- அ.உமர் பாரூக் -
தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை
கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகளிலும், செப்பேடுகள், நடுகற்கள், எழுத்துப்
பொறிப்புள்ள பானை ஓடுகள், காசுகள் ஆகியவற்றிலும் உள்ள செய்திகளை வாசித்து அறிய தமிழ் தொல்
எழுத்துகளின் அறிமுகம் அவசியமானது.
ஆதிகால மனிதர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள
சைகை மொழியில் துவங்கி, பேச்சு மொழிக்கு வந்து சேர்ந்தனர். வரலாற்றுக்கு
முந்திய காலமாகக் கணிக்கப்பட்டும் லட்சக்கணக்கான ஆண்டுகள் மனிதன் பேச்சு மொழியைக் கொண்டே
வாழ்ந்து வந்தான். மொழி என்பது பேசும் ஒலியைத்தான் குறிக்கும். மிகப்
பிற்காலத்தில் குறியீட்டு மொழியின் வழியாக எழுத்து பிறந்தது. இவற்றை
சித்திர எழுத்துகள் என்றும் குறிப்பிடுவார்கள். குருவி
என்று எழுதுவதற்காக, எழுத்துகள் பிறக்காத காலத்தில் குருவியின் உருவத்தை வரைந்து
புரியவைப்பது.
குறியீட்டு எழுத்துகள் உலகம் முழுவதும் பல்வேறு காலங்களில் பயன்பாட்டில்
இருந்துவந்துள்ளன. இந்தியாவில் இதனை கீறல் என்றும் அழைப்பதுண்டு. கீழடி
அகழாய்விலும், சிந்துச் சமவெளி அகழாய்விலும் கிடைக்கப்பட்ட கீறல் குறியீடுகள்
இன்றளவும் ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழமான
ஆய்வுகளுக்காக உலக மொழியியல் வல்லுநர்கள் உருவெழுத்து, கருத்தெழுத்து, சொற்குறியீட்டு
எழுத்து, ஒலி எழுத்து என வகைப்படுத்தி வைத்துள்ளனர்.
சரி..
மறுபடியும் மொழிக்கே வருவோம். நாம்
பேசும் மொழி தமிழ். இந்த மொழியை எழுதுவதற்காக நாம் பயன்படுத்துவது எழுத்துகளை. மொழியையும், எழுத்துகளையும்
பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம். அம்மா என்ற சொல்லை வாயால் சொல்வது
தமிழ் மொழியில் பேசுவது. அதே சொல்லை எழுத்துகள் மூலம் எழுதவும் முடியும். எந்த
எழுத்துகளின் மூலம் எழுதலாம்? ஆங்கிலத்தில் கூட தமிழ் மொழியை எழுதலாம். AMMA என்று எழுதுவதில் உள்ள மொழி – தமிழ்.
எழுத்து – ஆங்கிலம். இதையே
வெவ்வேறு எழுத்துகளிலும் எழுத முடியும். எழுத்துகளை வாசிக்கும்
போது எழும் ஒலிதான் மொழி. அதை எழுதுவதற்குப் பயன்படுபவையே எழுத்து.
மொழியும் – எழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை. உதாரணமாக, இப்போது இந்தி
பேசப்படுகிறது. அதே இந்தி, எழுதப்படுவதற்கு
சொந்த எழுத்து முறை அம்மொழிக்கு இல்லை. எனவே, தேவநாகரி என்ற எழுத்துகளைப் பயன்படுத்தி இந்தி எழுதப்படுகிறது. அதே தேவநாகரி எழுத்துகளைப் பயன்படுத்தி மராத்தி மொழியும் எழுதப்படுகிறது.
இந்த இரண்டு மொழியையும் வாசித்தால் நமக்கு எது இந்தி, எது மராத்தி என்ற குழப்பம் வந்துவிடும். வாசித்து எழும்
ஒலியை வைத்துத்தான் மொழியை உறுதி செய்யும் முடியும்.
அதே போல, மலேசிய நாட்டின் மொழியன மலாயா ஒரு பேச்சு மொழி.
அதனை எழுதுவதற்கு சொந்த எழுத்துகள் இல்லை. எனவே,
ஆங்கிலத்தைப் பயன்படுத்தி மாலாய் மொழியை எழுதுவார்கள். இதுதான் மொழிக்கும் – எழுத்திற்குமான வேறுபாடு.
தமிழுக்கு மொழியும், எழுத்துகளும் உள்ளன. வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே தமிழ் மொழி உருவாகி விட்டது. தமிழ் எழுத்துகள் கி.மு. ஐந்தாம்
நூற்றாண்டில் இருந்தே கிடைக்கத்துவங்கின. தமிழ் எழுத்துகள் அப்போது
எப்படி இருந்தன என்பதே, இப்போதுள்ள தமிழ் எழுத்துகள் எப்போது
வந்தன? என்று அறிந்து கொள்வதே அடிப்படையானது.
கி.மு.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட
“சமயவங்க சுத்த” எனும் சமண நூல் அக்காலத்தில் புழக்கத்தில்
இருந்த எழுத்து முறைகளைப் பட்டியலிடுகிறது. அதன் படி பதினெட்டு
விதமான எழுத்துகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
அந்தப் பட்டியலில் பதினேழாவது இடம்பெற்றிருந்த எழுத்தின் பெயர் தமிழி.
இதுதான் தமிழ் எழுத்துகளின் ஆதி எழுத்து முறை. இதனை தமிழ் பிராமி என்றும் குறிப்பிடுவார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகனின் தூண் கல்வெட்டுகள்
அனைத்தும் பிராமி எனும் எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டிருந்தன. தமிழி எனும் பழந்தமிழ் எழுத்து முறை இந்த பிராமி எழுத்துகளை ஒத்ததாக இருந்ததால்,
வட இந்தியாவில் இருந்து தமிழ் எழுத்து முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும்
என்ற அடிப்படையில் தமிழ் பிராமி என்று அழைத்து வந்தனர்.
நேர் கோடுகளாலும், பக்கக் கோடுகளாலும் பெரும்பாலான எழுத்துகளைக்
கொண்ட நம் தமிழி எழுத்துகளைப் பற்றி ஆய்வாளர் நடன காசினாதன் கூறும் போது அவை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்தன என்று
குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டின் பல கல்வெட்டுகளும், இலங்கை அனுராதபுரத்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டிலும் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
அதே போல, பேரா.கா.ராஜன் அவர்களும் வேதியியல் பகுப்பாய்வு செய்து கணிக்க முடியும் தமிழியின் துவக்க
காலம் என்பதை கி.மு. 490 என்று குறிப்பிடுகிறார்.
எனவே, தமிழி எனும் எழுத்துகள் உருவான காலம் என்பது
மன்னன் அசோகன் காலத்துக்கும் முந்தியது என்பதால், தமிழ் பிராமி
என்று அழைப்பது பொருந்தாது. முனைவர் கே.வி.ரமேஷ் தமிழி கல்வெட்டுகள்,
அசோகரின் காலத்திற்கும் முந்தியவை என்பதையும், வடநாட்டின் பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டில் இருந்து பட்டிப்பரோலு,
வங்காளம், கிழக்கு உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான் வழியாக அசோக மன்னனின் எல்லைக்குட்பட்ட பகுதிக்குச் சென்றிருக்கிறது
என்பதையும் உறுதி செய்கிறார்.
சமீபத்தில் நடந்த கீழடி அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறிப்புள்ள மண் ஓடுகளின்
காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பதை உறுதி
செய்துள்ளதைக் கொண்டு, தமிழிதான் தமிழின் தொல் எழுத்து வடிவம்
என்பதையும், அவை பிராமியின் காலத்திற்கு முந்தியது என்பதையும்
உறுதி செய்து கொள்ளலாம். நமது சங்க இலக்கியங்கள் அனைத்துமே தமிழியில்
எழுதப்பட்டவைகளாகவே இருக்க முடியும்.
தமிழ் மொழியை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம் – தமிழி.
இது கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில்
இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை
பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.பி.
ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழி எழுத்துகள் எழுதப்படும் முறையில்
சில மாற்றங்கள் வரத் துவங்கின. அப்படி மாறிய எழுத்துகளை வட்டெழுத்து
என்று அழைக்கிறோம். தமிழியின் அடிப்படை மாறாமல், அதே நேரம் கோடுகள் வளைந்து புதிய எழுத்துகள் உருவாயின. தமிழகத்தின் ஒரு பகுதியில் தமிழி பயன்படுத்தப்பட்ட காலத்திலேயே, இன்னொருபுறம் வட்டெழுத்துகளும் பயன்படுத்தப்பட்டன. கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு வட்டெழுத்துகளே முழுமையாக
புழக்கத்தில் இருந்திக்கிறது. கி.பி.
ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கி.பி. பதினாறாம் நூற்றாண்டு
வரைக்கும் கேரளப் பகுதியில் மலையாள மொழியை எழுதுவதற்கு வட்டெழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சில கல்வெட்டுகளில் தமிழி எழுத்துகளும், வட்டெழுத்துகளும்
கலந்தே எழுதப்பட்டுள்ளன.
தமிழியில் இருந்து வட்டெழுத்து உருவானதைப் போலவே, வட்டெழுத்தில்
இருந்து தற்கால தமிழ் எழுத்துகள் உருவாயின. ஒருபகுதியில் வட்டெழுத்து
புழக்கத்தில் இருந்த போதே, இன்னொரு பகுதியில் தமிழ் எழுத்துகள்
உருவாகி விட்டன. தற்காலத் தமிழின் முதல் வரலாற்று ஆவணம் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி. 550 ஆம் ஆண்டின் பல்லவ மன்னன்
சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேடே தற்காலத் தமிழின் முதல் ஆதாரமாக அமைந்துள்ளது.
இதிலிருந்து நாம் இன்னொரு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழி எழுத்து வடிவத்தில் இருந்து, வட்டெழுத்தும்
– தற்காலத் தமிழும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் உருவாகியுள்ளன.
இவ்வாறு தமிழி, வட்டெழுத்து, தற்காலத்
தமிழ் என்ற மூன்று வடிவங்களில் தமிழ் மொழி எழுதப்பட்டுள்ளது.
இவை தவிர, கிரந்தம் என்ற ஒரு எழுத்து வடிவமும் இங்கு
பயன்படுத்தப்பட்டுள்ளது. வடமொழிக் கலப்பு தமிழகத்தில் ஏற்பட்ட
காலத்தில் வடமொழிச் சொற்களை தமிழ் எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி எழுத இயலவில்லை.
முழுமையான உச்சரிப்பிற்கு புதிய எழுத்துகள் தேவைப்பட்டன. அதற்காக உருவாக்கப்பட்ட எழுத்துகள் தான் கிரந்த எழுத்துகள். உதாரணமாக, ஸ், ஷ், ஸ்ரீ போன்ற எழுத்துகள். சங்க காலத்திலேயே வடமொழிச் சொற்கள்
தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை எழுத தமிழி எழுத்துகளோடு,
ஒலிக்குறிப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை கொடுமணல் அகழாய்வில்
கிடைத்த பானை ஓட்டுப் பொறிப்புகள் உறுதி செய்கின்றன. கிரந்த எழுத்துகளின்
முறையான வரலாற்று ஆவணமாக கி.பி. 550 ஆம்
ஆண்டே உறுதிசெய்யப்படுகிறது. தமிழி எழுத்துகள் பயன்பாட்டில் இருந்த
காலத்திலேயே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதும் இருந்து வந்திருக்கிறது.
தமிழி, வட்டெழுத்து, தமிழ் என மூன்று
எழுத்து முறைகள் வளர்ச்சி பெற்ற காலத்திலும் கிரந்த எழுத்துகள் அவற்றின் ஊடே பயன்படுத்தப்பட்டு
வந்திருக்கின்றன. 1994 இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல்
ஆய்வாளராக இருந்த ரா.கோவிந்தராஜ் செய்த ஆய்வில் அப்போது வரை கிடைத்த
கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து வடிவங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில்
இருந்து பத்தாம் நூற்றாண்டு வரை கிடைத்த தமிழ் மொழி கல்வெட்டுகளின் எண்ணிக்கை
2,333. அவற்றில், ஆறாம் நூற்றாண்டில் தமிழியில்
34 கல்வெட்டுகளும், வட்டெழுத்தில் 25 கல்வெட்டுகளும், கிரந்தம் ஒரு கல்வெட்டிலும் கிடைத்துள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில்
வட்டெழுத்து 54 , தமிழ் 8, கிரந்தம்
40 என்ற எண்ணிக்கையில் இருந்திருக்கிறது. தமிழி
கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. கி.பி.
எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்து 49, தமிழ்
41, கிரந்தம் 30 எண்ணிக்கையிலும், கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில்
வட்டெழுத்து 236, தமிழ் 1762, கிரந்தம்
52 என்ற எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கைகளை
வைத்து எழுத்து வளர்ச்சியை நில அடிப்படையில் பகுதி பகுதியாகப் பிரித்து ஆய்வுகளைச்
செய்திருகிறார் ஆய்வாளர்.
தமிழி, வட்டெழுத்து போன்ற எழுத்து வடிவங்களை சற்றே முயன்றால்
எளிமையாகக் கற்றுக் கொள்ள முடியும். தற்காலத் தமிழ் உள்ளிட்ட
மூன்று எழுத்து வடிவங்களையும் நாம் தெரிந்து கொண்டால் மட்டும்தான் நாம் “ எங்களுக்கு தமிழ் எழுதத் தெரியும்” என்று சொல்ல முடியும்.
துணை நூல்கள்
1. தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி,
ரா.கோவிந்தராஜ், தமிழகத் தொல்லியல் கழகம்,
2016 (முதற்பதிப்பு
1994)
2. தொல்தமிழ் எழுத்துகள், செந்தீ நடராசன், நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்,
2013
3. கல்வெட்டுக்கலை, பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ், 2017.
4. கல்வெட்டின் கதை, நடன காசிநாதன், தமிழ்நாடு அரசு
தொல்பொருள் ஆய்வுத்துறை,
1969.