சனி, 5 செப்டம்பர், 2020

ஒற்றை மருத்துவத் திணிப்பு எனும் சர்வாதிகாரம்

 

தமிழர்கள் நாகரீகமற்றவர்கள்; சங்க காலம் என்பது இனக்குழு வாழ்வியலின் தொடர்ச்சிதான் – என்று இந்திய வரலாறு தமிழ் மக்களை குறைத்து மதிப்பிட்டது. கீழடி முதலான அகழாய்வுகளின் மூலம் தமிழர்களின் நகர நாகரீகமும், வாழ்வியல் செழுமையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டன.

இதே நிலைதான் ஆங்கில மருத்துவம் இந்தியாவிற்கு வந்த போதும் இருந்தது. இந்திய நிலப்பரப்பில் வாழ்பவர்கள் உடல்நலம் பற்றியும், மருத்துவம் பற்றியும் அறியாத மூட நம்பிக்கையாளர்கள் என்பதுதான் ஐரோப்பியர்களின் நம் மருத்துவ அறிவு குறித்த கருத்து.

இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India) எனும் பெயர் தாங்கிய இந்திய ஆங்கில மருத்துவக் கவுன்சில் தன் இணையதளத்தில் இந்திய மருத்துவ வரலாற்றை இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது. . .

 சுதந்திரமடைவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியாவானது மதம் மற்றும் கலாச்சார மோதல்கள் நிகழும் ஒரு விளையாட்டு மைதானமாகவே இருந்தது. இந்த நீண்ட கால அரசியல் சச்சரவுகள் இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக, அப்போதிருந்த மரபு வழி மருத்துவங்கள் படிப்படியாக நலிவுற்று, சிதைந்து போனதோடு, அறிவற்ற சுயநலவாத போலி மருத்துவர்களால் (Uncultured Quacks) ஆக்கிரமிக்கப்பட்டு மாசுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் மேற்கத்திய அலோபதி மருத்துவம் இந்தியாவில் நுழைந்து, கல்வியறிவு பெற்ற இந்திய சமூகத்தினரின் நடுநிலையான மனதை தனது அறிவியல் கண்ணோட்டத்தால் ஈர்த்தது. அதுவரை இந்திய மருத்துவ வரலாற்றில் கோலோச்சிக் கொண்டிருந்த ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் பழங்கதைகளாயின. . . (www.tnmed-icalcouncil.org/Ethics - வாழத்தகுதியற்றவனா மனிதன்? - இல சண்முகசுந்தரம்) 

இந்த ஐரோப்பிய மனநிலையை இன்றைய கல்வியறிவு பெற்ற சமூகம் எந்த எதிர் கேள்வியுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்கிறது. உண்மையில் இந்திய மரபுவழி மருத்துவங்கள் அறிவற்ற போலிமருத்துவர்களால் பின்பற்றப்பட்டு வந்ததா? ஆங்கில மருத்துவத்தை வரவேற்றவர்கள் நடுநிலையான மனதால் அறிவியல் கண்ணோட்டத்தால்தான் ஏற்றுக் கொண்டார்களா?

இந்தியர்களின் மருத்துவ அறிவு

ஆங்கிலேயர்கள் குறிப்பிடும் அதே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அருகிலுள்ள உத்திரமேரூரில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை மற்றும் உள்ளாட்சி முறை பற்றிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சொல்கின்றன. பல்லவர், பாண்டியர், சோழர், விஜய நகர வம்சங்களின் கல்வெட்டுகளில் இருந்துதான் நாம் தமிழ் மக்களின் சிறந்த குடலோலைத் தேர்தல் பற்றி அறிந்து கொண்டோம். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை நடைபெற்ற குடவோலை முறைத் தேர்தல்களில் யாரெல்லாம் வாக்களிக்க முடியும்? என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை இக்கல்வெட்டுகள் கூறுகின்றன.

அதெல்லாம் சரிதான். .  இந்த கல்வெட்டுகளுக்கும் மருத்துவத்துக்கும் என்ன தொடர்பு?

இத்தேர்தலில் பங்கேற்க பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்த பட்ச வயது 30. அதிக பட்ச வயது 60. இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்குப் பின்பு, பதினான்காம் நூற்றாண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச வயது 35. அதிகபட்ச வயது 70.

இந்தக் கல்வெட்டுச் செய்தியைப் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது? 30 முதல் 60 வயதாக இருந்த தகுதியை, 35 இலிருந்து 70 வயதாக உயர்த்தியிருக்கிறார்கள். இது சாதாரண செய்திதானே?

நிச்சயம் இது சாதாரண செய்தியில்லை. ஏனெனில், ஆங்கில மருத்துவமும், இந்திய அறிவார்ந்த சமூகமும் சொல்கிறது . . .”இந்தியாவில் ஆங்கிலேயர்களும், அவர்கள் மருத்துவமும் வருவதற்கு முன்னால் இந்தியர்களின் சராசரி வயது 28 ஆக இருந்தது, பின்பு 34 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 48 ஆகவும், இப்போது 64 ஆகவும் இருக்கிறது”

நம்முடைய பாடநூல்கள் சொல்லும் மேற்கண்ட செய்தியையும், பதினான்காம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியையும் ஒப்புநோக்கிப் பார்த்தால் செய்தியின் உள்நோக்கம் நமக்குப் புரிந்து விடும். குறைந்த பட்ச வயதே 35 என்றால் அன்றைய சராசரி வயது என்னவாக இருக்கும்? அதிகபட்ச வயது 70 ஆக இருக்கும் போது எவ்வளவு பேர் 70 வயது வரை வாழ்ந்திருப்பார்கள். . ?

1800 களில் இருந்து 1940 கள் வரைக்கும் எடுக்கப்பட்ட ஆங்கிலேய புள்ளி விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, பல்லாயிரம் ஆண்டு வாழ்வியலை எடை போட முடியுமா. . ? அப்படியான அனுமானத்தில் எழுதப்பட்ட வயது குறித்த செய்திகளைத்தான் நாம் ’நடுநிலை மனதுடனான அறிவியல்’ என்று கூறுகிறோம்.

கி.பி.1793 இல் இந்தியாவில் மருத்துவத்தின் நிலை என்னவாக இருந்தது என்பதை ஆங்கில மருத்துவர் எமிரிடஸ் தன் “மனிதனும், மருத்துவமும்” நூலில் குறிப்பிடுகிறார். இந்நூல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீடாக 2001 இல் வெளியிடப்பட்டுள்ளது.

1792 இல் மைசூர் யுத்தத்தில் கவஸ்ஜீ எனும் ஆங்கிலேயர் படையின் உதவியாளன் ஒருவன் திப்புசுல்தான் படையால் சிறைப்படுத்தப்பட்டான். அவனுடைய ஒரு கையும், மூக்கும் வெட்டப்பட்டன. இதே  போன்ற பாதிப்புகளுடன் உள்ள இன்னும் இருவருடன் சேர்ந்து, சிகிச்சைக்காகச் செல்கிறான் கவஸ்ஜீ. ஒரு செங்கல்சூளையில் வேலைபார்த்த ஒருவர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, குணமாக உதவி செய்கிறார். அவர் ஒரு மரபு வழி மருத்துவர். இந்த அறுவை சிகிச்சையை பாம்பே பிரசிடென்சியைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களான தாமஸ் குரூசோ மற்றும் ஜேன்ஸ் பிண்ட்லே ஆகியோர் நேரடியாகப் பார்த்துள்ளனர். அவர்கள் இதனை படமாக வரைந்து, விரிவாக எழுதி, பின்னர் மெட்ராஸ் கெசட்டிலும் வெளியிட்டுள்ளனர்.

இந்த சரித்திர நிகழ்வினை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன் சுட்டிக்காட்டி, ஒரு தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“ஆயுர்வேதம் மற்றும் சித்தாவின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இலக்கியமாகக் கூறினால் உயிரின் அறிவியல் என்று ஆயுர்வேதத்தைக் கூறலாம். ஆனால், அதனை ஒரு மருத்துவ முறை என்று குறுகியதாகக் கூறுவதால், அதன் உண்மையான நோக்கமும், விரிந்த பயன்பாடுகளும் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆதரவில்லாமல் மிக நலிவுற்றன. மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக, இந்தியர்களின் மனங்களில் இருந்து அவை காணாமல் போகச் செய்யப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய மருத்துவ முறைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, மேலைநாட்டு நவீன மருத்துவ முறைகள் அதிகார மிக்க பிரிட்டிஷ் ஆட்சியால் திணிக்கப்பட்டன.”   (வாழத்தகுதியற்றவனா மனிதன்? - இல சண்முகசுந்தரம்)

கி.பி. 1700 களில் தமிழகத்தின் சித்த மருத்துவத்தின் நிலை என்ன என்பதை முனைவர் ஆனைவாரி ஆனந்தன் அவர்களின் ஆய்வேட்டின் குறிப்புகள் வழியாக அறியலாம்.

# மன்னர் நான்கான் பிரெட்ரிக் காலத்தில் 1706 இல் டேனிஷ் பாதிரிகள் மிஷன் தரங்கம்பாடியில் வந்து இறங்கியது. டென்மார்க், ஜெர்மன் டாக்டர்கள் ஷ்லேகல் மில்ஷ், பெஞ்சமின், க்னால், கோனிக், டேவிட் மார்டின், க்ளைன் போன்றோர் சித்த மருத்துவம் கற்க ஆரம்பித்தனர்.

# சித்த மருத்துவக் குறிப்புள்ள ஓலைச்சுவடிகளையும், மாதிரி மூலிகை தாவரங்களையும் ஜெர்மனிக்கு அனுப்பினர்.

# டேனிஷ் மன்னரின் ஆணைப்படி தரங்கம்பாடி, பொறையாறு மிஷன்களில் சித்த மருத்துவர்கள் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

# மிஷன் பள்ளிகளில் தினமும் மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சிகளை நடத்திட ஆணையிடப்பட்டிருந்தது.

# சமஸ்கிருதத்தில் இருந்த மருத்துவக் குறிப்புக்கள் 1786 இல் ஆங்கிலத்திலும், 1802 இல் பிரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டு மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன,

மருத்துவக் கல்வியின் சதி வரலாறு

ஜே.எஃப். பிலியோசாட் எனும் அறிஞர் “இந்திய மருத்துவமானது கிறித்து பிறப்பதற்கு 7 அல்லது 8 நூற்றாண்டுகளுக்கும் முன்பே நன்கு செழித்திருந்தது” என்று தன்னுடைய “The Classical Doctrines of Indian Medicine” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழகத்தின் மருத்துவ அறிவு குறித்து எண்ணற்ற தமிழிலக்கியங்களின் மூலம் அகச்சான்றுகளாக அறிய முடியும்.

இந்திய அரசின் சுற்றுச் சூழல் துறையினர் நிகழ்த்திய கணக்கெடுப்புப் படி மலைவாழ் பழங்குடி இனத்தவர்கள் மட்டும் சுமார் 7500 இற்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏறத்தாழ 70,000 குடும்பங்கள் இம்மருத்துவத்தைச் செய்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவம் பட்டி தொட்டியெங்கும் பரப்பப்பட்டுள்ள இக்காலத்தில் கூட, மூன்றில் இரண்டு பங்கு எலும்பு முறிவு சிகிச்சைகள் மரபுவழி மருத்துவர்களால் செய்யப்படுவதாகப் பதிவு செய்துள்ளார் டாக்டர் ஏ.வி..பாலசுப்பிரமணியன். (Folio of Indian Health Tradition – 8.10.2000).

தென்னிந்தியாவில் இருளர்கள், நாவிதர்கள், கொல்லார் இன மக்கள், இலம்பாடியார் போன்ற பல இன மக்களும் ஆதி மருத்துவர்களாகப் பணிபுரிந்ததை பல வரலாற்று நூல்களும், ஆய்வு நூல்களும் பதிவு செய்துள்ளன. ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம், யோக சிகிச்சை, இயற்கை மருத்துவம், திபெத்திய மருத்துவம், போன்ற முழுமையான மருத்துவங்களும், எலும்பு முறிவு சிகிச்சை, மஞ்சட்காமாலை சிகிச்சை, நஞ்சு முறிவு சிகிச்சை,, பிரசவம் மற்றும் பண்டுவம் பார்த்தல், தோல் சிகிச்சைகள் என பல வகைகளில் நம் நாடு முழுவதும் மரபுவழி மருத்துவங்கள் மக்கள் மருத்துவமாக செழுமையுற்று இருந்தது. (சித்த மருத்துவ வரலாறு – முனைவர் ஆனவாரி ஆனந்தன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வேடு)

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் 1822 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி இந்திய மருத்துவங்களையும், ஆங்கில மருத்துவத்தையும் இணைத்து கற்றுத்தருவதற்கான ”நேட்டிவ் மெடிகல் இன்ஸ்டியூசன்” என்ற மருத்துவக் கல்லூரி கல்கத்தாவில் துவங்கப்பட்டது. அதே காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் ஆயுர்வேதமும், யுனானி மருத்துவமும், சித்த மருத்துவமும் பயிற்று விக்கப்பட்டு வந்தது. 1833 இல் வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் மருத்துவக் கல்வி குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை உருவாக்குகிறார். அப்போது உருவாக்கப்பட்டதுதான் கல்வி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மெக்காலே குழுவும்.

1834 ஆம் ஆண்டு டாக்டர் ஜான் கிராண்ட் தலைமையிலான மருத்துவக் கல்வி ஆய்வுக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கிறது. மெக்காலேவின் கல்வித்திட்டம் உருவான 1835 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் மரபுவழி மருத்துவங்கள் குறித்த பிரிட்டிஷ் அரசின் பார்வையும், கொள்கையும் மாறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அறிக்கைக்குப் பின்பாக நேட்டிவ் மெடிகல் இன்ஸ்டியூசன் கலைக்கப்படுகிறது. கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த ஆயுர்வேத மருத்துவப் படிப்புக்கும் தடை விதிக்கப்படுகிறது. தொடர்ந்து,  1835 ஆம் ஆண்டில் ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன.

ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் மூலம் போதிய மருத்துவர்களை இங்கு உருவாக்க முடியவில்லை. 1877 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் முறையாக மருத்துவம் பயின்றிருந்த மருத்துவர்கள் எண்ணிக்கை – 8000 பேர். அதில் ஆங்கில மருத்துவம் பயின்றவர்கள் 450 பேர் மட்டுமே. மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு சுமார் 42 ஆண்டுகளில் ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் எண்ணிக்கை 450 மட்டுமே.  இது அன்றைய ஆங்கில மருத்துவத்தின் மீதான மக்களின் எதிர்ப்பைக் காட்டுகிறது என்று கூறி, பின்வருமாறு தொடர்கிறார் கட்டுரையாளர் இல. சண்முகசுந்தரம். (வாழத்தகுதியற்றவனா மனிதன்?)

”இலவச மருத்துவமனைகளைக் கட்டி, மருந்து – மாத்திரைகளை இலவசமாய் அளித்த பின்பும் தமது மருத்துவ முறையை ஏன் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? அதற்கான காரணம் என்னவென்று பிரிட்டிஷ் அரசு ஆராய்கிறது. குழந்தை பிறப்பு முதல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் மக்கள் பின்பற்றும் மரபு வழி மருத்துவங்களில் இருப்பதைப் பார்க்கிறது அரசு. ம்ரபு மருத்துவத்தின் மகத்துவம் இந்திய மண்ணில் வேர் கொண்டிருக்கும் வரை ஆங்கில மருத்துவத்டிற்கு அந்தஸ்து கிடைக்காது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்கிறது.”

          இந்திய வரலாற்றாளர் கே.என்.பணிக்கர், பேராசிரியர் ராய் மெக்லியாய்டு முன்வைக்கும் கீழ்க்கண்ட கருத்தினை வழிமொழிகிறார்.

    “மேற்கத்திய மருத்துவம் என்பது ஒரு கலாச்சார ஆயுதமாகும். அது தன்னளவில் ஒரு கலாச்சார நிறுவனமாகவும். மேற்கத்தியத்தை விரிவு செய்யும் நிறுவனமாகவும் இரட்டைச் செயலை செய்துள்ளது.”

சிதைக்கப்படும் மரபுவழிக் கல்வி

 1921 – 22 ஆம் ஆண்டுகளில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டோர் எண்ணிக்கை – 37,626 பேர். அதே ஆண்டில் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டோர் எண்ணிககை – 1,22,238. இது வரலாற்று அறிஞரும்  பேராசிரியருமான கே.என்.பணிக்கர் அவர்கள் குறிப்பிடும் புள்ளி விவரம்.

”என்பது சதவிகித மக்களுக்கு சேவை அளித்துக் கொண்டிருக்கும் மரபுவழி மருத்துவர்களை அங்கீகரிக்காமல், இருப்பது ஆங்கில மருத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட தீண்டாமை – என்று விமர்சித்துள்ளார் கட்டுரையாளர் ரோகர் ஜெப்ரி.

         1920 களில் தமிழகத்தில் சித்த மருத்துவத்தை மீட்டெடுக்கும் குரல்கள் வலுப்பெறுகின்றன. ஒருவழியாக மெட்ராஸ் மாகாண அரசு 1924 ஆம் ஆண்டில் சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவ முறைகளைக் கற்றுத்தருவதற்கான மருத்துவப் பள்ளியை சென்னையில் துவங்குகிறது. சுதந்திர இந்தியாவில் 1949 ஆம் ஆண்டு பாரம்பரிய மருத்துவக் கல்லூரி என இந்த மருத்துவப் பள்ளி பெயர் மாற்றம் செய்யப்பட்ட்து. அதற்குப் பிறகு,சென்னையில் இருந்து சித்த மருத்துவக் கல்லூரி என்ற பெயரோடு திருநெல்வேலிக்கு  இடம் மாற்றம் செய்யப்பட்டது. (சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை என்று காரணம் சொல்லி இதனை மூட முயற்சித்தது தனிக்கதை).

  சுதந்திர இந்தியாவில் மரபுவழி மருத்துவங்களுக்கென தனிக் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்திலும் உருவாயின. எப்படியோ மரபு வழி மருத்துவங்களுக்கான அங்கீகாரத்தையும், கல்லூரிகளையும் அரசு வழங்கி விட்டது. . இது மரபு வழி மருத்துவத்திற்காக போராடியவர்களின் வெற்றி என்று நீங்கள் கருதுவீர்களானால், மருத்துவக் கல்வி குறித்து நாம் இன்னும் பேச வேண்டியிருக்கிறது.

       அப்படி உருவாக்கப்பட்ட மரபுவழி மருத்துவக் கல்லூரிகளில் என்ன கற்றுத்தந்தார்கள் என்பதும், யார் கற்றுத்தந்தார்கள் என்பதும் மிகவும் முக்கியமானவை.

      மருத்துவக் கல்வியின் தவிர்க்க முடியாத பகுதிகளாக இருப்பவை மூன்று. உடல் குறித்துப் படிக்கும் உடலியல், குறிப்பிட்ட மருத்துவத்தின் நோயறிதல் மற்றும் சிகிச்சை. இம்மூன்றையும் கோட்பாட்டு அடிப்படையிலும், செய்முறையிலும் கற்றுத் தேர்வதுதான் மருத்துவக் கல்வி. உதாரணமாக, சித்த மருத்துவம் கற்க வேண்டுமானால் உடலியலும், சித்த மருத்துவத்தின் நோயறிதல் முறைகளும், சித்த மருத்துவத்தின் சிகிச்சை முறைகளும் படிக்க வேண்டும். நோயறிதலில் சித்த மருத்துவத்தின் தனித்தன்மையான முறைகளான கேட்டறிதல், தொட்டறிதல், பார்த்தறிதல் ஆகியவற்றையும், சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் மூலிகை சிகிச்சை, உணவு சிகிச்சை, ரசாயன சிகிச்சை போன்றவற்றையும், அவற்றின் வித விதமான மருந்து செய் முறைகளையும் கற்க வேண்டும்.     

       ஆனால், நடைமுறையில் சித்த மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டம் வேறு மாதிரியானது. இதைப் புரிந்து கொள்ள நோயறிதல் முறை பற்றி சற்றே ஆழமாகச் செல்லலாம்.

           வயிற்று வலி என்று சொன்னால் ஆங்கில மருத்துவத்தில் வலி குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை அளிப்பது போல, சித்த மருத்துவத்தில் மருத்துவம் பார்க்க முடியாது. வயிற்று வலி வரும் எல்லாருக்கும் ஒரே மருந்தைக் கொடுத்து ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், சித்தாவில் உடலின் முக்கூறுகளின் நிலை அறிந்தே மருந்து கொடுக்க முடியும். மரபுவழி மருத்துவங்களின் கோட்பாடு அடிப்படையில் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. அவற்றின் தன்மை  சீராக இருக்கும் வரை உடலில் நோய்கள் வராது. நம் வாழ்க்கை முறையால் பஞ்சபூதங்கள் சீர்குலையும் போது அது தொந்தரவுகளாக வெளிப்படுகிறது. இந்த் சீர்குலைவு உடலில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சித்த மருத்துவத்தின் நாடிப்பரிசோதனை மூலம் வாதம், பித்தம், கபம் என்ற முக்கூறுகளின் நிலையை அறிகிறார்கள். இதற்குப் பின்புதான் சிகிச்சை.

            இப்போது வயிற்று வலிக்கு வருவோம். முக்கூறுகளின் அடிப்படையில் , அதன் கலவைக்குத் தகுந்தவாறுதான் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க முடியும். வாதம் கூடியதால், பித்தம் கூடியதால், கபம் கூடியதால், வாதமும் பித்தமும் கூடுவதால், கபமும் வாதமும் கூடுவதால், பித்தமும் கபமும் கூடுவதால். . .இப்படி பகுத்துப் பகுத்து ஒரு காரணியை வந்தடைவார்கள். அந்தக் காரணியைச் சீர் செய்யும் மருந்தினைத் தயார் செய்து கொடுப்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை.யும், தனிச்சிறப்பும். அப்படி முக்கூறுகளின் வழியாக அறிந்த காரணியை சீர் படுத்துவதுதான் சிகிச்சையே தவிர, நோயாளி சொல்லும் தொந்தரவுக்கு நேரடியாக மருந்தளிப்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு அல்ல.

          இதே போல்தான் ஒவ்வொரு மரபு வழி மருத்துவ முறைக்கும் தனித்தனியான நோயறிதல் முறைகள் உள்ளன, இந்த நோயறிதல் முறைகளின் வழியாகத்தான் அம்மருத்துவத்தின் சிகிச்சையின் பலனும் அமையும்.

    இதே போல ஆங்கில மருத்துவத்தின் நோயறிதல் முறைகளாக ஸ்டெதாஸ்கோப்பில் துவங்கி, பி.பி.அபேரடஸ், இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், லேபரட்டரி பரிசோதனைகள் . . இப்படித் தொடர்கிறது. இதன் அடிப்படையில் ஆங்கிலமருத்துவம் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

          இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டு விஷயத்திற்கு வருவோம். இந்தியாவின் மரபு வழிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் யாரால் உருவாக்கப்பட்டன தெரியுமா. . ?  பெரும்பாலான ஆங்கில மருத்துவர்களால்.

            எனவே, சித்த மருத்துவத்தின் நோயறிதல் முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில மருத்துவத்தின் நோயறிதல் முறைகள் பாடத்திட்டத்தில் பெரும்பங்கு வகிக்குமாறு உருவாக்கப்பட்டன. சித்த மருத்துவக் கல்லூரியில் பல ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற பல மருத்துவர்களுக்கு ஆங்கில மருத்துவ நோயறிதல் முறைகளில் இருக்கும் அறிவு, சொந்த மருத்துவத்தின் நோயறிதல் முறைகளில் இல்லை. கல்லூரிகள் அப்படித்தான் பயிற்றுவிக்கின்றன. இன்னொரு மருத்துவத்தின் நோயறிதல் முறையைக் கொண்டு, சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியுமா. . ? அப்படி சிகிச்சையளித்தால் பலன் எப்படி இருக்கும்? உதாரணமாக, சித்த மருத்துவத்தின் நாடிப்பரிசோதனையை வைத்து ஆங்கில மருத்துவத்தால் சிகிச்சை அளிக்க முடியுமா?

            இப்படியான சிக்கல்கள் ஆழமாக நீடிப்பதால் மரபு வழி மருத்துவ அறிவு, திட்டமிட்ட கல்வியின் மூலமாகவே மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் யோகாசன ஆராய்ச்சிக் கவுன்சிலின் மேனாள் துணைத்தலைவர் ஆசனா ஆண்டியப்பன் அவர்களின் வரிகளைக் கவனியுங்கள். . . “இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டப்படிப்பு மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்படுகின்றன. அதில் தியரி மட்டும் 5300 மணி நேரம். உண்மையில் அங்கு சொல்லித் தரப்படுவது 5300 மணி நேரத்தில் 3,800 மணி நேரம் ஆங்கில மருத்துவம்தான். எஞ்சியுள்ள 1500 மணி நேரம்தான் இயற்கை மருத்துவம்”

            இதுதான் மரபு வழி மருத்துக் கல்வியின் பாடத்திட்டத்தின் நிலை. இதில் பயின்று வெளியேறும் மரபு வழி மருத்துவர்கள் – பெரும்பாலும் ஆங்கில மருத்துவர்களாகவே வெளிவருகிறார்கள். மிகச் சிலர் மட்டும்தான் சுய தேடலின் வழியாக மரபு வழி மருத்துத்தில் ஆழமான அறிவுடையவர்களாக இருக்கிறார்கள்.

            விஷயம் இதோடு முடிந்து விடவில்லை. . மரபு வழி மருத்துவப் படிப்பு நிறைவு பெறும் போது நேரடி செய்முறைப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். அப்போது மருத்துவக் கல்லூரி அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது. தான் பயின்ற மரபு வழி மருத்துவத்தோடு, ஆங்கில மருத்துவத்திலும் சிறப்பு பயிற்சி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு. இப்படி பட்டம் பெற்று வரும் மரபு வழி மருத்துவர்கள் படிப்படியாக ஆங்கில மருத்துவர்களாக மாறுகிறார்கள்.

            இதே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சிதான் சமீபத்தில் மத்திய அரசு முன்மொழிந்த புதிய மருத்துவக் கொள்கை. இதன் படி, மரபுவழி மருத்துவங்கள் படித்த யார் வேண்டுமானாலும் ஆறுமாத பயிற்சியை முடித்து விட்டு, ஆங்கில மருத்துவராகப் பணியாற்றலாம். இதனை ஆழ்ந்து கவனித்தால் இன்னொரு உண்மை புரியும். ஐந்தரை ஆண்டுகால மரபு வழி மருத்துவப் பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான பாடங்கள் ஆங்கில மருத்துவம்தான். வெறும் ஆறே மாதங்களில் மீதமுள்ள ஆங்கில மருத்துவத்தைப் படித்து விட முடியும் என்பதுதான் அது.

            சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் என்று எல்லா மருத்துவங்களின் கல்வி நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது. கேரளாவில் ஆயுர்வேதமும், மேற்கு வங்கத்தில் ஹோமியோபதியும் ஒப்பீட்டளவில் ஆங்கில மருத்துவக் கல்வி முறையின் தாக்கத்திலிருந்து  தங்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளன.

ஒற்றை மருத்துவத் திணிப்பு

ஆங்கில மருத்துவம் என்ற ஒற்றை மருத்துவத்தை அதிகார அமைப்புகள் எவ்வாறு மக்கள் மீது திணிக்கின்றன என்பதற்கு சில உதாரணங்கள் போதுமானவை.

# சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவங்களை ஒழுங்கு படுத்துவதற்கான கவுன்சில்களின் பெயர்கள் அந்தந்த மருத்துவத்தின் பெயர்களிலேயே அமைந்துள்ளன. ஆனால், ஆங்கில மருத்துவத்தின் கவுன்சிலின் பெயர் – இந்திய மருந்துவக் கவுன்சில். இது இந்தியாவிலுள்ள எல்லா மருத்துவங்களையும் கட்டுப்படுத்தும் அமைப்பு போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இதனை உண்மையென்று நம்புகிறவர்களும் அதிகம். ஆங்கில மருத்துவம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டு கவுன்சில் அமைக்கப்பட்ட வருடம் – 1860. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா ஆகியவை அங்கீகரிக்கப்பட்டு கவுன்சில் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1964.

# ஆங்கில மருத்துவம் உட்பட எல்லா மருத்துவங்களுக்கும் பிரசவம் பார்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், பிரசவம் பார்க்கும் பார்க்கும் உரிமை ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே இருப்பதாக அரசு அறிவித்திருக்கிரது. ஆங்கில மருத்துவத்தின் மூன்றாண்டு செவிலியர் பயிற்சி முடித்த ஒருவர் பிரசவம் பார்க்கலாம். ஆனால், மரபுவழி மருத்துவங்களில் முதுநிலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் கூட பிரசவம் பார்க்க முடியாது.

# இந்தியக் குடிமக்களில் யார் வேண்டுமானாலும் தனக்குப் பிடித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் உரிமையையும், வேண்டாம் என கருதினால் மறுக்கும் உரிமையையும் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. ஆனால் நடைமுறையில் ஆங்கில மருத்துவத்தை மறுக்கக் கூடாது என்று சுற்றறிக்கை தருகிறது அரசு.

# கட்டாயத் தடுப்பூசிச் சட்டம் இருக்கும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் தடுப்பூசி போட விரும்பாத குடிமகனுக்கு சிறப்பு விலக்கு அளிக்கிறது அமெரிக்கச் சட்டம். இந்தியாவில் கட்டாயத் தடுப்பூசிச் சட்டம் இல்லை.  ஆனால், தடுப்பூசி போடாமல் யாரும் இருக்க முடியாது என்ற விதத்தில் வீடுகளிலும், பள்ளிகளிலும் அத்காரிகளால் தடுப்பூசி போடும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் மக்கள்.

. . . இப்படி மரபு வழி மருத்துவங்களின் குரல் வளையை நெறித்துக் கொண்டு, சப்தம் எழுப்பும் ஆங்கில மருத்துவத்தின் குரல் தனியாக ஒலிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆயிரம் பூக்கள் இயற்கையாக மலர்வதைத் தடுத்து, ரசாயன மணத்தோடு கட்டாயமாகப் பரப்பபடும் செயற்கைப் பூக்கள் நிலையானவை அல்ல. உணவு, அரசியல், பொருளாதாரம், சமயம்  . .இவற்றில் மட்டுமல்ல .. மருத்துவத்திலும் ஒற்றைத் திணிப்பு ஆபத்தானது, 

#

உதவிய நூல்கள்:

  1. சித்த மருத்துவ வரலாறு – முனைவர் ஆனைவாரி ஆனந்தன் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  2. வாழத் தகுதியற்றவனா மனிதன்? – இல. சண்முக சுந்தரம் – எதிர் வெளியீடு
  3. தென்னிந்திய மருத்துவ வரலாறு – டாக்டர் இரா.நிரஞ்சனாதேவி – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  4. சித்த மருத்துவத்தின் சிறப்பு, டாக்டர்.வீ.சுப்பிரமணியன், மரகதம் பதிப்பகம்
  5. உடல் தத்துவம் – அரசு சித்த மருத்துவக் கல்லூரி
  6. தடுப்பூசி – நடுக்கமூட்டும் உண்மைகள் – டாக்டர்.புகழேந்தி, தீபா பதிப்பகம்
  7. மருத்துவத்துக்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்டே, தமிழினி
நன்றி: தமுஎகச கருத்துரிமை போற்றுதும் சிறப்பு மலர், 2020