புதன், 23 ஜூன், 2021

தி.ஜா.வின் அக்பர் சாஸ்திரி : முழுமையும், ஒருமையும் உயிருமுள்ள கதைகள்

 "அக்பர் சாஸ்திரி" தொகுப்பின் பதினோரு சிறுகதைகளை முன்வைத்து. . .

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவினை முன்னிட்டு பேரா.கல்யாணராமன் அவர்கள் தொகுத்த “ஜானகிராமம்” (தி.ஜா படைப்புகளைப் பற்றிய 102 கட்டுரைகள் -  காலச்சுவடு வெளியீடு) நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை

-          .உமர் பாரூக் 

                    1963 ஆம் ஆண்டில் மீனாட்சி புத்தகநிலைய வெளியீடாக வெளிவந்தஅக்பர் சாஸ்திரிமிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு. இந்நூலின் முதல் பதிப்பில் தி,ஜா. சொல்கிறார்இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை. நான் சிறுகதைகள் என்று கூடச் சொல்லவில்லை. அசல் சிறுகதைகள் எழுதுகிறவர்கள் உலக இலக்கியத்துக்குள் பத்துப் பேர் இருந்தால் அதிகம். எனவே, சாட்சிகள் அல்லது வேறு ஏதாவது சொல்லி இவற்றை அழைக்கலாம்

               அப்படியானால், சிறுகதை என்பது என்ன? அதன் இலக்கணம் என்ன? என்று  இன்னொரு கட்டுரையில் விவரிக்கிறார்.

               எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும், ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர் நாடி.

               தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்தி பெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும்.”

               மகரம் தொகுத்தஎழுதுவது எப்படி?” (பழனியப்பா பிரதர்ஸ், 1969) நூலில் தி,ஜானகிராமன் சிறுகதை பற்றி எழுதிய கட்டுரையின் வரிகள் இவை. அவரே எழுதிய இலக்கணத்திற்கு முன்மாதிரியாக விளங்குபவை தி,.ஜா.வின்அக்பர் சாஸ்திரியின் பதினோரு கதைகளும்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் கால வரிசை

1.       துணைமணிக்கொடி – 1950

2.       காட்டு வாசம்கலைமகள் – 1955

3.       அடுத்தகலை மகள் – 1955

4.       அர்த்தம்ஆனந்த விகடன் - 1955

5.       குளிர்காதல் - 1956

6.       குழந்தைக்கு ஜூரம்கலை மகள் – 1957

7.       மரமும் செடியும்கலைமகள் – 1958

8.       அக்பர் சாஸ்திரிகல்கி – 1959

9.       கள்ளிசுதேசமித்திரன் – 1960

10.    ஐயரும், ஐயாறும்கல்கி – 1963

11.    திண்ணை வீராசென்னை வானொலி நிலையம்

அக்பர் சாஸ்திரி

               தி.ஜா.வின் அனைத்து கதைகளையும் போலவே அக்பர் சாஸ்திரியின் எழுத்து நடையும் ஆற்றொழுக்கானது என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. புதிய வாசகரை உள்ளிழுத்துக் கொள்ளும் எளிய வார்த்தைப் பிரயோகமும், ஆழமான வாசிப்பனுபவமுள்ள தேர்ந்த இலக்கியவாதியை பின்தொடர வைக்கும் எழுத்துப் புலமையும் ஒருங்கே கொண்டவை தி.ஜா.வின் புனைவெழுத்துகள்.

               என் கல்லூரி காலத்தில் அக்பர் சாஸ்திரியை வாசித்த போது வாசிப்பனுபவமும், புரிதலும் ஒரு விதத்தில் இருந்தது. அதே கதையை இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது வாசிக்கும் போது இன்னொரு கோணத்தில் புரிகிறது. இரண்டையுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

               சென்னையிலிருந்து தஞ்சையை நோக்கிச் செல்லும் ரயில் பயணிகள் ஆறு பேரின் கதைதான் அக்பர் சாஸ்திரி. முழுக்க முழுக்க மருத்துவம் சார்ந்த உரையாடலை மையமாகக் கொண்டது. கதை முழுவதும் உரையாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப் படுவதால் முதல் வரியை வாசிக்கும் எவரும் கதை ஓட்டத்திலிருந்து விலகி விடாத படிக்கு உள்ளிழுத்துக் கொள்கிறது. வாசகர் நிற்பதற்கான ஒரு தளத்தை சில நிமிட வாசிப்பு வாசகனுக்குத் தரும் போதுதான் அவன் தொடர்ந்து வாசிப்பதை உறுதிப் படுத்த முடியும். தி.ஜா.வின் கதைகள் எந்த சுத்தி வளைப்புமின்றி முதல் வரியிலேயே நேரடியாக வாசகனை கதைக்குள் தள்ளி விடும் தன்மையுடையவை.

               மாயவரம் ரயில்நிலையத்தில் பெட்டியில் இணைந்து கொள்ளும் கோவிந்த சாஸ்திரி அதுவரை அங்கிருந்த அமைதியைக் குலைக்கிறார். ‘அதிகாரமும் வயசான பெருமையும் எக்களித்துக் கொண்டிருக்கிற தொண்டைக்குள் வெண்கலப்பட்டம் வைத்திருக்கிற குரலோடுசாஸ்திரி அங்குள்ள பயணிகளை தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருகிறார். சக பயணியாக இருக்கும் எக்சைஸ் இலாகாவில் சூப்பிரெண்டு, அவர் மனைவியின் உடல்நிலை குறித்தும், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் சாஸ்திரி அறிவுரைகளையும், பரிந்துரைகளையும் அள்ளி வீசிக்கொண்டே வருகிறார். தேர்ந்த மருத்துவர் போல சிகிச்சைக்கான வழிகளை வாரி வழங்கும் சாஸ்திரிதான் ஒரு மருத்துவர் இல்லைஎன்பதையும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார். தொடர்ந்து தன் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம் குறித்து பெருமையடித்துக் கொண்டிருக்கும் சாஸ்திரி, பேசிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு வலி வந்து இறந்து போகிறார். அவருடைய தொடர் அறிவுரைகள் கதை முழுவதும் நிரம்பியிருக்கின்றன. கதாசிரியரோடு, நாமும் கூட சாஸ்திரியிடம் ஏதாவது மருத்துவக் குறிப்பு கிடைக்காதா? என்ற ஏக்கத்தை உருவாக்கும் அளவிற்கு அவரின் பேச்சு அமைந்திருக்கும். கடைசி இரண்டு வரியில் மொத்த கதையையும் கவிழ்த்து ஒரு முறிப்பை உருவாக்கி முடித்திருக்கிறார் தி,ஜா.

               கடைசி வரிகள் வருகிற வரைக்கும் நம்மால் முடிவை யூகிக்க முடியாது. அவ்வளவு அதிர்ச்சி தரும் முடிவினை எந்த அலங்காரமும் , கூடுதல் அழுத்தமும் இல்லாமல் எளிமையாகச் சொல்லி விடுகிறார். எழுத்தாளர் நம்மை அதிர்ச்சிக்குத் தயார் படுத்திய பின்பு தரப்படும் அதிர்ச்சிகள் செயற்கைத்தனமாவனைகளாக மாறிவிடும் அபாயம் உண்டு. ஆனால், ’அக்பர் சாஸ்திரிதரும் முறிப்பு உண்மையில் பேரதிர்வை உண்டு செய்யும் விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

               இக்கதையை நான் மாணவப் பருவத்தில் வாசித்த போது, வாய்ச்சொல் வீரராக சாஸ்திரியைப் புரிந்து கொண்டேன். அவ்வளவு மருத்துவம் பேசும் நபர் ஒரு நிமிடத்தில் நெஞ்சுவலியால் இறந்து போவது சவடால் பேசும் நபரின் திடீர் முடிவாக இருந்தது. அதிகாரமும், வெற்றுப் பெருமையும் கொண்ட சாஸ்திரி போல சம காலத்தில் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள்? என்றுதான் அப்போது தோன்றியது.

               ஒரு மருத்துவ ஆய்வாளனாக இப்போது வாசிக்கும் போது, இன்னொரு பார்வை உருவானது.  இப்போதுதான் எழுதப்பட்ட கதையைப் போல அவ்வளவு புதிதாக இருக்கிறது? அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு புனைவை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை கதையின் சில பயன்பாட்டுச் சொற்கள் மட்டுமே ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அவைகளும் கூட இப்போதும் புழக்கத்தில் இருக்குமே சொற்களாகவே இருக்கின்றன.

               இன்னொரு கோணத்தில் கதை இன்னொன்றாக மாறுவதாக எனக்குத் தோன்றுகிறது. கதை எழுதப்பட்ட காலம் ஆங்கில மருத்துவப் பயன்பாடு பரவலாக்கப்பட்ட 1960 களாக இருக்கிறது. சித்த மருத்துவப் பயன்பாடு குறைந்து, ஆங்கில மருத்துவம் பார்ப்பதுதான் அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்ற நம்பிக்கை முழுமையாக விதைக்கப்பட்ட காலம். இதன் பின்னணியில் இருந்து, ஆதிக்க மனோபாவமும், பெருமையையும் மட்டும் அக்பர் சாஸ்திரியிடமிருந்து நீக்கி விட்டு அணுகலாம்.

               ரசாயன மருந்துப் பயன்பாட்டைத் தவிர்த்து விட்டு, இயற்கையான மருத்துவங்களை நோக்கித் திரும்பச் சொல்கிறார் சாஸ்திரி. எதெற்கெடுத்தாலும் மருத்துவமனைகளுக்கு ஓடுவதை விட்டு விட்டு நீடித்த ஆரோக்கியத்திற்கான வாழ்க்கை முறையைப் பரிந்துரைக்கிறார். இதை விட முக்கியம், இறப்பைக் கூட டாக்டரின் உதவியோடுதான் அணுகமுடியும் என்ற சூழலில் சில விநாடிகளில் எவ்வித சிக்கலுமின்றி இறந்து போகிறார் சாஸ்திரி. தன் வாழ்நாளில் 68 ஆண்டுகள் எந்த மருத்துவத்தின் உதவியுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதர் எளிமையாக மரணிக்கிறார். இன்னும் கூடுதலாகஅக்பர் சாஸ்திரிஎன்ற பெயர்க்காரணத்தை தி,ஜா.விளக்குகிறார். உலக மதங்களிலுள்ள நல்ல விஷயங்களை மட்டும் தொகுத்துதீன் இலாஹிஎனும் புதிய மதத்தை உருவாக்கியவர் அக்பர். அவர் போலவே, எல்லா நல்ல விஷயங்களையும் தெரிந்து கொண்டு பின்பற்றுவதால் கோவிந்த சாஸ்திரிஅக்பர் சாஸ்திரியாக என்று அழைக்கப்படுகிறார்.

               ஒரு மனிதரிடம் இருக்கும் ஆணவமும், எல்லாம் தெரிந்த அதிகாரமும் சாஸ்திரியிடம் இருக்கிறது என்பதைத் தவிர அவரிடம் என்ன சிக்கல் இருக்கிறது? சாஸ்திரி கதாபாத்திரத்தை வாய்ச்சொல் வீரராக மட்டுமே அழுத்தப்படுத்துவதாக இருந்தால், கடைசிக் காட்சியில் அவருக்கு நெஞ்சு வலி வந்து அவதிப்பட்டு, ஆங்கில மருத்துவத்தை நோக்கி பயத்தோடு ஓடுவதாக அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? எழுத்தின் ஆழத்தை உணர்ந்து, கதையை நடத்திச் செல்லும் தி.ஜா. ஏன் இதனைச் செய்யவில்லை? சாஸ்திரியின் இன்னொரு தரிசனத்தை வாசகனுக்குத் தர தி.ஜா.முயன்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

               கதையின் இறுதி வரிகளை வாசிக்கும் போது இது உறுதிப் படுவதாக அமைகிறது. “டாக்டர் உதவியில்லாமலே அக்பர் சாஸ்திரி மனிதன் செய்யும் கடைசி காரியத்தையும் செய்து விட்டார்”. இது எள்ளலான வரியாக இருந்தாலும் கூட, மொத்த கதையையும் இன்னொன்றாக மாற்றக் கூடிய ரசவாதம் இங்குதான் மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. ’டாக்டர் உதவியோடு நிகழ்க்கூடிய கடைசிக் காரியமாகமரணம் மாறத்துவங்குகிற நவீன காலத்தின் கதை இது. இன்னொரு முறை அக்பர் சாஸ்திரியை வாசித்துப் பாருங்கள். . .ஒருவேளை உங்களுக்கு வேறொரு கதையைக் கூட தி.ஜா. சொல்லக்கூடும். .

துணை

               1950 ஆம் ஆண்டுமணிக்கொடிஇதழில் வெளிவந்த கதைதுணை”.  அக்பர் சாஸ்திரிகதை இதற்குப் பின்பு ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு பிரசுரமாகியிருக்கிறது. ஆனால், இந்த இரு கதைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

               வாழ்வியல் முறை ஒழுங்கு குறித்து தி.ஜா.வின் உள்ளுறையான கருத்தினைஅக்பர் சாஸ்திரிமறைபொருளாக வைத்திருக்கிறது என்றால், “துணைவெளிப்படையாகவே சொல்லிச் செல்கிறது. இந்தக் கதையிலும் விவரணைகள் மிகக் குறைவு. பாத்திரங்களின் உரையாடலே முழு கதையையும் நகர்த்திச் செல்கிறது. நகைச்சுவையும், கிண்டலும் ஒவ்வொரு உரையாடலிலும் ஊடாடி வாசிப்பனுபவத்தை இனியதாக மாற்றிக் கொண்டேயிருக்கிறது.

               சின்னக் குழந்தை தாத்தா என்று ஒரு கதாபாத்திரம். அவருக்கு வயது என்பது. அவரும், அவர் தந்தையும் அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். ஆண்டுக்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மஸ்டர் பதிவுக்காக இருவரும் ஒரு துணையோடு சென்று திரும்புவதுதான் கதை. தந்தைக்கு வயது தொண்ணூற்றி எட்டு என்று சின்னக்குழந்தையே சொல்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் சொல்கிறார்தொன்னூத்தி எட்டு வயசுண்ணு நாலஞ்சு வருஷமா சொல்லிண்டிருக்கா”. ஓய்வூதியப் பதிவு புதுப்பிப்பு அலுவலகத்தில் சந்திக்கும் இன்னொருவர் சொல்கிறார்அறுபது வருஷமாக மஸ்டர் டேவுக்கு வந்து கொண்டிருப்பதாக”. ஆக, சின்னக்குழந்தையின் தந்தையின் வயது எப்படியும் நூற்றுக்கும் மேல் இருக்கும் என்று வெவ்வேறு வழிகளில் நிறுவுகிறார் தி.ஜா.

               சின்னக்குழந்தையின் மகன் பணி ஓய்வு பெற்று நான்கு வருடமாகிறது. ஆக, ஒரே குடும்பத்தில் நூறு வயதைக் கடந்த ஒருவர், அவர் மகனான எண்பது வயது சின்னக்குழந்தை, அவருடைய அறுபது வயதான மகன் என மூவரும் ஓய்வூதியம் பெறுகிறவர்கள். சின்னக்குழந்தையின் அறுபது வயது மகனுக்கு ஒரு மகன் இருக்கிறார் அவர் தாசில்தாராக பணிபுரிகிறார். அவருக்கும்பொடிப்பயலாகஒரு மகன் இருக்கிறார். ஐந்து தலைமுறையைச் சேர்ந்த தாத்தாக்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். சின்னக்குழந்தையின் மகன் காசிக்குப் போய் விட்டதாலும், பேரனின் மகன் சிறுவனாக இருப்பதாலும் துணைக்கு ஒரு ஆள் தேடி வருகிறார் சின்னக்குழந்தை.

               நூறைக்கடந்த தாத்தாவையும், என்பதைக் கடந்த தாத்தாவையும் பக்கத்து வீட்டு இளைஞன் அழைத்துச் செல்ல முன்வருகிறான். மூவரும் ஒரு மாட்டு வண்டியில் அலுவலம் போய்த்திரும்புகிறார்கள். வரும் போது வண்டி குடைசாய்ந்து எல்லாரும் கீழே விழுந்து விடுகிறார்கள். இரண்டு தாத்தாக்களுக்கும் பெரிய காயம் ஒன்றுமில்லை. ஆனால், துணைக்குச் சென்ற இளைஞரின் கையில் இரட்டை முறிவு ஏற்பட்டு விடுகிறது. கதையின் கடைசி வரிகளில் சின்னக்குழந்தை சொல்கிறார். .

               படுகிழங்கள் இருக்கோமே எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ. . ராஜா மாதிரி அழைச்சுண்டு போனான் குழந்தை..“ சின்னக்குழந்தையின் தந்தை உரையாடலை முடித்து வைக்கிறார். “நாம் அழைச்சுண்டு வந்துட்டோம்”. மூணு மாசம் மெடிக்கல் லீவு போடச்சொல்லியபடி இரண்டு தாத்தாக்களும் வீட்டுக்குப் போகிறார்கள்.

               வண்டியில் இருந்து விழுந்ததில் இரண்டு தாத்தாக்களை விட, வயதில் மிகக்குறைந்தவனான இளைஞனுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. புதிய காலத்தின் இளைஞர்கள் வலு குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை முன்வைக்கும் முன்பே தி.ஜா. தாத்தாக்களின் வாழ்க்கை முறையை விவரித்து விடுகிறார். இருட்டுப் பிரியும் முன்பே படுக்கையில் இருந்து எழுந்து விடுவதும், மார்கழி, ஐப்பசி மழை காலத்திலும் பச்சைத் தண்ணீர் குளியல், தினமும் உடல்பயிற்சி என்று இரண்டு தாத்தாக்களும் பின்பற்றுகிறார்கள் என்பதை கதையின் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். மூன்றாவது தலைமுறையிலிருந்து இந்தப் பழக்கங்கள் மாறிவிட்டதாகவும், பேரன் சுடுநீரில் குளிப்பதாகவும் சொல்லி அங்கலாய்க்கிறார் சின்னக்குழந்தை. விதிகளோடு பிணைந்த பழைய வாழ்க்கை முறை மீதான தி.ஜா.வின் பற்றையே இந்தக் கதையும் விவரிக்கிறது. அக்பர் சாஸ்திரி, துணை இரண்டு கதைகளையும் ஒரே நேரத்தில் வாசித்தால் அவருடைய வாழ்க்கை முறை பற்றிய கருத்தினை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிகிறது.

               'துணைகதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களிலேயே தி.ஜா.வின் அங்கதத்தை உணர்ந்து விட முடியும். சின்னக்குழந்தை தாத்தாவுக்கு குரல் சின்னக்குழந்தை போலவே இருப்பதால் அந்தப் பெயர் வந்திருக்கிறது. கதையின் துவக்கத்தில் சின்னக்குழந்தை என்ற பெயரைப் புரிந்து கொள்வது வரை குழப்பமாகவே இருக்கும். பெயர்க்காரணமும், அவருடைய வயதும் புரிந்த பிறகு வாசகனின் மனதில் நகைச்சுவை நிரம்பி வழியும். அவருடைய தந்தை பெயர்லேடி கிழவர்’. அவருடைய சின்ன வயதிலிருந்து தலை முழுவதும் பெண்ணைப் போல நிரம்பி வழியும் கேசத்தால் இந்தப் பெயர் வந்ததாக குறிப்பிடுகிறார். இப்படி ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் சுவாரசியமான காரணம் இருக்கிறது.

               அதே போல, கதையில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் பெயர் வைக்கும் போது பெயர்ப் பட்டியல் நீண்டு விட வாய்ப்புண்டு. சில பக்கங்களில் முடிந்து போகப் போகும் சிறுகதையில் பாத்திரங்களின் குணங்களே முக்கியம் என்று தி.ஜா. கருதியதை பெயரற்ற பல பாத்திரங்களின் மூலம் உணர்ந்து விட முடியும். அதே நேரம், பெயரற்ற பாத்திரங்களை தனித்தன்மையான சொற்களால் சுட்டிக் காட்டி அவர்களும் நினைவில் தங்கிவிடும்படி செய்து விடுகிறார் தி.ஜா. சின்னக்குழந்தையின் மகன் காசிக்குச் சென்றிருப்பதால் அவரைகாசிக்கிழம்என்று குறிப்பிடுகிறார். அவருடைய பேரனை தாசில்தார் என்றும், பக்கத்து வீட்டுக்காரர்ரிஜிஸ்ட்ரர்என்றும் குறிக்கப்படுகிறார். பக்கங்கள் நீளும் நாவலில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் நிதானமாகப் பெயர் வைத்து, வாசகனின் நினைவு அடுக்குகளில் தொடர்பு படுத்தி விடுவது எளிது. ஆனால், சிறுகதையில் அதைச் செய்தால் வாசிப்பு சோர்வுக்குரியதாக மாறி விடும் அபாயம் உண்டு.

               சிறுகதையைப் பற்றி நினைக்கிற போது நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலை கொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒருமைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும், ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கி துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆற அமர வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச் சுமை. ஓடுவது கஷ்டம்என்று சிறுகதை குறித்து கட்டுரையில் விவரிக்கிறார் தி.ஜா.

               எழுத்தின் மையம் வாசகனும், வாசிப்பும் என்பதை ஒவ்வொரு விநாடியிலும் நினைவில் கொண்டே கதையை நகர்த்துகிறார் தி.ஜா. அவருடைய எழுத்துகள் வாசகனை சோதிப்பதில்லை. அருகில் அமர்ந்து அவரே கதை சொல்வது போன்ற எளிமை உணர்வை உருவாக்குகின்றன.        

மரமும், செடியும்

                     பொதுவாக புனைவிலக்கியம் குறித்து ஒரு கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருக்கும். “நான் ஏன் இவற்றை வாசிக்க வேண்டும்?”. ஒரு சிறுகதையை அல்லது நாவலை வாசித்து முடிக்கும் போது ஒரு வாசனுக்கு என்ன கிடைத்து விடும்? என்பதுதான் அது. இக்கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருந்தாலும், இரண்டு விடைகள் எனக்கு முழுமையாகப் பட்டன.

               மனிதன் தனது குறுகியகால வாழ்வில் பன்முகப்பட்ட வாழ்க்கைகளை வாழ்ந்து விடும் பேராசை கொண்டவன். தன்னை விட உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ ஒரு வாழ்வியல் முறையைக் கண்டுவிட்டால், தன்னிலிருந்து அது வேறுபடும் தன்மையைப் பொறுத்து அதன் மேல் ஈர்ப்பு வந்து விடுகிறது. அதை நோக்கி ஓடுகிறான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் பழையதாகிப் போகும் போது, இன்னொன்றை நோக்கி தேடல் விரிகிறது. இது ஆதிமனிதர்கள் நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த மரபணுக்களின் வேலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ”இருப்பதிலேயே நிறைவடையும்படிஎத்தனை அறக்கோட்பாடுகள் போதித்தாலும், எல்லை மீறிவிடவே மனித மனம் விரும்புகிறது. அதன் அடிப்படையே மீறலும், விரிவடைதலும்தான். நாடோடிக் கூட்டமாக நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் தினமும் மாறும் வாழ்க்கை நமது வாய்த்திருக்கலாம். ஆனால், நாகரிக மனிதர்களாக நாம் மாறிவிட்ட பிறகும், மிகப் பழைய மரபணுக்கள் மனம் வழியாக நம்மை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் நம் வாழ்வில் பெரிய சோதனை முயற்சிகள் எதனையும் மேற்கொண்டுவிட முடியாது. இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ளவே தொடரும் போராட்டத்தில் தேவையற்றதை முயற்சிக்க நாம் விரும்புவதில்லை. அதே நேரம், நிறைவடைந்து விடுவதுமில்லை.

               இந்த இடத்தில் புனைவிலக்கியத்தின் உளவியல் பங்கு மிக முக்கியமானது. இன்னொரு மனிதரின் வாழ்க்கையை புனைவின் வழியே நாம் வாழ்ந்து பார்த்துவிட முடியும். விதம் விதமான மனிதர்களின் வாழ்க்கையை நாம் துய்த்து, அனுபவம் பெற புனைவுகள் பேருதவி புரிகின்றன. வாசிப்பனுபவம் வழியாக இது வாய்த்து விடுகிறது. எழுத்தாளருக்கும்வாசகருக்கும்வாழ்ந்து பார்க்கும்புதிய அனுபவம் புனைவிலேயே கிடைக்கிறது.

               இரண்டாவது காரணமும் உளவியல் ரீதியானதுதான். மனித மன இயக்கம் அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இயங்கும் இரட்டைத் தன்மை கொண்டது. இரண்டும் தேவைக்கேற்ற விகிதத்தில் வாழ்வில் கலந்திருக்க வேண்டும். ஆனால், இயல்பில் அப்படி எந்த மனிதனும் இல்லை என்றே சொல்லலாம். எப்போதும் அறிவுப்பூர்வமாகவே வாழ்வது அல்லது எப்போதும் உணர்வுப்பூர்வமாக வாழ்வது என்ற இரண்டு வகைகளில் மனிதர்கள் அடங்கிவிடுவார்கள். சமநிலையில், நேர்கோட்டில் வாழ்வது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. ஆனால், அப்படியான சமநிலை கொண்ட மனமே மனிதர்களின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது.

               இப்படி அறிவுப்பூர்வமான மனம் கொண்டவர்களை, தேவையான அளவு உணர்வுப்பூர்வமானவர்களாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையென்றால் வாழ்க்கையில் எந்த சுவாரசியமும் இல்லாமல், ஜடப் பொருளாகவே இருந்துவிடும் அபாயம் உண்டு. அவர்களுக்கான உளவியல் சிகிச்சைதான்புனைவிலக்கிய வாசிப்பு. வாசிக்க வாசிக்க பல மனிதர்களின் உணர்நிலைகளை அறிவுமனம் உள்வாங்கத் தொடங்கும். படிப்படியாக, உணர்வு மனம் மேலெழுந்து, சக மனிதர்கள் மீதான உணர்வுகள் வந்து சேரும். வாசிப்பற்ற மனிதர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வாழ்க்கையோடி போராடிப் போராடிக் கற்றுக் கொள்கிறார்கள்.

               இந்த இரண்டு காரணங்கள் புனைவு வாசிப்பிற்கு அடிப்படையானவை என்று புரிந்து கொண்டிருக்கிறேன். தி,.ஜா.வின் கதைகளை வாசிக்கும் போது மூன்றாவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுகாலப்பயணம்”. 1940 - 80 களின் காலப்பதிவை அவரது கதைகள் சேமித்து வைத்திருக்கின்றன. அதே காலத்தில் எழுதிய எல்லா எழுத்தாளர்களின் கதைகளும் காலத்தை சேமித்தவைதான் என்றாலும், கூடுதல் உயிர்ப்பும், அச்சு அசலான மனிதர்களின் இயல்பும் தி.ஜா. படைப்புலகின் கூடுதல் பலம். தி.ஜா.வின் ஒவ்வொரு கதையும் ஒரு காலப்பயணமாகவே அமைந்து விடுவதை வாசிக்கிற யாரும் உணர்ந்துவிட முடியும். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் காலப்பதிவுகளை தனியாக ஆய்வு செய்யும் அளவுக்கு எல்லா கதைகளிலும் தெளிவாகப் பதிக்கப்பட்டிருக்கிறது.

               1958 ஆம் ஆண்டு கலைமகள் இதழில் வெளிவந்த சிறுகதைமரமும், செடியும்”. முதல் இரண்டு கதைகளிலிருந்து வேறுபட்ட கதைக்களத்தோடு இது அமைந்திருக்கிறது. முன்னர் நாம் கலந்துரையாடியதைப் போல, இக்கதையிலும் பெயரற்ற அடைமொழி பாத்திரங்கள் அதிகம். இந்தக் கதையின் பிரதான பாத்திரங்களுக்கே பெயர்கள் கிடையாது.

               மூங்கில்காரர், ஈயக்காரர் என்ற இருவரும் ஒரே கடைத் தெருவில் கடை வைத்திருப்பவர்கள். ஒருவருக்கு மூங்கில் வியாரம், இன்னொருவருக்கு ஈய வியாபாரம். ஏற்கனவே ஊரின் பிரசிடெண்டாக இருந்த காசுக்கடைக்காரர் இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஈயக்கடைக்காரரை நிற்கச் சொல்வதாக நாட்டாண்மை வந்து மூங்கில்காரரிடம் சொல்கிறார். சுவராசியமற்று கேட்டுக் கொண்டிருக்கும் மூங்கில்காரர், நாட்டாண்மையின் பேச்சில் மயங்கி தானும் தேர்தலில் நிற்க சம்மதிக்கிறார். இருவரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஈயக்காரருக்கு செடியும், மூங்கில்காரருக்கு மரமும் சின்னங்களாகக் கிடைக்கின்றன. மூங்கில்காரர் மார்க்கெட்டுக்கு கொட்டகை போட்டுக்கொடுப்பதும், வண்டி மாடுகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டுவதும், எல்லாருக்கும் கழுத்து வரை சாப்பாடு போடுவதுமாக தேர்தல் வேலைகளை அமர்க்களமாகப் பார்க்கிறார். தான் பிரசிடெண்ட் ஆகிவிட்டதாகவே நினைத்துக் கொள்கிறார்.

               ஆனால், தேர்தல் முடிவு வரும் போது நிறைய ஓட்டு வித்தியாசத்தில் மூங்கில்காரர் தோற்றுப் போகிறார். நாட்டாண்மைக்காரரும், மூங்கில்காரரும் சேர்ந்து தோல்விக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். ‘நேரப்பாக்குறப்ப மரம் பெரிசு செடி சிறிசு. படத்துல போட்ட மரமும் சாண் உசரம். செடியும் சாண் உசரம். நமக்கு மரம் அடையாளமா இருக்கிறப்ப, அவரு செடிய வாங்கிட்டாரே. .இது பெரிய மோசடிஎன்று முடிவுக்கு வருகிறார்கள். மரமும், செடியும் ஒன்று போலவே இருப்பதால்தான் தான் தோல்வி அடைந்துவிட்டதாக மூங்கில்காரர் நம்பிக் கொள்கிறார். ”மரமும் செடியும் ஒன்றாகி விடுமா? மரத்துக்கு வயசும், அனுபவமும் அதிகம்என்று நல்ல சமயத்திற்காக காத்திருக்கிறார் மூங்கில்காரர்.

               ஈயக்காரர் மகனுக்கு எலுமிச்சை சர்பத் தயாரிக்கும் நிறுவனம் துவங்குபதற்காக எலுமிச்சைத் தோட்டம் தேவைப்படுகிறது. மூங்கில்காரரிடம் அப்படி தோட்டம் இருக்கிறது. அதை விலை கேட்டு, பார்க்க வருகிறார்கள் ஈயக்காரரும், அவர் மகனும். நானூறு எலுமிச்சை மரங்களுக்கு, கிணறு வைத்து நீர் இறைத்தும் வெம்பி விழுந்த காய்களே மிச்சம். இதனை ஏமாற்றி ஈயக்காரருக்குதள்ளிவிடதிட்டமிடுகிறார் மூங்கில்காரர். பெரிய எலுமிச்சைகளை விலைக்கு வாங்கி, தோட்டத்தில் கீழே போட்டு வைக்கிறார். அவற்றைப் பார்த்த அவர்கள் உதிர்ந்த காய்களே இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று நினைத்து, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து தோட்டத்தை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அதனை விற்ற பிறகு அந்தப்பக்கம் போவதைத் தவிர்க்கிறார் மூங்கில்காரர். ஒருமுறை அங்கு போக வேண்டிய அவசியம் வந்த போது, பெரிய காய்கள் தோட்டத்து நிலத்தில் கிடப்பதை எடுத்துப் பார்க்கிறார் மூங்கில்காரர். அங்குவரும் ஈயக்காரரின் மகன் சொல்கிறார்.  நீங்க காமிச்சப்ப தரையில காச்சிருந்தது. . இப்ப மரத்திலேயே காய்க்குது”. விவசாய அலுவலரிடம் ஆலோசனை பெற்று, கால்வாய் கொண்டு வந்து, எரு போட்டு மரங்களை விளைச்சல்தரும் படி ஆக்கி விட்டார்கள்.

               கதையின் கடைசி வரிகள் மூங்கில்காரர் நினைப்பதாக இப்படிச் சொல்கின்றன. . “முந்நூறு குழிக்கு பதினாயிரம் ரூபாய் மூன்று விலைதானே? அப்படி என்ன ஏமாந்து விட்டோம்?” என்று தேற்றிக் கொண்டு நடந்தார் அவர்.

               மனிதர்களின் எளிமையான உளவியலை கதாபாத்திரங்களின் வழியே கையாண்டிருக்கிறார் தி.ஜா. சாதாரணமாக தன் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்த மூங்கில்காரரிடம் நாட்டாண்மை பேசும் போது ஒரே ஒரு உரையாடல் மூலம் தேர்தலுக்குத் தயார் படுத்துகிறார். ”இல்லேணு சொல்லிட்டு பெரிய மனுஷங்கெல்லாம் உக்காந்திருந்தா அப்புறம் என்னதான் நடக்கும்?” மூங்கில்காரருக்கு உச்சி குளிர்ந்தது. பெரிய மனிதன் என்று இவர் வாயாலேயே லேசில் வருமா? – இந்த வரிகளில் மனநிலை தலைகீழாக மாறிவிடுவதை கதை விளக்குகிறது. அதே போல, தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்றுக் கொள்ளாத மூங்கில்காரர் நல்ல காரணம் தேடித் தவிக்கும் போது, நாட்டாண்மை சொல்லும் தோல்விக்கான காரணம் சமாதானம் தருகிறது. வெற்றி பெற்றவரை மோசடி செய்தவராக மாற்றிக் கொண்டால் மனம் நிறைவடைந்து விடுகிறது. ஈயக்காரரிடம் எலுமிச்சை தோட்டத்தை ஏமாற்றி விற்றுவிட்டாலும், அவர் அதிலும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார். இப்போது மறுபடியும் காரணம் தேவைப்படுகிறது. அதைத்தான் கதையின் கடைசி வரிகள் வெளிப்படுத்துகின்றன.

               சமாதானத்திற்கான காரணங்களை மனிதர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவெளியில் நம்புவதற்கு சாத்தியமில்லாத காரணங்களைக்கூட தங்களுக்க்குத் தாங்களே கற்பித்துக் கொண்டு சமாதானமடைகிறார்கள். தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இது எல்லா மனிதர்களின் அடிப்படை உளவியல். இதனை விலகி நின்று பார்ப்பவர்களாலேயே உணரமுடியும். புனைவிலக்கியத்தில் ஒரு எழுத்தாளரால் இதனை உணர்ந்து விட முடிகிறது. வாசகனுக்கு உணர்த்தி விடவும் முடிகிறது. வழக்கம் போல எள்ளல் நடை, உரையாடல்களால் விரியும் காட்சிகளோடு எளிமையாக நகரும் உளவியல் கதையாக இதனைப் புரிந்து கொள்ளலாம்.     

காட்டுவாசம்

               இது 1955 ஆம் ஆண்டு கலைமகள் இதழில் வெளிவந்த கதை. மரமும், செடியும் கதையைப் போலவே இதுவும் உளவியல் அடிப்படையிலான கதை. ’அமைதியே கைகால் முளைத்து நடப்பதுபோன்ற தோற்றமுடைய ஒருவரைப் பற்றியும், அமைதி விரும்பி சந்நியாச வாழ்க்கைக்குள் நுழையும் இன்னொருவர் பற்றியும் கதை பேசுகிறது. இருவரின் மன ஓட்டங்களையும், தப்பித்தல் மனோபாவத்தையும் ஒப்பிட்டு, உரையாடல்கள் மூலமாகவே பெருக்கெடுத்து ஓடுகிறது உளவியல்.

               கிராமத்திலிருக்கும் நண்பனை பார்க்க வருகிறார் சென்னையிலிருக்கும் சுந்தரரஜன். ஒருமாத விடுப்பில் அங்கேயே ஒரு வாரம் தங்கியிருப்பதாகத் திட்டம். நண்பனின் அப்பா குறித்து உரையாடல் செல்கிறது. ஊரிலேயே சாந்த சொரூபியாக, அமைதியான நபராக மதிக்கப்படும் அப்பா வீட்டில் நேர்மாறான நபர் என்று சொல்கிறார் நண்பர். ’குழம்பிலே புளி கொஞ்சம் தூக்கலாக இருந்து விட்டதானால் கண்ணிலே விரலைக் கொடுத்துதான் ஆட்டுவார்என்று சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கடும் கோபம் கொள்ளும் அவரைத்தான் ஊர் அமைதியே உருவானவராக நம்பிக் கொண்டிருக்கிறது. பேரனோடு சரிக்குச் சரியாக சண்டைக்கு நிற்கும் அப்பா, குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை என்று தன்னோடு கோபித்துக் கொண்டு, மகள் வீட்டுக்குப் போய்விட்டதாகச் சொல்கிறார் நண்பர்.

               சின்ன வயசிலிருந்து தியானம், பூஜை என்று மனசை ஒழுங்குபடுத்திக் கொண்டவர், கோப தாபம் எல்லாம் அடங்கினவர்என்று சொல்லப்படும் அப்பா ஒவ்வொரு முறையும் இன்னொரு மகன் வீட்டுக்கோ, மகள் வீட்டுக்கோ இடம்பெயரும் போது இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக கோபித்துக் கொண்டுதான் போய்விடுவாராம். இப்படி நண்பர்கள் உரையாடிக் கொண்டே ஆற்றோரம் பார்க்கும் போது புதிதாய் தோட்டத்தோடு முளைத்திருக்கிற வீட்டைப் பார்க்கிறார் சுந்தரராஜன். நண்பர் சொல்கிறார் அது ஆசிரமம் என்று. அதன் பெயர் வானப்பிரஸ்தம் என்றும், அங்குசக்ரபாணி ஐயர் சம்சாரத்தோடு தபசு பண்ணுகிறார்என்றும் சொல்கிறார் நண்பர். இருவரும் அங்கு சென்று பார்ப்பதற்காகச் செல்கிறார்கள்.

               உரையாடல்கள் வழியாகவே சுவாரசியத்தையும், அங்கதத்தையும் கடத்துகிறார் தி.ஜா. இப்படி நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் கேட்கிறார். “இந்த இருபதாம் நூற்றாண்டிலுமா வானப்பிரஸ்தம்?” “ஏன். . இருபதாம் நூற்றாண்டிலே கிறுக்குகளே இருக்கக்கூடாதா?” இப்படி எல்லா உரையாடல்களிலும் நறுக்குத் தெறிக்கிற சொற்கள் வாசிப்பின் வேகத்தைக் கூட்டுகின்றன. கதையின் மையப் பகுதியை மட்டும்தான் சுருக்கமாகச் சொல்கிறேன். மையத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் காந்தப் புலத்தைப் போல, உரையாடல்களால் கதை உட்பொதியப் பட்டிருக்கிறது. சக்ரபாணி ஐயரைப் பார்க்கச் சென்ற பின்பும் அங்கு நடக்கிற உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் பயணிக்கின்றன.

               அவர் சந்நியாசி ஆகிவிட முடிவு செய்யக் காரணமாக இருந்த சாலிப்பாட்டியின் கதை, அப்பாவுக்கும் பிள்ளைக்குமான அன்பு பற்றிய விவரணைகள் என்று உரையாடல் நீள்கிறது. சந்நியாசம் வந்த பிறகு காமத்தில் தடுமாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தன் சம்சாரத்தையும் உடன் அழைத்து வந்துவிட்டதாகச் சொல்கிறார் சக்ரபாணி. இருவரையும் காபி சாப்பிடும்படி சொல்லிவிட்டுகாபி இல்லாமல் என்னால் இருக்க முடியாது சார். . முன்னால் நாலுவேளை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். . ஆசிரமம் எடுத்தபிறகு மூன்று வேளையாக பாண்ணிக் கொண்டிருக்கிறேன். .இரண்டு, ஒன்றாகக் குறைத்து நிறுத்தி விடுவேன். நாலு வருஷம் கழித்து நீங்கள் வந்தால் இங்கே கொத்தமல்லிக் காப்பிதான் கிடைக்கும்என்று காபிக்கதையை விளக்குகிறார். அடுத்ததாக மனைவியிடம் வெற்றிலை சீவல் கொண்டுவரும்படி அழைக்கிறார். ’இது அவருக்கு உயிர்என்ற வர்ணனையோடு வெற்றிலை, சீவல் வருகிறது. கூடவே ஒரு டப்பாவில் சின்னச் சின்னதாக நறுக்கிய புகையிலை. “முன்னெல்லாம் பன்னீரும், வாசனையும் கலந்து போட்டுக் கொண்டிருந்தேன். ஆசிரமம் வந்த பிறகு வெறும் புகையிலைதான்என்று சொல்லிக் கொள்கிறார் சக்ரபாணி.

               பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்த பிறகு சுந்தரராஜன் சொல்கிறார்சுவாரஸ்யமான ஆள்தான். . ஊருக்குப் போவதற்குள் இன்னொருமுறை வர வேண்டும்”. நண்பர் கேட்கிறார். .”இனிமேல் ஊருக்குப் போகிற வரைக்கும் இங்கேதான் பழியாகக் கிடப்பாய் போல. . “

               கதையின் கடைசி வரி இந்த உரையாடலோடு முடிகிறது. . .” பின்னே. . என்ன? இந்த மாதிரி புகையிலை இங்கே யார் கொடுப்பார்கள்? நீ கொடுப்பாயா? என்ன துர்ப்பழக்கம் என்று உபதேசம் பண்ணுவாய்?”

               கதையை வாசித்து முடிக்கும் போது வானப்பிரஸ்தம் வந்த சக்ரபாணி ஐயரையும், கோபித்துக் கொண்டு போன தியானம், பூஜை செய்யும் நண்பனின் அப்பாவையும் ஒப்பிட்டுக் கொள்வதை வாசகரால் தவிர்த்து விட முடியாது. தி.ஜா. எந்த வகையான கருத்தையும் நேரடியாக தன் கதைகளில் சொல்வதில்லை. உரையாடல்களின் பின்னால் மறைந்திருக்கும் கதை மையத்தை வாசகன் தன் போக்கில் புரிந்து கொள்ளும் சுதந்திரம் வரிகளுக்கிடையில் மறைந்து நிற்கிறது. இதே கதையை சந்நியாசத்துக்கு ஆதரவாகச் சிந்திக்கும் வாசக மனம் வேறுவிதமாகவும் புரிந்து கொள்ளலாம். சக்ரபாணி ஐயரின் விளக்கங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் வாசகர்களும் இருக்கலாம். அதற்கான சாத்தியங்களை முழுமையாக உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது இக்கதை. வாசக சுதந்திரத்தையும், கதையாளரின் கருத்தையும் சமமாக வைத்துப் பார்க்கும் வாய்ப்பினை வழங்கியிருக்கிறார் தி.ஜா.

குளிர்

               இச்சிறுகதை 1956 ஆம் ஆண்டில் காதல் இதழில் வெளிவந்துள்ளது. தி.ஜா.வின் கதைகளில் கைவிடப்பட்டவர்கள் அல்லது வயது முதிர்ந்தோர்களின் குரல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். நாம் இதுவரை பார்த்த சிறுகதைகளிலேயே அக்பர் சாஸ்திரி, துணை, காட்டு வாசம் ஆகிய கதைகளில் ஒரு வயது முதிர்ந்தவராவது தலைகாட்டும் விதத்திலும் இருப்பதைப் பார்க்கலாம். “தி.ஜானகிராமன் பெண்கள், வயதானவர்களின் மன உலகத்தை, அவர்களின் கைவிடப்பட்ட மனநிலையைத் தன் கதைகளில் சொன்னவர்என்று ச.தமிழ்ச் செல்வன் தி.ஜா.வை அனுமானிப்பது, அவரது கதைகளை வாசிக்கும் போது உறுதிப்படுகிறது.

               இப்படியான கைவிடப்பட்ட ஒரு வயதான பெண்ணை மையமாகக் கொண்ட கதைதான்குளிர்’. எழுபத்தைந்து வயதான கிழவிக்கு பெயர் கிடையாது. தனியாக வாழும், தானே சமைத்துச் சாப்பிடும் பெண். பிள்ளை ஒருவன் தஞ்சாவூர் கோயில் மடப்பள்ளியில் சமையல் வேலைபார்ப்பவன். மகன் மாதந்தோறும் அனுப்பும் ஒன்பது ரூபாயில் மூன்று ரூபாய் வாடகைக்கும், ஆறு ரூபாய் உணவுக்குமாக செலவளிக்கும் பொருளாதாரப் பின்னணி. பல குடும்பங்கள் ஒன்றாக வசிக்கும் கூட்டு வீட்டின் தனி அறையில் வசிக்கிறார் கிழவி. தினமும் இரவு பசி தாங்காமல் கோயிலுக்குச் சென்று உண்டகட்டி வாங்கிச் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது, மணி பத்தாகி விடுகிறது. அடைக்கப்பட்டிருக்கும் வீட்டின் வாசலைத் தட்டுவதுதான் மொத்தக் கதையும்.

               பதினொன்னரை மணிக்குப் பிறகு வரும் வடை விற்கிறவர் கதவைத் தட்டும் போது திறந்து விடும் மற்றவர்கள், கிழவிக்கு மட்டும் கதவைத் திறப்பதில்லை. நீண்ட நேரம் குளிரில் நடுங்கியபடி கதவைத் தட்டிக்கொண்டேயிருக்கும் ஓலம் கதை நெடுகக் கேட்கிறது.

               கிருஷ்ணம்மா. . கதவத் திறடீ. . aரைமணியா கத்தறேனே உங்களுக்கு இரக்கமில்லையா? நிக்க முடியலியே. . குளிர் தாங்கலியே. .கடைப்படாதவளை இந்தப் பாடு படுத்தறேளே. . ” என்று அங்கு குடியிருக்கும் ஒவ்வொரு பெயராக அழைத்து கதவைத் தாட்டிக் கொண்டேயிருக்கிறார் கிழவி. இதே போல ஒருமுறை தட்டிய போது இன்னொரு அறையில் இருக்கும் கிழவி விளக்குமாற்றால் அடித்து விடுகிறார். அதையும் அங்கிருக்கும் யாரும் கேட்கவில்லை என்று புலம்புகிறார் கிழவி. கதையின் பெரும்பாலான வரிகள் கிழவியின் கூக்குரலைச் சுமந்தபடியே வெளிப்படுகின்றன. ஆனாலும், கடைசியின் கடைசி பத்தியில் உளவியலாக ஒரு திருப்பத்தை வைக்கிறார் தி.ஜா.

               கிழவியின் துயரத்தைத் தாங்க முடியாத பக்கத்து வீட்டுக்காரர், தன் வீட்டில் வந்து நடையில் படுத்துக் கொள்ளும்படி அழைக்கிறார். பாயும் போர்வையும் தருவதாகச் சொல்கிறார். கதையின் கடைசி பத்தியில் கிழவி கேட்கிறார். “நீர் தனியா இருக்கீறா. .? வீட்டில் யாராவது இருக்காளா. . ?” வீட்டுக்காரியும், குழந்தைகளும் இருப்பதாகச் சொன்ன பிறகு கிழவி சொல்கிறார்அப்படின்னா வரேன்

               எதிர்மறையாகப் புரிந்து கொள்வதாக இருந்தால், இப்படியான குணம் இருப்பதால்தான் அவரை யாரும் ஆதரிப்பதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நேர்மறையாக எழுபத்தைந்து வயது கிழவியின் பயமும், தானொரு கேட்பாரற்ற பெண் என்ற ஆழமான பாதிப்பிலிருந்தும் இக்கேள்வி பிறக்கிறது எனவும் பார்க்கலாம். பல வருடத் தனிமையால் பீடிக்கப்பட்ட பெண்ணிற்கு சூழல் கற்றுத்தந்த ஆழ்மனப் பதிவாக அவரின் உரையாடல் வெளிப்படுகிறது. மனிதனின் குணங்கள் எங்கிருந்து வந்துசேர்கின்றன? பிறக்கும் போதே கேரக்டர் பேக்எதுவும் இயற்கையால் வழங்கப்படுகிறதா என்ன? அவரவர் வாழும் சூழலும், சமூகமும் உருவாக்கும் செயல்களால் ஏற்படும் எதிர்வினையிலிருந்தே குணம் பிறக்கிறது. இதில் மரபணுக்களின் பங்கு மிக மிகக் குறைவு. இந்த உளவியல் பின்னணியில்குளிர்கதையைப் புரிந்து கொண்டால், அச்சூழலால் உருவாக்கப்பட்ட துயரமே கிழவியின் குரலாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். காலம் காலமாக பெண்களின் குண இயல்பை எப்படி இருக்க வேண்டும்? என்று முடிவு செய்யும் ஆண்களின் உலகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரலின் தொடர்ச்சியாக கிழவியின் குரல் எதிரொலிக்கிறது.    

ஐயரும், ஐயாறும்

               ஒரு ஆராய்ச்சி அறிக்கை என்ற துணைத் தலைப்போடு இக்கதை 1963 ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. தொகுப்பிலுள்ள மற்ற கதைகளிலிருந்து வேறுபட்ட சிறுகதை இது.

               சிறுகதைகளில் அதிக வர்ணனைகளுக்கு இடம் கொடுக்காமல் தெறிப்பாக சில வரிகளில் காட்சிப்படுத்தும் தி.ஜா. வின் எழுத்துமுறை இக்கதையில் மாறி, நீளமான வர்ணனையோடு துவங்குகிறது. இசைக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் தன் ஆய்வு மாணவர்களின் உதவியோடு ஒரு ஆய்வினை மேற்கொள்கிறார். சங்கீத மூவர் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான தியாகராஜரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கின்றனர். கதையில் தலைப்பு வெளிப்படுத்தும் ஐயர் என்பது தியாகராஜய்யரையும், ஐயாறு என்பது அவருடைய ஊரான திருவையாறையும் குறிக்கிறது. வரிகள் தோறும் ஓடும் பகடியோடு நகர்கின்றன உரையாடல்கள். இசையுலகில் பெரிதும் மதிக்கப்படுகிற ஆளுமை ஒருவரை கதையின் மையமாக எடுத்துக் கொண்டு, மனிதர்களின் உளவியலைப் புரியவைக்கிற முயற்சி மிகவும் சிக்கலானது. சற்று சறுக்கினால் கூட, தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சிக்கல் எப்போதும் காத்துக் கொண்டேயிருக்கும் கதைக்களம் இது.

               தியாகராஜர் காலச் செய்திகளை அவர் குறித்து அறிந்த ஊர்க்காரர்கள் மூலம் அறிந்து, ஒரு நூலாக வெளியிடுவது ஆய்வாளரின் திட்டம். அவர் குறித்து பல கதாபாத்திரங்கள் பேசுவதாக விதம் விதமான கருத்துகளை முன்வைக்கிறார் தி.ஜா. ஒவ்வொருவரின் உரையாடல்களும் வெவ்வேறு விதமான மனநிலைகளைப் பிரதிபலிக்கின்றன. தி.ஜா. காலத்திலேயே அறிவுலகில் விமர்சனம் என்பது ஒழுங்கு செய்யப்படாத உளவியல் குப்பைகளாக இருந்ததை உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

               ஞானஸ்கந்தன் என்று ஒருவர் கூறுவதாக வரும் உரையாடல் வேறுவகையானது. தன்னுடையமுப்பாட்டனாரின் முப்பாட்டனார் ஐயா தீட்சிதர்தியாகராஜய்யர் காலத்து ஆள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் பல அதிர்ச்சிகளைத் தருகிறார். ஐயா தீட்சிதர் முப்பது காவியங்களும், மூன்று நாடகங்களும் இயற்றியவர், நூற்றியெட்டு வாஜபேய வேள்விகளைச் செய்தவர். ”கலை என்னும் ஏணியில் சங்கீதம் என்பது அடிப்படி. அதாவது மிக மிகத் தாழ்வானது. கலைகளில் சிறந்தது இலக்கியம்தான். அதற்குப் பிறகுதான் சிற்பம், ஓவியம், நடனம், இசைக்கலை எல்லாம் வரும். இலக்கியத்திலும் தலையாயது உரைநடை இலக்கியமே. கவிதை கடையானதுஎன்று நீள்கின்றன வரிகள். கடைசியில் அவர் சொல்கிறார்இவ்வளவு தாராளமாக நம் தேசம் இல்லாததால்தான் தியாகையர் இலக்கியத்துக்குப் பதிலாகம் குறுக்கு வழியில் புகழ் தேடும் சங்கீதக்கலையில் ஈடுபட்டார் என்பது என் கருத்துஎன்று முடிக்கிறார்.

               ஏகாத்ராவ் என்பவர் தியாகாராஜர் பற்றி இப்படிக் கூறுகிறார். “ மராட்டிய மன்னர் சரபோஜி அழைத்ததற்கு தியாகையர்நர ஸ்துதி இந்த நாவால் செய்ய மாட்டேன்என்றாராம். ராஜா தெய்வத்துச் சமானம். விஷ்ணு அம்சம் என்று நம் ஸ்ருதிகள் கோஷிக்கின்றன. மேலும் ஒவ்வொரு உயிரிலும் கடவுளைக் காணும் ஐக்கியபாவம் தியாகையருக்கு இருந்திருந்தால் இந்த பதிலை சொல்லியிருக்க மாட்டார்

               அவரவர் சார்ந்த சாதிப்பின்புலமும், சுய ஒப்பீட்டு விளைவும், காழ்ப்புணர்ச்சியும், தன் குடும்பச்சார்பும் ஒவ்வொரு மனிதரின் உரையாடல் வழியாகவும் வெளிப்படுவதை தி.ஜா. அழுத்தமாகப் பதிவு செய்கிறார். “தியாகராஜருக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்குமாம்?” என்று ஒரு ஆய்வு மாணவி நூற்றுக்கும் மேல் வயது கொண்ட கிழவியிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொல்கிறார்இதேதுடியம்மா. . இதெல்லாம் எதுக்கு கேக்குது இந்தப் பொண்ணு. .ஏண்டியம்மா நம்ம ஊருல என்ன சாப்பிடுவா எல்லாரும். .”

               இப்படித் திரட்டப்பட்ட செய்திகளைத் தொகுத்து பேராசியர் ஒரு ஆய்வு நூலை வெளியிடுகிறார். அமெரிக்காவில் இருக்கும் டர்னர் இதே போன்று சங்கீத மூவரில் மற்ற இருவர் பற்றியும் எழுதினால் இருபதினாயிரம் ஜாங்சன் செய்வதாகச் சொல்கிறார். ஆய்வில் ஈடுபட்ட மாணவிகளுக்கு அமெரிக்க உதவிச் சம்பளம், சங்கீத பேராசிரியை பணிகள், ஆசிரியப் பணிகள் என்று விதம் விதமான பலன்கள் கிடைக்கின்றன. கதையின் கடைசி வரியில் இப்படிச் சொல்லி முடிக்கிறார் தி.ஜா.

               கிரிஜா ஒரு கலெக்டரை மணந்து கொண்டாள். ஆனால், ஆராய்ச்சியை விடவில்லை. அலமுவின் யோசனையின் பேரில் தியாகையர் பாடியது தமிழ்த் தெலுங்கா, தெலுங்குத் தெலுங்கா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறாள். அதை முடித்து வெற்றிபெற்றால் அவளுக்கு கிராண்ட் கான்யான் பல்கலைக்கழகடாக்டர்பட்டம் கிடைக்கும்”.

               இசைக்கல்லூரியில் பயிலும் ஆய்வு மாணவிகளாக வருபவர்கள் அனைவரையும் பிராமணப் பெயர்களால் குறிப்பதன் மூலம் அன்றைய கல்வியில் நிறைந்திருந்த பிராமண சமூகத்தைப் பற்றி பதிவு செய்கிறார் தி.ஜா. அன்றைய ஆய்வு முறைகள், முனைவர் பட்ட ஆய்வேடுகளைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பி, மனித மனங்களின் உளவியலையும் நோக்கி வாசகனை நகர்த்துகிறதுஐயரும், ஐயாறும்சிறுகதை. தி.ஜா. படைப்புகளில் காலப்பதிவு குறித்து ஆய்வு செய்யப்படுமானால் இக்கதை அதில் முக்கியப்பங்காற்றும் ஒன்றாக இருக்கும்.

கள்ளி, குழந்தைக்கு ஜூரம்கடன் பற்றிய இரண்டு கதைகள்

               கள்ளிசுதேச மித்திரன் இதழில் 1955 ஆம் ஆண்டும், ‘குழந்தைக்கு ஜூரம் கலைமகள் இதழில் 1957 ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளன. இரண்டிற்கும் உள்ள மிக முக்கியமான ஒற்றுமை இரண்டு கதைகளுமே கடன்களைப் பற்றிய கதைகளாக அமைந்திருப்பதுதான். ஆனால், இரண்டும் வெவ்வேறு நிலப்பகுதியில், வேறுபட்ட மனிதர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

               கள்ளி கதையில் வரும் சுப்பண்ணாவும், கிருஷ்ணனும் ஒரே தெருக்காரர்கள். கிருஷ்ணன் ஊரிலிருந்து பட்டணத்திற்கு வந்து செட்டிலானவர். அவரின் குணம் பட்டணம் வந்த பிறகு மாறிவிட்டதாக பலரும் சொல்கிறார்கள். தி.ஜா.வின் பெரும்பாலான கதைகளில் வரும் தஞ்சையின் காற்றும், குளிர்ச்சியும் இல்லாத சென்னை இக்கதையில் விரிகிறது. ‘சென்னைக்கே உரித்தான ஒரு நரகநிலைதுளிக்காற்றில்லாத, காற்று எப்போதாவது வீசும் என்ற நம்பிக்கைக்கிடமில்லாத, புழுக்கி, கண்ணை ஜிவு ஜிவு என்று பொங்கவைத்து, உடலில் ஜூரச் சூட்டை ஏற்றி விடுகிற ஊமை வெயிலும் மூட்டமும்கொண்டதாக சென்னை கதையின் துவக்கத்திலேயே வந்துவிடுகிறது. கிருஷ்ணனின் குணமாற்றத்திற்கு சென்னையின் புழுக்கமும், சூழலும் கூட காரணமாகலாம் என்பது போன்று வாசிப்பவருக்குத் தோன்றும் அளவுக்கு விவரித்திருக்கிறார் தி.ஜா.

               சுப்பண்ணா ஒரு இசைக்கலைஞர். பிடில் வாசிப்பதில் நாற்பது வருடங்களாக லட்சக்கணக்கானவர்களை மயக்கியவர். அவருடைய கைமகா மகா தாள அசுரர்களை எல்லாம் பல்லைப் பிடித்து பார்த்த கை.’ வெள்ளைக்கார நாடுகளுக்கு கச்சேரிக்குச் சென்று ஆறு மாதம் அங்கிருந்து எல்லோரையும் பிரமிக்க வைத்தார். வெள்ளைக்கார நாடுகளை ரசித்து விட்டு திரும்பி வந்த சுப்பண்ணாவின் முதல் கச்சேரியிலேயே அபஸ்வரங்களாக உதிர்க்கிறார். ‘பெரியவர் சீமையை ரொம்ப ரசிச்சுட்டாப்பல இருக்குஎன்று சொல்லிச் சொல்லி அவரை குழியை வெட்டி இறக்கினார்கள். கைக் காசு எல்லாம் தீர்ந்த பிறகு, பிரபுக்களும், சபைகளும் கைவிட்ட பிறகு சுப்பண்ணாவுக்கு வெளிநாடு போவதற்காகத் தைத்த கால், கை சட்டைகள் மட்டும்தான் மிச்சமாகிறது. இந்தப் பின்புலத்தில் கதை துவங்குகிறது. சுப்பண்ணா தன் குழந்தைக்கு தேர்வுக் கட்டணம் கட்டுவதற்காக பத்து ரூபாய் கடன் கேட்டு கிருஷ்ணனிடம் வருகிறார். கீழ் வீட்டு அறைப் பெட்டியில் பதினைந்து ரூபாய் வைத்திருந்தாலும் கிருஷ்ணன் தன்னிடம் இல்லை என்று மறுக்கிறார். சுப்பண்ணாவின் புலம்பலையும், நிராதரவு நிலையையும் பார்த்த பிறகும் கிருஷ்ணனுக்கு கொடுக்க மனம் வரவில்லை.

               அன்றிரவு பலத்த மழை பெய்கிறது. வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலைவனக் கள்ளியை வீட்டில் வைத்து வளர்க்கிறார் கிருஷ்ணனின் மகள். தண்ணீர் படாமல் வளர்க்க வேண்டிய கள்ளிச்செடியில் மழை நீர் பட்டு விடுகிறது. அதை அவசரமாக எடுத்து உள்ளே வைத்து விட்டு, தன் பெட்டியில் இருந்து இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு போய் சுப்பண்ணாவிடம் கொடுக்கிறார். தன் அலுவலகத்தில் வேலை செய்வபவரிடம் கேட்டு வாங்கி வந்ததாகச் சொல்லி பணத்தைக் கொடுத்து விட்டு வருகிறார் கிருஷ்ணன்.

               சென்னையில் புழுக்கமும், மழையும் கதையில் காட்சிகளாக வருகின்றன. சென்னை நிலம் குளிர்ந்து, வெப்பம் தணிகிற போது கிருஷ்ணனின் குணமும் மாறுகிறது. பாலைவனத்தில் வளர்ந்த கள்ளியின் மீது மழை பொழிகிற போது, பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார் கிருஷ்ணன். பின்புலத்தின் நிலம்சார்ந்த காட்சிகளுக்கும், நம் முன் உரையாடிக் கொண்டிருக்கிற கதாபாத்திரங்களுக்குமான நுட்பமான உளவியல் தொடர்பு இக்கதையில் வெளிப்படுகிறது. அதன் மேல் கூடுதல் கவனத்தை ஈர்ப்பதற்காகவே தலைப்பிலும்கள்ளியை தி.ஜா. வைத்திருப்பார் போலும்.

               மனமாற்றம் அடைந்து கடன் கொடுக்கும் கிருஷ்ணன் கள்ளியில் வருவதைப் போல, தன் பணத்தைக் கேட்டு அலைந்து கொண்டிருக்கிற சரவண வாத்தியார் குழந்தைக்கு ஜூரம்கதையில் வருகிறார்.

               பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கான புத்தகங்களை வெளியிடுபவர் பஞ்சு. சின்னராஜா எம்..,எல்.டி. எழுதியதாக பஞ்சு பதிப்பிக்கும் புத்தகங்களை எழுதித் தருபவர் சரவண வாத்தியார். பஞ்சு தர வேண்டிய நானூறு ரூபாய்க்காக ஆறு மாதங்களாக அலைகிறார் வாத்தியார். கடைசி முறை போன போதுதர வேண்டிய பணம் முந்நூறு ரூபாய்தான்என்று சாதிக்கிறார் பஞ்சு. அதையும் அடுத்த திங்கட்கிழமை தருவதாகச் சொல்கிறார். நானூறா? முந்நூறா? என்ற சண்டையில் கோபப்படும் வாத்தியார் ஒரு வெள்ளைத்தாளில் நானூறு ரூபாயையும் வாங்கிக் கொண்டதாக எழுதிக் கொடுத்து விடுகிறார். பஞ்சுவும் கோபமேறி, அதைக் கிழித்து எறிந்து விட்டு திங்கட்கிழமை முந்நூறை ஆள் மூலம் கொடுத்து விடுவதாகவும், இன்னும் அச்சேறாத கடைசி புத்தகத்தை வாங்கிச் செல்லும்படியும் சொல்கிறார். சரவண வாத்தியார்இனிமேல் உன் வீட்டு குத்துச்செங்கல் ஏற மாட்டேன்என்று என்று கோபத்தோடு வீட்டுக்கு வந்து விடுகிறார். இதெல்லாம் முன்கதை.

               கதை துவங்குகிற இடத்தில் வாத்தியாரின் குழந்தைக்கு ஜூரம் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது. கையிலிருந்த எட்டு ரூபாய் டியூஷன் பணம் ஏற்கனவே தீர்ந்து விட்டது. டாக்டருக்கு கொடுக்க பணம் இல்லை என்ற சூழல். அப்போதுதான் வாத்தியாரின் மனைவி சொல்கிறார். .”இன்னும் ஒரு புத்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே. . அதைத் திருப்பிக் கேக்கறாப்போலவாவது அந்தப் பாவியைப் பார்த்துக்கிட்டு வாங்களேன்.” குத்துச் செங்கல் ஏற மாட்டேன்னு சொல்லிட்டேன் தெரியுமா?” என்கிறார் வாத்தியார். அவர் மனைவி சொல்கிறார்ஏறாம வாசல்ல நின்னவாக்கிலே கேளுங்க”. பணம் கேட்காமல், புத்தகம் கேட்பது போலப் போவது என்று முடிவு செய்து வாத்தியார் பயணத்துக்கும், தன் வீட்டுக்கு திராட்சை வாங்குவதற்கும் எஞ்சிய  ஒரு ரூபாய் அறுபது பைசாக்களை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

               அங்கு போனால் சூழ்நிலையே வேறாக இருக்கிறது. பஞ்சுவின் மனைவி ரத்த வாந்தி எடுத்து, மாலையில் இருந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். வாசலில் நின்று பஞ்சுவை அழைத்த வாத்தியாருக்கு தகவல் தெரிகிறது. உள்ளே போகலாமா, வேண்டாமா? என்று குழம்பி கடைசியில் வீட்டுக்குள் நுழைகிறார். அவர் மனைவியைப் பார்த்து விட்டு, பஞ்சு டாக்டரை அழைத்து உடனே காட்டச் சொல்கிறார். எந்த டாக்டரும் வீட்டுக்கு வந்து பார்க்க வராத சூழலில், வாத்தியார் தானே போய் சில டாக்டர்களை அழைத்துப் பார்க்கிறார். கடைசியில் தன் கூடப் படித்த பராங்குசம் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார். ஒருவழியாக பஞ்சுவின் மனைவியை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை செய்த பிறகு உடல்நலம் தேறுகிறார். வாத்தியார் கையிலிருந்த காசெல்லாம் பயணத்தும், டாக்டரை அழைத்து வந்த வண்டிக்கும் கொடுத்தது போக பத்து நயா பைசா தான் மிச்சமிருக்கிறது. ஒன்றரை மைல் தூரத்திலிருக்கும் தன் வீட்டுக்கு பஸ்ஸில் வராமல் நடந்தே திரும்புகிறார் சரவண வாத்தியார். ஜட்கா ஸ்டாண்டில் நிற்கும் குதிரை இருளில் சிரிக்கிறது. அதன் சப்தத்தைக் கேட்ட வாத்தியாரும் சிரிக்கத் தொடங்குகிறார். நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரிப்பதோடு கதை முடிந்து விடுகிறது.

               குழந்தையின் ஜூரம் என்னாச்சு? என்ற பதைப்பில் துவங்குகிற கதை, பஞ்சுவின் மனைவி சரியாகி விட்டாள் என்ற திருப்தியோடு முடிந்து விடுகிறது. இரண்டு கதைகளுமே மனித மன இறுக்கம் தளர்ந்து, இயல்படைவதை வெவ்வேறு விதங்களில் விளக்குகின்றன. கதைகளின் உரையாடல்கள் மையம் விலகாமல் சென்றாலும், பின்புலத்தில் நிறைய கதாபாத்திரங்களும், அவர்களுடனான உரையாடல்களும் வாசிப்பை செழுமைப்படுத்துகின்றன. தி.ஜா.வின் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும் போது நம் மனநிலையில் அது ஒரு மென்மையான அதிர்வையும், பெரும் அசைவையும் உருவாக்கி விட்டே செல்கின்றன.   

திண்ணை வீரா

               அக்பர் சாஸ்திரியில் இதுவரை நாம் பார்த்த எல்லா கதைகளிலும் வாய்ச்சொல் வீரர்கள் பலரை சந்திக்க முடியும். அவர்கள் முக்கியப் பாத்திரமாகவோ

அல்லது பின்னணி பாத்திரங்களாகவோ இருப்பார்கள். திண்ணை வீரா கதையின் மையப் பாத்திரமே அப்படியான ஒரு நபர்தான். இக்கதைஆல் இந்திய ரேடியோவில் ஒலிபரப்பான கதை. வழக்கமான வாய்ச்சொல் வீரர்கள் தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் தன் மேதமையை வெளிப்படுத்தி, புகழ் தேடிக் கொள்பவர்களாக இருப்பார்கள். ஆனால், ‘திண்ணை வீராகதையில் வரும் கோயிந்து மாமா வேறு வகையானவர்.

               ராமநாதபுரத்திலிருக்கும் தாசில்தார், தஞ்சையிலிருக்கும் நண்பன் செந்திருவைக் காண வருகிறார். செந்துரு தாசில்தாரை தஞ்சைக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறான். “ எங்கள் ஊரை வந்து பாரேன். .தண்ணீர் வாசனையே இல்லாமல், சுற்றிப் பத்து மைலுக்கு ஒரு பச்சைப் புல்லைக் கூட பார்க்க முடியாத சீமையாகப் பார்த்து வசித்துக் கொண்டிருக்கிறாயே. . ? எங்கள் ஊருக்கு வந்து  நாலுநாள் இருந்து பாரேன். . “ பல முறை கடிதம் எழுதியும், நேரில் அழைத்தும் வந்த செந்திரு, தாசில்தார் ஊருக்கு வரும் நாளில் பட்டணத்துக்கு போய்விடுகிறான். தாசில்தாரை தான் வரும் வரை தன் வீட்டில் தங்கும்படி சொல்லி விட்டுப் போகிறான் செந்திரு. தாசில்தார் இரண்டு நாட்களாக செந்திருவுக்காக காத்திருக்கிறார். ‘இங்கு எப்படிப் பொழுது போகப்போகிறதோ?’ என்று பயந்து கொண்டிருந்த தாசில்தாருக்கு, எதிர்வீட்டு கோயிந்து மாமாவின் தூரத்து உரையாடல்கள் நாட்களை வேகமாக நகர்த்துகின்றன. திருடிய பொருட்களை திரும்பி வாங்கித்தரும் வழக்குகள், கடன் பாக்கிகளை வசூலிப்பது போன்ற விஷயங்களை திண்ணையில் அமர்ந்து கொண்டே பேசி முடிக்கும் கோயிந்து மாமாவின் நடவடிக்கைகள் தாசில்தாருக்கு பொழுது போக்காக அமைகின்றன.

               கோயிந்து மாமாதான் கதையின் மையம். தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடியே பல வழக்குகளை விசாரிக்கிறார் அவர். “ஏல. . என்ன கட்டை ரொம்ப துளுத்துப் போச்சு. .?. .எல, உன்னைத்தாண்டா. . ? ஏன் பேசமாட்டியா? இப்ப எழுந்து வந்தேண்ணா. .?” இப்படித் துவங்கும் அவரின் உரையாடல்கள் கோபக்குரலோடு உயர்ந்து, இறுதியாக இப்படி முடியும். “ போட்டுக்கடா. . என்னடா பாக்கிறியே. . ? கன்னத்திலே போட்டுக்கடாங்கிறேன். .பளார் பளார்ணு நாலு போட்டுக்கணும். மாட்டியா? நான்தான் போடணுமா. . ?” பணம் தர வேண்டியவரோ அல்லது திருடியவரோ இப்படி சுயமாக தண்டனை கொடுக்க வைத்து விடுவார் மாமா. திண்ணையில் உட்கார்ந்த படியே ஒரு அங்குலம் கூட அசையாமல்இப்ப எழுந்து வந்தேண்ணா. . “ என்று சொல்லிச் சொல்லியே கடனைத் திருப்பித் தருகிற தேதியையும் சொல்லச் சொல்வார்.

               இப்படியான பல வழக்கு விசாரணைகள் தாசில்தாருக்கு பொழுது போக்காகவும், சில நேரங்களில் கவலையும், பட படப்பும், பயமும் மேலிடவும் வைத்தன. அவருக்கு துப்பறியும் நாவலும், அருணாசலக் கவியின் புத்தகமும் இல்லாமல் பொழுதுகள் போய்க்கொண்டிருந்தன. ஒருவழியாக செந்துரு வந்து சேர்கிறான். கண்ட காட்சிகளை விளக்கி தாசில்தார் ஆச்சரியப்படுகிறார். செந்துரு ஆமோதிக்கிறான். கதையின் இறுதிப் பகுதியில் தாசில்தாரை அழைத்து , செந்துரு கோயிந்து மாமாவின் வீட்டைக் காட்டுகிறான். விளக்கில்லாத இருட்டில் இருவர் திண்ணையிலிருந்து அவரைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போகிறார்கள். “எழுந்து வந்தேனானு சத்தம் போட்டுக்கிட்டே இருக்காரே மாமா. . இப்படித்தான் எழுந்திருக்க முடியும் அவராலேஎன்கிறான் செந்துரு. “மாமாவுக்கு பிறவியிலிருந்தே, இடுப்புக்குக் கீழே ஸ்வாதீனமில்லை. . காலுக்கு வேலை கிடையாது. . தூக்கிட்டுப் போனாத்தான் யாராவது. அதை, ஒருத்தரும் பார்க்கக்கூடாது , அவரு உள்ளே போறதையும், வரதையும்”. மறுநாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கேட்கத்துவங்கும் மாமாவின் கணீர் குரலோடு கதை முடிவடைகிறது.           

               கோயிந்து மாமா, உடலின் இயங்காத பகுதிகளை தன் உரையாடலின் மூலம் இயங்க வைத்துக் கொள்கிறார் என்கிற உளவியலை கச்சிதமான கதை வடிவமைப்போடு, அழுத்தமாகச் சொல்கிறார் தி.ஜா. ஆசிரியரின் குறுக்கீடற்ற தொடர் உரையாடல்கள் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டே செல்கின்றன. சுவாரசியம் குறையாமல் கடைசி வரிக்கு இழுத்து வந்து நிறுத்துகிறது கதையின் ஓட்டம். முடிவைக் கடக்கமுடியாமல் கனத்த மெளனம் வாசகனுக்குள் கவிழ்கிற மாதிரியான எளிய வரிகளோடு கதை முடிந்து விடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் கோயிந்து மாமா தொடர்ந்து கொண்டிருப்பார். தத்துவ உரையாடல்களோ, கோட்பாட்டு இறுக்கங்களோ அற்ற எளிய சொற்களின் வலிமை கதை முழுவதும் வெளிப்படுவது தி.ஜா.வின் தனிச்சிறப்பு.

 

அடுத்த, அர்த்தம் இரு கதைகள்

               1955 ஆம் ஆண்டு கலைமகள் இதழில்அடுத்தசிறுகதையும், அதே ஆண்டில் ஆனந்த விகடனில்அர்த்தம்கதையும் வெளிவந்துள்ளன.

               அடுத்த கதையில் வரும் கோயிந்தராவ் ஆறு குழந்தைகளின் தந்தை. அவரது மனைவி ஏழாவது குழந்தைக்கான பிரசவ வலியில் துவங்குகிறது கதை. இந்தக் கணக்கில் பிறந்து பத்து நாட்களில் வைசூரி நோயால் இறந்து போன முதல் குழந்தை வரவில்லை. ராவின் மனைவி பிரசவவலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரர்கள் பலரும் உதவிக்கு வருகிறார்கள். ஒருவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார், இன்னொருவர் வீட்டு வேலைகளைக் கவனிக்கிறார், மற்றொருவர் ராவுக்குத் தகவல் அனுப்புகிறார். பக்கத்து வீட்டுக்காரர்களின் உரையாடல்களின் வழியாக நகர்கிறது கதை. ராவ் வீட்டிற்கு வந்ததும்ஆம்புலேடத்திற்கு’ (ஆம்புலன்ஸ்) போன் செய்கிறார். இந்த முறை எப்படியும் மனைவியை ஆம்புலேடத்தில் ஏற்றி, ராஜோபச்சாரமாக வைத்தியம் செய்யப் போகிற பெருமையோடு காத்திருக்கிறார் ராவ். வலி உச்சத்தைத் தொடுகிறது. அருகிலுள்ள டாக்டரை அழைத்து வரலாம் என்று சொல்கிறார் பக்கத்து வீட்டுக்காரர். ராவ் ஆம்புலேடத்திற்காக காத்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். வீட்டிலேயே குழந்தை பிறந்து விடுகிறது.

               ராவ் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்கிறார். . “இந்தத் தடவை ரொம்ப லேட்டாப் போயிடுச்சு. . இனிமே, அடுத்த பிரசவத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே ஆம்புலேடத்துக்குச் சொல்லி வச்சிப்பிடணும்”.

               கதையின் போக்கில் மக்கள் தொகைப் பெருக்கம் பற்றியும் தி.ஜா.பேசுகிறார். “ஜனங்கள் நாலு, எட்டு, பதினாறு என்று பெருகினால், உணவுப் பொருள் நாலு, ஆறு, எட்டு என்றுதான் பெருகுமாம். ஆபத்து பெரிதாகத்தான் தோன்றுகிறது”. அதே போல, குழந்தையே இல்லாத பக்கத்து வீட்டுக்காரரும் அவர் மனைவியும் பிரசவத்திற்கு உதவி செய்கிறார்கள். ராவின் மனைவி சொல்கிறார்இந்த வாசுவோட நின்னு போயிடுத்துன்னு நெனச்சேன். பகவான் இன்னும் சோதிக்கிறார் மாமி”. ’பன்னிரெண்டு வருஷமாக விடி விளக்கு வைத்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிற தன்னையுந்தான் பகவான் சோதிக்கிறார் என்ற கோபம் போலிருக்கிறது அவளுக்குஎன்று பக்கத்து வீட்டு கெளரியைப் பற்றிப் பதிவு செய்கிறார்.

               இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் அதே காலத்தில் வெளிவந்த வைக்கம் முகமது பஷீரின் மலையாளக் கதை ஒன்று நினைவுக்கு வந்து விடுகிறது. பல குழந்தைகளை வீட்டிலேயே பெற்ற ஒரு பெண், இந்த பிரசவத்தை டாக்டரிடம் பார்த்துக் கொள்ள வேண்டும் காத்திருப்பாள். கடைசியில் அந்தக் குழந்தையும் வீட்டிலேயே பிறந்து விடும். “டாக்டரைக் கூட்டி வாஎன்று வலியில் கதை முழுவதும் கத்திக் கொண்டேயிருப்பாள் அந்தப் பெண். அது பெண்ணை மையமாகக் கொண்டு கதை சொல்கிறது. தி.ஜா. ஆணை மையமாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதையில் டாக்டர் என்றால், இந்தக் கதையில் ஆம்புலேடம். மக்கள் வாழும் நிலங்கள் மாறினாலும், அவர்களின் பெருமை மாறிவிடுவதில்லை போலும்.

               மருத்துவம் சார்ந்த பதிவு ஒன்று இக்கதையில் மிக முக்கியமானது. அம்மை நோயால் முதல் குழந்தை இறந்தபிறகு, முனிசிபால்டிக்காரர்களின் கெடுபிடியால் ஆறாவது குழந்தையான வாசுவுக்கு அம்மைத் தடுப்பூசி போடுகிறார் ராவ். ’எட்டு மாதம் வரையில் கொழு கொழு என்று மினுமினுவென்று க்ளாக்ஸோ பேபி மாதிரி இருந்தத அந்தக் குழந்தை, அம்மை ஊசிக்குப் பின் வந்த ஜூரத்தில் உடம்பு இளைத்து கருத்துக் கொண்டே வந்தது. அம்மை மருந்தின் வேகம் குழந்தையின் அழகையும், வலுவையும் தின்று கொண்டே வந்தது. செய்யாத வைத்தியம் இல்லை. கழுத்திலும், கையிலும் முடிக்கயிறு வேறு. ஒன்றும் பயனில்லை. கடைசியில், காய்ந்து கருவாடாக வெள்ளை விழியும், எலும்பில் பிடிப்பு விட்டுப் போய்த் தளர்ந்து சுருங்கித் துவளும் தோலும், சாம்பல் பாய்ந்து முன்னே பிதுங்கியிருந்த கீழுதடுமே மிச்சம். குழந்தைக்கு அழகைக் கொடுக்கும் இடங்கள் தேய்ந்து விட்டனஎன்று எழுதியிருக்கிறார் தி.ஜா.

               தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கும் பல நாடுகளில் இருந்து தடுப்பூசி மரணங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளும், புள்ளி விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் அப்படியான பதிவுகளைஅறிவியலுக்கு எதிரானதாகப் போய்விடும்என்று நினைத்துக் கொண்டு கடந்து விடுகிறார்கள். எழுத்தாளர் தமிழ்வாணனின் தடுப்பூசி குறித்த கட்டுரைகள் 1964 இல் வெளிவரும் முன்பே, தி.ஜா. இதனைப் பதிவு செய்துள்ளார். இந்த வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு அவரை அலோபதி மருத்துவத்துக்கு எதிரான மனநிலை கொண்டவராகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இதே தொகுப்பின் பல கதைகளில் அலோபதி சிகிச்சையால் குணமடைந்தவர்களும் வந்து போகிறார்கள். சமகாலத்தில் நடந்த, தான் அறிந்த மருத்துவ நிகழ்வாக தடுப்பூசியின் பின்விளைவை தி.ஜா. பதிவு செய்துள்ளார். தமிழ்ச் சிறுகதைகளில் இது போன்ற மருத்துவப் பதிவுகள் அபூர்வமானவை.

               தொகுப்பின் கடைசிக் கதைஅர்த்தம். இது தனிமையில் வாழும் ஒரு மனிதனையும், மிகச் சிலரே வசிக்கும் ஊரின் நிலையையும் பின்னணியாகக் கொண்ட கதை. திருமணமான நாற்பத்தைந்து நாளில் கிட்டனின் மனைவி அவனை விட்டுப் போய்விடுகிறாள். அப்போதிருந்து இருபது வருடங்களாக தன் தம்பியுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் கிட்டன். அவனுக்கும், இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் மனைவியோடு தனியாக இருக்கும் நபருக்குமான உரையாடல்கள்தான் மொத்த கதையையும் சொல்கின்றன. கோயிலில் விளக்கணைத்துக் கொண்டிருந்த தன் தம்பியை, ஹைதராபாத்தில் ஒரு பெரிய அதிகாரியிடம் சமையலுக்குச் சேர்த்து விடுகிறான் கிட்டன். இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் கிட்டனின் தம்பி தனக்கு திருச்சியில் கல்யாணம் நடக்கப் போவதாக கடிதம் எழுதுகிறான். திருச்சியிலிருந்து மணமக்களை அழைத்து வந்து ஊரில் கிரகப்பிரவேசம் நடத்த முடிவு செய்கிறான் கிட்டன். இருபதாண்டுகளுக்குப் பிறகு தன் வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்பதில் துள்ளிக்குதித்தவாறு வேலை செய்கிறான் கிட்டன்.

               திருமணமான சில நாட்களில், கிட்டனின் தம்பி வீட்டில் அவர்கள் அம்மா கொட்டாங்குச்சிகளில் சேர்த்து வைத்திருந்த புதையலைத் தோண்டி எடுக்கிறான். அதில் இரண்டு பங்கு தனக்கு வேண்டும் எனச் சொல்கிறான். ’கிட்டன் ஒண்டிதானேஎன்ற காரணத்தால் ஒரு பங்கு போதுமென்கிறான் தம்பி. கடைசியில் கிட்டன் அனைத்தையுமே தம்பி வைத்துக் கொள்ளும்படி சொல்லி விடுகிறான். இருக்கும் சொத்துகளையும் பிரிக்கும் படி தம்பி கேட்கிறான். அதிலும்ஒண்டியாகஇருக்கும் கிட்டனுக்கு குறைவாகவே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறான். பிரச்சினை அப்படியே இருக்கும் நிலையில், கதை முடிவுக்கு வருகிறது. ஒரு மலையாளத்துப் பெண்ணை தனது நாற்பத்தைந்தாவது வயதில் திருமணம் செய்து கொள்கிறான் கிட்டன். “சொல்லாம கல்யாணம் பண்ணிட்டேனேன்னு கோச்சுக்காதீங்கோ. . ஒண்டிக்காரனாயிருக்கத் தொண்டுதானே, பொட்டைப் புஞ்சையும், கொட்டாங்குச்சியிலே மூணுலே ஒண்ணும் தர்ரேன்னான். . “ என்று கிட்டன் சொல்வதோடு கதை முடிகிறது.

               ஓய்வுக் காலத்தில் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்று யோசித்துக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர், கிட்டனின் கல்யாணம் குறித்து யோசிக்கத் துவங்கி விடுகிறார். இருபது வருடங்களாக தனியாளாக தம்பியை வளர்த்த கிட்டன், ’ஒண்டிஎன்ற ஒரு சொல்லில் காயப்பட்டோ அல்லது சொத்துகளை விடக்கூடாது என்றோ கல்யாணம் முடித்துக் கொள்கிறான். ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு இந்தக் காரணம் போதாதா? என்று நினைக்கத் தோன்றும் வகையில் கதையின் மையம் அமைந்திருக்கிறது.       

கதைகளின் வழியே. .

               அக்பர் சாஸ்திரியின் பதினோரு கதைகளும் வெவ்வேறான மனிதர்களின் வாழ்வியலையும், நிலப்பகுதியையும், உளவியலையும், நுட்பமான உறவுச் சிக்கல்களையும் வெளிப்படுத்துகின்றன.

               இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டிலிருந்து, 1970 கள் வரைக்குமான காலத்தில் வந்த தமிழ்ச் சிறுகதைகளை எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் அவநம்பிக்கை அலையடிக்கும் கதைகளின் காலம்என்றுதமிழ்ச் சிறுகதைகளின் அரசியல்கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார். ”சுதந்திர இந்தியாவின் மீது எளிய மக்கள் வைத்த நம்பிக்கைகள் சிதைந்த காலம். கனவுகள் பொய்த்துப் போனதைக் கண்டு, வாழ்வே கைத்துப் போன ஒரு காலம். லட்சிய வேகம் இழந்து நாடு திசையிழந்த காலம். அது தமிழ்ச் சிறுகதைகளிலும் பிரதிபலித்தது”.

               காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தி.ஜா.வின் கதை மாந்தர்களும்சுயராஜ்ய இந்தியாவைப் பற்றி அங்கங்கே குறைபட்டுக் கொள்கிறார்கள். அக்கால சென்னையின், தஞ்சையின் நிலப்பரப்பினை காட்சிப்படுத்துகின்ற வகையில் கதையின் பின்புலங்கள் அமைந்துள்ளன. காலத்தின் தட்ப வெட்பத்தையும், விவசாயம், சமூக மாறுதல்களையும் கதைக் காட்சிகள் பதிவு செய்கின்றன. இயல்பாக ஓடும் உரையாடல்களில் நிலத்தின் மதிப்புயர்வும் கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவை எதுவுமே திட்டமிட்டு எழுதப்பட்டவைகளாக இல்லாமல், தன்னியல்பில் கதைத்தன்மையோடு ஊடாடிக் கொள்வதே புனைவின் சிறப்பாக வெளிப்படுகிறது.

               அக்காலத்துப் புனைவுகளைப் பற்றி இப்போது மேலோட்டமாக வைக்கப்படும் விமர்சனம்பிராமண சமூகம் பற்றியவைகளாக மட்டுமேஇருப்பது. அக்காலத்தில் இங்கிருந்த சமூக அடுக்கு முறையில் கல்விக்கான வாய்ப்பினை பெருமளவு பெற்றோர் பிராமணர்களே. எனவே, எழுத்தாளர்களும்வாசகர்களும் இயல்பாக அந்த சமூகம் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அன்றைய தமிழகத்தின் கல்வியறிவு பெற்றோர் விகிதம் 68%. இதில் 98% பேர் பிராமணர்கள். எனவே, வாசகர்களுக்குத் தகுந்த கதைகளாகவும், எழுத்தாளர்கள் அறிந்த சமூக நிகழ்வுகளும் கதைகளின் பிராமணத் தன்மைக்குக் காரணமாக இருக்கின்றன என்று ச.தமிழ்ச் செல்வன்தமிழ்ச் சிறுகதைகள்முன் கதைச் சுருக்கத்தில்கூறுகிறார். அதே நேரம், அனைவருக்கும் கிடைக்க வேண்டிய கல்வி பல சமூகங்களுக்கு கிடைக்காமல் போனதைப் பற்றி தி.ஜா.வின் எழுத்துகளில் எந்தக் குரலும் பதிவாகவில்லை.

               பிராமண சமூகம் பற்றிய கதைகளாகவே தி.ஜா.வின் கதைகள் அமைந்திருந்த போதும், சுய சாதி விமர்சனத்தை அவர் முன்வைக்கத் தவறவில்லை. தன் மனதுக்கு தவறெனத் தோன்றுவதை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் தி.ஜா. வெளிப்படுத்தி விடுகிறார். சக மனிதர்களை மதிக்காத தன்மை, பொருளாதாரத்தை நோக்கி ஓடும் வாழ்வு, தியானம் தபசுகளைப் பின்பற்றும் மனிதர்களைப் பற்றிய முரண்கள், சந்நியாசத்தைக் கேள்விக்குள்ளாக்கும் உரையாடல்கள் என்று தொகுப்பின் எல்லா கதைகளிலும் விமர்சனப்பூர்வமான எழுத்து வெளிப்பட்டிருக்கிறது. தி.ஜா.வின்மோகமுள்ளின் ஒரே ஒரு காட்சி பிராமண விதவைகளின் நிலையை வெளிப்படுத்தி விடும். ”மூணு வயசில் கணவனை இழந்த விதவைஎன்று ஒரு மொட்டையடித்து, முக்காடு போட்டுக் கொண்ட கிழவியை அறிமுகம் செய்வார். . . அவருக்கும் அந்த கதைக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமலேயே. இதே போன்ற அழுத்தமான விமர்சனங்கள் சிறுகதை முழுவதும் வெளிப்படுகின்றன.

               தி.ஜா.வின் இயற்கை சார் வாழ்வு குறித்த விருப்பமும், அபிமானமும் அக்பர் சாஸ்திரி, துணை உள்ளிட்ட கதைகளில் வெளிப்படுகிறது. ஆனால், ‘இயற்கைஎன்ற ஒற்றைச் சொல்லை வைத்து பழமைவாதியாக மதிப்பிட்டு விடக் கூடாது. அக்பர் சாஸ்திரியின் உரையாடலே அதனை வெளிப்படுத்தி விடும். “அப்படியே எங்க அம்மா அப்பா செஞ்ச தப்பையும் உணர்ந்துனுட்டேன். . எனக்குப் பதினேழு வயசிலே கலியாணம் பண்ணி வச்சாலே அதைச் சொல்றேன். . என் பிள்ளைகளுக்கெல்லாம் முப்பது வயசுலதான் கலியாணம் பண்றது. பெண்களுக்கு இருபத்தியிரண்டு வயசுக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்றதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். . .நீர் பாக்குறது எனக்குப் புரியறது. . என்னடாது ஒரு பக்கம் சுக்குக் கஷாயம், கருவேப்பிலைக் குழம்புன்னு ரொம்பப் பாட்டியா இருக்கான். . .இன்னொரு பக்கம் பார்த்தா ரொம்பஅல்ட்ராவாஇருக்கேன்னு நினைக்கிறீர். . ”

               உலகத்தில் இருக்கும் நல்லதெல்லாம் சேர்த்துக் கொண்டு தனக்கென்று வாழும் முறையை ஏற்படுத்திக் கொண்ட அக்பர் சக்கரவர்த்தி போலதான் இருப்பதாக அக்பர் சாஸ்திரி சொல்வார். பழமைவாதத்திற் கெதிரான மனநிலையையும், நவீனச் சிந்தனைகளையும், முன்னோர் வாழ்வின் நல்ல அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் தன்மையே கதைகளில் வெளிப்படுகின்றன.

               1950 – 63 வரைக்கும் வெளிவந்த கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவைகள் மீதான ஒட்டுமொத்த விமர்சனமாக, சமகால மக்களின் துரங்களையும், அரசியல்சமூக விளைவுகளையும் பதிவு செய்யாத கதைகள் என்பதை முன்வைக்க முடியும். அதே காலத்தில் கதைகளில் சித்தரிக்கப்பட்ட தஞ்சைப் பகுதியில்தான் ஆண்டான் அடிமை முறையும், சாதீய அடிப்படையிலான ஒடுக்கு முறைகளும் உச்சத்திலிருந்தன. சாணிப்பால், சவுக்கடிகளும், கொடூரமான சித்திரவதை முறைகளும் தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக இருந்த காலத்தில் தி.ஜா.வின் கதைகளில் எந்த ஒன்றும் அதனைப் பேசுபொருளாக்கவில்லை. சமகாலத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டிய, குரல் எழுப்ப வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு உண்டா? என்று யோசித்தால், மொத்த சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வுகள் கல்வியறிவு பெற்ற, வாசிப்பை அன்றாடக் கடமையாகக் கொண்டுள்ள எழுத்தாளருக்குத் தெரியாமல் போக வாய்ப்பேயில்லை. சமூகத்தின் மனசாட்சியாகக் கருதப்படுகிற எழுத்தாளர், தன்னை உலுக்கிறவற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

               தி.ஜா.வின் கதைகள் அரசியல் பார்வையை வெளிப்படுத்தாத, ஆனால் சகமனிதனின் மீதான நேசத்தை வலியுறுத்தும் கதைகளாக வெளிப்பட்டிருக்கின்றன. எளிய மொழிநடையும், ஆற்றொழுக்கான கதை ஓட்டமும், சமூக மாறுதல்களை காட்சிப்படுத்தும் ஆற்றலும் ஒருங்கே கொண்ட தி.ஜா. தன் கதைகளில் இன்னும் கூடுதலான சமூக எதிர்பார்ப்பு பற்றியும், அரசியல் பார்வையையும் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பது என் எதிர்பார்ப்பு. இருபத்தோராம் நூற்றாண்டு வாசகனாக, 1950 களின் வரலாற்றைப் பார்க்கும் ஒரு சாமானிய வாசகனின் புரிதல்.

               தி.ஜா.வின் இக்கதைகள் அற்புதமான வாசிப்பு அனுபவத்தையும், ஆழமான உளவியல் புரிதலையும், சிறுகதை வடிவம் குறித்த கச்சிதமான வரையறைகளையும் புரிந்து கொள்வதில் ஈடு இணையற்ற பங்கேற்றுகின்றன.

               கேள்வி கேட்பதில் பிரியமுள்ளவர்கள் நான் ஏன் எழுதுகிறேன் என்று அடிக்கடி கேட்பதுண்டு. மனநிலைக்குத் தக்கவாறு பல்வேறு விடைகளை நான் தருவதுண்டு. ஒரு சிறுவனைப் போல, நான் அன்றாட உலகைப் பார்த்து வியக்கிறேன், சிரிக்கிறேன், பொருமுகிறேன், நெகிழ்கிறேன், முஷ்டியை உயர்த்துகிறேன், பிணங்குகிறேன், ஒதுங்குகிறேன், சில சமயம் கூச்சல் போடுகிறேன்என்று 1979 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றுக் கொண்டு உரையாற்றும் போது குறிப்பிடுகிறார் தி.ஜா. அவர் குறிப்பிட்டதைப் போலவேஅக்பர் சாஸ்திரிகதைகள் சமூகம் குறித்த அனைத்தையும் செய்கின்றன. எந்தக் காலத்திலும் தமிழ்ச் சிறுகதைகளை அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் தி.ஜா.வை வாசிக்காமல் நோக்கம் நிறைவு பெறாது என்பது நீடித்த உண்மையாக மாறிவிட்டது.

               சிறுகதை வரலாற்றில் தனது அழுத்தமான தடங்களைப் பதிவு செய்து சென்றிருக்கிறார் தி.ஜா. நூற்றாண்டில் மட்டுமல்ல. . ஆயிரமாவது ஆண்டிலும் அவருடைய கதைகள் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டேயிருக்கும்.

#

நன்றி : “ஜானகிராமம்” நூல் - காலச்சுவடு பதிப்பகம்