 வரை என்றும், திருக்குறள் தவிர திருவள்ளுவர் பிராகிருத மொழியில் 52 நூல்கள் எழுதியிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். 

திருக்குறள் கூறும் ஆதிபகவன்

                    சமணர்களின் நம்பிக்கைப் படி இந்த உலகின் முதல் நபர் ஆதி பகவன் எனும் ரிஷப தேவர். அவர் இமயத்திலிருந்து வந்ததால், சமணத்துறவிகள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பதை வடக்கு நோக்கி இருந்து கடைபிடிப்பார்கள். எனவே தான், உண்ணா விரதம் இருந்து உயிர் நீப்பதை அதனை வடக்கிருத்தல் என்று அழைக்கிறார்கள்.

                    ஆதிபகவனின் சிற்பங்கள் தமிழகத்தில் பல சமணத் தலங்களில் காணக்கிடைக்கின்றன. திருக்கோவிலூர் அருகிலுள்ள சோழவாண்டிபுரம் ஆண்டிமலை சமணப்பள்ளியில் சமணப் பள்ளியில் ஆதிபகவனின் தெளிவான சிற்பத்தைப் பார்க்க முடியும். இந்த சமணப் பள்ளி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அருகிலுள்ள சந்தப்பேட்டை பஞ்சனார் படுக்கை பகுதியில் அமைந்துள்ள வட்டெழுத்து கல்வெட்டின் மூலம் அவற்றின் காலத்தை அறியலாம். மிகச் சமீபத்தில் அங்கிருந்த கல்வெட்டும், சமணர் படுக்கைகளும், வழிகாட்டும் பலகையும் கூட முழுவதுமாக சிதைக்கப்பட்டிருக்கின்றன.

                    இவ்வுலகில் தோன்றிய எண்ணும், எழுத்தும் ஆதி பகவனில் இருந்து துவங்குகிறதுஎன்று சொல்லும் முதல் குறளில் குறிப்பிடப்படும் ஆதிபகவன் சமணத்தின் முதல் தீர்த்தங்கரராகவே இருக்க முடியும் என்பது ஆய்வாளர் செந்தீ நடராசன் போன்றோரின் கருத்தாகும்.




                    சமண சமய நூலான சூடாமணி நிகண்டினை எழுதிய மண்டல புருடரும் இதே கருத்தினைவிருப்புறு பொன் எயிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும் பரப்பிய ஆதிமூர்த்திஎன்று குறிப்பிடுகிறார். சமண நூலான திருக்கலம்பகத்திலும்ஆதி பகவன் அருகனைஎன்ற சொற்றொடர் மூலம் ஆதிபகவன் சமண தீர்த்தங்கரர்தான் என்பதை வலியுறுத்துகிறார் வெங்கட்ராமையா.

மலர்மிசை ஏகும் அருகன்

                    மலர்மிசை ஏகினான் எனத் தொடங்கும் திருக்குறள் தாமரை மலரின் மீது நடக்கும் அருகனைக் குறிப்பிடுகிறது. பல சமண இலக்கிய நூல்கள் தாமரை மலரின் மீது நடக்கும் அருகன் குறித்த பாடல்களைக் கொண்டுள்ளது. சமண நூல்களான சிலப்பதிகாரத்திலும், நீலகேசியிலும் கூடமலர்மிசை நடந்தோன்”, “தந்தாமரை மேல் நடந்தான்என அருகனைக் குறிப்பிடுகிறது என்று உறுதி செய்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

                    வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி குறிப்பிடும் இன்னும் சில செய்திகள் மிக முக்கியமானவை.

பதினென்கீழ்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூல்கள் சமண தத்துவங்களையும், சமண அறங்களையும் பேசுபவைகளாகவே உள்ளன. சங்க இலக்கியங்களில் பக்தி இலக்கியம், சைவ சித்தாந்த நூல்கள், பதினென்கீழ்கணக்கு நூல்கள் என ஒரு பொதுத்தன்மையோடு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பதினென்கீழ்கணக்கு நூல்கள் அறம் சார்ந்த நூல்களாகவே உள்ளன. அதில் ஒன்றுதான் திருக்குறள் என்ற அடிப்படையிலும் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

                    பதினேழாம் நூற்றாண்டில் வடமொழியிலும், தமிழிலும் இந்திய தத்துவ மரபைப் பேசும் பிரபோத சந்திரோதயம் எனும் நூல் திருவேங்கடநாதாரல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூல் தத்துவங்களையே பாத்திரங்களாக்கி, பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சமண பாத்திரம் பேசும் போதுஅவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்எனத் தொடங்கும் திருக்குறளைப் பாடியவாறு வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமணர்களின் அறத்தை, அவர்களின் நூலான திருக்குறளை வைத்தே விளக்குகிறார் பிரபோத சந்திரோதயம் நூலின் ஆசிரியர்.

மநுவிற்கு எதிரான வள்ளுவர்

                    திருகுறளின் மொத்த உள்ளடக்கமுமே மநு தர்மத்திற்கு எதிரானது என்பதை எளிமையாக உணர்ந்து விட முடியும். பிறப்பின் அடிப்படையில் வர்ணங்களைப் பகுத்து உயர்வு தாழ்வினை கற்பிக்கும் நோக்கம் திருக்குறளில் எங்குமே இல்லை. எல்லா தமிழாய்வாளர்களும் முன்வைக்கும்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் எனும் திருக்குறளே அது மநு தர்மத்திற்கு எதிரானது என்பதைச் சொல்லி விடும்.

                    பிராமணீயம் முன்னிறுத்தும் வேள்வியை இன்னொரு குறளில் எதிர்க்கிறார் வள்ளுவர்.

                    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

              உயிர்செகுத் துண்ணாமை நன்று.

              உணவுப் பொருட்களைத் தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதை விட, ஒரு உயிரைக் கொன்று உண்ணாமல் இருப்பது சிறந்தது என்று பொருள்தருகிறார் மு.வரதராசனார்.

 

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட திருவள்ளுவமாலை மிக முக்கியமான நூல். ஒரு நூல் பற்றி பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்கள் தெரிவித்த கருத்துகளைத் தொகுத்து மாலையாக்கப்பட்ட நூல் இது. இதில் திருக்குறள் குறித்து 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் வண்ணக்கஞ்சாத்தானார் எழுதிய பாடல் தமிழுக்கும், வட மொழிக்கும் உரிய வேறுபாட்டினை திருக்குறளைக் கொண்டு கூறுகிறது.


ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது

சீரியது என்றொன்றைச் செப்பரிதால் ஆரியம்

வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து


மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் திருக்குறள் பற்றிய பாடல் மிக முக்கியமானது.


வள்ளுவர் செய் திருக்குறளை
மறவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒரு குலத்துக் கொருநீதி


           
பேரறிஞர் அண்ணா காலத்திலேயே திருவள்ளுவர் குறித்த விவாதங்கள் இருந்ததாலேயே, அண்ண தன் கட்டுரையில் சுந்தரனாரின் மேற்கண்ட வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

 

1931 ஆம் ஆண்டு அனந்த நயினார் எழுதியஜைன சமயமும் திருக்குறளும்என்ற நூலுக்கு திரு.வி.. அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அவரின் வரிகள் மிக முக்கியமானவை . . “திருக்குறள் ஜைன சமய நூல் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருக்கின்றன. அது இந்து மதத்தின் சைவ சமய நூல் இல்லை

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர். தொ.பரமசிவன் அவர்கள் கூடவள்ளுவர் சமணரா என்பதில் எனக்கு கடந்த காலங்களில் சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது உறுதியாகச் சொல்கிறேன் வள்ளுவர் சமணராகத்தான் இருக்க முடியும்என்று உறுதிபடக் கூறுகிறார்.

                    திருக்குறள் சமண சமய நூலா? ஆசிவக நூலா? என்பது போன்ற எண்ணற்ற விவாதங்கள் வரலாற்றிலும், ஆய்விலும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் கூட அது இந்து மதத்தின் நூல் இல்லை என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் வலிமையான கருத்தாக முன்னிற்கிறது.  வரலாறு, தொல்லியல் சார்ந்த ஆய்வுகளின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள்தான் தொடர்ந்து இந்து மதத்திற்குள் திருவள்ளுவரையும் அடைக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள்.

- தீ-தீக்கதிர் -