அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்
அறிமுகம்
உலக மரபுவழி மருத்துவங்களில் அக்குபங்சர் ஒரு தொன்மையான மருத்துவ முறையாகும். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் 104 மரபு வழி மருத்துவங்களில் மருந்தில்லா மருத்துவங்களின் தலைமை மருத்துவமாக அக்குபங்சர் விளங்குகிறது. ”ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 192 நாடுகளில் 178 நாடுகளும், உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 129 நாடுகளில் 80 சதமான நாடுகளும் இப்போது அக்குபங்சரை அங்கீகரித்துள்ளன. ஒரு மருத்துவ முறை உலகெங்கும் இப்போது மிக வேகமாகப் பரவி வளர்ந்துள்ளதெனில் அது அக்குபங்சரே ஆகும்”1 என உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவங்களுக்கான வியூகம் (2014-2023) எனும் அறிக்கை கூறுகிறது.
அக்குபங்சர் மருத்துவத்தின் தாய் நாடு எதுவென்ற விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும் கூட, சீனாவில் தான் அக்குபங்சர் தோன்றியிருக்க முடியும் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும், ஆதாரங்களும் நிரூபிக்கின்றன. கிமு.2697- 2596 வரை வாழ்ந்த சீனாவின் மஞ்சள் பேரரசர் ஹூவாங்- டி காலத்தில் தொகுக்கப்பட்ட “நெய்ஜிங்” நூல் அக்குபங்சர் வரலாற்றின் துவக்க காலத்தை உறுதி செய்கிறது.
உடலின் இயல்பான இயக்கத்தில் உருவாகும் ஆற்றல் தடைதான் நோய் என்று கூறும் அக்குபங்சர், அந்தத் தடையை எளிமையாக நீக்கும் சிகிச்சையை முன்வைக்கிறது. உடலின் ஆற்றல் தடையையும் – தேவையையும் உணர்த்தும் நோயறிதல் முறைகளையும், உடலில் இயற்கையாக அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத் தூண்டும் சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது – அக்குபங்சர் மருத்துவம். 3
இருவேறு சிகிச்சை முறைகள்
மரபு வழி மருத்துவங்கள் அனைத்துமே தத்துவ அடிப்படையில் ஒரே சிகிச்சை முறையைப் பரிந்துரைத்தாலும், நடைமுறையில் பயன்பாட்டு அடிப்படையில் சிகிச்சை முறைகள் வெவ்வேறு முறைகளாகப் பின்பற்றப் படுவதைப் பார்க்க முடியும். உதாரணமாக, ஹோமியோபதி மருத்துவத்தில் ஒரு நோயாளிக்கு ஒரு நேரத்தில் ஒரு மருந்து என்பதுதான் அடிப்படை ஹோமியோ தத்துவம். ஆனால், நடைமுறையில் ஒரே நோயாளிக்கு பல மருந்துகளை கலந்து கொடுக்கும் முறை உருவாகிவிட்டது. அதே போல, சித்த மருத்துவத்தில் நோயாளியின் உடல் நிலை அறிந்த பிறகு, அதற்கேற்றாற்போல மருந்துகளை தயாரிப்பதே பாரம்பரிய முறையாக இருந்தது. பிற்காலத்தில், தயார் செய்யப்பட்ட மருந்துகளை கலந்து நோயாளிகளுக்குக் கொடுப்பது நடைமுறையில் வந்து விட்டது. இப்படி, பல்வேறு மரபுவழி மருத்துவங்களில் இரு வகையான போக்குகள் உருவாவாவதும், நடைமுறையில் இருப்பதும் நாம் அறிந்த செய்திதான். 4
இது அக்குபங்சர் மருத்துவத்திலும் நடைமுறையில் உள்ளது. அக்குபங்சர் தத்துவ அடிப்படையில் ஒரே ஒரு புள்ளியைத் தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை, மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் நோய்களைப் பிரித்து, அதற்கேற்றாற்போல பல புள்ளிகளில் சிகிச்சை அளிக்கும் பல புள்ளி சிகிச்சை முறை – என இரு வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 5
சிகிச்சை அடிப்படையிலும், தத்துவ அடிப்படையிலும் பல புள்ளி சிகிச்சை சரியானதா? அல்லது ஒரு புள்ளி சிகிச்சை சரியானதா? என்று விவாதிப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல. ஒரு புள்ளி சிகிச்சை முறை கடந்த காலங்களில் பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
பலபுள்ளி சிகிச்சை முறை உலகம் முழுவதும் பெரும்பகுதி நாடுகளில் பின்பற்றப் படுவதாலும், 6 இணையதளம் மற்றும் பெரும்பாலான நூல்கள் பலபுள்ளி சிகிச்சை பற்றியே பேசுவதாலும் அக்குபங்சர் என்ற சொல்லைக் கேட்டவுடன் பல புள்ளி சிகிச்சையே அனைவரின் நினைவுக்கும் வருகிறது. இப்படியான தற்காலப் புரிதல்களால், ஒற்றைப் புள்ளி சிகிச்சை என்பதே மிகவும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு கற்பனை சமகாலத்தில் நிலவி வருகிறது.
ஒற்றைப் புள்ளி சிகிச்சை என்பது அக்குபங்சரின் அடிப்படையான சிகிச்சை வழி முறையாகும். ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை முற்காலங்களில் பின்பற்றப் பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும், சான்றுகளையும் தேடி இக்கட்டுரை மூலம் பயணிக்கலாம்.
யுனெஸ்கோ பரிந்துரை
2010 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அக்குபங்சர் மருத்துவத்தை அறிவிக்க வேண்டும் என்ற சீன அரசின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனெஸ்கோ அங்கீகரித்தது.7 இப்பரிந்துரையின் அங்கமாக, சீனாவில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பாரம்பரிய அக்குபங்சர் நிபுணர்கள் சிலரின் கடிதங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
80 வயதான மரபு வழி மருத்துவர் ஷெங் சின்னாங் தனது 10 ஆவது வயதிலிருந்து அக்குபங்சர் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சீன அரசின் தேசிய மருத்துவ விருதினைப் பெற்றுள்ள அவர் தன் தந்தையிடம் இருந்து மூன்றே புள்ளிகளில் சிகிச்சை அளிக்கும் அக்குபங்சர் முறையைக் கற்றுக் கொண்டதாகக் கடிதத்தில் கூறியுள்ளார்.8 அதே போல, 82 வயதான மரபு வழி மருத்துவர் ஹீ பூரன் தனது 60 வருட அக்குபங்சர் அனுபவத்தின் வழியாக மூன்று புள்ளி அக்குபங்சர் சிகிச்சையைப் பின்பற்றுவதாக பரிந்துரைக் கடிதத்தில் கூறியுள்ளார்.9
2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட மரபு வழி மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதங்கள் ஐந்து.10 அதில் இரண்டு மருத்துவர்கள் மூன்று புள்ளி சிகிச்சை முறையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் அக்குபங்சர் மருத்துவம் என்றாலே, உடல் முழுவதும் ஊசிகளைச் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறையாகவே அக்குபங்சர் அறியப்பட்டிருக்கிறது. இதே நிலைதான் சீனாவிலும் இருக்கிறது
.
சாதாரணத் தொந்தரவுகளுக்குக் கூட, பத்து ஊசிகளில் துவங்கி ஐம்பது ஊசிகள் வரை உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் பல புள்ளி சிகிச்சை முறை11 பின்பற்றப்படும் சீனாவில் மூன்று புள்ளி சிகிச்சை சுமார் 70 – 80 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாகப் பின்பற்றி வந்ததை மரபு வழி மருத்துவர்களின் கடிதங்கள் மூலம் அறிய முடிகிறது. மிகக் குறைந்த புள்ளிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது உயர் நிலை சிகிச்சை என்ற கருத்தை இக்கடிதங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், அக்குபங்சரும்
1971 இல் அமெரிக்க அதிபர் நிக்சன் சீனாவிற்கு சுற்றுப் பயணம் செய்த போது அவருடன் சென்ற ஊடகவியல் குழுவில் சென்றவர் – ஜேம்ஸ் ரெஸ்டன்.12 இவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதன்மை செய்தியாளர். குடல்வால் அறுவை சிகிச்சை செய்த பிறகு ஏற்பட்ட கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார் ரெஸ்டன். சீன மருத்துவமனையில் பணிபுரிந்த அக்குபங்சர் மருத்துவர் லீ சாங் யுவான் தனக்கு சிகிச்சை அளித்ததாகவும், தன்னுடைய வயிற்று வலி முற்றிலும் சரியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் ரெஸ்டன்.13
ரெஸ்டனுடைய அக்குபங்சர் தொடர்பான கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பிறகுதான் அமெரிக்காவில் அக்குபங்சர் மருத்துவம் பற்றிய செய்திகள் பரவின. அமெரிக்க அக்குபங்சர் வரலாற்றில் ரெஸ்டன் மிக முக்கிய நபராகக் கருதப்படுகிறார். 14
இவருடைய கட்டுரையில் அக்குபங்சர் சிகிச்சை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் முக்கியமானவை “ அக்குபங்சர் மருத்துவர் முழங்கால் பகுதியில் மூன்று இடங்களில் ஊசியைச் செலுத்தி சிகிச்சை அளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார் ரெஸ்டன்.15
மூன்று புள்ளிகள் மூலமாக சிகிச்சை பெற்ற ரெஸ்டனின் கட்டுரைகள் வழியாக அக்குபங்சர் மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொண்ட அமெரிக்காவில் பின்பற்றப்படும் முறை மூன்று புள்ளி சிகிச்சை முறை அல்ல, பல புள்ளி சிகிச்சை முறை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, பல ஊசி சிகிச்சை மிகப் பரவலாகப் பின்பற்றப்படும் இக்காலத்திலும் மிகக் குறைந்த ஊசிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவது உயர் நிலை சிகிச்சை என்று கருதும் புரிதல் இருந்து கொண்டிருக்கிறது.
யுனெஸ்கோ கடிதங்களின் வழியாகவும், ஜேம்ஸ் ரெஸ்டனின் கட்டுரை வழியாகவும் 1970 – 2010 காலங்களில் மிகக் குறைந்த புள்ளிகளில் அளிக்கப்படும் சிகிச்சை மீதான மனப்போக்கினை நாம் புரிந்து கொண்டால், சீனாவின் அக்குபங்சர் வரலாற்றில் ஒற்றைப் புள்ளி சிகிச்சை இருந்திருக்கும் எனும் முடிவிற்கு நாம் வர முடியும்.
சீனாவில் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை
”ஒரே ஒரு புள்ளியின் மூலம் ஆயிரக்கணக்கான நோய்களைக் குணப்படுத்த முடியும்” என்பது சீனப் பழமொழி.16 சீன அரசால் மாஸ்டர் ஆஃப் அக்குபங்சர் என்று பாரட்டப்பெற்றவர் டாக்டர். உ வேய் பிங். 17 அவருடைய புகழ் பெற்ற வரிகளை டாக்டர் சகோதரர்கள் டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான், டாக்டர்.சித்திக் ஜமால் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்18 “ஒரே ஒரு புள்ளியின் மூலம் பத்தாயிரத்திற்கு அதிகமான நோய்களைக் களைய முடியும்”. டாக்டர் உ வேய் பிங்கின் இந்த வரிகளே அக்குபங்சர் மருத்துவத்தில் தங்கள் பயணத்திற்கான தூண்டுகோல் என்று குறிப்பிடுகின்றனர் டாக்டர் சகோதரர்கள்.
பேராசிரியர். டாக்டர்.ஜின் கே யூ எழுதிய ”ஒரு ஊசி ஒரு சிகிச்சை” (2010) 19 நூலும், டாக்டர். வெய் சீ யங் எழுதிய “ஒற்றைப் புள்ளி சிகிச்சை” (2018) 20 நூலும், டாக்டர். லியூ ஜோ மற்றும் சென் ஹுவா எழுதிய “ஒரு புள்ளி” நூலும் (2010)21 சமகாலத்தில் ஒரு புள்ளி சிகிச்சை முறை சீனாவில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான உதாரணங்களாகும்.
இப்போதும் சீனாவின் மரபு வழி அக்குபங்சர் மருத்துவர்கள் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறையைப் பின்பற்றி வருவதை செய்திகள் வழியாக அறிந்து கொள்ள முடியும்.
சீனாவில் இருந்து ஜப்பானுக்கு. .
அக்குபங்சர் சிகிச்சை முறை ஜப்பானில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் அக்குபங்சர் வரலாறு ஏழாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது.
சீன புத்த மதத்துறவி சென் ஜென் ஜப்பானில் அக்குபங்சர் மருத்துவத்தைக் கற்றுத் தந்ததாக ஜப்பான் அக்குபங்சர் வரலாறு கூறுகிறது.22 சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானில் அக்குபங்சர் மிக மெதுவாகப் பரவத் துவங்கியிருக்கிறது. பாரம்பரிய அக்குபங்சர் சிகிச்சை முறைகளில் மிக உயந்த முறையாக டான்ஷி23 அக்குபங்சர் முறை குறிப்பிடப்படுகிறது.
டான்ஷி என்றால் ஜப்பான் மொழியில் உயர்ந்த முறை என்று பொருள். டான்ஷி முறையின் சிகிச்சை முறையே – ஒரு புள்ளியைத் தேர்வு செய்வதுதான். ஒரே ஒரு புள்ளியை சரியாகத் தேர்வு செய்து, சிகிச்சை அளிக்கும் போது உயிர்ச் சக்தியில் மாற்றத்தை உருவாக்குவதாக டாக்டர்.குய் குவாஹரா குறிப்பிடுகிறார். 24
சீனாவின் சமீப கால நூல்கள், ஜப்பானில் பின்பற்றப்படும் டான்ஷி முறை இவற்றின் மூலம் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை சீனாவில் இருந்து ஜப்பானுக்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே பரவியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். கட்டுரையின் முதல் பகுதியில் சீனாவில் ஒற்றைப் புள்ளி இருந்திருக்கலாம் என்ற முடிவினை, உறுதி செய்யும் ஆவணங்களாக சீன நூல்களும், ஜப்பானின் டான்ஷி முறையும் உள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் ஒற்றைப் புள்ளி சிகிச்சை
இந்தியாவில் அக்குபங்சர் அறிமுகமானது ஆதாரங்களின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டு என அறிய முடிகிறது. டாக்டர் ஆண்டன் ஜெயசூர்யா அவர்களின் தமிழக வருகை மூலமாகவும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர். பி.கே பாசு மேற்கு வங்கம் வழியாகவும் 1960 – 70 கால கட்டத்தில் அக்குபங்சர் இந்தியாவில் அறிமுகமாகிறது.
இந்தியாவிற்கு அறிமுகமான அக்குபங்சர் என்பது சீனாவில் பரவலாகப் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்த பல புள்ளி சிகிச்சை முறைதான். அக்குபங்சரின் இந்தியத் துவக்க காலம் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறையை அறிந்திருக்கவில்லை. 1984 இல் டாக்டர்.ஃபஸ்லுர் ரஹ்மான், டாக்டர்,சித்திக் ஜமால் ஆகியோரின் வருகைக்குப் பிறகுதான் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை இந்தியாவில் அறிமுகமாகிறது.
டாக்டர்.உ வேய் பிங் அவர்களின் கூற்றால் ஈர்க்கப்பட்ட டாக்டர் சகோதரர்கள் ஒரு புள்ளி சிகிச்சையை தத்துவங்களின் அடிப்படையில் தேடி, பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பின்பு மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். டாக்டர் சகோதரர்களின் வழியாக ஒற்றைப் புள்ளி சிகிசை முறை இந்தியாவிற்கு அறிமுகம் ஆகிறது.
இதன் வழியாகவே தென் இந்தியா முழுவதும் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை பரவலாக அறியப்பட்டது.
தமிழகத்தில் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை
அக்குபங்சர் மருத்துவம் இந்திய அரசால் சிகிச்சை முறையாக 2003 இல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் அக்குபங்சர் மருத்துவத்தை பாடமாகக் கற்பிக்கின்றன.
சமகாலத்தில் அக்குபங்சர் சிகிச்சை முறையிலும், நடைமுறையிலும் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறையின் தாக்கம் இருப்பதை பல தமிழகப் பல்கலைக்கழகங்கள் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறையை பாடத்திட்டமாக வைத்திருப்பதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் அக்குபங்சர் பாடத்திட்டங்கள் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
1. தமிழகத்தில் இயங்கும் அக்குபங்சர் சிகிச்சை மையங்களில் அக்குபங்சர் இல்லம் என்ற பெயரில் இயங்கும் முந்நூறுக்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் ஒற்றைப் புள்ளி சிகிச்சையைப் பின்பற்றுகின்றன.25
2. தென்னிந்தியாவில் இயங்கும் அக்குபங்சர் மருத்துவர்கள் அமைப்புகளில் அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா), தமிழ்நாடு அக்குபங்சர் அமைப்பு, அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகளின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் ஒற்றைப் புள்ளி சிகிச்சையாளர்களாக இருக்கின்றனர். 26
. . . இவற்றின் மூலம் சமகாலத்தில் அக்குபங்சர் மருத்துவத்தில் ஒற்றைப் புள்ளி சிகிச்சையின் தாக்கம் சிறப்பாகக் குறிப்பிடும் அளவில் இருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
நிறைவாக. . .
ஒற்றைப் புள்ளி சிகிச்சை என்பது சீனாவில் இருந்த மரபு வழி அக்குபங்சரின் உயர் நிலை சிகிச்சை முறையாகும். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் அறிமுகமான அக்குபங்சர் முறையில் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை பின்பற்றப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில், தத்துவப் புரிதலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை படிப்படியாக மறைந்தது.
இந்தியாவில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை, இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் உலக அளவில் பல நாடுகளில் ஆங்காங்கே பின்பற்றப்பட்டாலும் கூட, இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் மிகப் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஒற்றைப் புள்ளி சிகிச்சை என்பது அக்குபங்சரின் ஒரு புதிய சிகிச்சை உத்தி அல்ல. அது அக்குபங்சர் உயர் நிலை சிகிச்சை முறையும், வரலாற்றுத் தொடர்ச்சியும் ஆகும்.
மேற்கோள் ஆவணங்கள்
1. உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவங்களுக்கான வியூகம் (2014-2023)
2. மரபுமுறை அக்குபங்சர் (நூல்), முதல் பதிப்பு ஜூலை 2006, மகி ராமலிங்கம், மரபுமுறை அக்குபங்சர் கவுன்சில்,
3. அக்குபங்சர் நல்வாழ்வின் அறிவியல் (நூல்), முதல் பதிப்பு 2016, மணிமேகலைப் பிரசுரம்
4. Leaders in Homoeopathic Therapeutics (Book), Fifth Edition 2005, Dr.E.B.Nash, B.Jain Publishers
5. அக்குபங்சர் பயன்பாட்டியல் (பாடநூல்), முதல் பதிப்பு 2014, தமிழ்ப் பல்கலைக்கழகம், புத்துயிர் பதிப்பகம்
6. அக்குபங்சர் / அக்குபிரஷர் சிகிச்சை முறைகள் (பாடநூல்), முதல் பதிப்பு 2016, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
7. Acupuncture takes stab at UNESCO list (Article), China Today 12.11.2010, Shan Juan
8. Voluntary Approval Declaration (Letter), Nov.10, 2010, Cheng Xinnong, China Association of Acupuncture and Moxibustion
9. Voluntary Approval Declaration (Letter), Nov.10, 2010, He Puren, China Association of Acupuncture and Moxibustion
10. Voluntary Approval Declarations (Document), Dec.01, 2010, Government of P.R.China
11. Clinical Acupuncture (Book), 25th Edition 2014, Anton Jayasuriya,B.Jain Publishers
12. Reston Helped Open a door to Acupuncture (Article), Dec.14, 1995, Archives, The New York Times
13. Now About My operation in peking (Article), Jul.26, 1971, James Reston, New york Times
14. Reston Helped Open a door to Acupuncture (Article), Dec.14, 1995, Archives, The New York Times
15. Now About My operation in peking (Article), Jul.26, 1971, James Reston, New york Times
16. Chinese Acupuncture (Book), Re edition 1962, Wu Wei ping, TBS The Book Service Ltd.
17. அக்குபங்சர் வரலாறும் தத்துவங்களும் (பாடநூல்), முதல் பதிப்பு 2014, தமிழ்ப் பல்கலைக்கழகம், புத்துயிர் பதிப்பகம்
18. புதிய அக்குபங்சர் (நூல்), மறு பதிப்பு (2015), டாக்டர்.ஃபஸ்;லுர் ரஹ்மான், ஹெல்த் டைம் பப்ளிகேஷன்
19. One Needle One Treatment (Book), First Edition 2010, Jink e yu, Foreign Languages Press
20. One Needle Therapy (Book), First Edition 2018, Dr.Wei- chieh Young,Americal Chinese medicine cultural center
21. Single Point (Book), First Edition 2010, Lin Zhao, Zhou Chen hua, Foreign Languages Press
22. Chinese , Japanese is Acupuncture All the same? (Article), News page of Pacifica college of Oriental medicine, www.pacificcollege.edu.
23. Tanshi -Single Needle Technique (Article), 2010, Koei Kuwahara, New England school of Acupuncture
24. Tanshi -Single Needle Technique (Article), 2010, Koei Kuwahara, New England school of Acupuncture
25. Acu home website, 2018, Federation of Acupuncture Homes, www.acuhome.org
Annual Report, 2019, Acupuncture Healers Federation (India)