செவ்வாய், 15 செப்டம்பர், 2020

சமூக நோய்க்கு மருந்தாய் ஒரு புதினம்!

கவிஞர்.வெண்புறா______________


மருத்துவத்தை இலக்கியத்திற்குள் கொண்டுவர முடியுமா? அல்லது மருத்துவம் சார்ந்த அனுபவங்களை நாவலாக்க முடியுமா? என்ற கேள்விக்கு, முடியும் என்று நிறுவுகிறது அ.உமர் பாரூக் எழுதிய 'ஆதுர சாலை'!

குறிப்பாக, மருத்துவ ஆய்வுக்கூடத்தை (லேப்) மையமாகக் கொண்டு ஆங்கில (அலோபதி) மருத்துவத்தின் அரசியலையும், பாரம்பரிய (சித்த) மருத்துவத்தின் தேய்மானத்தையும் 'வெப்பம்', 'குளிர்ச்சி' என்ற இரண்டு பகுதிகளாக அலசுகிறது இந்நாவல்.

மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் படித்த ஒரு இளைஞனின் பார்வையில் இருந்து விரியும் இந்த நாவல், சேவையாக இருக்கவேண்டிய மருத்துவம் சந்தையாக மாறி மனிதநேயமும் பரிவுமற்ற மனிதர்களை எவ்வாறு உற்பத்தி செய்கிறது என்பதை மிக நுட்பமாக சித்தரிக்கிறது. சில சம்பவங்கள் காட்சி படிமமாக நம்மை உணர வைத்து கலங்கடிக்கவும் பதைபதைக்கவும் வைப்பதோடு, கற்பனைக்கு அப்பாற்பட்டு உண்மைக்கு நெருக்கமான சம்பவங்களை தயவுதாட்சண்யமின்றி தோலுரிக்கிறது.

உதாரணத்திற்கு சொல்வதென்றால், கருத்தரிப்புக்காக செய்யப்படும் நாகரிகமற்ற 'வைத்தியமுறை'யும்...
அலட்சியத்தால் ஒவ்வாத ரத்தத்தை நோயாளிக்கு ஏற்றி செய்யப்படும் 'மருத்துவக் கொலையும்'... பொறுப்பற்ற முறையில் கர்ப்பப்பையை அகற்றும் 'அறுவை சிகிச்சை'யில் நேர்ந்த துயரமும் அதிரச்செய்யும் எதார்த்தங்களாகும்.

அதனால்தான், ஆரம்பத்திலேயே
//இந்நாவலில் வரும் பகுதிகளோ, கதாபாத்திரங்களோ யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், இவை கற்பனைகளால் உருவாக்கப்பட்டவை அல்ல. சமூகத்தால் விளைவிக்கப்பட்டவை.// என்ற 'டைட்டில்' கார்டோடு நாவல் துவங்குகிறது...
*
படிப்பை முடித்துவிட்டு நிறைய கனவுகளுடன், பல மருத்துவமனைகளோடு ஒருங்கிணைக்கப்பட்ட (யுனைடெட்) மருத்துவ ஆய்வுக்கூடத்தில் வேலைக்குச் சேரும் அந்த இளைஞன், பெரும்பாலும் 'தியரியாகவே' படித்த ஆய்வுக்கூட பரிசோதனைகளை இனி 'பிராக்டிக்கலாக' செய்யலாம் குறிப்பாக, மைக்ரோஸ்கோப்பின் ஈர்ப்புக்காகவே தேர்வு செய்த இந்த படிப்பின் பலனை முழுமையாக இனி அனுபவிக்கலாம் என்று நினைத்து வேலையில் சேர்கிறான். ஆனால் அதற்கு நேர்மாறாக நகரில் உள்ள பல மருத்துவமனைகளில் (கிளினிக்) இருந்து தங்கள் லேப்பிற்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் டாக்டர்களுக்கு 'கமிசன் கவர் கொடுக்கும் வேலையை' அவனுடைய சீஃப் கொடுக்கும்போது அப்படியே உடைந்துபோய் விடுகிறான்...

ஒரு லட்சிய வேட்கையுடன் தேர்வு செய்த படிப்போடும் கிடைத்த வேலையோடும் முழுமையாக ஒன்றமுடியாத அளவுக்கு 'பணம்' மட்டுமே பிரதானமாகி லஞ்சமும், லாபவெறியும், அலட்சியப் போக்கும் மலிந்துகிடப்பதை சகிக்கமுடியாமல் சோர்ந்து போகும்போதுதான் டாக்டர் அன்பு அவனுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறார். மருத்துவத்துறையில் புரையோடிக்கிடக்கும் அத்தனை சீரழிவிற்கும் நேர் எதிரானவர் டாக்டர் அன்பு.

மருத்துவத்தின் அடிப்படை 'நோயறிதலே' என்றும் ஆனால், இன்றைய மருந்துகளில் இருந்து மருத்துவம் வரை அனைத்தும் லாபம் கொழிக்கும் வணிகமயமாகிப் போனதால், அது இரண்டாம்பட்சமாகி மருந்துகளைக் கொட்டும் குப்பைத்தொட்டிகளாக மனித உடலை கட்டமைக்கும் வேலையைத்தான் அலோபதி மருத்துவம் செய்துகொண்டிருக்கிறது என்ற சிந்தனையும், மாற்று செயல்பாடும் கொண்டவராக மட்டுமின்றி கனிவும் பரிவும் கொண்ட மருத்துவராக இருப்பதால், இயல்பாகவே டாக்டர் அன்புவின் சிந்தனையிலும், நேசத்திலும், வெளிப்படைத்தன்மையிலும் கரைந்து வேறு ஒரு புதிய உலகத்திற்குள் அவன் பிரவேசிக்கத் துவங்குகிறான்.

யுனைடெட் லேப், கல்லூரி, அன்பு கிளினிக், மருத்துவமனை லேப் ஆகிய களங்களில் அந்த இளைஞன் பயணிக்கும் இந்நாவலில் பல்வேறு மனிதர்களுடன் நாமும் கூடவே பயணிப்பது போன்ற நெருக்கத்தை உணரமுடியும். குறிப்பாக யுனைடட் லேப்பில் அவனைச் சுற்றிலும் அன்பால் நிறைந்த அக்காக்கள் அரசி, ராணி, கலா, ரோகிணி (வயதில் குறைந்த அக்கா!) மற்றும் மாரியம்மாள் பாட்டி, சீஃப் மில்ட்ரி, கதிர், பள்ளி மாணவன் பார்த்தி, கல்லூரி மாணவர்கள் பிரதீப், பாஸ்கர், செல்லம், மாரி, மூர்த்தி, அகமது, கல்லூரி பிரின்ஸ்பால் கோபாலகிருஷ்ணன், மருத்துவமனை லேப் ஊழியர்கள் ராஜன், ராமர் மற்றும் நண்பர் ரவி இவர்களெல்லாம் உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளியை நிரப்பும் கதாபாத்திரங்கள்.

டாக்டர் அன்பு... இதுதான் இந்நாவலின் ரத்தமும் சதையுமான உயிர்த்துடிப்பான கதாபாத்திரம். இளைஞனுடன் டாக்டர் அன்பு உரையாடும் - செயல்படும் பகுதிகள் மிகவும் முக்கியமானவை அனைவராலும் அறியப்பட வேண்டியவை.

இந்நாவல், சித்த மருத்துவமா? அலோபதி மருத்துவமா? என்று இரண்டையும் எதிரெதிர் நிலையில் நிறுத்துவதாக நான் புரிந்துகொள்ளவில்லை... மாறாக ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் அறம் சார்ந்த பாரம்பரிய மருத்துவமுறைகளை அழிக்கும் தன்மையும், எந்த அறமுமின்றி பணத்திற்காக எதையும் செய்யத்துணியும் வணிகத் தன்மையும

் அலோபதி மருத்துவம் கொண்டிருக்கிறது என்பதாகத்தான் இதன் உள்ளடக்கம் இருக்கிறது.

இந்நாவல் குறித்து விவாதிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் இடம் இருந்தாலும், இது பரவலாக பேசப்படுவதும் எல்லோராலும் வாசிக்கப்படுவதும் மிகவும் அவசியமானது. ஏனெனில்... அறமும் மனிதநேயமும் பின்னிப்பிணைந்த அன்றைய பாரம்பரிய மருத்துவத்தின் அழிவிலிருந்து இன்றைய ஈவிரக்கமற்ற -  வணிகமயமாக்கப்பட்ட மருத்துவத்தின் பெருங்கேடுகள் வரை அழுத்தமாக தடம் பதித்து செல்கிறது 'ஆதுர சாலை'.
*
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்.