திங்கள், 3 பிப்ரவரி, 2020

சாதீய ஆதிக்கமும், பொருளாதார விடுதலையும் - நாட்டரசன்கோட்டை செப்பேடு வெளிப்படுத்தும் உண்மைகள்

 -.உமர் பாரூக்-

 

                  சாதிகளின் வேர்கள் தமிழ் மண்ணில் காலம்காலமாகத் தொடர்கின்றன. ஆழமான வேர்களோடு பரந்து விரிந்து கிளைகள் பரப்பிய சாதீயத்தையும், அதன் கோர முகங்களையும் இந்த நவீன காலத்திலும் நாம் பார்த்து வருகிறோம்.

                  முன்னோர் பெருமை பேசும் பலர் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தான் சாதிப் பிரிவினைகள் பெரிதாக்கப்பட்டன என்றும், அதற்கு முன்பு தமிழகத்தில் பிரிவினைகள் இருந்ததில்லை என்றும் சொல்லி வருகிறார்கள்.

                  நம் மூதாதைகளான இனக்குழு மக்களிடம் சாதி இல்லை என்பது உண்மைதான். ஆனால், சங்க கால மக்களிடம் பிறப்பின் அடிப்படையிலான பிரிவுகள் இருந்திருந்தாலும், அவைகள் குடிப்பிரிவுகள்தான் என்று தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்.

                  சங்கப் பாடல்களில் வெளிப்படும் குடிப் பிரிவுகள் துவங்கி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற நாட்டரசன் கோட்டை செப்பேடுகள் வரை சாதிகள் எப்படி பயணப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. குடிகளாகத் துவங்கி, சாதீய வேறுபாடுகளாக வளர்ந்திருக்கும் பிரிவினைகள் அனைத்தும் பொருளாதாரப் பின்புலத்தோடு இணைந்தே உள்ளன என்பதை நாட்டரசன் கோட்டை செப்பேடு வெளிப்படுத்துகிறது.

 

நாட்டரசன் கோட்டை செப்பேடு

 

                  கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கும் முன்பே தமிழகத்தில் சாதிகளின் நிலை பொருளாதாரப் பின்புலத்தில் எப்படி செயல்பட்டது என்பதை மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டநாட்டரசன் கோட்டை செப்பேடுவெளிப்படுத்துகிறது.

                  ஒரு வழக்கு பல கிராமங்களுக்குச் சென்றதையும், அதற்கு வழங்கப்பட்ட தண்டனையையும் விளக்கும் நாட்டரசன் கோட்டை செப்பேட்டினை தொல்லியல் கழகத்தின் ஆண்டு வெளியீடான ஆவணம் ஆய்விதழில் இந்த ஆண்டு வெளியிட்டிருக்கிறார் ஆய்வாளர் செந்தீ நடராசன் அவர்கள். இச்செப்பேடு விவரத்தினை தமுஎகச, அறம் கிளை உறுப்பினர் . கமலக்கண்ணன் ஆய்வு செய்து, பொருள் விளக்கத்தோடு வெளியிட்டுள்ளார்.

                  1720 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் நாள் எழுதப்பட்ட இச்செப்பேடு நான்கு பக்கங்கள் கொண்டது. மாடு திருட்டில் துவங்கும் இச்செப்பேடு, 86 வரிகளில் அடிமை சாசனமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நாவலைப் போல திருப்பங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் பல சாதிப்பிரிவுகளும், பொருளாதாரப் பின்னணியும் வெளிப்பட்டிருக்கின்றன.

 



 

 

செப்பேடு சொல்லும் கதை

                  விஜய ரகுநாதத் தேவன் அரசாட்சியில், தாண்டராயப் பிள்ளை மந்திரியாக இருக்கும் மன்மத வருடம் மாசி மாதத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. ஆனைக்கன் சேனைவளநாட்டு (திருவாடனை பாளையம்) நிர்வாகத்தில் இருக்கும் சேவளத்தூரில் நடந்த சம்பவம் இது.

                  முத்தனத்தேவர் மற்றும் மன்னமுடித்தேவர் வீடுகளில் வெள்ளையன், மல்லறவெட்டி, நாத்தான், வீமன் ஆகிய நான்கு பேர் திருடிவிட்டு, அங்கிருந்த மாடுகளையும் களவாடி விடுகிறார்கள். இந்நால்வரும் பறையர்கள் என்று செப்பேடு குறிப்பிடுகிறது. இதனைக் கண்டுபிடித்த முதலாளிகள், நால்வரையும் பிடித்து, மாட்டுக் கொட்டகையில் கட்டிவைத்து, காய்ந்த மிளகாயை எரித்து, புகை போட்டு தண்டிக்கிறார்கள்.  

                  இந்த வழக்கினை பரிதிக் கோனார் விசாரிக்கிறார். நால்வரிடத்திலும் நிலமோ, வீடோ இல்லாததால், வெள்ளிக்கிழமையன்று அய்யனார் கோவிலில் தண்டப்பணம் செலுத்தி, தவறை ஒப்புக் கொண்டு சத்தியம் செய்ய வேண்டும் என தீர்ப்பளிக்கிறார். தண்டத்தொகையை நத்தை பெறக்கி குடும்பன், இருளப்ப குடும்பன், சிலம்பக் குடும்பன், மானம்பாத்திக் குடும்பன் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தொகையை அவர்கள் பெற்றுக் கொண்டால் மட்டுமே குற்றம் மன்னிக்கப்படும் என்று கூறுகிறது தீர்ப்பு.

                  இந்த செய்தியை ஊர் முழுவதும் பறை அறிவிக்குமாறு பறையர் ஒருவரிடமும், அதற்கான மேளத்தை தருமாறு பள்ளர் ஒருவரிடமும் சொல்லப்படுகிறது. தன்னிடம் மணமேளம் மட்டுமே இருப்பதாகவும், அதை தர முடியாது என்றும் பள்ளர் தெரிவிக்கிறார். மண மேளத்தையே தருமாறும், அது உடைந்து விட்டால் தாங்கள் சரி செய்து தருவதாகவும் பறையர்கள் உறுதி கூற, மேளம் தரப்படுகிறது. கோவிலுக்குச் செல்லும் வழியில் மழை பெய்ததால் மேளம் உடைந்து போகிறது. மேளத்தை சரி செய்து தருவதாக பறையர்களில் சோனை என்பவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஆனால், அன்று இரவே பறையர்கள் நால்வரும் காட்டு ஊரணிக்கு தப்பி ஓடிவிடுகிறார்கள்,

                  சோனையையும், மற்ற நால்வரையும் பிடித்து, வழக்கு விசாரிக்கும் முத்துகிருஷ்ணன் செட்டி வகையறாவிடம் அழைத்துச் செல்கிறார்கள். வழக்கை விசாரித்து, மேளத்திற்கான தொகையையும், ஊருக்கான தண்டத்தொகை 30 பொன்னும் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அன்று இரவு பறையர்கள் சாத்தரசன் கோட்டைக்கு தப்பி ஓடுகிறார். அங்கு மறுபடியும் வழக்கு விசாரிக்கப்படுகிறது. தேத்தரசன், சாத்தரசன் மற்றும் மூவரசன் ஆகியோர் விசாரித்து, பழைய தீர்ப்பினை உறுதி செய்கிறார்கள். சாத்தரசன் கோட்டைக்கு முப்பது பொன்னோடு இப்போது அபராதம் 70 பொன்னாக மாறுகிறது.

                  தீர்ப்பில் திருப்தி இல்லாமல் பறையர்கள் நாட்டார் ஊருக்குப் போகிறார். அங்கும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதலில் வழக்கை விசாரித்து தண்டம் விதித்த முப்பது பொன்னையும், மேளம் சரி செய்ய பத்து பொன்னையும், நாட்டார் ஊருக்கு விசாரித்தத கூலியாக முப்பது பொன்னையும் சேர்த்து மொத்தம் 100 பொன்னை தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. கனக செட்டித்தேவன், நாட்டரசத்தேவன், கரியான் குடியான், சினக்கராயன், வடகரை வேளுவ நாட்டார், பட்டர் சண்முகநாராயணன் பிள்ளை, பேயி வெட்டிக்காளை, வலை அரசன், கோவில் வைராகி தேசத்து காமாட்சி செட்டியார் முத்துப் பணிக்கன் மற்றும் ஐவகை நிலங்கள் தொழிலாளிகளின் தலைவன் பட்டு சொடலை ஆகிய அனைத்து சாதியினராலும் இத்தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

                  கதையின் முக்கியமான திருப்பமே இங்குதான் இருக்கிறது.

                  பத்து பொன் கொடுக்க வழி இல்லாமல்தான் தாங்கள் தப்பி வந்ததாகவும், நூறு பொன் தர வழியே இல்லை என்றும் பறையர்கள் தெரிவித்தனர். அவர்களுக்குப் பதிலாக நூறு பொன்னை தான் தந்தால், தனக்கு என்ன கைமாறு செய்வார்கள் என நாட்டுச் செட்டியார் தலைவர் கேட்கிறார். என்ன வேண்டுமோ அதைச் செய்யச் சொல்லலாம் என்று ஊரார் சொல்கின்றனர்.

                  நால்வரும் தன் தோட்டத்தை காவல் காக்க வேண்டும் என்றும், அதற்கு சம்பளமாக ஒரு படி அரிசி, ஒரு வேட்டி, ஆடு உரிக்கும் போது நான்கு கால்களும், குடலில் ஐந்தில் ஒரு பங்கும் தருவதாகச் சொல்கிறார் செட்டியார் தலைவர். வீட்டு விசேஷங்களின் போது ஒரு பணமும் (133 மில்லி தங்கம்), சோத்துப் பானை சாதமும், தப்பு கொட்டுவதற்கு அனுமதியும், அரை காணி நிலமும் தருவதாகவும் உறுதியளிக்கிறார். இதே போன்றுதான் மாடு மேய்ப்பவனுக்கும் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால், தன் மனம் விரும்பும்படி வேலை செய்யவில்லை என்றால் தான் கொடுத்த நூறு பொன்னையும், அரை காணி நிலத்தையும் திரும்பக் கொடுத்து விட வேண்டும் என்று உறுதிபடக் கூறுகிறார் தலைவர். இவற்றை பறையர்கள் ஒப்புக் கொள்ள, முன்மாலை முன் சந்தனம் நாட்டரச முதலி வாங்கி, சாட்சியாக சின்னானிடம் தந்தார். பின்பு வெள்ளையன், மல்லற வெட்டி, நத்தான். வீமன் ஆகியோரிடம் நான்கு பங்காக வழங்கப்பட்டது.

                  “இந்த மட்டும் கல்லு, காவேரி, புல்லு, பூமி, சந்திரன், சூரியன் உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொள்வாராக”  என்ற கடைசி வரிகளோடு செப்பேடு முடிவடைகிறது. இப்பட்டயத்தினை சிதம்பர ஆசாரி எழுத, நால்வரும் கீறல் மூலம் தம் சம்மதத்தைப் பதிவு செய்துள்ளனர்.

 

பொருளாதாரமும், சாதீய ஆதிக்கமும்

                  இதில் தேவன், முதலி, செட்டி ஆகிய சொற்கள் சாதிகளைக் குறிக்காமல் வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுவதை உணரலாம். கனக செட்டித் தேவன் என்று குறிப்பிடப் படும் போது தேவன் எனும் சொல் தலைவனை குறிக்கிறது. பட்டர் சண்முக நாராயணன் பிள்ளை என்று சொல்லும் போது பிள்ளை என்பது கணக்கெழுதும் நபரைக் குறிப்பிடுகிறது. நாட்டார் தலைவர் செட்டி முதலி என்பதில் முதலி எனும் சொல் முதலாமவர் என்ற பதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செப்பேட்டில் சாதிகளைக் குறிக்கும் பெயர்கள் பொறுப்பைக் குறிக்கும் விதத்திலும், தொழிலைக் குறிக்கும் விதத்திலும் அமைந்துள்ளன.   

                  இச்செப்பேடு நால்வரின் அடிமை சாசனமாகப் பதிவு செய்யப்பட்டிருநதாலும் கூட, அதன் மைய காரணமாக பொருளாதாரம் அமைந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. திருடியவர்களின் சாதி அவர்களின் மீதான கடும் தண்டனையாக ஆரம்பத்தில் வெளிப்படுகிறது. தண்டப்பணத்தை உள்ளூரில் சிலருக்கு கொடுத்து, அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மன்னிப்பு வழங்கப்படும் என்ற விதி சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.

                  ஒருவேளை இறுதி தீர்ப்பின் படி நூறு பொன் கொடுக்கப்பட்டிருந்தால் தண்டனை என்னவாகி இருக்கும்? சாதீய ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் ஏழ்மையை, பொருளாதார நசிவை ஆதிக்க சக்திகள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பொருளாதார விடுதலையும், சாதீய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. பொருளாதார விடுதலையைப் புறந்தள்ளி விட்டு, அடையாளங்களை மட்டுமே முன்னிறுத்துவது முழுமையான தீர்வாகாது என்பதை நாட்டரசன் கோட்டை செப்பேடும் அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.

 

#

இலக்கியச் சோலை - தீக்கதிர்