புதன், 25 மே, 2022

மருத்துவத்தின் மறுமலர்ச்சி டாக்டர் பஸ்லுர் ரஹ்மான்- சில நினைவுகள்

-        அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் - 

டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் – இந்தப் பெயரை முதன் முதலில் எப்போது கேள்விப்பட்டேன்..? நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான இந்தப் பெயர், என் வாழ்வினை புரட்டிப் போட்ட நாளை எப்படி மறக்க முடியும்..? இந்தப் பெயர் அறிமுகமான அதே நேரத்தில், என் பயணமும், இலக்கும் சிதைந்து சின்னாபின்னமான அந்த நிமிடத்தை இப்போதும் மனம் அப்படியே உறைநிலையில் வைத்திருக்கிறது.

பள்ளிப் படிப்பினை நிறைவு செய்து, சார்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆய்வுக் கூட தொழில்நுட்பம் படித்துக் கொண்டிருந்த 1996 ஆம் ஆண்டு இறுதி. மருத்துவத் துறையில் பணியாற்றப் போகிறோம் என்ற ஆர்வத்தில், பல மருத்துவ மாத இதழ்களை ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது வந்து கொண்டிருந்த இதழ்களில் ஹெல்த் அண்ட் பியூட்டி எனும் இதழ் மிகவும் முக்கியமானது. அலோபதி குறித்த செய்திகள், கட்டுரைகள் மட்டுமல்லாமல் மரபுவழி மருத்துவங்கள் குறித்த கட்டுரைகளும் அதில் வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி ஒரு நாள் ஹெல்த் அண்ட் பியூட்டி இதழை வாசித்துக் கொண்டிருக்கும் போதுதான் டாக்டர் பஸ்லுர் ரஹ்மான், டாக்டர் சித்திக் ஜமால் என்ற இரு பெயர்கள் கண்ணில் பட்டன. அதற்கு முன்பு அந்தப் பெயர்களை நான் கேள்விப்பட்டதில்லை.

கட்டுரையை எழுதியவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்று சரி பார்த்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். ஏன் சரிபார்க்க வேண்டும்? ஒரு சித்த மருத்துவரோ, அக்குபங்சர் மருத்துவரோ எழுதியிருந்தால் அறிவியலுக்குப் புறம்பான செய்திகள் தான் இருக்கும் என்று கல்லூரியின் வழியாக நாங்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தோம். அப்படி எதையாவது படித்து குழம்ப வேண்டியதில்லை என்பதற்காக, கட்டுரையை எழுதியவர் ”தகுதியானவரா?” என்று சரிபார்த்துக் கொள்வது வழக்கம். கட்டுரை எழுதியிருந்தவர்களில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்து டி.வி. என்ற ஒரு சிறப்புப் படிப்பையும் முடித்திருந்தார். இன்னொருவர் எம்.பி.பி.எஸ்.முடித்து எம்.டி. வேறு முடித்திருந்தார். ஆங்கில மருத்துவம் பயின்றவர்கள் பொய் சொல்ல மாட்டார்களல்லவா? அப்படி சரிபார்த்து, வாசித்து முடித்த மூன்று பக்கக் கட்டுரை என் வாழ்க்கையை திருப்பிப் போட்டது. அலோபதியின் சிறப்பேஅதன் உடனடி குணம்தான் என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையை உடைத்தெறிந்தது அந்தக் கட்டுரை.

நாம் சாப்பிடும் வலி நிவாரணிகள் வலியை நீக்குவதில்லை; வலி ஏற்பட்டுள்ள பகுதிக்கே செல்வதில்லை. மாறாக, மூளையில் வலி உணரும் நரம்புக்கற்றையை தற்காலிகமாக தூங்க வைத்து விடுகின் என்ற உண்மையை டாக்டர் சகோதரர்கள் அக்கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார்கள். பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கும் ஒரு விஷயம் உடைந்து தரைமட்டமாகிப் போனால் என்ன செய்ய முடியும்? அப்படியான ஒரு மனநிலையை என்னிடம் உருவாக்கியது அந்த எழுத்து. நான் என்னுடைய எதிர்காலமாகவும், இலக்காகவும் எண்ணிக் கொண்டிருந்த அலோபதி உலகின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்தது டாக்டர் சகோதரர்களின் கட்டுரை. அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இரவுத் தூக்கம் தொலைந்து போனது. ’எப்படிப்பட்ட ஏமாற்று வேலை இது? இது எப்படி அறிவியலாகும்?’ என்று கேள்விகள் உருவாகிக் கொண்டேயிருந்தன. அதே இதழின் பழைய பிரதிகளை புத்தகக்கடைகளில் தேடி, வாங்கி, டாக்டர் சகோதரர்களின் பழைய கட்டுரைகளையும் வாசித்து, குழப்பத்திலிருந்து தெளிந்தேன். அப்போது என்னுடைய பாதையும், பயணமும் எது என்று தெளிவில்லாவிட்டாலும், அலோபதி இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அந்த நாளில் இருந்து, இந்த நிமிடம் வரை அலோபதியின் எந்த ரசாயன மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு அழுத்தமான முடிவை எடுக்கும் உறுதியை அந்த நாள் எனக்கு வழங்கியிருந்தது… 26 ஆண்டுகளுக்குப் பின்னும், இப்போதும் அதே முடிவில் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருப்பதற்கு மூல காரணம் – அந்தக் கட்டுரைதான்.

 

டாக்டர் சகோதரர்கள், டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் எனும் சொற்கள் அப்போதிருந்து எனது தினசரி உரையாடல்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டிருந்தது. தினமும் ஒருமுறையாவது இந்தச் சொற்களை உச்சரிக்காவிட்டால் ஒரு நாள் முழுமைபெறாது என்ற அளவிற்கு அவர்களுடைய எழுத்துகள் என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.        

ஹெல்த் அண்ட் பியூட்டி மாத இதழில் டாக்டர் சகோதரர்களின் கட்டுரைகள் அப்போது உருவான நெருக்கடிகளால் வெளியாவது நிறுத்தப்பட்டது. பின்பு, ஃபேமிலி ஹெல்த் எனும் புதிய மாத இதழில் அவர்கள் எழுதி வந்தார்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடம் டாக்டர் சகோதரர்களின் கட்டுரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. மருத்துவ உண்மைகள் எளிய மொழியில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் அவர்களின் வழியாக வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தன. 1999 ஆம் ஆண்டு அலோபதி மருத்துவக் கவுன்சில் டாக்டர் சகோதரர்களின் மீது ஒரு வழக்கினைத் தொடுத்திருந்தது. மருத்துவ உண்மைகளை வெளியில் பகிரங்கப்படுத்தி, பொதுமக்களை அச்சமூட்டியதற்காக அந்த வழக்கு தொடுக்கப்படுவதாக கவுன்சில் விளக்கமளித்தது. நான் உட்பட ஆயிரக்கணக்கான வாசகர்கள் மருத்துவக் கவுன்சிலுக்கு எதிராக கடிதங்களை எழுதினோம். பத்திரிகைகளுக்கும் அனுப்பினோம். ஃபேமிலி ஹெல்த இதழும் டாக்டர் சகோதரர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்தது. ஆனல், அவர்களுடைய கட்டுரைகளை வெளியிடுவது திடீரென்று நிறுத்தப்பட்டது. ’அவர்களுக்கு எழுத நேரமில்லை’ என்ற பொருந்தாத அறிவிப்பு அந்த இதழில் வெளியாகியிருந்தது. இணையதளமும், அலைபேசிகளும் இல்லாத அக்காலத்தில் டாக்டர் சகோதரர்களின் எழுத்துகளில் இருந்து, நானும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான வாசகர்களும் பிரிக்கப்பட்டோம். ஆனாலும், அவர்களுடைய எழுத்துகளின் தாக்கம் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

* * *

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு, டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் எனும் பெயரை 2002 ஆம் ஆண்டின் இறுதியில் கம்பம் அக்குபங்சர் சிகிச்சை மையத்தில், எனது மரியாதைக்குரிய ஆசான் அக்கு ஹீலர் போஸ் அவர்களின் மூலம் கேட்கிறேன்.

டாக்டர் சகோதரர்களின் எழுத்துகள் வாயிலாக அக்குபங்சர் சிகிச்சையின் அற்புதங்களையும், ஹோமியோபதி மருத்துவம் குறித்தும், அலோபதியின் மோசடி குறித்தும் அறிந்து கொண்டிருந்தேன்.  சார்பு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அக்குபங்சர் கற்க முயற்சி செய்தேன். அப்போது டாக்டர் சகோதரர்களிடம் சிகிச்சை எடுப்பதற்கு ரூ 2500 கட்டணம். அக்குபங்சர் பயில்வதற்கு சில லட்சங்கள் தேவைப்படும் என்று கேள்விப்பட்டு, வேறு எங்காவது கற்கலாம் என்று முயற்சித்தேன். டாக்டர் சகோதரர்களின் எழுத்துகள் அறிமுகம் செய்த ஒரு புள்ளி சிகிச்சை, பிற மருத்துவக் கலப்பில்லாத அணுகுமுறை, தத்துவ அடிப்படையிலான நோயறிதல்… இவைகளைத் தேடி அலைந்து, பின்பு அக்குபங்சர் கற்கும் முயற்சியைக் கைவிட்டேன். அதன்பிறகு, ஹோமியோபதி படித்துவிட்டு, அலோபதி மருத்துவத்துறையில் இருந்து வெளியேறினேன். மரபு வழி மருத்துவத்திலும் ஏமாற்றும், மோசடியும் நிரம்பி வழிவதைக் கண்டு, மருத்துவத்துறையின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்குப் போனேன். அப்புறம் கேரளா வாசம். எல்லாம் முடிந்து, நமக்குத் தெரிந்த சரியான மருத்துவத்தைப் பின்பற்றி சிகிச்சை அளிப்போம் என்ற முடிவோடு, ஊர் திரும்பினேன். 2002 ஆம் ஆண்டின் இறுதியில்தான் என் சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு அக்குபங்சர் சிகிச்சை மையம் உருவாகி இருந்தது பற்றி கேள்விப்பட்டு, பெரிய தயக்கத்திற்குப் பிறகு அங்கு சென்றேன். அங்குதான் நான் எழுத்துகளின் வாயிலாக மட்டுமே அறிந்திருந்த சரியான அக்குபங்சரை நேரில் கண்டேன். அக்கு ஹீலர் போஸ் முகமது மீரா அவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

நானும், அவரும் உரையாடத் துவங்கிய சில நிமிடங்களில் டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் எனும் பெயரை உச்சரித்தார் அக்கு ஹீலர் போஸ். அதன் பிறகு, தினமும் அவருடைய சிகிச்சை மையத்திற்குச் செல்லும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். டாக்டர் சகோதரர்களின் எழுத்துகள் – சிகிச்சையாக, செயல்பாடாக மாறி வெளிப்பட்ட பலன்களை கண்கூடாகக் கண்டுகொண்டிருந்தேன். நாங்கள் இணைந்து, கம்பம் அகாடமி எனும் அக்குபங்சர் கல்வி நிறுவனத்தை உருவாக்கினோம். நான் அப்போது ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தேன். உரையாடலின் வழியாகத்தான் தெரிந்தது… டாக்டர் சகோதரர்கள் 1999 ஆம் ஆண்டின் இறுதியிலேயே ஹெல்த் டைம் எனும் மாத இதழைத் துவங்கி, தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதும், அக்குபங்சர் மருத்துவத்தைக் கைவிட்டு விட்டு ”இறைவழி” எனும் நம்பிக்கை மருத்துவத்தைத் துவங்கியிருக்கிறார்கள் என்பதும்.

திடீரென்று ஒரு நாள் ஹீலர் போஸ் கேட்டார்…”டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் மதுரை வருகிறார்… நான் குடும்பத்தோடு சந்திக்கப் போகிறேன்… நீங்களும் வருகிறீர்களா…?” எழுத்துகளிலும், கருப்பு வெள்ளை புகைப்ப ட த்திலும் மட்டுமே அவரைப் பார்த்திருக்கும் நான் அந்த வாய்ப்பினைத் தவற விடுவேனா…? சந்தித்தேன். அவருடைய பெயரை முதல் முறையாக வாசித்த போதே, வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை அடைந்திருந்த எனக்கு, அந்த முதல் சந்திப்பு என்ன வழங்கியது தெரியுமா…? இன்னொரு மாற்றத்தை பரிசாக வழங்கியது.

மதுரையில் நடந்த இறைவழி மருத்துவக் கருத்தரங்கில் முதல் முறையாகக் கலந்து கொண்டேன். டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களுடைய அழுத்தமான குரலும், ஊடுருவும் பார்வையும் என்னை மேலும் அவரை நோக்கி ஈர்த்தது. அவருடைய உரையில் இறைநம்பிக்கை குறித்த புதிய பார்வையும், சடங்குகளின் மீதான கேள்விகளும் என்னை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. கருத்தரங்கம் முடிந்ததும்  ஹீலர் போஸ் என்னை அவருக்கு அறிமுகம் செய்தார். ”என்ன செய்கிறீர்கள்..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். ”நான் ஹோமியோபதி பிராக்டிஸ் செய்கிறேன்” என்று பதிலளித்தேன். ஒரு புன்னகையோடு என்னை உற்றுப் பார்த்தார். “மனநிறைவோடு செய்கிறீர்களா…?”. இப்படி ஒரு கேள்வியை இதற்கு முன்பு யாரிடமும் எதிர்கொண்டதில்லை. மனநிறைவு என்றால் என்ன? என்று புரியவில்லை., எனவே, அந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்கவில்லை. புன்னகையோடு, யோசித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். “சரிம்மா… நல்லா யோசிச்சு அடுத்த மாசம் பதில் சொல்லுங்க… குழப்பமா இருந்தா ஹோமியோபதியை முதல்ல இருந்து படிங்க… பிரார்த்தனையோடு, நடுநிலையா இருந்து படிங்க… பார்ப்போம்..” என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.

எனக்குள் ஒன்றன் பின் ஒன்றாக கேள்விகள் பிறக்கத் துவங்கின. ஹோமியோ நல்ல மருத்துவம்தானே? நாம் அதை சரியாகத்தானே செய்கிறேன்? ஆனாலும், ஒரு புதிய நோயாளி வருகிற போது ஆர்வம் இருக்கும் அதே நேரத்தில், இது சரிதானா? என்ற குழப்பமும் வருகிறதே..? அப்படியானால் நான் மனநிறைவோடு அதைச் செய்யவில்லையா…? நூற்றுக்கணக்காக கிளம்பிய கேள்விகளால் திணறி, டாக்டர் சொன்னது போல ஹோமியோபதியை மறுபடியும் முதலில் இருந்து படிக்க முடிவு செய்தேன். முதலில் தத்துவம், அப்புறம் மருந்துகளின் குணங்கள், பிறகு மருத்துவப் பயன்பாடு என்ற வரிசையில் நூல்களைத் தேர்வுசெய்து வாசிக்க முடிவு செய்தேன். வாசித்து முடித்து, விடை கிடைக்கும் வரைக்கும் கிளினிக்கிற்கு விடுமுறை விட்டேன். சுமார் ஒரு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்… வாசித்து முடிந்து, குழப்பம் தெளிந்து, இனி ஹோமியோபதி பிராக்டிஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். டாக்டருக்கு ஒரு கடிதத்தையும், என் புரிதல் குறித்து விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதி அனுப்பினேன். கேள்வி கேட்டவரிடம்தானே பதில் சொல்ல முடியும்..? ஆக, டாக்டருக்கும் எனக்குமான முதல் சந்திப்பில் எனது  மருத்துவமும், இலக்குமாக நம்பிக் கொண்டிருந்த ஹோமியோபதியைக் கைவிட்டேன்.

அடுத்த சந்திப்பில் டாக்டர் என்னை தனியாக அழைத்தார். ”கடிதத்தில் எழுதியதெல்லாம் உங்கள் உண்மையான கருத்துதானே..?” என்று கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டார். நானும் ஆமாம் என்று பதிலளித்தேன். ”உங்கள் கருத்தினை மற்றவர்களுக்குச் சொல்வதில் தயக்கம் இருக்கிறதா..?” என்று கேட்டார். நான் யோசித்து விட்டு “இல்லை” என்றேன். அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “உங்கள் கடிதத்தை ஒரு கட்டுரையாக ஹெல்த் டைமில் வெளியிடப் போகிறேன்… நிறைய கேள்விகளும், எதிர்ப்பும் வரும்…” என்று சொன்னார். அடுத்த மாத இதழில் என் கட்டுரை பிரசுரமாகி இருந்தது. கட்டுரையோடு என் தொடர்பு எண்ணும் அச்சாகியிருந்தது. தினமும் பத்துப் பேராவது அழைத்து போனில் திட்டுவார்கள். நான் எழுதியதில் எதுவும் தவறாக இருந்தால் குறிப்பிடுமாறும், கேள்விகள் இருந்தால் கேட்குமாறும் ஒவ்வொருவரிடமும் கேட்டேன். நான் பேசியதை யாரும் காதில் வாங்கவில்லை. அதற்கு முன்பு அவ்வளவு வசைகளையும்., சாபங்களையும் நான் எதிர்கொண்டதே இல்லை. சில ஹோமியோ பத்திரிகைகளின் தலையங்கத்திலேயே என்னைப் பற்றி எழுதியிருந்தார்கள். சில மருத்துவச் சங்கங்கள் எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.


அடுத்த முறை டாக்டரை நேரில் சந்தித்த போது..” நிறைய பேர் திட்டினாங்களா…? உண்மையைச் சொல்லும் போது இப்படித்தான் நடக்கும்… நாம் சத்தியத்தின் மீது உறுதியாக நின்றால் எல்லாம் சரியாகும்… பயந்து பின்வாங்கினால் தீமைக்கு துணை போய்விடுவோம்..” என்று சொன்னார். ”ஹோமியோபதி பற்றி யார் என்ன கேட்டாலும் பதில் சொல்லி விடுவீர்களா…?” என்று திடீரென கேட்டார். நான் தயங்கிக் கொண்டே தலையசைத்தேன். “ஹெல்த் டைமில் ஒரு கட்டுரையை நான் வெளியிடுகிறேன் என்றால் அது  என் கருத்து என்றுதான் அர்த்தம்…. ஹோமியோபதியைப் பற்றிய அந்தக் கருத்தும் இனி என்னுடையதுதான்… என்ன கேள்வி வந்தாலும், உங்கள் சார்பாக நானே பதிலளிக்கிறேன்… நீங்கள் பார்வையாளராக நின்று பாருங்கள்…”. டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் என் பக்கபலமாக நிற்கிறார் என்று நினைத்த போதே, எம் தயக்கமும், குழப்பமும் என்னிடமிருந்து விடைபெற்றன. என் ஒல்லியான உடலில் இருந்து, ஒரு வலுவான மனம் உருவானதை அப்போது உணர்ந்தேன். அதன் பிறகு, ஹெல்த் டைமில் பல மாதங்களுக்கு ஹோமியோ குறித்த விவாதங்கள் தொடராக வெளிவந்தன. வந்த அத்தனை கேள்விகளுக்கும் ஆழமான பதில்களை டாக்டர் வழங்கினார். கடைசியில், டாக்டருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஹோமியோபதி டாக்டர்கள் அவதூறுகளைப் பரப்பி விட்டு, விவாதத்திலிருந்து விலகிக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழித்து, சர்வதேச அளவில் அலோபதி மருத்துவர்கள் ஹோமியோபதி ஒரு போலி மருத்துவம் என்று கட்டுரைகளை எழுதினார்கள். அப்போது டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் ஹோமியோபதிக்கு ஆதரவாக நின்று, அலோபதி மருத்துவர்களுக்கு எதிர்வினை ஆற்றினார். அடுத்த முறை டாக்டரை நேரில் சந்தித்த போது “ஹோமியோபதியை ஏன் ஆதரித்தீர்கள்…?” என்று கேட்டேன். aப்போது அவர் சொன்ன பதில் அவருடைய தொலைநோக்குப் பார்வை எனக்குப் புரியவைத்ததோடு, ஒரு பிரச்சினை எப்படிக் கையாள வேண்டும் என்ற உயர்ந்த வழியை எனக்கு அளித்தது. ” ஹோமியோபதியைப் பற்றி நாம் விமர்சிப்பது, கேள்வி கேட்பது எல்லாம் அந்த மருத்துவம் தனது தவறுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும், இன்னும் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான். ஆனால், அலோபதி ஹோமியோபதியை ஒழிக்க நினைக்கிறது. அலோபதிக்கு எதிராக எந்த மருத்துவம் வளர்ந்தாலும் அதை அழிப்பது அலோபதியின் குணம். நாம் ஹோமியோவைப் பற்றிப் பேசுவது நண்பர்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடு. அலோபதி டாக்டர்கள் பேசுவது எதிரியை அழிக்கும் திட்டம். நாம் நண்பர்களுடன் இருப்பதுதான் சத்தியத்தின் வழியாக இருக்கும். முதலில் அலோபதியின் சதியை முறியடிப்போம். அலோபதி எனும் அரக்கனின் தாக்கம் குறைந்த பிறகு, நண்பர்களுடனான நமது சண்டையை வைத்துக் கொள்ளலாம்” நட்பு முரணுக்கும், பகை முரணுக்குமான நுட்பமான வேறுபாட்டினை எனக்குப் புரிய வைத்தது அவரது பதில். செயல் ஒன்றாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் நோக்கத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானது என்பதையும் நான் உணர்ந்து கொண்ட நேரம் அது. இப்போது வரை சூழலை எதிர்கொள்வதற்கான பார்வையை அன்று டாக்டர் எனக்கு வழங்கினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.  

* * *

இங்கு நான் பகிர்ந்திருப்பது இரண்டே விஷயங்களைத்தான். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் இருந்து பெற்றது எண்ணிக்கையில் அடங்காத விஷயங்களை. டாக்டருடைய கட்டுரைகளின் வழியாகத்தான் நான் அலோபதியைக் கைவிட்டு, மரபுவழி மருத்துவங்களுக்கு வந்து சேர்ந்தேன். அவருடைய கேள்வியின் வழியாகத்தான் ஹோமியோபதியைக் கைவிட்டு, அக்குபங்சர் கற்றேன். அவருடைய தாக்கதால்தான், என் எழுத்துகளும், மருத்துவச் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன. அவருடைய வழிகாட்டுதலில்தான் சடங்குகள், சம்பிரதாயம் இல்லாமல் என் திருமணம் நடந்தது. ஹீலர் போஸ் அவர்களை நான் சந்திக்கவில்லை என்றால், என் அக்குபங்சர் பயணமே துவங்கியிருக்காது. அவர் டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களின் தாக்கத்தால் மருத்துவத்துறைக்கு வந்திருக்கவில்லை என்றால், இன்றைய கம்பம் அகாடமியோ, ஹீலர்கள் கூட்டமைப்போ இருந்திருக்காது.

வாசிப்பில் துவங்கிய என் 25 ஆண்டுகால மருத்துவப் பயணமே டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் வழங்கிய பரிசுதான். தனிப்பட்ட வாழ்விலும், மருத்துவப் பயணத்திலும், சமூகச் செயல்பாடுகளிலும் அவருடைய தாக்கம் இன்றி என்னுடைய எந்தச் செயலும் இல்லை. அனைத்தின் பின்புலமாக அவரே விளங்குகிறார்.

தனிப்பட்ட என் ஒருவனுடைய வாழ்க்கையிலேயே இவ்வளவு தாக்கத்தை டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் ஏற்படுத்தியிருக்கிறார் என்றால், அவருடைய வாழ்நாள் எல்லாம் எவ்வளவு பெரிய மக்கள் திரள் தாக்கம் பெற்றிருக்கும்..? மொத்த மருத்துவத் துறைக்கும் எப்படிப்பட்ட பங்களிப்புகளை அவர் செய்திருப்பார்…? இன்று இந்தியா முழுவதும் கம்பீரமாக எழுந்து நிற்கும் அக்குபங்சர் மருத்துவத்திற்கான ஆணி வேர் அவர்.

# தத்துவக் குழப்பத்தாலும், பயன்பாட்டுச் சிக்கல்களாலும் சீன அக்குபங்சரின் பலபுள்ளி சிகிச்சை முறை இன்னொரு அலோபதியாக உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் டாக்டர் சகோதரர்களின் வருகை மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அக்குபங்சரின் பலன்களைக் கண்ட அவர்கள் அதன் தத்துவத்தையும், நோயறிதல் முறைகளையும் மீட்டெடுத்தார்கள். பல லட்சம் நோயாளிகள் ஒரு புள்ளி சிகிச்சையின் மூலம் குணமடைந்ததை  வரலாறாக்கினார்கள்.

# அக்குபங்சர் என்ற மருத்துவத்தை வெறும் வலிநிவாரணியாக உலகமே சிறுமைப்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்த போது, அது ஒரு முழுமையான மருத்துவம் என்பதை தங்கள் சிகிச்சை மூலம் உணர்த்தியவர்கள் டாக்டர் சகோதரர்கள்.

# சிகிச்சை அளிக்க வேண்டிய மிகச்சரியான புள்ளியைக் கண்டுபிடிப்பதற்கு அடிப்படைத்தேவை தத்துவ அடிப்படையிலான நோயறிதல் முறை. சுய தேடலின் அடிப்படையில் நாடிப்பரிசோதனை முறையின் குழப்பங்களைக் களைந்து, புதிய கோணத்தை உருவாக்கியவர்கள் டாக்டர் சகோதரர்கள்.

# அலோபதி மருத்துவத்தின் சிகிச்சை முறையின் ஏமாற்று வேலைகளை, நோயறிதல் முறைகளின் போதாமையை, வணிகமயமானதன் கொடூரத்தை தம் எளிய எழுத்துகளால் உலகறியச் செய்தவர்கள் டாக்டர் சகோதரர்கள். உடலின் இயக்கத்தை, நோய்களுக்கான காரணிகளை..மருத்துவ உண்மைகளை பாமரருக்கும் புரியும் வண்ணம் எழுதியவர்கள் அவர்கள்.

# இந்தியாவிற்கு அக்குபங்சர் மருத்துவம் அறிமுகமாகி பல பத்தாண்டுகள் ஆகியும், நூற்றுக் கணக்கான மருத்துவர்களால் செய்ய முடியாததை இரண்டே பேர் செய்து காட்டினார்கள். 1984 ஆம் ஆண்டில் டாக்டர் சகோதரர்களின் அக்குபங்சர் வருகைக்குப் பிறகு, மொத்த அக்குபங்சர் துறையும் தன்னை புதுப்பித்துக் கொண்டது. இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட அக்குபங்சரில் டாக்டர் சகோதரர்களின் பணிகளையும், அவற்றின் தாக்கத்தையும் கழித்து விட்டால் அலோபதியின் துணை மருத்துவமாக மாறிப்போன அக்குபங்சர் மட்டுமே எஞ்சியிருக்கும்.

சாதாரண மக்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு, அலோபதியின் விளைவுகள் பற்றிய புரிதல், அக்குபங்சர் நாடிப்பரிசோதனை துவங்கி சிகிச்சை முறை வரைக்குமான தெளிவு, மதங்கள் கடந்த சடங்குகள் கடந்த இறைநம்பிக்கை… என டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்கள் சமூகத்திற்கு அளித்த கொடைகள் எண்ணிலடங்காதவை. அவர் - மருத்துவத்தின் மறுமலர்ச்சி. அக்குபங்சரின் புத்தெழுச்சி.

அக்குபங்சர் மருத்துவம் 2003 இல் சிகிச்சை முறையாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது துவங்கி, 2019 இல் முழுமையான மருத்துவமாக அறிவிப்பதற்குரிய குழு அமைக்கப்பட்டது வரை…. அக்கு ஹீலர் போஸ் அவர்கள் டாக்டர் சகோதர ர்களால் தாக்கம் பெற்று அக்குபங்சர் சிகிச்சை துவங்கியது முதல், கம்பம் அகாடமி கிளை பரப்பி வளர்ந்து நிற்கிற வரை…. கம்பம் அகாடமியின் மாணவர்கள் அமைப்பாக திரண்டது முதல், இன்று அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு தேசிய அமைப்பாக செயல்படுவது வரை…. இப்படியான பல வளர்ச்சிகளுக்கான ஒற்றை விதையாக இருந்தவர் – டாக்டர் பஸ்லுர் ரஹ்மான். எண்ணாயிரம் விழுதுகளைக் கொண்ட மகா மரமாக அது வளர்ந்தாலும், உலகுக்கே நிழல்தரும் பரப்பில் அது அகன்றிருந்தாலும், மொத்த பூமியையும் துளைத்து வேர்விடும் தன்மை அதற்கு கிடைத்திருந்தாலும்… அனைத்துமே ஒற்றை விதையின்றி சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தெளிவது அவசியமானது.  

ஒரு மகத்தான மனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும் கடந்து, அவருடைய செயல்பாடுகளை, தெளிந்த அறிவை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்கும் போது நமது பொறுப்புணர்வு இன்னும் அதிகமாகிறது. அவர் விட்டுச் சென்ற பணிகளை இன்னும் ஆழமாக, விரிவாக எடுத்துச் செல்வது ஒன்று மட்டுதான் நாம் அவருக்குச் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

உண்மையான அஞ்சலியை நாம் செலுத்துவோம்.

#