-
அ.உமர் பாரூக் -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர் புள்ளிமான்கோம்பை. ஆண்டிபட்டியிலிருந்து
இருந்து சுமார் 19 கி.மீ தூரத்திலும், வத்தலக்குண்டிலிருந்து
15 கி.மீ தூரத்திலும் புள்ளிமான்கோம்பை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் உயரத்தில் உள்ளது இச்சிற்றூர்.
2006
ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் ஆய்வாளர்கள் வி.பி.யதீஸ் குமார், சி. செல்வகுமார் ஆகியோர் புள்ளிமான் கோம்பை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். புள்ளிமான் கோம்பையிலும் அதன் எதிர்ப்புறமாக வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ள பூவம்பட்டியிலும், புள்ளிமான் கோம்பைக்கு கிழக்கில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தெப்பத்துப் பட்டியிலும் சங்ககால ஈமச்சின்னங்கள், முதுமக்கள் தாழிகள், கல் உயர் பதுக்கைகள் ஆகியன காணப்படுவதை ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தனர்.
தமிழ் எழுத்துகளின் ஆதி வடிவமான இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எனும் தமிழி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று சங்க கால நடுகற்கள் புள்ளிமான் கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பகுதி நிலங்கள் விவசாயத்திற்காக பண்படுத்தப்பட்ட போது மூன்று நடுகற்களும் அப்புறப்படுத்தப்பட்டு,
மண்ணில் புதைந்து கிடந்தன. சாதாரணமாகப் பார்க்கும் போது, சாலையோரங்களில் கிடக்கும் கற்களைப் போல உள்ள இந்த நடுகற்கள், கூர்ந்து கவனித்துப் பார்த்தால்தான் எழுத்துகளைக் காண முடிகிறது.
”இதுவரை கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துகள் பொறிப்புள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் சமணர் படுகைகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நடுகற்கள் புள்ளிமான்கோம்பையில்
கிடைத்துள்ளதன் மூலம், சங்க இலக்கிய ஆய்வுகள் இன்னும் சிறப்பு பெறும்” என்பது பேராசியர்.கா.ராஜன் மற்றும் ஆய்வுக்குழுவினரின் கருத்தாகும்.
மூன்றடி உயரமும், ஒன்று முதல் ஒன்றரை அடி வரை அகலமும் உள்ள இந்நடுகற்கள் சங்ககாலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகளின் மேல் செய்யப்படும் ஈமச்சின்னங்களின் ஒரு பகுதியாகும்.
இந்நடுகற்களைப் பற்றி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கீழ்க்கண்ட சிறப்புகளைக் கூறுகிறார்.
#
இந்தியாவிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவையே மிகவும் பழமையானவைகளாகும்.
#
இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழிக் கலப்பின்றித் தமிழில் எழுதப்பட்டுள்ளது இவற்றின் தனிச்சிறப்பாகும்.
#
இக்கல்வெட்டுகள் மதுரையில் இருந்து தொலைவில் (அக்காலத்தில் காடுகள் சூழ்ந்திருந்த) ஒரு சிற்றூரில் கிடைத்திருப்பது சங்க காலத்திலேயே தமிழகத்தில் பரவலாக எழுத்தறிவு இருந்தது என்பதற்கான உறுதியான சான்றுகளாகும்.
நடுகற்களின் எழுத்துப்பொறிப்புகள்
முதல் நடுகல்
. . அன் ஊர் அதன் . . . ன் அன் கல் – என்ற
எழுதுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நடுகல்லின் முன்பகுதி உடைந்து போய் உள்ளது. இது சண்டையில் மரணமடைந்த வீரன் ஒருவருக்காக வைக்கப்பட்ட நடுகல் என்பதைத் தவிர, வேறு எதையும் இதன் மூலம் உறுதி செய்ய இயலவில்லை.
இரண்டாம் நடுகல்
கல் பேடு
தீயன்
அந்தவன்
கூடலூர்
ஆகோள்
எனும் வரிகளோடு உள்ள இந்த நடுகல் குறித்து விரிவாக பிறகு பார்க்கலாம்.
மூன்றாம் நடுகல்
வேள்
ஊர்
அவ்வன்
பதவன்
.
. இதனை
பேரா.கா.ராஜன் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். “ வேள் ஊரைச் சேர்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் எனப் பொருள் கொள்ளலாம்.”
இக்கல்வெட்டுகள் தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
நடுகல் என்ன சொல்கிறது?
தமிழக கி.மு.3 முதல் கி.பி. 3 வரையுள்ள காலத்தை சங்க காலம் என்று தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சங்ககாலத்தின் இலக்கியங்களில் சிற்றரசர்கள் மற்றும் குழுக்களுக்கு இடையிலான போரின் ஒரு பகுதியாக ஆநிரை கவர்தல் பின்பற்றப்பட்டுள்ளது.
ஆநிரை கவர்தல் என்றால் எதிர்தரப்பின் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கைப்பற்றிக் கொண்டு வந்து விடுவதாகும்.
சங்க காலப் போர்கள் ஆநிரை கவர்தலில் துவங்கி, பின்பு எதிர் தரப்பிலிருந்து ஆநிரை மீட்டலுக்காக சண்டையிடுவார்கள். இவ்வகைப் போர்களின் ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியான பெயர்களும், அடையாளங்களும் உள்ளன. சங்ககாலப் போரின் நிலைகள் குறித்து புறநானூறு, தொல்காப்பியம் போன்ற நூல்களில் விரிவான பாடல்கள் காணக்கிடைக்கின்றன.
உதாரணமாக, ஆநிரை கவர்தலை வெட்சித் திணை என்றும், அவற்றை மீட்டு வருவதை கரந்தைத் திணை என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இப்படி இலக்கியங்களில் சிறப்பு பெற்ற போரான ஆநிரை கவர்தலில் இறந்து போன வீரர்களுக்கு நடுகல் வைத்து, அஞ்சலி செலுத்தும் முறை சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் இருந்திருக்கிறது. ஆநிரை கவர்தல் – மீட்டல் எனும் இப்போர்களை ஆகோள் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி, நடைபெற்ற ஆகோளில் இறந்து போன வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகற்களே ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்தவை.
இப்போது இரண்டாவது நடுகல் எழுத்துகளுக்கான விளக்கத்திற்கு வருவோம். இந்த நடுகல்லில் கீழ்க்கண்ட வரிசையில் சொற்கள் அமைந்திருக்கின்றன.
கல்
பேடு தீயன் அந்தவன்
கூடல்ஊர் ஆகோள்
இதற்கான விளக்கத்தை பேரா.கா.ராஜன் அவர்கள் கீழ்க்கண்டவாறு தருகிறார். “பேடு என்னும் ஊரைச் சேர்ந்த தீயன் அந்தவன் எனும் வீரன் கூடலூரில் நடந்த ஆகோளில் மரணமடைந்ததை நினைவு கூறும் நடுகல் இது”.
”பேடு எனும் ஊரைச் சேர்ந்த தீயனின் மகனான அந்தவன் கூடலூரில் ஆவின்ங்களைக் கவர்ந்து வருகையில் வீர மரணம் எய்தினான். அவனுடைய வீரச் செயலைப் போற்றும் நடுகல் இது. தீயன் எனும் பெயர் அக்கினிக் குலத்தைச் சேர்ந்த சேர மன்னன் மரபுடன் தொடர்புடையது “ என்று விளக்குகிறார் ஆய்வாளர் நடன காசினாதன்.
மேற்கண்ட விளக்கங்களில் இருந்து வேறுபட்டு, ஆய்வாளர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்.
”தீயர் என்ற இனத்தைச் சேர்ந்த அந்துவன் என்பவன் ஆநிரை கவர்ந்த பூசலில் கூடலூரில் வீழந்து மாண்டான். அவனுடைய நினைவாக இக்கல் வைக்கப்பட்டுள்ளது.”
இந்த வரிகளுக்காக கீழ்க்கண்ட சில விளக்கங்களை கூடுதலாக முன்வைக்கிறார் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
1. அந்தவன் என்பது அந்துவன் என்ற பெயரின் மாற்றுரு. திருப்பரங்குன்றத்தில்
கிடைத்துள்ள தமிழி கல்வெட்டிலும், புறநானூற்றுப் பாடல்களிலும் அந்துவன் எனும் பெயர் காணப்படுவதால், இதனை அவ்வாறே கொள்ளலாம்.
2. நடுகல்லின் வரிகளை கீழிருந்து மேலாக வாசித்து பொருள் கொள்ள வேண்டும். கல் என்பது நடுகல்லையும், “பேடு” என்பது “பெட்ட” (இறந்த) என்ற மலையாளச் சொல்லின் திரிபான “படு” என்று எடுத்துக் கொள்ளலாம் எனவும், தீயன் என்பது இப்போதும் கேரளாவில் வாழும் ஒரு இனத்தின் பெயர் என்பதால் இச்சொல்லை இனமாக எடுத்துக் கொள்ளலாம்.
3. மலையாளச் சொல் மற்றும் கேரள இன சொற்கள் இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பதற்குக்
காரணம் – புள்ளிமான் கோம்பை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர். இம்மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளதால் பெட்ட என்பதை பட்டான் (இறந்து பட்டான்) எனப் பொருள் வரும் “படு” எனவும், தீயன் என்பதை இனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நடுகல்
– ஒரு
மீள்வாசிப்பு
ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட கருத்துகளிலும், கல்வெட்டிற்கான பொருள் கொள்வதிலும் சிறிய முரண்கள் இருப்பதை தேனி மாவட்டம் சார்ந்த யாராலும் புரிந்து கொள்ள முடியும்.
அந்துவன் எனும் பெயர் அந்தவன் என்று பொறிக்கப்பட்டுள்ளது என்பதை அக்காலத்தின் எழுத்துப் பொறிப்பு முறைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்பதால் அதனை ஏற்கலாம்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த நடுகல்லிலும் சொற்களின் இறுதியில்தான் கல் என்று சொல் இடம்பெற்றுள்ளது. இது நடுகல் எனும் பொருளில் அமைந்திருக்கிறது. ஆனால், புள்ளிமான் கோம்பை நடுகல்லில் கல் எனும் சொல் துவக்கத்திலேயே வருவதால் அது நடுகல்லைக் குறிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த எழுத்துகளோடு சேர்த்துப் பொருள் கொண்டால், கல் – பேடு (கல்பேடு) என்பது ஊரின் பெயராக இருக்கலாம். பேடு என்பது ஆய்வாளர் ஐராவதம் அவர்களின் கூற்றுப் படி “பெடு” வாக இருக்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. நடுகல்லின் காலமாக கணிக்கப்படுகிற சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள எல்லை இப்போதிருக்கும் இடத்தில் இல்லை. புள்ளிமான் கோம்பை ஆண்டிபட்டியில் இருந்து சுமார் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் கூட, மலையாளச் சொல் புழக்கம் கேரள எல்லையில் இருக்கும் கம்பம் நகரில் கூட குறைவுதான். தேனியில் மலையாளச் சொல்லினை தமிழ் மக்கள் பயன்படுத்துவது என்பது முற்றிலுமாக இல்லை. தேனியைத் தாண்டி பல கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது ஆண்டிபட்டி. அதிலிருந்து உட்பகுதியிலுள்ள சிற்றூரான புள்ளிமான் கோம்பையில் மலையாளச் சொற்கள் பயன்பாடு என்பது சாத்தியமே இல்லை. 1950 களில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதான் இப்போதிருக்கும் கேரள எல்லை குமுளியில் உருவானது. அதற்கு முன்பு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதிகள் தமிழகத்தோடுதான் இருந்தன. எனவே, புள்ளிமான் கோம்பையில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ.களுக்கு அப்பால் அமைந்திருந்தது அப்போதைய கேரள எல்லை. எனவே, மலையாளச் சொல் தமிழ் மக்கள் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
2. மலையாளம் எனும் மொழி தமிழின் கிளை மொழியாக உருவானது. புள்ளிமான் கோமை நடுகல்லின் காலத்தில் மலையாள மொழி என்று ஒன்று இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மலைநாடு எனும் சேர நாட்டுப் பகுதியிலும் தமிழ்தான் பேசும் மொழியாக இருந்திருக்கிறது. மலையாள எழுத்து மொழியின் முதல் ஆதாரமே
கி.பி. 830 ஆம்
ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் வழப்பள்ளி செப்பேட்டில்தான் மலையாள
மொழி முதன்
முதலாகக் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது. அதிலும்
மலையாள மொழி
வட்டெழுத்திலும், கிரந்த
எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது.
தமிழில் இருந்து
பிற்காலத்தில் பிரிந்தும்,
திரிந்தும் உருவான
மலையாள மொழிச்
சொல் சங்க
காலத்தைச் சேர்ந்த
நடுகல்லில் இருந்திருக்கிறது என்பது கற்பனையான ஒன்றாகவே
தோன்றுகிறது.
எனவே, இந்த நடுகல்லிற்கான பொருளை ஆய்வாளர்கள் கா.ராஜன் மற்றும் நடன காசிநாதன் ஆகியோரின் ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கொள்ளலாம்.
“கல்பேடு அல்லது பேடு எனும் ஊரைச் சேர்ந்த தீயனின் மகனான அந்துவன் கூடலூரில் ஆவினங்களைக் கவர்ந்து வருகையில் வீர மரணம் எய்தினான். அவனுடைய வீரச் செயலைப் போற்றும் நடுகல் இது.”
இந்த நடுகல்லோடு தொடர்புடைய இன்னொரு ஆச்சரியமான செய்தி ஒன்றும் இருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழித் தகுதியை மத்திய அரசு அளித்தது புள்ளிமான் கோம்பை நடுகல்லில் மலையாளச் சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்ற ஆதாரத்தின் அடிப்படையிலும்தான்.
நடுகற்களின் காலம்
#
நடுகற்களின் காலத்தினை கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம் என கணித்துள்ளார் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.
#
முனைவர். கா.ராஜன் இந்நடுகற்களின் காலத்தினை கி.மு. நான்காம் நூற்றாண்டு எனகணித்துள்ளார்.
#
ஆய்வாளர் நடன காசிநாதன் நடுகற்களின் காலமாக முன்வைப்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு.
ஆக, குறைந்த பட்சம் சுமார் இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், அதிகபட்சமாக சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் புள்ளிமான் கோம்பை நடுகற்கள் இருக்கலாம் என்ற முடிவிற்கு வரலாம்.
புலிமான் கோம்பையா. . ? புள்ளிமான் கோம்பையா. .?
நடுகல் கண்டுபிடிக்கப்பட்ட போது, அதனை வெளியிட்ட ஆய்வாளர்கள் முதல் தற்போது வரை ஊரின் பெயரை புலிமான் கோம்பை என்றே ஆவணங்களிலும், ஆய்வு குறித்த நூல்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடுகல் குறித்து எழுதப்பட்ட எல்லா கட்டுரைகளிலும் புலிமான் கோம்பை என்றே இன்று வரை குறிப்பிடப்படு வருகிறது. ஆனால், இவ்வூரின் பெயர் புள்ளிமான் கோம்பை என்பதாகும்.
1. தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை ஆவணங்கள் மற்றும் அரசின் ஊர்ப் பெயர்ப் பட்டியலிலும் புள்ளிமான் கோம்பை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊராட்சி ஆவணங்களிலும் இதே பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு ஊரின் பெயருக்குப் பின்னும் காரணம் இருக்கும். அப்படி புள்ளிமான் கோம்பை எனும் பெயர் இந்தப் பகுதிக்கு வந்ததன் காரணம் – அங்குள்ள ஓடையில் தண்ணீர் குடிக்க புள்ளிமான்கள் வந்து போகும் பகுதியாக இருந்ததே என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கோம்பை என்பது மலையை ஒட்டிய சிற்றூரைக் குறிக்கும் சொல்லாகும். தேனி மாவட்டத்தில் வேலப்பர் மலைக்கு அருகில் உள்ள ஊர் பாலக்கோம்பை எனவும், பண்ணைப்புரம் அருகில் அமைந்திருக்கும் மலைக்கு கீழுள்ள ஊரின் பெயர் கோம்பை எனவும் அழைக்கப்படுவதை உதாரணமாகச் சொல்லலாம்.
3. புலி மான் கோம்பை என ஊரின் பெயர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. தேனி மாவட்ட காடுகளில் வாழும் காட்டுயிர்கள் சுமார் 50 வகைகள் உள்ளன. இவற்றில் புலி எப்போதுமே கிடையாது.
4. புள்ளி மான் என்ற சொல்லினை புல்லி மான் என்று எழுதுவதும், சில இடங்களில் ஒற்றெழுத்தை விட்டு விட்டு புலிமான் என்று எழுதுவதும் கிராம மக்களின் வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், இந்த சொல்லை உச்சரிக்கும் போது புள்ளிமான் என்றே சொல்கின்றனர்.
இன்றும் தொடரும் நடுகல் மரபு
சங்ககால மக்கள் பழக்கத்தின் தொடர்ச்சியாக புள்ளிமான் கோம்பை பகுதியில் வாழும் ஒரு சமூக மக்கள் இப்போதும் இறந்தவர்களுக்கு நடுகற்களை வைக்கின்றனர். இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இறந்த உடலைப் புதைத்த இடத்தில் அடையாளக் கற்களை நட்டு வைப்பார்கள். புள்ளிமான் கோம்பை நடுகற்கள் அப்படியானவை அல்ல. இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளை சுடுகாட்டில் வழக்கம் போல் செய்கின்றனர். புள்ளிமான் கோம்பையின் எல்லைப்பகுதியில் (இப்போது பேருந்து நிறுத்தமாக இருக்கிறது) எல்லைக் கோவில் அருகில் இறந்தவரின் நினைவாக ஒரு கல்லை நட்டு வைக்கின்றனர்.
மிகப் பழைய கற்களில் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை.
பின்னர் இறந்தவர் பெயரைக் குறிப்பிடும் ஒன்றிரண்டு எழுத்துகளும், தொடர்ந்து முழுப்பெயரையும் இறந்த தேதியையும் குறிப்பிடும் வழக்கம் வந்திருக்கிறது. இப்போதும் புள்ளிமான் கோம்பையில் வாழும் குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த நடுகல் வைக்கும் பழக்கத்தை தொடர்கின்றனர்.
துணை நூல்கள்
1. புலிமான்கோம்பை சங்ககால நடுகற்கள், ஆவணம் 17, கா.ராஜன், வி.பி.யதீஸ் குமார், சி.செல்வகுமார், தமிழகத் தொல்லியல் கழகம், 2006.
2. தமிழ் பிராமி நடுகற்கள் : பாராட்டும் மீளாய்வும், ஆவணம் 17, ஐராவதம் மகாதேவன், தமிழகத் தொல்லியல் கழகம், 2006.
3. புலிமான்கோம்பை தாதப்பட்டி நடுகற்கள், கல்வெட்டுக்கலை பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2017.
4. புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, தொல்காப்பியம்
5. வாழப்பள்ளி செப்பேடுகள்
– விக்கிபீடியா
6. மலையாளத்தின் முற்காலம் – வர்ணம் ஆங்கில
வலைப்பக்கம்
7. தமிழக வரலாற்று
ஆவணங்கள், முனைவர்.மா.பவானி, தமிழ்ப் பல்கலைக்கழகம்,
2017