திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அலோபதியின் திரை விலக்கும் ஆதுரசாலை – கருப்பு கருணா

 எங்கள் ஊரில் பெரிய கோயில் அருகே ஒரு சித்த மருத்துவ மருந்துகள் விற்கும் கடை இருக்கிறது. அவ்வப்போது சில மருந்துகள் வாங்க இந்த கடைக்கு நான் செல்வதுண்டு. அப்படி போகும்போது கடையில் ஒன்றிரண்டு பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் கடை வெறிச்சோடிதான் கிடக்கும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் கதையே வேறு. கடையில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கிறார்கள். கடையில் எப்போதும் கூட்டமாகவே இருக்கிறது. சளி இருமல் தலைவலி உடல்வலி காய்ச்சல் போன்ற சாதாரண உபாதைகளுக்கு என்ன மருந்து சாப்பிட்டால் சரியாகும் என்று அங்கிருக்கும் சித்த மருத்துவரிடம் கேட்டு பை நிறைய வாங்குகிறார்கள்.கடைக்காரர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சு இந்த மக்களுக்கு.. எல்லோரும் திருந்தி விட்டார்களா.. யார் இவர்களை திருத்துவது என்று ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

கடைக்கு எதிர்ப்பக்கம் ஐந்தாறு மாதமாக மூடியே இருக்கும் ஒரு கோவிலில் உட்கார்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டு கடையைப் பார்த்து சிரித்தபடி உட்கார்ந்து இருக்கிறது கொரோனா எனும் கிருமி. எல்லாம் என் திருவிளையாடல்தான் என்று அது சிரிக்கும் சத்தம் அண்ணாமலையார் மலைமீது எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. உலகமே கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் இந்தக் காலத்தில், அலோபதி மருத்துவத்தில் இருந்து லேசாக விலகிக் கொண்டு சித்த மருத்துவம் ஆயுர்வேதம் ஹோமியோபதி போன்றவற்றின் பக்கம் மக்களின் கவனம் திசை திரும்ப தொடங்கி இருக்கிறது என்பதற்கு சாட்சிதான் மேலே சொன்ன காட்சி.

இந்த மருத்துவ முறைகள் எல்லாம் ஏதோ இப்போதுதான் புதுசாக தோன்றியதாக எண்ணிவிடக்கூடாது . இவைதான் இந்திய மண்ணில் ஏற்கனவே இருந்த மருத்துவ முறைகள். அலோபதி மருத்துவம் என்பது வெள்ளைக்காரர்கள் வந்தபோது கையோடு ஒரு பெட்டியில் போட்டு எடுத்துக்கொண்ட வந்த மருத்துவ முறை. அதுவும்கூட போர்களின் போது காயம் அடைகிற ராணுவத்தினரை விரைவாக குணப்படுத்தி மீண்டும் போருக்கு அனுப்புவதற்கு தேவையான ஒரு உடனடி மருத்துவ முறையாகத்தான் ரசாயனங்களின் உதவியுடன் இந்த அலோபதி மருத்துவ முறை உருவானது. ஆனால் இன்று அதுதான் உலகின் ஒன்னாம் நம்பர் மருத்துவ முறையாக இருக்கிறது.

உலகில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் , அலோபதி உட்பட 64 மருத்துவ முறைகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அலோபதி மருத்துவம் எப்படி உலகின் ஒன்னாம் நம்பர் இடத்தை பிடித்தது என்கின்ற திரையை விலக்கி காட்டுகிறது அ.உமர் பாருக் எழுதியுள்ள இந்த “ஆதுர சாலை” என்கிற நாவல்.
மருத்துவம் என்றால் அதில் முக்கியமானது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று நோயறிதல். மற்றொன்று அதற்கான சிகிச்சை அளித்தல். நோய் என்னவென்று கண்டுபிடித்துவிட்டால் அதற்கான சிகிச்சையை யார் வேண்டுமானாலும் அளித்து விடலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “நோய் நாடி நோய்முதல் நாடி” என்று தெளிவாக சொல்லி விட்டது வள்ளுவம். இந்த நோயை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான் கேள்வி. அதை ஸ்டெத்தாஸ்கோப் , மைக்ராஸ்கோப் , ஸ்கேன் என கருவிகள் துணை கொண்டு கண்டுபிடிக்கிறது அலோபதி மருத்துவம். ஆனால் நோயாளியுடன் பேசுதல், அவரது நாடி பிடித்து அறிதல் , நோய்க்குறி அறிதல், அவரது உணவு முறைகளை அறிதல் , வாழ்க்கை முறைகளை அறிதல் என்பவற்றின் மூலம் நோயை கண்டறிகிறது நமது மரபார்ந்த வைத்தியமுறைகள்.
அலோபதி மருத்துவத்தின் இந்த கண்டறிதல் முறைக்கு பெரும் உதவியாக இருப்பது ரத்த பரிசோதனை நிலையங்கள், ஸ்கேன் சென்டர்கள் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் லேப்கள்தான். இந்த பரிசோதனைக் கூடங்களில் நடக்கும் வணிக அரசியலைத்தான் இந்த நாவல் அம்பலப்படுத்துகிறது.

ஏலக்காய் விவசாயிகளுக்கு பூச்சி மருந்துகள் கடனுக்கு கொடுக்கும் ஒரு கஷ்ட ஜீவன தந்தையின் சிரமத்தை குறைக்க வேலைக்கு போகவேண்டும் என்பதற்காக பாரா மெடிக்கல் கோர்ஸ் சேர்ந்து படித்து … படிப்பை முடித்தவுடன் அடுத்த நாளே ஒரு பரிசோதனை கூடத்தில் வேலைக்கு சேரும் ஒரு இளைஞனின் முதல்நாள் அனுபவத்துடன் தொடங்கும் நாவல், அவன் இனிமேல் அலோபதி மருத்துவத்தின் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் முடிவெடுத்து மருத்துவமனையிலிருந்து வெளியே றுவதுடன் முடிவடைகிறது. இடைப்பட்ட இந்த நாட்களில் என்ன நடக்கிறது… அவனுக்கு கிடைத்த அனுபவங்கள் என்ன.. ஏன் அந்த முடிவுக்கு அவன் வருகிறான் என்பதை வாசகர்கள் படிப்பதற்கு சிரமமில்லாமல் அதேசமயம் நம்பத்தகுந்த தர்க்க வாதங்கள் நிகழ்த்தி நாவலை நகர்த்திச் செல்கிறார் நூலின் ஆசிரியர்.


நாவல் இரண்டு பகுதிகளாக சொல்லப்படுகிறது முதல் பகுதி வெப்பம். அடுத்த பகுதி குளிர்ச்சி. அலோபதி மருத்துவர்களின் ஈவு இரக்கமற்ற பணம் பிடுங்கும் செயல்பாடுகளுடன் அந்த இளைஞனுக்கு ஏற்படும் மோதலில் வெளிப்படும் வெப்பத்தில் நமக்கே வியர்த்துக் கொட்டுகிறது. பத்து பதினைந்து மருத்துவர்கள் ஒன்றாக சேர்ந்து முதலீடு போட்டு ஒரு பரிசோதனை கூடத்தை நடத்துவது, தங்களிடம் வரும் நோயாளிகளை அந்த பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்புவது, அதற்கான கமிஷன் தொகையை மாதம்தோறும் பெற்றுக்கொள்வது, அது போக மொத்த லாபத்தையும் பங்கிட்டுக் கொள்வது என்று பரிசோதனை கூடத்தில் பகல் கொள்ளை நாவல் அம்பலப்படுத்துகிறது. அந்த பரிசோதனை முடிவுகளில் மருத்துவர்கள் செய்யும் அராஜகங்களை பக்கத்துக்கு பக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். நோயாளிகளில் உயிரை பற்றியோ பக்க விளைவுகளைப் பற்றியோ கவலைப்படாமல் பணம் பண்ணுவதுலேயே குறியாக இருக்கும் அவர்களின் லாப வேட்டையை பல காட்சிகளில் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்த அனுபவங்களினால் வெறுத்துப் போகும் அந்த இளைஞன், அதே ஊரில் அன்பு என்கிற ஒரு மருத்துவரை சந்திக்கிறான். அவரும் எம்பிபிஎஸ் முடித்த ஒரு அலோபதி மருத்துவர்தான். ஆனால் தனது சொந்த அனுபவங்களின் மூலமாக சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டு சித்த மருத்துவத்திற்கு திரும்பி அதன்மூலம் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பவர். இவருடனான உரையாடல்கள்தான் நாவலின் இரண்டாம் பகுதி. இந்தப் பகுதி முழுவதும் இந்தியாவின் மரபார்ந்த வைத்திய முறையான சித்த மருத்துவம் குறித்து பேசுகிறது. சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அன்பு அந்த இளைஞனுக்கு கற்றுக்கொடுக்கிறார். இந்த கற்பித்தல் என்பது ஒரு பக்கமாக நிகழாமல் இரு பக்கமாக நிகழ்கிறது. இளைஞனுக்கு ஏற்படும் ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் அனுபவத்தின் மூலமாகவும் செயல்பாட்டின் மூலமாகவும் விளக்கம் தருகிறார் டாக்டர் அன்பு.

இந்தப் பகுதியில் சித்த மருத்துவ வரலாறு, அது தோன்றிய விதம், அது எவ்வாறு முக்கியத்துவமற்று தோற்கடிக்கப்பட்டது என்கிற வரலாறு, மெக்காலே கல்வி முறை சித்த மருத்துவத்தை போன்ற இந்திய மருத்துவ முறைகளை எப்படி ஒழித்துக்கட்டி அலோபதி மருத்துவத்தை உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்தது என்கின்ற அரசியல் போன்றவற்றை இருவரும் விவாதிக்கிறார்கள் . அதன் வழியாக வாசகர்களுக்கு தெளிவடை வதற்கான அனுபவத்தையும் நாவல் வழங்குகிறது.
இறப்புக்கும் மரணத்துக்குமான நுட்பமான வித்தியாசம் தொடர்பான சுவாரசியமான விவாதம் ஒன்றையும் இருவரும் நிகழ்த்துகிறார்கள். இறப்பு என்பது வேறு மரணம் என்பது வேறு என்பதை துல்லியமாக விளக்குகிறார்கள். பேய் என்ற ஒன்று இருக்கிறதா என்கின்ற ஒரு விவாதத்தை, தன்னிடம் சிகிச்சைக்காக வரும் மன அழுத்தம் கொண்ட ஒரு நோயாளியின் மூலமாக இளைஞனுக்கு விளக்குகிறார் 

டாக்டர் அன்பு. பேயைப் பற்றி பேசும்போது கடவுளைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதையும் இருவரும் பேசுகிறார்கள். அந்த இளைஞனின் நண்பன் பாஸ்கர் என்கின்ற தோழர் இவ்வழியாக இந்த விவாதம் நடக்கிறது. கடவுள் இருக்கிறாரா என்று பாஸ்கர் கேட்கும்போது, அதற்குதான் உங்கள் தோழர் காரல் மார்க்ஸ் பதில் சொல்லி விட்டாரே.. என்று சிம்பிளாக தொடங்கும் அன்பு அது பற்றி விரிவாக அந்த இளைஞர்களுடன் பேசுகிறார். இதுவும் நாவலின் ஒரு சுவாரசியமான விவாதக்களம்.

மனிதர்கள் ‘இந்த நாளில் பிரசவம் நடக்கும் ‘ என்று எப்படியாவது விஞ்ஞானத்தின் துணைகொண்டு தெரிந்துகொள்ள முடியும். ஆனால் ‘இந்த நாளில் இறந்து விடுவார் ‘ என்று மனிதர்களின் எக்ஸ்பயரி டேட்டை தெரிந்து கொள்ள முடியுமா என்று ஒரு விவாதம் நடக்கிறது. முடியும் என்கிறார் டாக்டர் அன்பு. சித்தர் பாடல்களின் துணைகொண்டு இறப்புக்கான அறிகுறிகளை கணித்து விட்டால் இறந்துபோகும் நாளையும் கணிக்க முடியும் என்று விளக்குகிறார். அதன்படியே.. தான் இறந்து போகும் நாளையும் கணிக்கிறார். கணித்தபடியே அதே நாளில் அவர் இறந்தும் போகிறார். அந்த இறப்பு நிகழும்போது அந்த இளைஞனும் கூடவே இருக்கிறான். கண்ணெதிரிலேயே ஒருவரின் இறப்பை அவன் சந்திக்கிறான்.

நோயாளிகளை பணமாக பார்க்கும் அலோபதி மருத்துவர்கள், அவர்களை மனிதர்களாக பார்க்கும் சித்த மருத்துவ முறை, இவை இரண்டுக்கும் இடையிலான மோதலையும் முரண்களையும் அதனூடாக தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகளையும் விவாதத்தின் வழியாக இந்த நாவலில் நூலாசிரியர் எழுதிப் பார்த்திருக்கிறார். எல்லாமே அலோபதி மருத்துவத்தில்தான் இருக்கிறது என்று சுருக்கி விடாதீர்கள். எல்லா மருத்துவ முறைகளும் அதனதன் அனுபவத்தில் அதனதன் நோக்கத்தில் அதனது செயல்பாட்டில் முக்கியமானவைகள்தான். மருத்துவத்தில் இந்த பன்மைத் தன்மையை அங்கீகரிக்கிற மனம் அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மருத்துவர்களுக்கும் வேண்டும் என்று இந்த நூல் வாசகனிடம் சொல்கிறது. அலோபதியில்தான் எல்லாம் இருக்கிறது என்று அதையே கட்டி அழாதீர்கள் என்று நூலாசிரியர் உங்களை அழைக்கிறார்.

உமர் பாரூக் ஒரு நாடறிந்த மருத்துவர். மருத்துவம் தொடர்பாக 29 நூல்களை எழுதியிருப்பவர். ஒவ்வொரு நூல்களும் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்து இருப்பவை. இந்நூல்களில் கட்டுரைகளாக ஆய்வுகளாக அவர் முன்வைத்த விஷயங்களை தொகுத்து ஒரு புனைவாக அதிலும் சுவாரசியமான புனைவாக வாசகரை ஈர்க்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். படித்து பார்த்து நிச்சயம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான புத்தகம் இது.

வாழ்த்துக்கள் உமர்!